சிதம்பரம் நடராசர் கோயிலும், சட்டச் சிக்கல்களும்

சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரன் கோயிலின் ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாய் என உள்ளதையும், சிதம்பரம் சபாநாயகர் கோயிலில் வெறும் 37 ஆயிரத்து 199 ரூபாய் மட்டுமே என்பதையும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டி இத்தொகையில
சிதம்பரம் நடராசர் கோயிலும், சட்டச் சிக்கல்களும்

கோயில் கட்டுமானம்

ஒளிநடராசனின் வடிவை ஐயுலோகத்தில் அமைத்து, அவனுக்கு கோயிலை நிர்மாணித்துக் கொடுத்தவன் எழுத்தச்சன், பெருந்தச்சன் எனப்படும் “மயன்” (Mayan) ஆவான். இத்தில்லைக் காட்டுக் கோயில் திரேதாயுகத்தில் 17,000-மாவது ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட செய்தி மயநூலில் கிடைக்கிறது. இது பற்றிய மேலும் செய்திகள் வைசம்பாயனம், விஸ்வகர்ம வம்ச பிரகாசிகை போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றிய விரிவான கட்டுரை திருமதி பொன்னி செல்வநாதன் எழுதியது காணலாம்.

இந்தக் கோயிலைச் சோழப் பேரரசு கட்டியதாக வித்வான் கே. வெள்ளைவாரணன் எழுதிய தில்லைப் பெருங்கோயில் வரலாறு எனும் நூல் கூறுகிறது. சிற்றம்பலத்தை சோழர்கள் கட்டி குல தெய்வமாக வழிபட்டு வந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றன. மேலும் தெற்கு கோபுரத்தை கோப்பெருஞ்சிங்கனும், வடக்கு கோபுரத்தை கிருஷ்ணதேவராயரும் (ARE 371), மேற்கு கோபுரத்தை பாண்டியர்களும், கிழக்கு கோபுரத்தை விக்கிரமசோழனும் கட்டியுள்ளனர். அதில் கிழக்கு கோபுரத்தை பச்சியப்ப முதலியார் புதுப்பித்துள்ளார். ஆதித்தச் சோழன் கி.பி. 871 முதல் 907 வரை ஆண்ட காலத்தில் சிதம்பரம் கோயில் விமானத்தில் பொன்ஓடு வேய்ந்தான். இத்தகவல் திருத்தொண்டர் திருவந்தாதி நூலில் நம்பியாண்டார்நம்பி 11 ஆம் நூற்றாண்டில் எழுதியுள்ளார். எண்ணற்ற மன்னர்கள் பொன்வேய்ந்துள்ளனர்.

கோயிலின் முதல் சுற்றுப் பாதை (பிரகாரம்) விக்கிரம சோழ திருமாளிகை என்றும், இரண்டாம் சுற்றுப்பாதை குலோத்துங்க சோழன் திருமாளிகை என்றும் மூன்றாம் சுற்றுப்பாதை தம்பிரான் திருவீதி என்றும் மேலகோபுரம் குலோத்துங்க சோழன் திருமாளிகைப் புறவாயில் எனவும் அழைக்கப் படுவதாகத் தென் இந்தியக் கல்வெட்டு ஆய்வு எண் 22 தெரிவிக்கிறது. சோழ, பாண்டிய, பல்லவ, விஜய நகர மன்னர்கள் தாம் கோயிலின் பல திருப்பணிகளைச் செய்துள்ளனர்.

நரலோக வீரனின் திருப்பணிகள்...

