

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள திருவிக்கிரமநாராயணப் பெருமாள் திருக்கோயிலில் உற்சவர் தாடாளனை இந்த மார்கழியில் மட்டுமே தரிசிக்க முடியும். அதுவும் ஒரே ஒரு நாள் மட்டும்.
சீர்காழியில் அமைந்துள்ள அருள்மிகு திருவிக்கிரமநாராயணப் பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் 28வது திருக்கோயிலாகும்.
கருவறைக்குள், இடது பாதத்தை ஆகாயத்தை நோக்கி தூக்கியவாறும், வலது பாதத்தை பூமியில் ஊன்றியும் காட்சி தருகிறார். மேலும் வலக்கையை தானம் பெற்ற அமைப்பிலும், இடது கையை மேலும் ஒரு அடி நிலம் எங்கே? என்று கேட்கும் வகையில் ஒரு விரலை மட்டும் தூக்கியபடியும் திரிவிக்கிரமர் எனப்படும் தாடாளன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இவரது வலது பாதம் அருகே ஒன்றரை அடி உயரத்தில் தவிட்டு தாடாளன்பெருமாள் (வாமணர் அவதாரம்) காட்சி தருகிறார். இக்கோயிலில் மூலவரின் வலது பாதத்தையும், அங்கிருக்கும் தவிட்டுதாடாளனையும் ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமே தரிசனம் செய்யமுடியும்.
இது மார்கழி மாதத்தின் மற்றுமொரு சிறப்பாக அமையப்பெற்றுள்ளது. தன் திருவடியால் மூன்று உலகங்களையும் அளந்தவன் என்பதால் இவருக்கு தாடாளன் என்ற பெயரை ஆண்டாள் சூட்டியதாக புராணங்கள் கூறுகின்றன.
இக்கோயிலின் மற்றொரு சிறப்பாக, தாயார் லோகநாயகி அம்மன் தன்னுடைய மார்பில் திரிவிக்கிரமரைத் தாங்கி நிற்கிறார். சுவாமி ஒரு பாதத்தில் நிற்பதால், அவருக்கு பாதம் வலிக்காமல் இருக்க அவரை மகாலட்சுமி தாங்குவதாக ஐதீகம்.
வைகுண்ட ஏகாதசி விழா அன்று, தாடாளன் பெருமாள் என்னும் திருவிக்கிரமநாராயணப் பெருமாள் கோயிலில், உற்சவர் தாடாளன் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் பல்லக்கில் வைத்து பெருமாளை சொர்க்கவாசல் அருகே எழுந்தருளச் செய்வர். அங்கு சொர்க்கவாசலுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, தீபாராதனைகள் காட்டப்படும்.
பிறகு, தாடாளன் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள, திரளான பக்தர்கள் "கோவிந்தா,கோவிந்தா' என முழங்கியவாறு சொர்க்கவாசலை தரிசனம் செய்வர். அன்று ஒருநாள் மட்டுமே உற்சவர் தாடாளனையும் தரிசனம் செய்வர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.