Enable Javscript for better performance
The Tamilnadu Gambling Act 1930| வாசகர்களுக்காக பிரத்யேக நெடுந்தொடர் ‘சட்டமணி’ அறிமுகம்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  இன்று முதல் தினமணி வாசகர்களுக்காக பிரத்யேக நெடுந்தொடர் ‘சட்டமணி’ அறிமுகம்!

  By வழக்கறிஞர் சி.பி. சரவணன்  |   Published On : 05th February 2018 11:43 AM  |   Last Updated : 05th February 2018 11:43 AM  |  அ+அ அ-  |  

  sattamani_theame

   

  சாலையில் சென்று கொண்டிருக்கிறோம் திடீரென நம்மைக் கடக்கும் பேருந்திலிருக்கும் பொறுப்பற்ற பயணி ஒருவர் போகிற போக்கில் காறி உமிழ்ந்து விட்டுப் போகிறார். இது குற்றமாகுமா? இதைப் பற்றிப் புகார் செய்வதென்றால் எங்கே செல்ல வேண்டும்? யாரை அணுக வேண்டும்? அணுகினாலும் இம்மாதிரியான தவறுகளுக்கு சட்டப்புத்தகங்களில் என்ன விதமான தண்டனைகள் வரையறுக்கப்பட்டுள்ளன? என்பதெல்லாம் மிஸ்டர் பொதுஜனத்துக்கு தெரியாது.

  சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறீர்கள்... திடீரென சாலையின் இருமருங்கும் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட டிஜிட்டல் பேனரிலிருந்து நழுவி வரும் இரும்புச் சட்டமொன்று உங்களைப் பதம் பார்க்கிறது. உயிருக்கு ஆபத்து இல்லை ஆனாலும் அதனால் உண்டான மிரட்சியால் உங்களுக்கு சிறு விபத்து நேர்ந்து ஓரிரு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்ள நேர்கிறது. இது குற்றமா? குற்றமென்றால் யார் மீது புகாரளிப்பது? அப்படியே புகார் அளித்தாலும் தண்டனை பெற்றுத்தர சட்டத்தில் இடமுண்டா? மேலும் பாதிக்கப்பட்டவருக்கான நிவாரணங்கள் என்ன? என்பதைக் குறித்தெல்லாம் பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருப்பதில்லை.

  மேலே சொன்ன சம்பவங்கள் எல்லாம் உதாரணங்களே. இது மாதிரியான பல சம்பவங்களைப் பட்டியலிடலாம்; முதலில் குற்றங்களையும் அவற்றைத் தடுப்பதற்கான சட்டங்களையும் பற்றி நாம் தெளிவாக அறிய வேண்டுமென்றால் குற்றம் என்றால் என்ன என்பது குறித்தான தெளிவும் நமக்கு இருக்க வேண்டும்.

  குற்றம் என்றால் சட்ட நூல்படி அது பொது தவறு (பப்ளிக் ராங்) ஆகும். அப்படியான பொதுத் தவறுகள் இழைக்கப்படும் போது மக்களைப் பொறுத்தவரை பல சமயங்களில் அச்சத்தினாலோ, காவல்நிலையங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் அலைய முடியாது என்ற அலுப்பினாலோ அல்லது இயல்பான கோழைத்தனம் அல்லது சோம்பேறித்தனத்தினாலோ பொது மக்கள் தங்களுக்கு எதிரான குற்றங்களைப் பற்றிப் புகார் அளிக்காது கண்டு கொள்ளாமல் விடுவார்கள் எனில் அப்போது சட்டம் மதிப்பிழந்ததாக ஆகி விடாது. அதே சமயம் அத்தகைய குற்றங்களுக்கெல்லாம் சட்டத்தில் தண்டனை இல்லை என்பதாகவும் ஆகி விடாது. எப்போதெல்லாம் சமுதாயத்தின் அல்லது தனி மனிதனின் அடிப்படை உரிமைகளுக்கோ, பாதுகாப்பு அம்சங்களுக்கோ குந்தகம் ஏற்படுத்தக்கூடிய செயல்கள் நிகழ்கின்றனவோ அவையெல்லாம் குற்றம் என்ற வகைப்பாட்டில் தான் அடங்குகின்றன. மக்களுக்கு அதைக் குறித்த தெளிவை ஏற்படுத்துவது தான் சட்டமணி எனும் தலைப்பிலமைந்த இந்தத் தொடரின் நோக்கம். 

