
தீபாவளி பண்டிகை, லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரத்தை தினமணியின் இணையதள ஜோதிடர் ராமராமானுஜ தாசன் தெரிவித்துள்ளார்.
தீபாவளியன்று அதிகாலை நேரத்தில் எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளித்து, புத்தாடைகள் அணிந்து கொள்வது வழக்கமாக இருக்கிறது. இதற்குக் காரணமும் உண்டு. "தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா' என்பர் பெரியோர். அதாவது இந்த தினத்தில் இல்லத்தில் இருக்கும் எண்ணெய்யில் லக்ஷ்மியும், தண்ணீரில் கங்கையும் இருப்பார்கள். தீபாவளி தினத்தில், கங்கா ஸ்நானமும் அன்னபூரணி தரிசனமும் மிகச் சிறப்பானவை. இதனை நரக சதுர்த்தசி என்றும் அழைப்பர்.
சதுர்த்தசிக்கு அடுத்த நாள் அமாவாசை. ஒரு சில வருடங்கள் தீபாவளியன்றே அமாவாசையும் வருவதுண்டு. இதனை வட இந்தியாவில் "ஸாத் பூஜா' என்று பெண்கள் கடைப்பிடிக்கிறார்கள். இந்த நாளில், இல்லத்தில் இருக்கும் ஆண்களின் நலனுக்காகப் பெண்கள் செய்யும் பூஜை இது. இந்நாளில்தான், தமிழகம், ஆந்திரம் போன்ற பகுதிகளிலும் கேதார கௌரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்கள், அன்னையை நோக்கி விரதம் இருந்து மாங்கல்ய பலத்துக்காக இதனைச் செய்கின்றனர். அதேபோல், அமாவாசை தினத்தில் மாலை நேரத்தில் லக்ஷ்மி குபேர பூஜையைச் செய்கிறார்கள்.
அந்தவகையில், இந்தாண்டு தீபாவளியன்று மாலை அமாவாசை வருவதால் குபேர-லட்சுமி பூஜை செய்வது மிகவும் சிறப்பு. சூரியன் மறையும் மாலை நேரத்தில் மஹாலக்ஷ்மியை முறைப்படி பூஜித்து, அவருடன் செல்வத்துக்கு அதிபதியான குபேரனையும் வைத்துப் பூஜிப்பது சில இடங்களில் பரம்பரைப் பழக்கமாக உள்ளது. இவ்வாறு லக்ஷ்மி-குபேர பூஜை செய்யும் போது, குடும்பத்தினர் அனைவரும் புத்தாடை உடுத்தி, ஆபரணங்கள் அணிந்து கொண்டு பூஜிக்க வேண்டும் என்பர். இந்த பூஜையைச் செய்யும் இடத்திலும், செய்பவருக்கும் மகாலக்ஷ்மியின் பார்வை பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால்தான் இந்தத் திருநாளில் வட இந்தியாவில் வர்த்தக நிறுவனங்களில் புதுக்கணக்கு தொடங்குதல் இன்றும் நடைமுறையில் உள்ளது.
தீபாவளி மற்றும் குபேர பூஜை செய்ய உகந்த நேரம்..
நிகழும் விசவாவசு வருடம் ஐப்பசி மாதம் 3-ஆம் நாள் திங்கள்கிழமை மாலை 3.45 மணிக்கு மேல் இரவு 7 மணிக்குள் தீபாவளி பூஜையும், குபேர பூஜையும் செய்வது உத்தமம்.
மறுநாள் செவ்வாய்க்கிழமை (21.10.2025) அன்று கேதார கௌரி விரதம் கடைப்பிடிக்கலாம். இந்தாண்டு தீபாவளி பண்டிகை தினமான 20.10.2025 அன்று மாலை 3.45-க்கு தொடங்கி மறுநாள் (21.10.2025) மாலை 5.48 வரை அமாவாசை திதி உள்ளது. கேதார கௌரி விரதம் கடைப்பிடிப்பவர்கள் ராகு காலம், எமகண்டம் தவிர்த்து வீட்டில் கலசம் வைத்தோ அல்லது கோயிலுக்கு சென்றோ பூஜைகளைச் செய்துகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.