எச்சரிக்கை உணர்வு தேவை
சத்துணவுத் திட்டத்திற்கென தனியே இயக்குநரில் தொடங்கி மாவட்டம், வட்டம், ஒன்றியம் முடிய அலுவலர்களை நியமிக்க வேண்டும். தலைமையாசிரியர்களின் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் சத்துணவு ஊழியர்களைக் கொண்டு வருவது மிக முக்கியம்.
சுத்தம், சுகாதாரம் நிறைந்த சத்துணவுக் கூடங்களைக் கட்டித் தருவதற்கு அரசு முன்னுரிமை வழங்குதல் நன்று. சமைத்த உணவு கெடுதி விளைவிக்காதது என்பதைச் சோதிக்க ஏற்ற வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவது கடினமான பணியல்ல.
பயன்படுத்தத் தகுதியற்ற தானியவகைகள், காய்கறிகள், எண்ணெய் ஆகியவற்றை அறவே நீக்க வேண்டும். முட்டையிலும் கவனம் தேவை.
பள்ளிகளிலுள்ள கல்விக் குழுவினர் முறை வைத்து ஆய்வு செய்வதன் மூலம் மாணவர்களின் உடல்நலம் பேணப்படும். அனைத்தினும் மேலாக, சத்துணவுப் பணியாளர்கள் தங்களுடைய சிறு தவறுகூடப் பிள்ளைகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்ற எச்சரிக்கை உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.
தெ. சுந்தரமகாலிங்கம், வத்திராயிருப்பு.
பொறுப்பான பணி
கிராமப்புற மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டம் மிகவும் அவசியமானது. சத்துணவு சமைப்பதற்கான இடம் கான்கிரீட் கட்டடமாக இருத்தல் வேண்டும். சத்துணவு அமைப்பாளரும் சமையல் செய்பவரும் தங்கள் வீட்டுக் குழந்தைகள் உண்ணும் உணவு என்ற உணர்வுடன் பணியாற்ற வேண்டும். சமையலறைக்குள் யாரையும் அனுமதிக்கக் கூடாது. உணவுப் பொருள் கெட்டுப் போயிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தால் அப்பொருளை பயன்படுத்தவே கூடாது. உணவு தயாரிப்பது மிகவும் பொறுப்பான பணியாகும். உணவு உயிரோடு தொடர்புடையது. இவற்றைக் கடைப்பிடித்தால் ஒரு பிரச்னையும் வராது.
மு. தருமையன், முத்துப்பேட்டை.
கண்காணித்தால் போதும்
சத்துணவுத் திட்டத்தை பள்ளிப் பொறுப்பிலிருந்து விடுவித்து, அதை தனித்து இயங்கும் ஒரு துறையாக மாற்ற வேண்டும். அதன் பொறுப்பில் ஒன்றியத்திற்கு ஒன்று அல்லது இரண்டு பொது சமையல் கூடங்கள், நல்ல கட்டடத்தில் நவீன சமையல் வசதிகளுடன் அமைத்திட வேண்டும். சமையல் செய்ய போதிய சமையலர்கள் நியமிக்கப்பட வேண்டும். சமையல் கூடங்களையும் உணவுப் பொருள்களையும் கண்காணிக்க சமையல் துறை அலுவலர், ஒன்றியத்திற்கு ஒருவர் வீதம் நியமிக்கப்பட வேண்டும். அவருக்கு, உணவுத்தரம் குறித்த தனிப்பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர் அவ்வப்போது கண்காணித்து வந்தாலே போதும்.
செ. சத்தியசீலன், கிழவன்ஏரி.
முட்டைக்கு பதில் சுண்டல்
சத்துணவுத் திட்டங்கள் சிறப்பானதாக அமைய - ஆசிரியர்கள் இப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்; சத்துணவு அமைப்பாளர், சமையலர் மட்டுமே பொறுப்பு; முட்டை நீக்கப்பட வேண்டும் - இதற்கு ஈடாக சுண்டல் தரலாம்; சமையலறை சுகாதாரம், பாத்திரங்கள் தூய்மை, உணவுப்பொருள்களின் தரம் ஆகியவை சமூக நலத்துறை அலுவலரால் அடிக்கடி ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். மாணவர்க்கு உணவு வழங்கும்முன் நாள்தோறும் தலைமை ஆசிரியரால் ருசி பார்க்கப்பட வேண்டும்.
டி. சிவா, காஞ்சிபுரம்.