முதற் குலோத்துங்கன் ஆட்சியில் சிறந்த சேனைத் தலைவனாக இருந்தவன் “நரலோக வீரன்” விக்கிரம சோழன் ஆட்சி முற்பகுதியிலும் இருந்தவன். இவன் சிதம்பரம் கோயிலுக்கு “சித்தலிங்கமடத்தில் சிவனுறையும் கற்றளி ஒன்று கட்டினான்' அதைச் சுற்றிப்பிரகாரமும் ஒரு மண்டபமும் அமைத்தான்." திருப்புலிவன ஈசற்கு விளக்கெரிக்க 12 கழஞ்சு பொன் அளித்தான். "திரிபுவனை ஈசற்கு நிலங்கள், மண்டபம், நந்தவனங்கள் இவற்றை அமைத்தான் " திருப்புகலூரில் நரலோக வீரன் என்ற தன் பெயரால் மண்டபம் ஒன்று கட்டினான்." இவன் தில்லையில் செய்த திருப்பணிகள் பல;

(1) தெருக்களில் விளக்குகள் போடச் செய்தான் ;

(2 விழாக்காலங்களில் தெருக்களில் நீர் தெளிக்க ஏற்பாடு செய்தான் ;

(3) சிறந்த முறையில் ஒரு லட்சம் பாக்கு மரங்கள் கொண்ட நந்தவனம் ஒன்றை அமைத்தான் ;

(4) தில்லைக்கும் கடலுக்கும் நடுவில் பெரிய அகன்றசாலையை அமைத்தான்; கடற்கரையில் மாசி மகத்தின்போது நடராசப் பெருமான் தங்குவதற்காக மண்டபம் ஒன்று அமைத்தான்; கோவிலில் தினந்தோறும் விளக்கு எரியச் செய்தான்; கூத்தப்பிரான் கோவில் அருகில் தூயநன்னீர்க்குளம் ஒன்றை வெட்டினான்; கரையில் பெரிய ஆலமரம் ஒன்றை வளர்த்தான்.

(5) கோவிலைச்சுற்றிப் பெரிய மதிலை ‘நரலோக வீரன்’ என்ற தன் பெயரால் எழுப்பினான் 

(6) இவன் நூற்றுக்கால் மண்டபம் ஒன்றும் அமைத்தான் ,

(7) கோவில் குளத்தின் நான்கு பக்கங்களிலும் படிகள் அமைத்தான் ;

(8) கோவிலின் தென்வாயிலின் இரு புறங்களிலும் மங்கல விளக்குகள் எரியச் செய்தான் ;

(9) தில்லைவாழ் அந்தணர்க்கு வள்ளலாய் விளங்கினான் ;

(10) திருஞான சம்பந்தர் தேவாரத்தை ஓதுவதற்கென்று அழகிய மண்டபம் ஒன்றை அமைத்தான். இந்த நூறுகால் மண்டபம் சிதம்பரம் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தத்துக்கு மேற்கில், சிவகாமி அம்மன் சன்னதிக்கு தெற்கில் இருக்கிறது. இம் மண்டபத்தை கட்டியவன் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. நரலோக வீரனின் மெய் கீர்த்தி அவனை தொண்டைமான் என்றும் வேளாண் குடி முதல்வன் என்றும் போற்றுகிறது, இதன்மூலம் இவன் வேளாளர் குடியை சார்ந்த தளபதி என்று தெரிகிறது

சிதம்பரம் மேற்கு கோபுரத்தின் நுழைவு பகுதியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோயில் வடபுறம் உள்ள கல்வெட்டு (ARE 376),

“விஜய தேவராய மகாராயர் சக ஆண்டு, 1349, மீனம், 5-ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை சிதம்பரம் நடராஜ பெருமாள் கோயிலில் நடக்கிற தவறுகள் குறித்தும், சரிவர கணக்குகளை பராமரிப்பரிப்பதில்லை என்றும் குற்றச் சாட்டுகள் எழுந்தனஇதனை 15 பேர் கொண்ட அமைப்பு தேர்த்திருவிழா நடைபெறுவதில்லை, கோயில் பழுது பார்ப்பதில்லை என்பதையும் சேர்த்து புகாராக வழங்கினர். அதனை ஏற்று மன்னர், அந்த 15 பேரையே கோயில் பராமரிப்புக் குழுவாக நியமித்து ஆணையிட்டார். அவர்களையே தேர்த்திருவிழா, கோயில் பராமரித்தல் அனைத்தையும் முன்னின்று செய்ய ஆணையிட்டார்’ என கூறுகிறது. அக்கல்வெட்டு டைல்ஸ் கண்டு இப்போது ஒட்டி மறைக்கப்பட்டுள்ளது.