  எவையெல்லாம் குற்றங்களாகக் கருதப்படுகின்றன? அந்தக் குற்றங்களுக்கான தண்டனைகளும், சட்டங்களும் என்னென்ன? எனும் அடிப்படையில் முதல் பகுதியாக தமிழ்நாடு சூதாட்டச் சட்டம் குறித்துத் தெளிவாகப் பார்க்கலாம்.

  இனி ஒவ்வொரு வாரமும் திங்களன்று தினமணி இணையதளத்தின் ‘சட்டமணியில்’ நமது இந்தியச் சட்டங்களைப் பற்றி ஒரு அலசு அலசலாம். 

  தமிழ்நாடு சூதாட்டச் சட்டம் 1930

  The Tamilnadu Gambling Act 1930

  பொருள் வரையறைகள்: (பிரிவு 3)

  “பொதுச் சூதாட்ட விடுதி” என்பது சூதாட்டக்கருவிகளை அல்லது வீட்டை, அறையை, கூடாரத்தை, சுற்றடைப்பினை(enclosure), வாகனத்தை, கலத்தை அல்லது இடத்தைப் பயன்படுத்துவதற்காக கட்டளை வாயிலாகவேனும், மற்றபடி எவ்வாறாயினும், அத்தகைய வீட்டை, அறையை, கூடாரத்தை, சுற்றடைப்பினை, வாகனத்தை, கலத்தை அல்லது இடத்தைச் சொந்தமாகக் கொண்டிருப்பவரின் நேரடி அனுபோகத்தில் கொண்டிருப்பவரின், பயன்படுத்துகிறவரின் அல்லது வைத்திருப்பவரின் இலாபத்திற்காகவோ, ஆட்டச் சீட்டுகள், பகடைக் காய்கள்(dice), மேசைகள் அல்லது மற்றச் சூதாட்டக் கருவிகள் வைத்து வரப்படுகின்ற ஏதேனும் வீடு, அறை, கூடாரம், சுற்றடைப்பு, வாகனம், கலம் அல்லது வேறெந்த இடம் எதுவாயினும் என்று பொருள்படும்;

  மேலும் சூதாடும் நோக்கத்திற்காகத் திறந்து வைக்கப்பட்ட, அல்லது  பயன்படுத்தப்பட்ட, அல்லது திறந்து வைப்பதற்காகவோ, பயன்படுத்தப் படுவதற்காகவோ அனுமதிக்கப்பட்ட வீடு, அறை, கூடாரம், வாகனம், கலம் அல்லது இடம் எதனையும் உள்ளடக்கும். 

  “சூதாட்டம்” என்பதில் ஒரு குலுக்குச் சீட்டு உள்ளடங்காது. ஆனால், பந்தயம் வைப்பது இதில் அடங்கும். 

  குதிரை ஓட்டத்தில் வைக்கும் பணையம் அல்லது பந்தயமானது கீழ்க்கண்டவாறாக: 

  (1) குதிரை ஓட்டப்பந்தயம் நிர்ணயிக்கப்பட்டு நடக்கவிருக்கும் தேதியன்று மற்றும்
  (2) குதிரை ஓட்ட சுற்றடைப்புக்குள் உள்ள இடத்தில் அல்லது இடங்களில், அவ்வாறான குதிரை ஓட்டத்தினை கட்டுப்படுத்தும் அதிகார அமைப்பானது அரசின் ஒப்பளிப்பு பெற்றிருத்தல் வேண்டும். 

