
கோயிலில் வழிபாடு தொடங்கியது முதலே ஆண் பக்தர்களை மட்டும் சுவாமியின் கருவறைக்கு முன்பாக வழிபட அனுமதிக்கப்பட்டு, பெண் பக்தர்கள் கோயிலின் முன் மண்டபத்தைத் தாண்டி மூலவர் சன்னதிக்குள் அனுமதிக்கப்படாத திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஸ்ரீவீரக்குமார் திருக்கோவிலைப் பற்றி இங்குப் பார்க்கலாம்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பிரதான சாலைப் பகுதியில் அமைந்துள்ளது தொன்மை வாய்ந்த பல அதிசயங்களை உள்ளடக்கிய ஸ்ரீவீரக்குமார் திருக்கோவில்.
600 ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாக முருகனின் அவதாரமாக உருவெடுத்த ஸ்ரீவீரக்குமார் சுவாமிகள் முட்புதர்களுக்கிடையே காட்சியளித்ததையடுத்து அப்பகுதி மக்கள் அவற்றை அகற்றி சீர்ப்படுத்தி வழிபட்டு வந்துள்ளனர். பின்னர் 16ம் நூற்றாண்டில் முழுமையாக சீரமைக்கப்பட்டு கோயிலாக வடிவமைக்கப்பட்டு 1974ம் ஆண்டு கும்பாபிசேகம் நடத்தப்பட்டு, அதிகாலை முதல் அனைத்து வகை பூஜைகளும் முறையாக நடந்தேறி வருகிறது.
இந்தக் கோயிலில் வழிபாடு தொடங்கிய காலம் முதலே வீரக்குமார் சன்னதிக்குள் ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பெண் பக்தர்கள் சன்னதியின் முன் மண்டபத்துக்குள் மட்டும் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்தே மூலவரை தரிசித்து பிரசாதங்களை பெற்று வருவது நடைமுறையில் உள்ளது.
அதாவது, வீரக்குமார் ஆதி சக்தியின் அருளைப் பெறுவதற்காக தவமிருந்த போது பெண்ணொருவரின் ஆவியொன்று தவத்தைக் கலைத்ததாகவும், ஆதி சக்தியின் அருளைப் பெறமுடியாமல் தடையை ஏற்படுத்தியதாகவும், அதனால் கடும் சீற்றம் அடைந்த வீரக்குமார் சுவாமிகள் பெண்ணின் ஆவியை சுட்டெரித்ததுடன் இனி மேற்கொண்டு தனது சன்னதிக்குள் பெண்களுக்கு அனுமதியில்லையென்று கட்டளையிட்டு அந்தக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்திடவும் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
கோயிலைப் பற்றிய விடியோவைக் காண..
அந்த வழக்கம் தற்போது வரையிலும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. பெண் பக்தர்கள் வீரக்குமார் சன்னதிக்குள் அனுமதிக்கப்படுவதில்லையென்றாலும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோவிலுக்கு வந்து வழிபட்டு தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றிய சுவாமிக்கு நன்றிக்கடனாக பொங்கல் படையலிட்டு வழிபடுகிறார்கள்.
படையலிட்ட பொங்கலை தங்களது குடும்பத்தாருடன் இணைந்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பொங்கலை விநியோகித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி மகிழ்வது வழக்கம்.
இந்தக் கோவிலில் செவ்வாய்க்கிழமைதோறும் வீரக்குமார் சுவாமிகளுக்கு சிறப்புப் பூஜைகளும், விசேச வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. அதேபோல் கந்தசஷ்டியின் போது நடைபெறும் வழிபாடுகளில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி அருகாமை மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் வருகை தந்து சுவாமியை வழிபட்டு திருவருளைப் பெற்றுச் செல்வர்.
இந்தக் கோவிலில் வீரக்குமாரை வணங்கி வழிபட்டு வந்தால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைத்திடும் என்பதும், தொழில் நலன் சிறப்படையும் என்பதும், உடல் ஆரோக்கியம் மேம்படுமென்பதும் பக்தர்களின் அதீத நம்பிக்கை.
இக்கோயிலில் முருகனின் வாகனமாக குதிரையைப் பாவித்து நம்பிக்கையுடன் குதிரை சிலைகள் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களின் காணிக்கையாக வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்ட இரண்டு குதிரைச் சிலைகள் வெகு சிறப்புடன் கம்பீரமாகக் காட்சியளிப்பதுடன், இரவு நேரத்தில் பஞ்சலோக குதிரையில் வலம் வந்து வீரக்குமார் மக்களுக்கு பாதுகாப்பளிப்பதாக நம்புகிறார்கள்.
இந்திய அளவில் ஆண்களை மட்டும் சன்னதிக்குள் அனுமதிக்கும் கோவில் வெள்ளகோவில் ஸ்ரீவீரக்குமார் கோவில் மட்டுமே என்று கூறப்படுகிறது. எனவே ஆண் பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கோவில் என்பதாலும், அதிசயங்களும், புண்ணியங்களும் தன்னகத்தே நிறைத்துக் கொண்டுள்ளதாலும் ஸ்ரீவீரக்குமார் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து, அருளைப் பெறுவது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.