தீட்சதர்களும், நீதிமன்ற நடவடிக்கைகளும்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில், பூசை செய்கின்ற தீட்சிதர்கள் சொந்தக் கோயில் என்ற கருத்தினை கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது பொதுக் கோயில், தீட்திதர்கள் சொத்து அல்ல என்று நீதிமன்றங்கள் தெளிவான தீர்ப்புகளை வழங்கியுள்ளன. 108/1888, 159/1888 எண் கொண்டுள்ள மேமுறையீட்டு மனுக்களை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஷெப்பர்டு மற்றும் முத்துசாமி ஐயர் இருவரும், “சிதம்பரம் நடராஜர் கோயில் பன்னெடுங்காலமாக ஒரு பொதுக்கோயிலாக இருந்துவருகிறது, தீட்திதர்களின் தனிப்பட்ட சொத்து என்பதற்கு ஆதாரமே கிடையாது என 17-03-1890இல் தீர்ப்புக் கூறியுள்ளனர்.

சபாநாயகர், கோயில் என்பது ஒரு பொதுக் கோயில் - முன்பிருந்த அறநிலைய வாரியம் தனது ஆணை எண். 997 நாள் 8-5-1933 இல் தமிழ்நாடு சட்டம் II- 1927 இன் பிரிவு 6(18) மற்றும் 6(20)களின்படி இம்மாதிரி அறிவித்தது. இந்த கோயில் சொந்தக் கோயில் என தீட்சிதர்கள் எழுப்பிய வாதத்தை நிராகரித்து, தென்னாற்காடு மாவட்ட நீதிபதி சி.என்.குப்புசாமி ஐயர். ஓ.எஸ்.எண்.16/1933 இல் 9-9-1936 அன்று தீர்ப்புக் கூறியுள்ளார். அதை எதிர்த்து தீட்சிதர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த ஏ.எஸ்.306/1936 ஐ 3-4-1939-இல் தள்ளுபடி செய்த நீதிபதிகள் வெங்கடரமணாவும், நியூசாமும், இது அரசு சட்டத்தின் கீழ்வருகின்ற ஒரு பொதுக்கோயில் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என கூறியுள்ளார்கள்.. இம்முடிவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் சர்.ஆல்பிரட் ஹென்றிலயோனல் லீச்சும், நீதிபதி கிருஷ்ணசாமி ஐயங்காரும் சி.எம்.பி. எண்.3247 /1939 இல் 23-1-1940 ஆம் நாள் உறுதி செய்துள்ளனர்.

பொதுக்கோயிலாக அறிவிக்கப்பட்டாலும், செயல்முறைக்கு வராத நிலையில் சட்டப்பிரிவு 65 இன் படிக்கான கோயில் என அரசாணை எண்.894 நாள் 28-8-1951 இல் அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தீட்சிதர்கள் வழக்கு போட்டனர். அரசாணை நீதி மன்றத்தால் நிராகரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

கோயிலுக்கு நிர்வாக அலுவலரை சட்டப் பிரிவு 45 (1) இன்படி நியமனம் செய்ததை உறுதிப்படுத்தி அறநிலையத்துறை ஆணையர் 31-7-1987 இல் பிறப்பித்த ஆணையை எதிர்த்து தீட்சிதர்களின் பொதுசெயலாளர் மேல் முறையீடு செய்தார். ரிட் மனு எண். 18249/2006 – இல் 2-2-2009 அன்று ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, நிர்வாக அலுவலர் பொறுப்பேற்றுப் பணியாற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் - அதற்கு தீட்சிதர்கள் எல்லா ஒத்துழைப்பும் அளிக்கவேண்டும் என்ற நீதியரசர் ஆணையிட்டார்.

கோயிலில் பல்வேறு ஒழுங்கீனங்கள் நடைபெறுவதையும் நிர்வாக முறைகேடுகளையும் சுட்டிக்காட்டி, நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட இருப்பதையும் தெரிவித்து ஒரு அறிவிக்கை அரசால் 20-7-1982 இல் வழங்கப்பட்டது. இதனையும் தீட்சிதர்கள் எதிர்த்து 9-8-1983 இல் உயர்நீதிமன்றம் சென்றனர். காரணம் கேட்கும் அறிவிக்கை என்ற அளவில் இதனை எடுத்துக்கொள்ளலாம் என்று உயர்நீதி மன்றம் தெரிவித்து ஆணையிட்டது.