  விளக்கம்: 

  இந்த பொருள் வரையறையின் நோக்கத்திற்காகப் பந்தயம் கட்டுதல் அல்லது பணையம் வைத்தல் என்பது அதற்காகப் பணம் வசூல் செய்வதையும் அல்லது வேண்டிக்கொள்ளுதலையும் ஒரு பந்தயம் அல்லது பணையம் சம்பந்தமாய் கெலிப்புகள் அல்லது பரிசுகளைப் பணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ பெறுவதும் அல்லது வழங்குவதும் அல்லது அந்தப் பந்தயம் கட்டுதல் அல்லது பணையம் வைத்தல் அல்லது அதற்காக வசூலிப்பது, வேண்டிக்கொள்வது, பெற்றுக்கொள்வது அல்லது வழங்குவது ஆகியவற்றிற்கு உதவும் அல்லது உதவும் நோக்கத்தோடு கூடிய எந்தச் செயலும் அடங்குவதாகப் பொருள் கொள்ளப்படும். 

  “சூதாட்டக் கருவிகள்” என்பதில் சூதாட்டப் பொருளாக அல்லது சூதாடுவதற்குச் சாதகமாகப் பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்த கருதப்பட்ட யாதொரு பொருளும் சூதாட்டத்தின் யாதொரு வரவுகளையும், கெலிப்புகளையும் அல்லது பரிசுகளையும் பணமாக அல்லது வேறுவிதமாக வழங்கப்பட்ட அல்லது வழங்க உத்தேசிக்கப்பட்டவைகளின் ஒரு பதிவேடாக அல்லது பதிவுருவாக அல்லது சூதாட்டத்திற்குச் சான்றாகப் பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தபட எண்ணப்பட்ட யாதொரு ஆவணமும் அடங்கும். 

  சில விளையாட்டு வகைகளுக்கு யாதொரு சுற்றடைப்பு இடம் முதலியவைகளைத் திறத்தல் முதலியவற்றிற்குத் தண்டனை (Penalty for opening etc., for certain forms of gaming):  (பிரிவு:4)

  (1) எவரொருவர்,

  (அ) யாதொரு வீடு, அறை, கொட்டகை, வேலியடைக்கப்பட்ட இடம், ஊர்தி, வாகனம், கலன் அல்லது இடத்தின், சொந்தக்காரராயிருந்து(owner) அல்லது அனுபோகதாரராயிருந்து(occupier) அல்லது பயன்படுத்துபவராயிருந்து (user) அவற்றை கீழ்க்காணும், சூதாட்டத்திற்காக விடுகிறாரோ அல்லது பயன்படுத்துகிறாரோ 
  (i) ஒரு குதிரைப் பந்தயத்திற்கு அல்லது
  (ii) பருத்தி, தங்கம், வெள்ளி முதலியவை அல்லது வேறு பொருள்களின் நடப்பு விலையில் மேல் அப்படிப்பட்ட விலையில் பயன்படுத்தப்பட்ட எண்ணின் இலக்கங்களின் மேலும், அல்லது
  (iii) அப்படிப்பட்ட சரக்கின் நடப்பு விலையில் மாறுதலின் மேலும், அப்படிப்பட்ட மாறுதலைக்காட்டும் இலக்கங்களின் மேலும், அல்லது,
  (iv) யாதொரு சரக்கு இருப்பு அல்லது பங்கின் நடப்பு விலையில் மேலும் அல்லது அப்படிப்பட்ட விலையைக் காட்டும் எண்களின் இலக்கங்களின் மேலும், அல்லது.
  (v) ஒரு பொது இடத்தைப் பயன்படுத்தும் மோட்டார் ஊர்தியின் பதிவு எண்ணின் மேலும் அல்லது பதிவு இலக்கங்களின் மேலும், அல்லது
  (vi) தற்செயலாய் வரக்கூடிய கையிருப்புகள் அல்லது வெகுமானங்கள் பணமூலமாகவோ வேறு விதமாகவோ வரக்கூடியதைப் பங்கிட்டுக் கொள்ளும் யாதொரு பணையம் அல்லது பந்தயம் முதலிய நடவடிக்கை அல்லது திட்டத்தின் மேலும் அல்லது,

  (ஆ) யாதொரு வீடு, அறை, கொட்டகை, வேலியடைக்கப்பட்ட இடம், ஊர்தி, வாகனம், கலன் அல்லது இடத்தின் சொந்தக்காரராயிருந்து அல்லது அனுபோகதாரராயிருந்து மேலே சொல்லப்பட்டவைகளில் எவற்றிற்காகவது அவைகளைத் தெரிந்தும் அல்லது வேண்டுமென்றே சூதாடுவதற்காகத் திறந்து வைக்க, அனுபவிக்க அல்லது வேறு ஒருவரால் வைக்கப்பட அல்லது பயன்படுத்தப்பட அனுமதிக்கிறாரோ, அல்லது,

