புணர்ச்சி என்றால் சேர்தல் என்று பொருள். திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானிடம் சேர வேண்டும் என்று விரும்பிப் பாடிய பாடல்கள் இவை.
பத்து பாடல்களைக் கொண்ட தொகுப்பு இது.
பாடலின்பம்
சுடர்பொன்குன்றை, தோளாமுத்தை
வாளா தொழும்புஉகந்து
கடைப்பட்டேனை ஆண்டுகொண்ட
கருணாலயனை, கருமால்,பிரமன்
தடைபட்டு இன்னும் சாரமாட்டாத்
தன்னைத்தந்த என் ஆரமுதைப்
புடைபட்டுஇருப்பதுஎன்றுகொல்லோ என்
பொல்லாமணியைப் புணர்ந்தே.
*
ஆற்றகில்லேன் அடியேன், அரசே,
அவனிதலத்து ஐம்புலன்ஆய
சேற்றில்அழுந்தாச் சிந்தைசெய்து
சிவன் எம்பெருமான் என்றுஏத்தி
ஊற்றுமணல்போல் நெக்குநெக்கு
உள்ளே உருகி ஓலம்இட்டுப்
போற்றிநிற்பதுஎன்றுகொல்லோ என்
பொல்லாமணியைப் புணர்ந்தே.
பொருளின்பம்
எம்பெருமான் ஒளிவிடும் பொன்மலையைப் போன்றவன், துளையிடப்படாத முத்தைப் போன்றவன்,
பயனில்லாத என்னுடைய தொண்டையும் அவன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டான், கடைப்பட்டு நிற்கும் சிறியவனான என்னையும் ஆட்கொண்டான் அந்தக் கருணைவடிவான இறைவன்,
கரிய திருமாலும் பிரம்மனும் அவனைத் தேடிக் கண்டறிய முடியாமல் தடைப்பட்டு நிற்கிறார்கள், ஆனால் அவனோ, தன்னை எனக்குத் தந்தான்,
தெவிட்டாத அமுதம்போன்ற அந்தப் பெருமானை, துளையிடாத மாணிக்கத்தை, சிவபெருமானை நான் சேர்கின்ற நாள் எப்போது?
*
அரசே,
இந்த உலகவாழ்க்கைத் துயரத்தை இனிமேலும் என்னால் பொறுத்துக்கொள்ள இயலாது,
இந்தப் பூமியில் ஐம்புலன்கள் என்கிற சேற்றில் அழுந்திக்கிடக்காமல், உன்னைச் சிந்திக்க வேண்டும், ‘சிவன், எம்பெருமான்’ என்று புகழ வேண்டும், மணலில் நீர் ஊறுவதுபோல உள்ளம் நெகிழ்ந்து உருக வேண்டும், உன் புகழைச்சொல்லி ஓலமிட வேண்டும், போற்ற வேண்டும்,
துளையிடப்படாத மாணிக்கத்தை, சிவபெருமானை நான் சேர்கின்ற நாள் எப்போது?
சொல்லின்பம்
தோளா: துளையிடப்படாத
வாளா: வீணாக
தொழும்பு: தொண்டு
உகந்து: மகிழ்ந்து
கடைப்பட்டேன்: கடைசியாக உள்ளவன்/ மிகச் சிறியவன்
கருணாலயன்: கருணைவடிவான இறைவன்
சாரமாட்டா: சேரஇயலாத
ஆரமுது: தெவிட்டாத அமுதம்
புடைபட்டிருப்பதுஎன்றுகொல்: அருகே சென்றுசேர்வது எப்போது
பொல்லாமணி: துளையிடப்படாத மாணிக்கம்
புணர்ந்தே: சேர்ந்தே
ஆற்றகில்லேன்: பொறுத்துக்கொள்ள இயலவில்லை
அவனிதலம்: பூமி
ஏத்தி: போற்றி
நெக்கு: நெகிழ்ந்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.