அதன்படி தீட்சிதர்களின் முறையீடுகளை ஆய்ந்து அரசு அவற்றை ஏற்க மறுத்து, கோயிலின் நிர்வாகத்தைக் கவனிக்க மட்டுமே நிர்வாக அலுவலர் நியமிக்கப்படுகிறார் எனவும், இது தீட்சிதர்களின் உரிமைகளில் குறுக்கீடு செய்வதாக அமையாது என்றும் விளக்கமான ஆணைகளை 31-7-1987 இல் அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்தார்.

நியமிக்கப்பட்ட நிர்வாக அலுவலர் 10-8-1987 இல் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். எனினும் இந் நியமனத்தை எதிர்த்து மீண்டும் தீட்சிதர்கள் ரிட்மனு 7843/ 1987 தாக்கல் செய்தனர். நியமனம் பற்றி ஏதும் கூறாமல், நிர்வாக அலுவலரின் பதவிப் பணிகள் பற்றிய சட்டப்பிரிவு 3 ஐ தேக்கி வைத்து உயர்நீதி மன்றம் ஆணையிட்டது.

பிறகு 11-2-1997 இல் தீட்சிதர்களின் ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மறு ஆய்வு மனு போட்டனர். அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவுக்கு மேல், சட்டப்பிரிவு 114 இன்படி, அரசிடம் சீராய்வு மனு தரலாம் என அறிவுறுத்தப்பட்டது. அதற்கேற்ப தீட்சிதர்கள் கொடுத்த மனுவும் அரசாணை 168 நாள் 9-5-2006 இன்படி நிராகரிக்கப்பட்டது. அந்த ஆணையை எதிர்த்து தீட்சிதர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டின் பேரில்தான் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீட்சிதர்கள், சட்டப்பிரிவு 28- இன்படி தம் கடமைகளைச் செய்யவில்லை, கணக்குகள் பராமரிக்கப் படவில்லை, கோயிலுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளைக் கணக்கில் கொண்டுவரவில்லை என்கிற காரணங்களால் - கோயிலின் நிர்வாகத்தைச் செம்மையாகச் செய்திடும் நோக்குடன் நிர்வாக அலுவலர் நியமிக்கப்படவேண்டியது முற்றிலும் அவசியமானது என அரசு தெரிவித்தது.

மதச் சிறு பிரிவினரின் கோயில் (Religious Denomination) என்றும் இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 26 இன்படி, மதச் சிறுபிரிவினரின் உரிமைகளைப் பறிக்கக்கூடாது என்றும் நிர்வாக அலுவலரின் நியமனம் தீட்சிதர்களின் மதச்சார்பான செயல்களில் குறுக்கீடு செய்வதாகும் எனவும் தீட்சிதர்களின் தரப்பில் வாதாடப்பட்டது.

நடராசன்கோயில், பொதுக்கோயில் என்றும் மதச்சிறுபிரிவினருக்கானது அல்ல என்றும் அரசுத் தரப்பில் எடுத்துக் கூறப்பட்டு - நிர்வாக அலுவலரின் கடமைகள் தனியாக வரையறுக்கப்பட்டுள்ள நிலை அமைந்துள்ளதால் - அது தீட்சிதர்களின் உரிமைகளில் தலையிடுவதாக அமையாது என்பதும் எடுத்துக் கூறப்பட்டது.