  (இ) மேலே சொல்லிய சூதாட்டக் காரியத்திற்காக ஒரு வீடு, அறை, கொட்டகை, சுற்றடைப்பு, ஊர்தி, கப்பல், அல்லது இடம் திறந்து வைக்கப்பட்டு அல்லது அனுபவிக்கப்பட்டு அல்லது வைக்கப்பட்டு அல்லது உபயோகப்படுத்தப்பட்டு அல்லது தொழில் நடத்துவதில் கவனமும் மேலாண்மையும் உடையவராய் அல்லது அதற்கு எந்த விதத்திலும் உதவி செய்கிறாரோ, அல்லது

  (ஈ) மேலே சொல்லப்பட்டவற்றில் சூதாடுவதற்காக அத்தகைய வீடு, அறை, கொட்டகை, வேலியால் அடைக்கப்பட்ட இடம், ஊர்தி, கப்பல் அல்லது இடத்திற்கு அடிக்கடி வருபவர்களுக்குப் பணம் கொடுக்கிறவரோ அல்லது முன்பணமாகக் கொடுக்கிறவரோ, அவர் 2 ஆண்டுகள் வரையில் நீடிக்கக்கூடிய சிறைவாசத் தண்டனையும் அல்லது ஐந்து ஆயிரம் ரூபாய் வரையில் விதிக்கப்படக்கூடிய அபராதத் தண்டனையும் அல்லது இரண்டும் பெறத் தண்டிக்கப்படுவதற்குரியவராவார்.

  ஆயினும், தீர்ப்புரையில் குறிப்பிடத்தக்க முரணான சிறப்பான & போதுமான காரணங்களின் பேரில்,

  (i) அத்தகைய சிறைத் தண்டனையாவது முதல் தடவையான குற்றமாக இருக்கும் போது, 3 மாதங்களுக்கு குறையாமலும் மற்றும் ரூ.500/- க்கு குறையாத அபராதமாக இருக்கும்;
  (ii) இரண்டாவது தடவையான குற்றமாக இருக்கும் போது, அத்தகைய சிறைத்தண்டனை 6 மாதங்களுக்குக் குறைவுபடாமலும் மற்றும் ரூ 750/-க்கு குறையாத அபராதமாக இருக்கும்; மற்றும்,
  (iii) மூன்றாவது தடவையான மற்றும் அதைத் தொடர்ந்த குற்றங்களுக்கு அவ்வாறான சிறைத் தண்டனையானது ஒரு வருடத்திற்கு குறையாமலும் மற்றும் ரூ.1000/- க்கு குறையாத அபராதமாகவும் இருக்கும். 

  (2) உட்பிரிவு (1) இல்  சொல்லப்பட்டுள்ள யாதொரு வீடு, அறை, கொட்டகை, வேலியிடப்பட்ட இடம், ஊர்தி, கலன் இவற்றில் எவரொருவர் அந்த உட்பிரிவில் சொல்லப்பட்டவைகளில் எவற்றிலாவது சூதாடுவதாகக் காணப்படுகிறாரோ அல்லது அவற்றில் சூதாடுவதற்காக வந்திருக்கிறாரோ அவர் ஒரு மாதம் வரையில் சிறைத் தண்டனையும் அல்லது ஐந்நூறு ரூபாய் வரை அபராதத் தண்டனையும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுவத்தற்குரியவராவார். 

