திருநாகேஸ்வரம் திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றம்!

திருநாகேஸ்வரம் திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவில் - கோப்புப்படம்
திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவில் - கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தஞ்சை: நவக்கிரக தலங்களில் ராகு பகவானுக்குரிய தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருநாகேஸ்வரத்தில் நாகநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இங்கு விநாயகர், பிரம்மன், இந்திரன், சூரியன், சந்திரன் ஆகிய தேவர்களும் மார்க்கண்டேயர், கௌதமர் உள்ளிட்ட முனிவர்களும், நளன், பாண்டவர், சந்திரசேனன், சம்புமாலி உள்ளிட்ட மன்னர்களும் வழிபட்டு பேறு பெற்ற தலம் என தல வரலாறு கூறுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகப்பெருவிழா 12 நாள்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் இவ்விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக விநாயகர் பெருமாள், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், உற்சவர் நாகநாத சுவாமி கிரிகுஜாம்பிகை, சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகளும் அஸ்திரதேவருடன், கொடிமரம் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கும், மாப்பொடி, திரவியப்பொடி, மஞ்சள்பொடி, தேன், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட நறுமணப்பொருட்களை கொண்டு விசேஷ அபிஷேகம் செய்விக்கப்பட்ட பிறகு, நாதஸ்வர மேள தாளம் முழங்க, சிவாச்சாரியார்கள் மற்றும் வேதவிற்பன்னர்கள் வேதமந்திரங்களை முழங்க, நந்தியம்பெருமான் உருவம் வரையப்பெற்ற திருக்கோடி, கொடி மரத்தில் ஏற்றி வைக்கப்பட்டது.

பிறகு உற்சவர் சுவாமிகளுக்கும், கொடி மரத்திற்கும், சிறப்பு பூஜைகள் செய்து, உதிரி மலர்களால் அர்ச்சனைகள் செய்த பிறகு, கோபுர ஆர்த்தியும், பஞ்சார்த்தியும் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கொடியேற்றத்தை தொடர்ந்து நாள்தோறும், ஏகாந்தம், சூர்ய பிரபை, சந்திர பிரபை, பூதம், கிளி, காமதேனு, ரிஷபம், யானை, சிம்மம், சேஷ, குதிரை என பலவிதமான வாகனங்களில் திருவீதியுலா நடைபெறுகிறது.

பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக, 7ம் நாளான 06 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை திருக்கல்யாணம் வைபவமும், 9ம் நாளான 8 ஆம் தேதி மாலை புஷ்ப மஞ்சம், 10ம் நாளான 9 ஆம் தேதி திங்கட்கிழமை சூரிய புஷ்கரணியில், உற்சவர் சுவாமிகள் எழுந்தருள, வைகாசி விசாக தீர்த்தவாரி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com