பகுதி 6 - நீத்தல் விண்ணப்பம் -3

'நீத்தல்' என்றால், நீக்குதல். இந்த உலகப் பொருள்களின் மீது வைத்துள்ள பற்றை நீக்க வேண்டும் என இறைவனை வேண்டிப் பாடும் பாடல்கள் இவை. உத்தரகோசமங்கையில் அருளப்பட்டவை.
Updated on
1 min read

'நீத்தல்' என்றால், நீக்குதல். இந்த உலகப் பொருள்களின் மீது வைத்துள்ள பற்றை நீக்க வேண்டும் என இறைவனை வேண்டிப் பாடும் பாடல்கள் இவை. உத்தரகோசமங்கையில் அருளப்பட்டவை.

கட்டளைக் கலித்துறை என்ற வகையில் அமைந்த ஐம்பது பாடல்கள் இந்தப் பகுதியில் உள்ளன.

41

பாடலின்பம்

பெருநீர் அறச் சிறுமீன் துவண்டாங்கு நினைப் பிரிந்த

வெரு நீர்மையேனை விடுதிகண்டாய், வியன் கங்கை பொங்கி

வரு நீர் மடுவுள் மலைச் சிறு தோணி வடிவின் வெள்ளைக்

குருநீர் மதி பொதியும் சடை வானக் கொழுமணியே!

*

மத்து உறு தண் தயிரின் புலன் தீக் கதுவக் கலங்கி

வித்து உறுவேனை விடுதிகண்டாய், வெண் தலை மிலைச்சிக்

கொத்துறு போது மிலைந்து குடர் நெடுமாலை சுற்றித்

தத்துறு நீறுடன் ஆரச் செஞ்சாந்து அணி சச்சையனே!

பொருளின்பம்

சிறந்த கங்கை நீர் பொங்கி வருகிற மடுவிலே தடுமாறுகிற சிறிய தோணியைப்போன்ற வடிவம் கொண்ட வெள்ளைப் பிறை நிலவைத் தலையில் சூடியவனே, வான வெளியில் திகழும் வளமான மாணிக்கமே,

ஆற்றில் நீர் வற்றினால் அங்குள்ள சிறுமீன்கள் துவள்வதுபோல, உன்னைப் பிரிந்து நான் அஞ்சுகிறேன், என்னைக் கைவிட்டுவிடுவாயா?

வெண்மையான மண்டையோட்டு மாலை, கொத்தான கொன்றை மாலை, குடல் என்கிற நீண்ட மாலை ஆகியவற்றை அணிந்தவனே, உடலெங்கும் திருநீற்றுடன் செஞ்சந்தனத்தை அணிந்தவனே, மெய்ப்பொருளே,

என்னுடைய புலன்கள் ஐந்தும் நெருப்பாக என்னைப் பற்றிக்கொண்டன, அதனால், குளிர்ந்த தயிர் மத்தில் சிக்கித் தடுமாறுவதுபோல நான் தடுமாறுகிறேன், பிறவிக்கு விதை ஆகிறேன், என்னைக் கைவிட்டுவிடுவாயா?


சொல்லின்பம்

அற: நீங்க

வெரு: அச்சப்படுகிற

நீர்மையேன்: தன்மை கொண்டவன்

வியன்: பரந்த

மலை: மலைகிற/ தடுமாறுகிற

குரு: வண்ணம்

மதி: நிலா

கொழுமணி: வளமான மணி/ வளமான மாணிக்கம்

தண்: குளிர்ச்சி

கதுவ: பற்றிக்கொள்ள

வித்து: விதை

மிலைச்சி: அணிந்து

போது: மலர்

மிலைந்து: அணிந்து

குடர்: குடல்

தத்துறு: பரந்து

ஆர: பொருந்த

சச்சையன்: பரம்பொருள்/ உண்மைப்பொருள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com