நல்வாழ்வு தரும் கிருபாகூபேசுவரர்

நல்வாழ்வு தரும் கிருபாகூபேசுவரர்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது கிருபாகூபேசுவரர் ஆலயம்.
Published on

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது கிருபாகூபேசுவரர் ஆலயம்.

ஹச்தவர்ண ஜோதி எனும் கோமளிய ஜோதியாக இறைவன் காட்சியளித்ததால் இவ்வூர் கோமல் எனப்பட்டது இவ்வூரில் இரு கோயில்கள் உள்ளன. ஒரு ஏக்கர் பரப்பில் இருக்கும் கிருபாகூபேசுவரர் மற்றொன்று கோமல் மேல்நிலைப் பள்ளி அருகில் இருக்கும் அமிர்தகடேஸ்வரர்.  

ஒரு முறை பார்வதி தேவி, சிவ பெருமானிடம், அவர் எப்படி உலகத்தை இயக்குகிறார் என்று அறிய விரும்பினார். பெருமானிடம் அது பற்றி விளக்கம் கேட்டார். அச்சமயம் சிவபெருமான் பார்வதியிடம் தன் கண்களை மறைத்துக் கொள்ளும்படி கூறினார். அவரும் அப்படியே செய்தார். அந்த நொடியில் அனைத்து உலக இயக்கங்களும் நின்று போய் விட்டன.
 
உடனே, பார்வதிதேவி பெருமானிடம் தன்னால் நிகழ்ந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கோரினார். உன் கைகளால் என் கண்களை மறைத்ததால் இந்த உலகத்தை இருளாக்கினாய். நான் என் கைகளிலிருந்து தோன்றும் ஹஸ்தாவர்ண ஜோதியில் நான் சேர்ந்து மறைந்து விடுவேன். நீ ஒரு பசுவாக உருவெடுத்து, இந்த ஹஸ்தாவர்ண ஒளி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்த பின்பு என்னை அடைவாய் என்று கூறி ஜோதியில் மறைந்து விட்டார்.

இதனால் வருத்தம் அடைந்த பார்வதி தேவி, தன் தமயன் திருமாலிடம் அணுகி, இதற்கு உபாயம் கேட்டார். பின்பு, அவர் கூறியபடி ஒரு பசுவாக உருவெடுத்தார். இருவரும் சிவபெருமான் இருக்கும் இடம் தேடி, ஒவ்வொரு தலமாக, பூமி அனைத்தையும் சுற்றி வந்தனர்.

இதைக் கண்ட சிவபெருமான், கிருபை கொண்டு, ஒரு அஸ்திர நட்சத்திரத்தன்று அன்று ஹஸ்தா வர்ணஜோதியாக தோன்றி, தன்னோடு பார்வதியை ஐக்கியப்படுத்திய தலம் இதுதான். அதன் விளைவாக இங்கு ஒரு கோயில் எழுப்பினர். கிருபை செய்த காரணத்தால் கிருபாகூபாரேஸ்வரர் என்று இறைவன் பெயர் பெற்றார். 

அன்னை பசுவாக இங்கு வந்ததால் அன்னபூரணி என்ற பெயர் பெற்றார். இத்தலத்தில் சுயம்புவாக தோன்றி அருள்பாலிக்கிறார். கோயில் பிரகாரத்தில் விநாயகர், முருகன், மகாவிஷ்ணு, மகாலட்சுமி ஆகியோருக்கு சிற்றாலயங்கள் உள்ளன. கோட்டத்தில் லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரமன் துர்க்கை உள்ளனர். 
 
வடகிழக்கில் பெரிய லிங்கமாக காசி விஸ்வநாதர் உள்ளார். அருகில் நவகிரகம், சூரியன் உள்ளன. 
 
கிருபாகூபாரேஸ்வரர் எத்தகைய தவற்றுக்கும், உணர்ந்து மன்னிப்பு கோரினால், அருள்பாலிக்கக் கூடியவர். மேலும், சித்தர்களும், முனிவர்களும், மகான்களும் அஸ்த நட்சத்திரத்தன்று, அரூப வடிவில் வந்து இங்கு வழிபடுவதால், அன்றைய தினத்தில் இத்தலம் வந்து, நைவேத்தியம் படைத்து, அர்ச்சனை செய்து, இருகரம் கூப்பி, இறைவனையும், இறைவியையும் வழிபட, சகல நல்வாழ்வும் கிட்டும் 
என்பது உறுதி. வீர சோழனால் கட்டப்பெற்ற கோயில் இதுவாகும்.

- கடம்பூர் விஜயன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com