மேலும், ஆறுமுகசாமி என்பவர் தாம் கோயிலில் தேவாரம் பாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு தீட்சிதர்களால் பலமுறை தாக்கப்பட்டும் தடுக்கப்பட்ட நிலை இருப்பதால், இந்த வழக்கில் தம்மையும் எதிர்மனுதாரராகச் சேர்த்து ஆணையிடவும் கோரி, இடைமனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். நியமனம் செய்யப்பட்ட நிர்வாக அலுவலரின் செயல் அதிகாரங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தம் கோரிக்கை தொடர்பாக ஏதும் செய்ய முடியாதவாறு நிர்வாகம் இருப்பதால் தம்மை வழக்கில் இணைத்து வாதாட அனுமதி கோரினார். தேவாரம், திருவாசகம் பாடிட அனுமதி அரசாணை 53 நாள் 29-2-2008 இன்படி வழங்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் கூறி, அதன்படி பாடியபோது தம்மைத் தீட்சிதர்கள் தாக்கினர் என்பதையும் சுட்டிக் காட்டி அவரின் வழக்கறிஞர் வாதாடினார்.

தமிழ் வழிபாட்டுப் பயிற்சி மையத்தின் தோற்றுநரும் இயக்குநருமான சத்தியவேல் முருகன் என்பாரும் தம்மை வழக்கில் இணைத்துக் கொள்ள அனுமதிக்குமாறு கேட்டு மனு தாக்கல் செய்தார்.1927 ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படியான நிர்வாகத் திட்டம் அறநிலைய வாரியத்தின் ஆணை எண். 997 நாள் 8-5-1933 இன்படி வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி கோயிலின் நிர்வாகங்களை அரசு அலுவலர் கவனித்துச் செயல்பட அதிகாரங்கள் சட்டப் பிரிவுகள் 3,4,5, 8(அ), 8(ஆ), (8(1) மற்றும் 10 ஆகியவற்றில் அளிக்கப்பட்டு உள்ளன. கோயில் தீட்சிதர்களின் சொந்தச் சொத்து என்ற தீட்சிதர்களின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது 1936 இல் கோயில் பொதுவானது என்பதில் எந்த ஐயப்பாடும் கிடையாது.

மதச்சிறுபிரிவினர் தம் சொத்துக்களைச் சட்டப்படி பராமரிக்க உரிமை உண்டு. சொத்துகளைப் பராமரிப்பதும் மதச் சம்பந்தமானவற்றைக் கவனிப்பதும் இருவேறுபட்ட விசயங்களாக உள்ளன. மத சம்பந்தப்பட்ட விசயங்களைக் கவனிப்பது அடிப்படை உரிமையாகவும் வேறொரு சட்டத்தால் எடுத்துக்கொள்ளப்பட முடியாததாகவும் உள்ளது; ஆனால் சொத்துகளைப் பராமரிப்பதை சட்டம் மூலம் ஒழுங்குபடுத்திட முடியும். மதச்சிறுபிரிவு என்பதை ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி குறிப்பிடுவதுபற்றி உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் (AIR 1954 SC 282) மற்றும் 1954 SCR 1005 ஆகிய வழக்குகளில் இம்மாதிரி தீர்ப்பு அளித்துள்ளது.:

மதச் சிறுபிரிவு என்பதன் கீழ் மடங்கள் வருமா? அகராதிப்படி மதச் சிறு பிரிவு என்பது, ஒரே பெயரையும் கொள்கை, நம்பிக்கையையும் கொண்டிருக்கும் நபர்கள் ஒன்று சேர்ந்து அமைப்பை ஏற்படுத்தித் தனித்ததொரு பெயரைச் சூட்டிக்கொண்டிருப்பது ஆகும். சங்கராச்சார்யா தனியே மடத்தை நிறுவினார். அவருக்குப் பின் பலபேர் மத ஆசிரியர்களாக வந்து பலப்பல பிரிவுகளை உண்டாக்கிவிட்டனர் என்பதை இன்றளவும் காண்கிறோம். இவை மதச்சிறு பிரிவு என்று அழைக்கப்படலாம். அது போலவே, ராமானுஜரால் ஏற்படுத்தப்பட்ட சிறீவைணவத்தவர் நிச்சயமாகத் தனி மதச்சிறு பிரிவினர் ஆவர்; மாத்வரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களும் அதே மாதிரியே கருதப்படுவர். இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி மடங்களை நிறுவியுள்ளனர் என்பதால் இவை மதச் சிறுபிரிவு எனச் சட்டம் கூறும் தலைப்பில் அடங்கும்.