  அத்தகைய வீடு, அறை, கொட்டகை, வேலியிடப்பட்ட இடம், ஊர்தி, கலன் அல்லது இடத்தில் (1)-ஆம் உட்பிரிவில் கண்டவற்றில் எவற்றிலேனும் சூதாட்டம் நடந்து கொண்டிருக்கும் போது காணப்படும் எவரும், அதற்கு மாறாக மெய்ப்பிக்கப்பட்டாலன்றி சூதாடுவதற்காக அவர் அவ்விடம் இருந்ததாக எடுத்துக் கொள்ளப்படும்

  (3)    உட்பிரிவு (1)இல் சொல்லப்பட்டுள்ளவற்றில் எவற்றிலேனும் ஒரு பொதுத் தெருவில் அல்லது வழியில் அல்லது பொது மக்கள் நடமாடும் அல்லது நடமாட அனுமதிக்கப்படக்கூடிய இடத்தில் சூதாடுவதாகக் காணப்படுபவர் மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் அல்லது முந்நூறு ரூபாய்கள் வரையில் அபராதத் தண்டனையும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுவதற்குரியவராவார்.

  குற்றம் பற்றிய அனுமானம்: (Presumption of offence) (பிரிவு 4அ)

  (1) பிரிவு 4 உட்பிரிவு (1)ன் கீழான தண்டிக்கத்தக்க குற்றத்திற்கான வழக்கு விசாரணையில், மெய்ப்பிக்கப்படுகிறவிடத்து.

  (i)    பருத்தி, தங்கம் அல்லது பிற பொருளின் சந்தை விலை பற்றிய இலக்கங்கள் கொண்ட சீட்டு, அல்லது
  (ii)    பருத்தி, தங்கம் அல்லது பிற பொருளின் சந்தை விலையின் பேரில் பந்தயம் அல்லது பணையம் வைக்கும் நோக்கத்திற்காக பெறப்பட்ட ரொக்கம் அல்லது பகிர்ந்தளிக்கப்பட்ட ரொக்கம் தொடர்பானதாக தோன்றும் கணக்குகள், அல்லது
  (iii)    அத்தகைய விலைகள் கொண்டுள்ள செய்தித்தாள்கள் கண்டுபிடிக்கப்படும் யாதொரு வீடு, அறை, கூடாரம், சுற்றடைப்பு, வாகனம், கலன் அல்லது இடம், மாறாக மெய்ப்பிக்கப்பட்டாலான்றி, அத்தகைய வீடு, அறை, கூடாரம், கலன், அல்லது இடம், பிரிவு 4 உட்பிரிவு (1)ன் கீழான பொருளமைவுக்குள் சூதாட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக அனுமானம் (அல்லது துணிபு) கொள்ளப்படும். 

  (2) பிரிவு 4ன் உட்பிரிவு (2) அல்லது (3) ன் கீழான தண்டிக்கத்தக்க குற்றத்திற்கான விசாரணையில், உட்பிரிவு (1) ன் கீழான பொருட்கள் எதிரியின் கைவசம் உடைமையில் இருந்தது மெய்ப்பிக்கப்பட்டால், முரணாக மெய்ப்பிக்கப்பட்டாலன்றி, பிரிவு 4 உட்பிரிவு (2)ன் கீழ் அல்லது உட்பிரிவு (3)ன் கீழான நேர்வுக்கேற்ப பொருளமைவுக்குள் சூதாட்டக் குற்றத்தினை குற்றம்சாட்டப்பட்டவர் புரிந்துள்ளதாக ஊகம் அல்லது அனுமானம் கொள்ளப்படும். 

  ஒரு பொது சூதாடுமிடத்தில் நுழைய (வாரண்டு) ஆணை அளிக்க அதிகாரம் ( Power to grant warrant to enter a common gaming house): (பிரிவு 5)

  (1) இரண்டாம் வகுப்பு குற்றவியல் நீதிபதிக்குக் குறைவில்லாத குற்றவியல் நீதிபதியும் அல்லது ஒரு காவல் துணைக் கண்காணிப்பாளர் படிநிலைக்கு குறையாத எந்தக் காவல் அலுவலரும் யாதொரு இடமும், ஒரு பொது சூதாடும் இடமாகப் பயன்படுத்தப்படுகிறது என்று நம்பக் காரணமிருந்தால், அவர் தம் ஆணையின் மூலம் ஒரு உதவிக் காவல் சார்பு ஆய்வாளர் படிநிலைக்குக் குறையாத யாதொரு காவல் அலுவலருக்கும் அல்லது தேவையென்று தோன்றும் உதவியுடன் இரவில் அல்லது பகலில் அந்த இடத்தில் நுழையவும், அவ்விடம் காணப்படும் எல்லோரையும் கைது செய்யவும், சூதாடும் கருவிகளையும் எல்லாப் பணங்களையும், பணங்களுக்குப் பத்திரங்களையும் அவ்விடம் காணப்படும் ஏனைய சூதாடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அல்லது பயன்படுத்தும் நோக்கத்திற்காக என்று நியாயமாகச் சந்தேகிக்கக் கூடிய, மதிப்புள்ள பொருட்களைக் கைப்பற்றவும், மேலும் அந்த இடத்தின் எல்லாப் பாகங்களையும் அவ்விடத்தில் காணப்பட்ட எல்லா நபர்களையும் சோதனை போடவும், அதிகாரம் அளிக்கலாம்.

