

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதில் பக்தர்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு "கோவிந்தா" "கோவிந்தா" எனும் கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.
அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் உபகோயிலான மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் திருஅத்யனம் உற்சவம் எனும் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 20ம் தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி விழா இன்று அதிகாலை கோயில் வளாகத்தில் விமர்சையாக நடைபெற்றது.
விழாவையொட்டி இன்று அதிகாலை 5.35 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்கிட தீவட்டி பரிவாரங்களுடன் பரமபத வாசல் வழியாக எழுந்தருளி கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பரமபத வாசல் வழியாக பெருமாள் எழுந்தருளியதைத் தொடர்ந்து பக்தர்களும் பரமபத வாசல் வழியாக வெளியே வந்து "கோவிந்தா" எனும் கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் மதுரையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்திருந்தனர். இதனால் கோயில் வளாகம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலான கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயில், அழகர்கோயில், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.