நாம் வசிக்கும் இந்த அண்டத்தைப் படைத்து, காத்து, அழிப்பவன் சிவபெருமான்.
இந்த அண்டத்தையே நாம் வியக்கும்போது, அதை ஆளும் இறைவன் எந்த அளவு உயர்வானவனாக இருக்க வேண்டும்!
அந்த வியப்பைக் குறிப்பிடும் பாடல் இது.
ஆசிரியப்பா வகையில் அமைந்தது.
பாடலின்பம்
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்,
அளப்ப அரும் தன்மை, வளப் பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்,
நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன,
இல் நுழை கதிரின் துன் அணுப் புரையச்
சிறிய ஆகப் பெரியோன், தெரியின்.
பொருளின்பம்
அண்டம் என்கிற இந்தப் பகுதியில் எண்ணற்ற கோளங்கள் உள்ளன. அவற்றின் தன்மைகளை அளந்து அறிவது சிரமம், அவை வளம் நிறைந்தவையாகக் காட்சியளிக்கின்றன. அழகான அந்தக் கோளங்களின் எண்ணிக்கை நூற்றி ஒரு கோடியைவிட அதிகம். அந்த அளவுக்கு அவை பரந்து விரிந்துள்ளன.
ஓரு வீட்டின் கூரையில் துளை இருக்கிறது. அதன்வழியே சூரியக் கதிர்கள் நுழைகின்றன. அதில் துகள்கள் நெருங்கி மிதந்துகொண்டிருக்கின்றன. அதுபோலதான், இந்த அண்டத்தில் கோளங்கள் திகழ்கின்றன.
ஆராய்ந்துபார்த்தால், இறைவனுக்கு அவை சிறு துகள்கள்தாம். அவற்றைப் படைத்த அவனே பெரியவன்!
சொல்லின்பம்
உண்டை: உருண்டை
பிறக்கம்: குவியல்
அளப்ப: அளக்க
எழில்: அழகு
பகர்தல்: சொல்லுதல்
இல்: இல்லம்/வீடு
துன்: நெருங்குகிற
புரைய: போல
தெரிதல்: தெளிதல்/ஆராய்தல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.