

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சேஷ வாகனத்தில் எழுந்தருளிய ரங்கநாத பெருமாளுக்கு சங்கு, சேகண்டி முழங்கக் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த டிச.20 ஆம் தேதி திருமொழி திருநாள் தொடக்கம் எனப்படும் பகல்பத்து உற்சவத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து அரங்கநாத பெருமாளுக்கு தினந்தோறும் சிறப்புப் பூஜைகளும், அலங்காரம் செய்யப்பட்டு வந்தன. அதனைத்தொடர்ந்து நேற்றிரவு அரங்கநாத பெருமான் ஸ்ரீ நாச்சியார் (மோகனாவதாரம்) திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதனைத்தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று காலை 5:45 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக 4 மணியளவில் மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடைபெற்றன. தொடர்ந்து சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் ஆண்டாள் சன்னதி அருகே எழுந்தருளினார். தொடர்ந்து புண்ணியாக வாசனம், வேத பாராயணம் உள்ளிட்டவை முடிந்து சரியாக காலை 5.55 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
தொடர்ந்து நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் உள்ளிட்ட மூவரும் சொர்க்கவாசல் திறந்தவுடன் பெருமாளை எதிர்கொண்டு சேவித்தனர். பின்னர்,சடாரி மரியாதை 3 ஆழ்வார்களுக்கும் செய்யப்பட்டது. இதனையடுத்து சொர்க்கவாசல் வீதி வழியாக 4 ரத வீதிகளிலும் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய அரங்கநாத பெருமானுக்கு அனைத்து சமூக மண்டகப்படிகளில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது காத்திருந்து அரங்கநாத பெருமாளை தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம், முன்னாள் காரமடை நகராட்சி தலைவர் உஷா,திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், முன்னாள் நகர செயலாளர் வெங்கடேஷ், தாளபளஞ்சிக மகாஜன சங்க தலைவர் கே.பி.வி.கோவிந்தன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், மிராசுதாரர்கள், கோயில் நிர்வாகிகள் உள்பட பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாஸ்கர் தலைமையில் காவல் ஆய்வாளர் சின்னக்காமணன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், தீயணைப்புத் துறையினர், வருவாய்த்துறையினர், சுகாதாரத் துறையினர் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு திருக்கோயில் வளாகத்தை ஒட்டி முகாமிட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர் பேபி ஷாலினி, மேட்டுப்பாளையம் சரக ஆய்வர், ஹேமலதா மற்றும் கோயில் அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
On the occasion of Vaikunda Ekadasi, the gate of heaven was opened at Aranganatha Swamy Temple in Karamadai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.