  (2) உட்பிரிவு (1) இன் கீழ் ஆணையிட்ட அதிகாரத்தையுடைய எந்தக் காவல் அலுவலரும், அவ்வாறு செய்வதற்குப் பதிலாக, அப்படிப்பட்ட ஆணையின் கீழ் செயலுறுத்தக் கூடிய எல்லாம் அல்லது சில அதிகாரங்களைத் தாமே செயலுறுத்தலாம். 
  முந்தைய பிரிவின் கீழ் சோதனையில் காணப்பட்ட சீட்டுகள், பாய்ச்சிகள் முதலியவை அந்த இடம் ஒரு பொது சூதாட்ட இடம் என்பதற்குச் சான்றாகும் (Cards, dice, etc., found in search under last section to be evidence that place is a common gaming house): (பிரிவு 6) 

  இதற்கு முந்தைய பிரிவின் வகையங்களின் கீழ் சோதனை செய்யப்பட்டதில் உண்மையில் காவல் அலுவலர் அல்லது அவரது உதவியாளர்களில் எவரும் நேரில் ஒரு சூதாட்டத்தையும் பார்க்காவிட்டாலும் உள் நுழைந்த யாதொரு இடத்திலும் அல்லது அந்த இடத்தில் உள்ள யாதொரு நபரின் மேலும் காணப்பட்ட சீட்டுகளும், சூதாட்ட மேசை அல்லது துணி, பலகை அல்லது வேறு சூதாட்டக் கருவிகளும் அத்தகைய இடம் ஒரு பொது சூதாடுமிடமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கும் அவ்விடத்தில் காணப்பட்ட நபர்கள் சூதாடும் நோக்கத்திற்காக அவ்விடம் இருந்தார்கள் என்பதற்கும் சான்றாகும். 
  பந்தையங்களுக்காக ஆடப்பட்டது என்று மெய்ப்பிக்கத் தேவையில்லை

  (Proof of playing for stakes unnecessary) (பிரிவு 7)
  ஒரு பொது சூதாட்ட இடத்தை வைத்து நடத்தியதாக அல்லது ஒரு பொதுச் சூதாடுமிடத்தின் செயலில் சம்பந்தப்பட்டிருந்ததாக யாதொரு நபரையும் குற்றவாளியாக்குவதற்கு எந்தவொரு சூதாட்டமும் ஆடிக்கொண்டிக்கக் காணப்பட்ட யாதொரு நபரும் பணத்திற்காக அல்லது பந்தையத்திற்காக அல்லது பணையத்திற்காக அல்லது பந்தையப் பொருளுக்காக ஆடிக்கொண்டிருந்தாரென்று மெய்ப்பிக்கதேவையில்லை. 

  பொது சூதாட்ட இடம் திறப்பது முதலியவைகளுக்குத் தண்டம் (Penalty for opening, etc., a common gamming-house).- (பிரிவு 8. )

  எவரொருவர் ஒரு பொது சூதாட்ட இடத்தைத் திறந்து வைக்கின்றாரோ, நடத்துகிறாரோ, அல்லது ஒரு பொதுச் சூதாட்ட இடத்தைப் பயன்படுத்த அனுமதிக்கின்றாரோ அல்லது யாதொரு பொது சூதாட்ட இடத்தின் நடவடிக்கைகளை நடத்த உதவி செய்கின்றாரோ அல்லது அவ்விடத்தில் நடக்கும் சூதாட்டத்திற்கு முன்பணம் அளிக்கிறாரோ அல்லது பணவசதி செய்து தருகிறாரோ, அவர் குற்றவாளியென்று தீர்ப்பளிக்கப்பட்டதன் மேல் ஐந்நூறு ரூபாய்களுக்கு மேற்படாத அபராதத் தண்டனைக்கும் அல்லது மூன்று மாதங்களுக்கு மேற்படாத சிறைத் தண்டனைக்கும் அல்லது இரண்டுக்கும் சேர்த்து தண்டனைக்குள்ளாவார். 

