சுவாமிமலை
சுவாமிமலை

சுவாமிமலையில் திருக்கார்த்திகை திருவிழா கொடியேற்றம்!

முருகப்பெருமானின் சுவாமிமலை திருத்தலத்தில் திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக தொடங்கியது.
Published on

சுவாமிமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவினையொட்டி, கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள தமிழ் கடவுள் எனப் போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக அமையப்பெற்றது சுவாமிமலை. இங்கு முருகப் பெருமான் சுவாமிநாத சுவாமியாகக் காட்சியளிக்கிறார். பிரபவ முதல் அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருடத் தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டுமலைக் கோயிலாகும்.

தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்றது இத்தலம். எனவே இத்தலத்தில் முருகப்பெருமான், சிவகுருநாதன் என்றும் சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார். நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமும் அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் பாத தரிசனம் அருளிய சிறப்புடைய தலம் என்ற பெயரும் பெற்றது இந்த சுவாமிமலை திருத்தலம்.

இத்தகைய சிறப்புப் பெற்ற சுவாமிமலையில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை திருவிழா 11 நாள்களுக்குச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் இவ்விழா இன்று வள்ளி தெய்வானை சமேத சண்முகசுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரருடன் தங்கக் கொடிமரம் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்குப் பால், தயிர், மஞ்சள், திரவிய பொடி, சந்தனம், உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்து வேலுடன் கூடிய யானை சின்னம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது.

சுவாமிகளுக்கும் கோபுர ஆர்த்தி செய்யப்பட்டது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி பிரகார உலா நடைபெறுகிறது,விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 9ம் நாளான திருக்கார்த்திகை அன்று 3ம் தேதி புதன்கிழமை திருத்தேரோட்டம் இரவு தங்கமயில் வாகனத்தில் பிரகார உலாவும் அதனைத் தொடர்ந்து கார்த்திகை தீபக்காட்சியும் நடைபெறுகிறது. மூலவர் சாமிநாத சுவாமி தங்க கவச அலங்காரம் வைர வேலுடன் காட்சியளித்தார்

Summary

The Thirukarthigai festival began with great success at the Swamimalai temple of Lord Muruga.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com