ஆனந்த மார்க்கம் இதே பிரிவில் வருமா என்கிற கேள்வி எழுப்பப்பட்ட போது, உச்சநீதிமன்றம், ஆம் என்றே தீர்ப்பளித்தது. இவர்களும் அரசமைப்புச் சட்டக்கூறின்படிக்கான மூன்று நிபந்தனைகளையும் கொண்டுள்ளனர். ராமகிருஷ்ணா மடம் மதச்சிறு பிரிவில் வருமா என்ற வழக்கில் 1995 இல் ராமகிருஷ்ணனின் கொள்கைகளைப் பின்பற்றுவோர் தனி அமைப்பையும் தனிப் பெயரையும் கொண்டு இயங்கி வருவதால் இந்து மதத்தின் தனிச் சிறு பிரிவாகவே கருதப்பட வேண்டும் என்றே தீர்ப்பளித்துள்ளது.

தீட்சிதர்கள் கோயிலில் பூஜை செய்திட உரிமை படைத்தவர்கள். கோயிலில் முழுக் கட்டுப்பாடும் மன்னர்களிடமே இருந்தது. இதற்கான பல ஆதாரங்களை அரசு வழக்குரைஞர் அளித்தார். தீட்சிதர்கள் கோயிலைக் கட்டினர் என்பதற்கும் சிறுபிரிவுக் கோயில் என்பதற்கும் ஆதாரங்களைத் தராத நிலைதான் உள்ளது. சிரூர் மட வழக்கில் உச்ச நீதிமன்றம், சொத்துகளை வாங்குவதற்கும் சட்டப்படி அவற்றைப் பராமரிப்பதற்கும் என இரு வேறு பிரிவுகள் சட்டத்தில் இருப்பதால், சொத்துக்களைப் பராமரிப்பது என்பது தனியாகவும் மதச்சார்பான காரியங்களைக் கவனிப்பது என்பது தனியாகவும்தான் பிரித்துப் பார்க்கப்பட வேண்டும்; இதில் மதம் என்பதற்கான விளக்கம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் விளக்கப்படவில்லை.

1962 இல் மற்றுமொரு வழக்கில் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம் (AIR 1961 SC 1402) மதச் சிறுபிரிவு என்பது மதத்திலிருந்து உருவாக வேண்டும் என்று கூறியுள்ளதுடன் மதச் சித்தாந்தங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுகின்ற வகையில், பொதுவான நம்பிக்கை, பொது அமைப்பு, மற்றும் தனித்த பெயர், ஆகியவற்றைக் கொண்டு இயங்கவேண்டும் எனவும் வரையறுத்துள்ளது.

காசி விசுவநாத கோயிலுக்கும் உத்தரப் பிரதேச அரசுக்கும் நடந்த வழக்கில் (1997, 606) சிவனை வழிபடுவோர் இந்துமதச் சிறுபிரிவினராக முடியாது என்றும் அவர்கள் இந்துக்கள் தாம் என்றும் தெளிவாகக் கூறியுள்ளது. (In 1997) 4 SCC 606 [Sri Adi Visheshwara of Kashi Vishwanath Temple,Varanasi and others -Vs- State of U.P. and otghers], the Supreme Court held that “believers of Shiva form of worship are not a denomination sect or section of Hindus, but they are Hindus as such.

எனவே, பெஞ்ச் தீர்ப்பு( 1952(1) MLJ 557 உரைகள் உச்ச நீதிமன்றத்தின் சிரூர் மடத் தீர்ப்பு வாசகங்களின் அடிப்படையில் காணப்படவேண்டும். (AIR 1954 SC 282 மற்றும்1005) ஆகவே நிர்வாக அலுவலரை நியமிப்பது தீட்சிதர்களின் உரிமைகளில் குறுக்கிடுவதாக ஆகும் என்கிற டிவிசன் பெஞ்ச் தீர்ப்பு இனியும் நிலைக்க முடியாத ஒன்றாகும்.

