‘சதகம்’ என்றால் நூறு பாடல்களின் தொகுப்பு. இதில் பலவகைப் பாடல்கள் அந்தாதி வகையில் அமைந்துள்ளன. நூறு பாடல்களும் பத்து பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளன.
திருச்சதகத்தின் மூன்றாம் பிரிவு 'சுட்டறுத்தல்'.
உலகப் பொருள்களின் மீது வைக்கும் பற்றை நீக்கி இறைவன் மீது பற்று வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பாடல்களின் தொகுப்பு இது.
பாடலின்பம்
'வெள்ளம்தாழ் விரிசடையாய், விடையாய், விண்ணோர்
பெருமானே' எனக் கேட்டு வேட்ட நெஞ்சாய்,
பள்ளம் தாழுறு புனலின் கீழ்மேலாகப்
பதைத்து உருகும் அவர் நிற்க, என்னை ஆண்டாய்க்(கு)
உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்
உருகாதால், உடம்பு எல்லாம் கண்ணாய், அண்ணா,
வெள்ளம்தான் பாயாதால், நெஞ்சம் கல்லாம்
கண் இணையும் மரமாம், தீவினையினேற்கே!
*
சிந்தனை நின் தனக்கு ஆக்கி, நாயினேன் தன்
கண் இணை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி,
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி, வாக்கு உன்
மணிவார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்கள் ஆர
வந்து எனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை
மால் அமுதப் பெரும் கடலே மலையே, உன்னைத்
தந்தனை, செந்தாமரைக் காடு அனைய மேனித்
தனிச்சுடரே, இரண்டும் இலித் தனியனேற்கே!
பொருளின்பம்
'கங்கையைத் தலையில் தாங்கிய விரிசடையோனே, விடைவாகனத்தில் எழுந்தருளுபவனே, தேவர்களின் தலைவனே' என்றெல்லாம் அன்பர்கள் உன்னை வேண்டுகிற நல்லுள்ளத்தைக் கொண்டவனே,
பல அடியவர்கள் பள்ளத்தில் பாயும் நீரைப்போலக் கீழ்மேலாக உன்னை எண்ணிப் பதைத்து உருகி நிற்கிறார்கள், ஆனால் நீயோ, கடையவனாகிய என்னை ஆண்டாய்,
உனக்கு நன்றி சொல்லும்விதமாக நான் உள்ளங்கால் தொடங்கி உச்சிவரை மொத்தமும் நெஞ்சாக மாறி உருகவேண்டுமல்லவா? உடம்பெல்லாம் கண்ணாகி
உன்னை எண்ணி ஆனந்தக் கண்ணீரைப் பொழிய வேண்டுமல்லவா?
இதையெல்லாம் தீவினையுள்ளவனாகிய நான் செய்யவில்லை, ஆகவே, என் நெஞ்சு வெறும் கல், என் கண்கள், வெறும் மரம்!
அரிய அனைத்தையும் நிகழ்த்துகிற பேரமுதப் பெரும்கடலே, சிறந்த மலையே, செந்தாமரைக் காடு போன்ற மேனி கொண்ட தனிச்சுடரே,
நாய்போன்றவனாகிய என்னுடைய சிந்தனையை உனக்கு உரிமையாக்கிக் கொண்டாய், உன்னுடைய திருவடி மலர்களைக் காண்பதற்காக எனக்குக் கண் தந்தாய்,
உன் திருவடிகளை வணங்கச்செய்தாய், மாணிக்கம் போன்ற சொற்களால் உன் புகழைப் பாடுவதற்காக எனக்குப் பேச்சைத் தந்தாய்,
ஐந்து புலன்களும் நிறைவடையுமாறு வந்து என்னை ஆட்கொண்டு உள்ளே புகுந்தாய், இது எப்படிப்பட்ட வித்தை!
மனத்தை, புலன்களைக் கட்டுப்படுத்துதல், வழிபடுதல் என்ற இரண்டையும் அறியாமல் தனியே நிற்கிறேன் நான், என்னை நீ ஆட்கொண்டாய், உன்னை வணங்குகிறேன்!
சொல்லின்பம்
விடை: எருது
வேட்ட: வேண்டிய/ கேட்ட
புனல்: நீர்
உள்ளந்தாள்: உள்ளங்கால்
கண் இணை: இரண்டு கண்கள்
போது: மலர்
வந்தனை: வணக்கம்
ஆர: திருப்திகொள்ள/ நிறைவுகொள்ள
விச்சை: வித்தை
மால்: பெரிய
அனைய: போன்ற
மேனி: உடல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.