  ஒரு பொதுச் சூதாட்ட இடத்தில் சூதாடிக் கொண்டிருப்பதாகக் காணப்படுவதற்குத் தண்டம் (Penalty for being found gaming in a common gaming house): (பிரிவு 9.)
  எவரொருவர் ஒரு பொதுச் சூதாட்ட இடத்தில் சூதாடிக் கொண்டு அல்லது சூதாடும் நோக்கத்துடன் இருக்கக் காணப்படுகிறாரோ அவர் குற்றவாளியென்று தீர்ப்பளிக்கப்பட்டதன் மேல் இருநூறு ரூபாய்களுக்கு அதிகப்படாத அபராதத் தண்டனைக்கும் ஒரு மாதத்திற்கு மேற்படாத சிறைத் தண்டனைக்கும் உட்படுவார். ஒரு பொதுச் சூதாடுமிடத்தில், யாதொரு சூதாட்டம் அல்லது விளையாட்டு நடந்து கொண்டிருக்கும்போது காணப்படும் எந்த நபரும், அதற்கு எதிராக மெய்ப்பிக்கும் வரையில், அவ்விடம் அவர் சூதாடும் நோக்கத்துடன் இருந்ததாகவே எடுத்துக்கொள்ளப்படுவர். 
  குற்றவாளியென்று தீர்மானிக்கப்பட்டதன் மேல் சூதாட்டக் கருவிகளை அழித்துவிட உத்திரவிடலாம்.
  (Instruments of gaming may be ordered to be destroyed on conviction) (பிரிவு 10.)

  ஒரு பொது சூதாட்ட இடத்தை வைத்து நடத்தியற்காக அல்லது சூதாடுவதற்காக அந்த இடத்தில் இருந்ததற்காக யாதொரு நபரும் குற்றவாளியென்று தீர்ப்பளிக்கப்பட்டதன் மேல் அந்தக் குற்றவியல் நீதிபதியின் உத்திரவால் அவ்விடத்தில் காணப்பட்ட எல்லாச் சூதாட்டக் கருவிகளையும் அழித்துவிடலாம். அந்தக் குற்றவியல் நீதிபதி கைப்பற்றப்பட்ட ஏனைய எல்லாப் பொருளையும் அல்லது அவற்றின் முதலையும் சட்டப்படி பறிமுதல் செய்ய ஆணையிடலாம். 

  திறமையாட்டங்களுக்குக் காப்பு 
  (Saving of games of skill). – (பிரிவு 11)
  இந்தச் சட்டத்தின் 5 முதல் 10 ஆம் பிரிவுகளில் உள்ளது எதுவும் வெறும் திறமைக்காக ஆடப்படும் ஆட்டங்களுக்கு எவ்விடத்தில் ஆடப்பட்டாலும் பொருந்துவதாக முடிவு செய்யப்படாது. 

  தகவல் அளிப்பவர்களுக்கும் காவல் அலுவலர்களுக்கும் அபராதத்தில் ஒரு பாகத்தை அளித்தல் 
  (Payment of portion of fine to informants and Police Officers) (பிரிவு 11அ)

  (1) பிரிவுகள் 4, 8 அல்லது 9 இன் கீழ் விதிக்கப்பட்ட யாதொரு அபராதத்திலும் பாதிக்கும் அதிகப்படாத யாதொரு பாகத்தையும் 10-ஆம் பிரிவின் கீழ் கைப்பற்றப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்ட பணங்கள் அல்லது பொருள்களின் விற்று முதல் தொகையையும் குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவிய அத்தகைய தகவல் அளித்தவர்களுக்கும் காவல் அலுவலர்களுக்கும் கொடுக்கும்படி உத்திரவிடலாம். 
  மேல்முறையீடு, மேலாய்வு அல்லது சீராய்வு நீதிமன்றத்தால் கூட இந்த உட்பிரிவின் கீழ் ஒரு கட்டளை பிறப்பிக்கப்படலாம். 