கல்வித் தகுதி தேவை
இந்தியாவில் அனைத்து அரசுப் பணிகளுக்கும் குறைந்தபட்ச கல்வித் தகுதி என்பது உண்டு. ஆனால், சத்துணவு சமையலர் பணிக்கு கல்வித் தகுதி கிடையாது. எனவே முதலில் சத்துணவு சமையலர் பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி நிர்ணயித்து பணியில் அமர்த்த வேண்டும். ஒவ்வொரு பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் சத்துணவு குழு அமைத்து அக்குழுவில் ஆசிரியர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். மேற்கூறிய குழு சத்துணவு பொறுப்பாளரால் கொள்முதல் செய்யப்படும் பொருள்கள், சமையலர்களின் சுகாதாரம் மற்றும் உணவின் தரம் ஆகியவற்றை அக்கறையுடன் கண்காணித்து முறைகேடுகளைக் களைந்தால் முறையான சத்துணவு வழங்கலாம்.
டி. ஷியாம்ராஜ், பொய்கைபாக்கம்.
அரசே கொடுக்க வேண்டும்
சத்துணவுக்கூடம், வகுப்பு அறையைவிட்டு 10 அடி தள்ளி இருக்க வேண்டும்; அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய், முட்டை, சமையல் பொருள்கள், குடிதண்ணீர் இவற்றை அரசே நேரடியாக உணவகத்துக்குக் கொடுக்க வேண்டும்; சமையல் பாத்திரங்கள், சமையல் எரிவாயு, சூரிய ஒளி மின்சாதன அடுப்பு போன்றவற்றை அரசே கொடுக்க வேண்டும்; சமைக்கும் பொருள்களை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்து சமைத்தவர், ஆசிரியர் முதலில் அவற்றை சிறிது எடுத்து சாப்பிட்டுப் பின்பு குழந்தைக்கு அளிக்கலாம்; வாரம் ஒருமுறை சத்துணவுக்கூடத்தை சுத்தம் செய்ய வேண்டும். சுகாதார ஆய்வாளர்கள் உணவை ஆய்வு செய்ய வேண்டும்.
உ. அண்ணாதுரை, மேலாய்குடி.
குறைகளைக் கேட்க வேண்டும்
ஒவ்வொரு மையத்திலும் சமையலுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, எண்ணெய், கடலை, பயிறு, உப்பு, முக்கியமாக முட்டை தரமானதாக தரப்பட வேண்டும். காய்கறி, மளிகை மற்றும் விறகு வாங்கிட நடைமுறையில் விலை உயர்வுக்கேற்ப தொகை முன்னதாகத் தரப்பட வேண்டும். இதனால் முறைகேடுகளும் ஏற்படாது; பணியாற்றும் ஊழியர்களின் குறைகளைக் கேட்க அரசு முன்வர வேண்டும். இது தனித்துறையானால் கண்காணிப்பும், சிறப்பும் அடையும்.
பி. இராமமூர்த்தி, செங்கல்பட்டு.
தண்டனை அவசியம்
சத்துணவுக்கான மளிகைச் சாமான்களையும், காய்கறி வகைகளையும் தரமான கடைகளிலிருந்தே வாங்க வேண்டும். சமையல் பணியை மேற்பார்வையிடவும், அதை சுவை பார்த்த பின்னரே பரிமாறிடவும் மேற்பார்வையாளர் ஒருவரை நியமித்தல் வேண்டும். தவறு ஏற்படும்பட்சத்தில் தயவுதாட்சண்யமின்றி தண்டித்தல் அவசியம்.
கோ. ராஜேஷ் கோபால், சென்னை.
உதவியாளர் வேண்டும்
பள்ளிகளில் சமையல் செய்வதற்கான இடம் தூய்மையாக, நல்ல வெளிச்சம், காற்றோட்டம் உள்ள இடமாக அமைய வேண்டும். சமையல்காரருக்கு இரண்டு உதவியாளர்கள் இருக்க வேண்டும்; கூடவே ஒரு அடுப்படி உதவியாளர், அதாவது தண்ணீர் கொண்டு வருதல், சுத்தப்படுத்துதல் போன்ற வேலைக்கு. சமையல் செய்பவர்களுக்குத் தேவையான அடுப்பு, கேஸ், காய்கறி, அரிசி, எண்ணெய் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். வாரம் ஒருமுறை சமையல் அறை கழுவப்பட வேண்டும். அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்தாலே போதுமானது.
கே.ஜி. ஸ்ரீராமன், பெங்களூர்.
அரசின் கடமை
சத்துணவுத் திட்டம் மாணவர்கள் பயன்பெறும் சிறந்த திட்டமாகும். இதனை செம்மையாக, சீராக நிர்வகிக்க ஒரு காப்பாளரை பணியில் அமர்த்த வேண்டும். பள்ளிக்கூட முதல்வர் தலைமையில், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தினர் உள்ளிட்ட ஒரு குழு அமைக்கப்பட்டு அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். வாங்கப்படும் உணவுப் பொருள்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சத்துணவுத் திட்டத்தை சத்தாகப் பேண வேண்டியது அரசின் கடமை.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.