அரசமைப்புச் சட்டக் கூறு 26 இன்படி தீட்சிதர்கள் இரண்டு உண்மைகளை காண்பிக்க வேண்டும். (1) கோயிலை அவர்கள் கட்டினார்கள். (2) கோயிலை அவர்கள் பராமரிக்கிறார்கள் என்கிற இரண்டையும் தீட்சிதர்கள் நிரூபிக்க வேண்டும். ஆனால் ஒருசிறு ஆதாரம் கூட தீட்சிதர்களால் கோயில் கட்டப்பட்டது என்பதற்குக் காட்டப்பட முடியவில்லை.

மதப்பின்பற்றலும் மதம் சாராத செயல்களும் உச்சநீதிமன்றத்தின் வழக்கு (1997-98 SCC 422) ஒன்றின் தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பபட்டுளள்ளது - பணம் திரட்டுவதும் காணிக்கை பெறுவதும் மதம் சார்ந்தவை. கீதையில், எவர் ஒருவர் இலையோ, பூவோ, பழமோ, நீரோ எதை எனக்கு அளித்தாலும் நான் அவற்றை ஏற்றுக் கொள்வேன் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, காணிக்கைகளைப் பெறுவதும் அதனைப் பல்வேறு பராமரிப்புச் செயல்களுக்குப் பிரித்தளிப்பதும் மதம் சாராதவை.

(The religious practice ends with these offerings. Collection and distribution of these offerings or retention of a portion of the offerings for maintenance and upkeep of the temple are secular activities.)

ஆந்திரப் பிரதேசத்தில் லட்சுமணவாதேந்திரலு என்பாருக்கும் மாநில அரசுக்கும் நடந்த வழக்கு ( 1996-8 705) ஒன்றின் தீர்ப்பில் மடத்தின் வருமானங்களை மடாதிபதி தன் குடும்பத்திற்கும், மதுவுக்கும் மங்கையர்க்கும் செலவு செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த நிலையில் அதனை ஒழுங்கு படுத்தச் சட்டம் கொண்டு வந்தது மதம் சாராத செயல்களே எனத் தெளிவாக உள்ளது.

இத்தகைய வகையில் பிரித்துக் கூறப்பட்டவை, சேஷம்மாள் வழக்கு என்று அறியப்படும் வழக்கிலும்

உச்சநீதிமன்றத்தால் தெளிவாக்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டக்கூறு 25,26 இல் அளிக்கப்பட்டு உள்ள மதஉரிமை என்பது, மதம் சாராத நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் வகையில் சட்டம் செய்திட அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதை உள்ளடக்கியதே! எனவே, இவ்வாறெல்லாம் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள தீர்ப்பு முடிவுகளின் அடிப்படையில் மதம் சாராத செயல்பாடுகள் சட்டப்படிக்கான கட்டுப்பாட்டுக்குட்பட்டவை. எனவே சிதம்பரம் தீட்சிதர்கள் மதச்சிறுபிரிவு என வகைப் பாட்டுக்குள் வரமுடியாதவர்கள். எனவே நிர்வாக அலுவலரின் நியமனம் அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானது அல்ல. அத்தகைய வாதம் சரியானதல்ல, அர்த்தம் அற்றதும்கூட.

(When examined in the light of the well-settled principles, Podhu Dikshidars are not entitled to the protection in particular clauses (b) and (d) of Article 26 of Constitution as ‘religious denomination’ in the matter of management, administration and governance of the temple under the Act. As such appointment of Executive Officer is not ultra vires the Article 25 and 26 of Constitution of India. The contention that appointment of Executive Officer is violative of Article 25 (b) and (d) is untenable and devoid of substance.)

(1) தீட்சிதர்கள் 2.2 லட்சம் ரூபாய் பெறுமானம் உள்ள தங்கக்காசுகளைக் கருவூலக் கணக்கில் காட்டவில்லை என்பது கோட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் உதவி ஆணையரால் கண்டு பிடிக்கப்பட்டது. (2) நகைளை அழித்துப் புதிதாகச் செய்தபோது 860 கிராம் தங்கம் இழப்பு (3) தங்கமாகக் காணிக்கை அளிக்கப்பட்டது வரவில் காட்டப்பட வில்லை என்கிற பெருத்த முறைகேடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. கோயிலுக்குச் சொந்தமான 396-37 ஏக்கர் நிலங்களைக் குத்தகைக்கு விட்டுச் சரியான முறையில் வருமானம் பெறாத தீட்சிதர்கள் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யவில்லை என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள கடைகளிலிருந்து வரும் வருமானத்திற்கும் நுழைவுக் கட்டணம், ஆராதனைக் கட்டணம் ஆகியவற்றுக்கு தொகை ஏதும் குறிப்பிடாத வெற்றுத் துண்டுச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. இவை வருமானக் கணக்கில் சரிவரக் காட்டப்படாத நிலை உள்ளது.

இந்நிலையில் நிர்வாக அலுவலர் இவற்றை ஒழுங்குபடுத்தி முறையாகச் செயல்படுவதற்காகத் தானே தவிர, தீட்சிதர்களைக் கோயிலிலிருந்து தனிமைப்படுத்துவதற்காக அல்ல. (Executive Officer was appointed only to streamline the administration of the temple and not to dislocate Podhu Dikshidars from the temple.)

சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரன் கோயிலின் ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாய் என உள்ளதையும், சிதம்பரம் சபாநாயகர் கோயிலில் வெறும் 37 ஆயிரத்து 199 ரூபாய் மட்டுமே என்பதையும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டி இத்தொகையில் 37 ஆயிரம் ரூபாய் செலவு என்றும், 199 ரூபாய் மிச்சம் என்றும் எடுத் துக்காட்டி, இடைமனுதாரரின் வழக்குரைஞர் வாதாடினார். முதல் நோக்கிலேயே, கணக்குகள் சரிவரப் பராமரிக்கப்படவில்லை என்பதையே இது காண்பிக்கிறது. அரசு, மதம் சாராத செயல்பாடுகளைச் செய்திட முனைகின்ற நிலையில் இடை மனுதாரர் வழிபாட்டு உரிமை கோருகிறார் என்பதை எடுத்துக் காட்டினார். அவருக்கு வழிபாடு செய்வதற்கு எல்லா உரிமைகளும் உண்டு. எனவே அவரும் வழக்காடுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்.

தீட்சிதர்கள் ஏராளமான வழக்குகளைத் தொடுத்துக் கொண்டே 1982 முதல் நிர்வாக அலுவலர் செயல்படமுடியாத நிலையை உருவாக்கி ரிட் மனுவுக்கு மேல் ரிட் மனுக்களாகத் தாக்கல் செய்து பிரச்சினையை இழுத்தடித்துக் கொண்டே உள்ளனர். இனிமேலாவது, கோயிலின் சொத்துக்கள் முறையான நிர்வாகத்திலும் பராமரிப்பிலும் கொண்டுவரப்பட வேண்டும். இதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முடிவில் ரிட் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கோயில் நிர்வாகமும் பராமரிப்பும் சீராக நடைபெறுவதற்காகக் கீழ்க்காணும் கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன.

நிர்வாக அலுவலருக்குத் தேவையான அறிவுரைகள் வழங்கி சபாநாயகர் கோயிலை அறநிலையச் சட்டப் பிரிவுகளின்படியும் இணைப்பு எண். 52754 /82/எல் 1 நாள் 5-8-1987 இல் வழங்கப்பட்ட அறிவுரைகளின்படியும் பராமரிக்க வேண்டும். தீட்சிதர்கள் நிர்வாக அலுவலருக்கு உதவி, கோயில் நிர்வாகத்தில் விதி முறைகளின்படி ஒத்துழைக்க வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், “தீட்சிதர்” என்ற சொல் சங்க இலக்கியத்திலோ, திருமறைகளிலோ, எங்கும் வரவில்லை. தில்லைவாழ் அந்தணர் என்போர் இத்தீட்சதர்களின் முன்னோர் அல்ல எனவும் குறிப்பிடுகின்றார் முன்னால் இந்து சமய அறநிலயத்துறை ஆணையர் யு.சுப்ரமண்யன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com