புகழ்பெற்ற ஸ்ரீகிருஷ்ணர் கோயில்கள்

2021ஆம் ஆண்டும் கரோனா பேரிடர்களுக்கு மத்தியில்தான் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை நாடு முழுவதும் கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது
புகழ்பெற்ற ஸ்ரீகிருஷ்ணர் கோயில்கள்
புகழ்பெற்ற ஸ்ரீகிருஷ்ணர் கோயில்கள்

2021ஆம் ஆண்டும் கரோனா பேரிடர்களுக்கு மத்தியில்தான் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை நாடு முழுவதும் கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ணர் அவதரித்த இந்த நன்னாளைக் கொண்டாடுவதில், மக்களுக்கு பேரானந்தம் கிட்டுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, கிருஷ்ணர் கோயில்கள் பல மூடப்பட்டுள்ளன. இதனால், பக்தர்கள் பலரும் தங்களது இஷ்ட தெய்வத்தைக் கோயிலுக்குச் சென்று கண்குளிர தரிசிக்க முடியவில்லையே என்று ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், அதர்மத்தை அழிக்க அவதாரம் எடுத்த ஸ்ரீகிருஷ்ண பகவான் அவதரித்த இந்த நன்னாளில், மக்களின் வாழ்வில் கடுந்துயரத்துக்கு ஆளாக்கியிருக்கும் கரோனாவை அழிக்க வேண்டும் என்று வீட்டிலிருந்தபடியே மனதார வேண்டிக் கொள்வோம்.

இந்த ஆண்டில் இல்லாவிட்டாலும், இனி வரும் நாள்களில் எப்போது வாய்க்கப்பெற்றாலும், சென்று வணங்கி, இறையருள் பெற வேண்டிய ஸ்ரீகிருஷ்ண பகவானின் சிறப்பு வாய்ந்த 4 புகழ்பெற்ற கோயில்களைப் பற்றி இங்குக் காணலாம்.

கிருஷ்ண ஜென்மபூமி கோயில், மதுரா

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் மல்லப்பூரில் அமைந்துள்ளது கிருஷ்ண ஜென்மபூமி கோயில். இது ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த புண்ணிய பூமியில் அவர் பிறந்த இடத்தில் அமைந்திருக்கும் கோயில் என்பதால், வேறெந்த கோயிலுக்கும் இல்லாத சிறப்பு இந்தக் கோயிலுக்கு அதன் இடத்தாலேயே அமையப்பெற்றுள்ளது. இந்தக் கோயிலில் வழக்கமாக ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியன்று பூஜைகளும், அலங்கார, ஆராதனைகளும் வெகுச் சிறப்பாக இருக்கும்.

துவாரகாதீஷ் கோயில், துவாரகை

குஜராத் மாநிலத்தில் அரபிக் கடலின் கடற்கரைக்கும், கோமதி ஆற்றங்கரையிலும் அமையப் பெற்ற மிகச் சிறப்பு வாய்ந்த கோயில்தான் துவாரகாதீஷ். சார் தாம் யாத்திரையில் இந்தக் கோயிலும் அடங்கும், ஆதி சங்கராச்சாரியார் வந்து தரிசித்த கோயில் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

பாங்கே பிஹாரி கோயில், பிருந்தாவன்

மதுரா நகரில், பிருந்தாவன ஷேத்திரத்தில், ஸ்ரீபாங்கே பிஹாரி கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது. அழகே உருவான ஸ்ரீகிருஷ்ணர் நின்ற கோலத்தில் இத்திருக்கோயிலில் சேவைசாதிக்கிறார். கையில் புல்லாங்குழல், தலையில் மயில் பீலி, இடுப்பில் பட்டு வஸ்திரம், கூடவே வெண்மை நிறமான பசுவும், கன்றும் கொண்டுள்ள கிருஷ்ணனைப் பார்க்க இத்திருக்கோயிலுக்கு எப்போதும் பக்தர்கள் கூட்டம் வந்து கொண்டே இருக்கிறது. 

விடலா - ருக்மணி கோயில், பந்தர்பூர்

மகாராஷ்டிர மாநிலத்தில் சந்திரபாகா நதிக் கரையோரத்தில் அமையப்பெற்றுள்ளது ஸ்ரீகிருஷ்ணர் - ருக்மணி கோயில். இந்தக் கோயில் 17ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டது. இது மிக அழகிய வேலைப்பாடுகள் கொண்ட கட்டடமாகவும், வரலாற்றுச் சிறப்பு மிக்க தலமாகவும் இது போற்றப்படுகிறது.

குருவாயூர் கோயில், கேரளம்

தென்னகத்தின் துவாரகை என்று போற்றப்படும் தலமாக இது அமைந்துள்ளது. இந்தக் கோயிலானது 1638ஆம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் இருக்கும் குழந்தைக் கிருஷ்ணரை தரிசிக்க கண்கோடி வேண்டும். கோயிலுக்குள் நுழைய பக்தர்களுக்கு கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com