பகுதி 6 - நீத்தல் விண்ணப்பம் -1

'நீத்தல்' என்றால், நீக்குதல். இந்த உலகப் பொருள்களின் மீது வைத்துள்ள பற்றை நீக்க வேண்டும் என இறைவனை வேண்டிப் பாடும் பாடல்கள் இவை. உத்தரகோசமங்கையில் அருளப்பட்டவை.
Updated on
1 min read

'நீத்தல்' என்றால், நீக்குதல். இந்த உலகப் பொருள்களின் மீது வைத்துள்ள பற்றை நீக்க வேண்டும் என இறைவனை வேண்டிப் பாடும் பாடல்கள் இவை. உத்தரகோசமங்கையில் அருளப்பட்டவை.

கட்டளைக் கலித்துறை என்ற வகையில் அமைந்த ஐம்பது பாடல்கள் இந்தப் பகுதியில் உள்ளன.

39

பாடலின்பம்

கடையவனேனைக் கருணையினால் கலந்து ஆண்டுகொண்ட

விடையவனே, விட்டிடுதி கண்டாய், விறல் வேங்கையின் தோல்

உடையவனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,

சடையவனே, தளர்ந்தேன் எம்பிரான் என்னைத் தாங்கிக்கொள்ளே.

*

செழிகின்ற தீப் புகு விட்டிலில் சில்மொழியாரில் பல்நாள்

விழுகின்ற என்னை விடுதிகண்டாய், வெறிவாய் அறுகால்

உழுகின்ற பூ முடி உத்தரகோசமங்கைக்கு அரசே,

வழிநின்று நின் அருள் ஆரமுது ஊட்ட மறுத்தனனே.

பொருளின்பம்

உன் அடியவர்களில் கடையவனாகிய என்னையும் கருணையினால் கலந்து ஆட்கொண்டவனே, விடைவாகனத்தில் எழுந்தருளுபவனே, என்னைக் கைவிட்டுவிடுவாயா?

வலிமை மிகுந்த வேங்கையின் தோலை ஆடையாகக் கொண்டவனே, நிலைபெற்றுத் திகழும் உத்தரகோசமங்கைக்கு அரசனே,

திருச்சடை கொண்டவனே, நான் தளர்ந்துள்ளேன், என் தலைவா, என்னைத் தாங்கிக்கொள்!

நறுமணம் நிறைந்த வாய், ஆறு கால்களைக் கொண்ட வண்டுகள் உழுகின்ற புதிய மலர்களைச் சூடிய உத்தரகோசமங்கையின் அரசே,

செழித்து எரிகிற நெருப்பிலே சென்று விழும் விட்டிலைப்போல, குளிர்ச்சிதரும் சொற்களைப் பேசுகிற பெண்களிடம் பலநாள் விழுந்து கிடந்தேன், என்னைக் கைவிட்டுவிடுவாயா?

நீ என் வழியில் வந்து உன்னுடைய அருளாகிய அரிய அமுதத்தை ஊட்டினாய். ஆனால் நானோ அதை மறுக்கிறேன். நான் மீட்சி பெறுவது எப்போது?

சொல்லின்பம்

கடையவன்: கடைசியாக உள்ளவன்

விடை: சிவனின் வாகனம்/ எருது

விறல்: வலிமை

மன்னும்: சிறந்து விளங்கும்/ நிலைபெற்றுத் திகழும்

எம்பிரான்: எங்கள் தலைவன்

செழிகின்ற: செழிக்கின்ற/ பெருகுகின்ற

வெறி: மணம்

அறுகால்: வண்டு

ஆரமுது: அரிய அமுதம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com