  (2)- (1)-ஆம் உட்பிரிவின் கீழ் உத்திரவிடப்பட்டிருக்கிறவிடத்து, சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிபதி அந்த உட்பிரிவின் கீழ் செலுத்த வேண்டிய தொகையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்புவார். அவர் அதைத் தமக்குப் பொருத்தமெனத் தோன்றும் அத்தகைய விகிதாசாரத்தில் அவர் தெரிந்தெடுக்கக்கூடிய மேற்சொல்லப்பட்ட அத்தகைய தகவல் அளித்தவர்களுக்கும், காவல் அலுவலர்களுக்கும் பகிர்ந்து அளித்தல் வேண்டும். 
  (3) மேலே சொல்லப்பட்ட தொகையை (1)ஆம் உட்பிரிவின் கீழ் உத்திரவிடப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்கள் முடிவடையும் வரையிலும் அல்லது ஒரு மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தால் அது முடிவாகும் வரையிலும் காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பக்கூடாது. 
  பிரிவு 11ஆ. நீக்கம்

  பொதுத் தெரு முதலியவைகளில் சூதாடுவதற்குத் தண்டம்
   [Penalty for gaming in public street, etc] ( பிரிவு 12 )- 

  எவரொருவர் பொதுத் தெருவில் அல்லது பொது வழியில் சீட்டுகள், பாய்ச்சிகள், பணமேடை, பணம் அல்லது வேறு சூதாட்டக் கருவிகளுடன் சூதாடிக் கொண்டிருக்கக் காணப்படுபவர் குற்றவாளியென்று தீர்ப்பளிக்கப்பட்டதன்மேல், ஐம்பது ரூபாய்களுக்கு அதிகப்படாத அபராதத் தண்டனைக்கும் அல்லது ஒரு மாதத்திற்கு மேற்படாத சிறைத் தண்டனைக்கும் உள்ளாவர் மற்றும் அத்தகைய சூதாட்டக் கருவிகளும் பணமும் பறிமுதல் செய்யப்படும். 

  குற்றம் செய்யப்படுவதை கண்ணுற்ற காவல் துறையினர் பிடிகட்டளையின்றி கைது செய்திடலாம்
   [Offences under the Act to be cognizable] (பிரிவு 13.).- 1973ம் ஆண்டு குற்றவியல் விசாரணை முறைச் சட்டத்தில் அடங்கியுள்ளது எது எவ்வாறாக இருப்பினும், இப்பிரிவின் கீழான தண்டிக்கத்தக்க அனைத்துக் குற்றங்களும் பிடியாணை வேண்டாதவையாகும். 

  சாட்சிகளைப் பொறுப்பினிலிருந்து விடுவித்தல் [ Indemnification of witness]- (பிரிவு 13அ) 

  இச்சட்டத்திற்கு முரணாக, சூதாட்டத்தில் தொடர்புடைய நபரொருவரை, மற்றும் இச்சட்டத்தின் சூதாட்டம் தொடர்பான வகையங்களை மீறியதற்காக யாதொரு நபரை நடுவர் முன்னிலையான விசாரணையில் சாட்சியாக விசாரணை செய்திடும் போது, அவ்வாறான விசாரணையில் தனது அறிவுக்கு அறிந்த முழு உண்மையினை தெரிவிப்பாராவின், நடுவரிடமிருந்து அந்நபர் எழுத்துருவிலான சான்றிதழ் பெறுவதன் மூலம், இச்சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட முந்தைய வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுவர். 
  நீக்கம்.[  Repeal] (பிரிவு 14. )–
  1889 –ஆம் ஆண்டு நகரத் தொல்லைகள் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (10) ஆம் பகுதியும் கடைசிப்பத்தியும் 6, 7. 9 ஆம் பிரிவுகளும் ஈங்கிதனால் நீக்கப்படுகின்றன. 


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp