
பதினெண் சித்தர்களுள் அகத்தியர் உள்பட பதினாறு சித்தர்களால் பாடி வழிபடப்பட்ட திருத்தலம் சதுரங்கப்பட்டணத்தில் அமைந்துள்ள மலை மண்டலப் பெருமாள் திருக்கோயிலாகும். முதலாழ்வராகிய பூதத்தாழ்வார், மகான் ராகவேந்திரர் ஆகியோரால் வழிபட்டப்பட்டத் திருத்தலம்.
மலைமண்டலப் பெருமாள், கிரிவரதன், வரதராஜப் பெருமாள் என்கிற திருநாமங்களாலும் அழைக்கப்பெறுகிறார். ஆயிரம் முதல் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படும் இக்கோயிலின் அமைவிடம் இராஜநாராயணன் பட்டணம் என்று அழைக்கப்பட்டுள்ளது. விஜயாலய சோழனின் படைத்தளபதி புதுக்கோட்டை இராஜநாராயணன் பெயரில் இந்த ஊர் பெயர் அமைந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
விஜயநகரப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த நேரத்தில் சதுரவாசன் பட்டணமாக இருந்து, டச்சுக்காரர்களின் ஆளுகையில் இருந்தபொழுது சட்ராஸ் என்றாகி தற்போது சதுரங்கப்பட்டணம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
கடல்கோளுக்கு முன்புவரை மலை உச்சியில் காட்சி தந்த கோயில் கி.பி. 850 ஆம் ஆண்டிற்குப் பிறகு மலை மண்மூடிப்போக, இன்று சிறிய மேடான இடத்தில் கோயில் காட்சி தருகிறது. முன்பு இக்கோயிலைச் சுற்றி இலந்தை மரங்கள் சூழ்திருந்ததாலும் வடமொழியில் இலந்தையை பத்ரி என்று அழைப்பதாலும் இவ்விடம், தென்பத்ரி எனப்பட்டது. கர்ப்பகிரகத்தில் மலைமண்டலப் பெருமாள், கிரிவரதராஜப்பெருமாளாக 6 அடி உயரத்தில் உடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி காட்சி தருகிறார். ஒரு காலை முன்வைத்து கஜேந்திர மோட்சத்திற்குச் செல்லும் நிலையில் காணப்படுகிறார். வலது கை சக்கரம் சற்று சாய்ந்து ஏவிய நிலையில் காணப்படுகிறது.
முன் மண்டபத்தில் ஒரே கல்லில் அமைக்கப்பட்ட பிரபையுடன்கூடிய லட்சுமி நாராயணரைத் தரிசிக்கலாம். அவரருகில் லட்சுமி பிராட்டி வீற்றிருக்கிறார். இவர்தான் இத்தலத்தின் மூலமூர்த்தியாக இருந்தவர். திருப்பணிகள் செய்தபொழுது பூமியிலிருந்து கிடைக்கப்பெற்ற ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய கிரிவரதராஜரே பிற்காலத்தில் மூலவராகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படுகிறார். கருவறை நுழைவாயிலில் இரு துவார பாலகர்கள் உள்ளனர். நிலைப்படியில் எங்கும் காணாத அதிசயமாக யோக நரசிம்மரின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. பொதுவாக, இங்கு கஜலட்சுமியைத்தான் காணமுடியும்.
இத்தலத்தில் லட்சுமி மூன்று வடிவங்களில் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. எல்லா பெருமாள் கோயில்களிலும் ஒரு தாயார் இருப்பதைக் கண்டிருப்போம். ஆனால் இங்கு, பெருந்தேவியாரும் மஹாலட்சுமி தாயாரும் தனிக்கோயிலில் காட்சி தருகின்றனர். மேலும் கருடனின் திருமுடியும் பெருமாளின் திருவடியும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள கருடாழ்வார் மிகவும் விசேஷமானவர். தலையில் ஒன்று, இரு காதுகளில் தலா ஒவ்வொன்று, மார்பினில் மாலையாக இரண்டு, இருதோள்களிலும் ஒவ்வொன்று, இடுப்பில் அரைஞாண் கயிறாக ஒன்று என எட்டு நாகங்களை ஆபரணமாகக் கொண்ட இவரை, "அஷ்டநாக கருடன்' என்றழைக்கின்றனர்.
பிரிந்தோரை சேர்க்க..
பாலாபிஷேகம் செய்யும்போது இத்திருவுருவச் சிலை கருநீலநிறமாகக் காட்சி தரும். கருவறையில் உள்ள புஷ்பாஞ்சலி ஆஞ்சநேயர், கலைநயமும் காருண்யமும் நிறைந்த விஜயநகர காலத்திய பஞ்சலோக ஆஞ்சநேயர் ஆவார். பொதுவாக கூப்பிய கரங்களுடன் காணப்படும் ஆஞ்சநேயர் இங்கு கரங்களில் மலருடன் காட்சிதருவது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
பிரிந்து வாழும் கணவன் மனைவி, காதலர், கருத்து மாறுபாடு கொண்ட சகோதர சகோதரிகள், தாய் தந்தையரிடம் கருத்து மாறுபாடு கொண்டு பிரிந்து வாழும் பிள்ளைகள், இத்திருத்தலம் வந்து வழிபட்டால் பிணக்கு நீங்கி பிரியம் கொண்டு இணக்கம் கொள்வர். இதனை சித்தர் இராமதேவரும் ஒரு பாடலில் கூறியுள்ளார்.
திருமணத்தடை நீங்கவும் குழந்தை பாக்கியம் பெறவும் பலகாரணங்களால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும் சர்ப்ப தோஷம் நீங்கவும் இங்குள்ள கருடாழ்வாரை வழிபடுகின்றனர். கருடாழ்வாரின் பெருமையை சித்தமுனி அகத்தியரும் பாடியுள்ளார்.
கருடாழ்வாரை ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றும் புரட்டாசி திருவோணத்தன்றும் வழிபடுவது சிறப்பாகும். பால், தேன், பழவகைகள், உலர்ந்த பழங்கள், தயிர்சாதம், உளுந்துவடை, அமிர்தகலசம் போன்றவற்றை நேர்த்திக் கடனாகச் செலுத்துவர். மேலும் நெய்விளக்கேற்றியும் வழிபடுவதால் சர்ப்ப தோஷங்கள் அனைத்தும் அகலும்.
புஷ்பாஞ்சலி ஆஞ்சநேயரை குருவாரம் அஸ்தமனபொழுது நெய்தீபம் ஏற்றி, மஞ்சள் நிற மலர்தூவி வழிபடுபவர்களுக்கு ஏவல், பில்லி, சூனியம், ஏழ்மை, வறுமை, துன்பம் அகலும். வேலையில்லாதோருக்கு விரும்பிய வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
கருவறை நுழைவாயிலில் அமைந்துள்ள யோகநரசிம்மரை பிரதோஷத்தின்போது அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால் பெரிய நோய்கள் அண்டாது.
திருமணத்தடை நீங்க, தாயாருக்கு விரலி மஞ்சள் மாலையை அணிவித்து வழிபடுவர். இக்கோயிலில் ராமர், சீதை, லட்சுமணன், அரங்கன், நாகர், ஆழ்வார்கள், ஆச்சாரியர்களின் திருவுருவங்களைத் தரிசிக்கலாம். இவ்வாலயத்தில் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு உண்டு. மேலும் இங்கு சொர்க்கவாசல் என தனிவாயில் கிடையாது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை- புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் வெங்கம்பாக்கத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் கல்பாக்கத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலும் உள்ளது சதுரங்கப்பட்டணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.