ஓர் அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாலேயே அவர் பதவி விலக வேண்டியதில்லை. விசாரணை நடத்தப்பட்டாலே போதும் என்கிற கருத்து ஏற்புடையதா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

ஓர் அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாலேயே அவர் பதவி விலக வேண்டியதில்லை. விசாரணை நடத்தப்பட்டாலே போதும் என்கிற கருத்து ஏற்புடையதா?

விரைவு நீதிமன்றம்
ஓர் அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படும் போதே அவர் மீது சந்தேகத்தின் நிழல் படிந்து விடுகிறது. அவர் பதவியில் இருந்தால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சிகளைக் கலைத்து விடலாம்; தடயங்களை அழித்து விடலாம். அவர் பதவி விலகி விசாரணையை சந்தித்து, நீதிமன்றம் மூலம் தான் நிரபாரதி என்பதை நிரூபித்துவிட்டு, மீண்டும் பதவியில் அமர்வதற்குத் தடை ஏதுமில்லையே! இந்தியாவிலுள்ள எம்பி மற்றும் எம்எல்ஏ-க்களில் 36 % பேர் மீது நீண்ட காலமாக வழக்குகள் நிலுவையில் உள்ளதாம். இதற்கான விரைவு நீதிமன்றங்களை உடனடியாக அமைத்து தீர்வு காண வேண்டும். இல்லையெனில், வழக்கு முடிவதற்குள் அவர்களது பதவிக் காலம் முடிந்து விடும்.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை.

உடனடி விசாரணை
ஓர் அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாலேயே அவர் ராஜிநாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அந்த குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது என நீதிமன்றம் கருதி அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டால் கண்டிப்பாக அவர் ராஜிநாமா செய்துதான் ஆக வேண்டும். ஏனெனில், ஒருவர் பதவியில் இருக்கும்போது அவர் தொடர்பான வழக்கு விசாரணை முறையாக நடைபெறாது. இந்த மாதிரி வழக்குகளை நீதிமன்றம் உடனடியாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்.
பொன். கருணாநிதி, கோட்டூர்.

தவறில்லை
இப்போதெல்லாம் பெரும்பாலான அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களாகத்தானே இருக்கிறார்கள்? அப்படியானால் அவர்கள் எல்லாரும் பதவி விலக வேண்டுமா? ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அமைச்சரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர் குற்றவாளிதான் என்பது நிரூபணம் ஆனால் அவர் பதவி விலகலாம். அதுவரை அவர் பதவியில் தொடர்வதில் எந்தத் தவறும் இல்லை. ஏதோ பெயரளவில் விசாரணை நடத்தி, மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பது சரியல்ல. 
என்.கே. திவாகரன், கோயம்புத்தூர்.

புகழ் நிலைக்கும்
ஓர் அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவுடன், அவர் தாமாகவே பதவி விலகி நியாயமான விசாரணைக்கு வழிவிட்டால், அவருடைய நேர்மையை நிரூபித்ததாக இருக்கும்; அவர் புகழும் நிலைக்கும். அவர் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு தொடர முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தால் அவரை அவரது மேலிடம் பதவியிலிருந்து விலக்கி வைக்க வேண்டும். அவர் மீது சாட்டப்பட்டது பொய்க் குற்றச்சாட்டு என்பது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதே பதவியை மீண்டும் வழங்கலாம்.
அமிர்தநேயன், 
உடுமலைப்பேட்டை.

பயனில்லை
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று கூறுவார்கள். எனவே, எந்தக் குற்றச்சாட்டையும் தீர விசாரித்தால்தான் உண்மை வெளிவரும். பதவி விலகுவதால் பயனில்லை. தன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவுடன் ஒருவர் பதவி விலகினால் அவர் குற்றம் செய்திருக்கிறார் என்றே உலகம் நம்பும். அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, குற்றம் செய்தது உண்மையெனத் தெரிய வந்தால் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். இதுதான் சரியான முறையாகும்.
இரா. கல்யாண சுந்தரம், மதுரை.

மதிப்பு கூடும்
எப்போது ஓர் அமைச்சர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறதோ அப்போதே அவர் தானே முன்வந்து பதவி விலகிட வேண்டும். அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு, விசாரணை முடிவில் அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டால் சமூகத்தில் அவருக்கு மதிப்பு கூடுமே தவிர குறையாது. ஒருவர் பதவியிலேயே இருந்தால், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை அழிக்க முடியும். ஆகவே குற்றச்சாட்டின் அடிப்படைத் தன்மையை உணர்ந்து, பதவி விலகுவதே நல்லது.
சோம. பொன்னுசாமி, சென்னை.

விலகத்தான் வேண்டும்
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது, தன்மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததும் பதவி விலகிய அமைச்சர்களை இந்தியா கண்டுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் ஊழல் குற்றச்சாட்டுக்குட்பட்டவர்களை பதவி விலக்கி வைத்ததையும் தமிழகம் பார்த்துள்ளது. அமைச்சர் பதவியில் இருப்பவர் மீது விசாரணை நடத்தப்பட்டால் அது நியாயமான விசாரணையாக இருக்க வாய்ப்பில்லை. எனவே, ஓர் அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலே அவர் பதவி விலகத்தான் வேண்டும்.
க. அருச்சுனன், செங்கல்பட்டு.

குற்றவாளி அல்ல
அமைச்சர் மீது சொல்லப்பட்டது குற்றச்சாட்டுதானே? தான் குற்றமற்றவர் என்று அவர் நிரூபித்தாலே போதுமே. குற்றம் சுமத்தப்பட்டதாலேயே ஒருவர் குற்றவாளியாக மாட்டார். வழக்கு நடக்கும்போது நீதிமன்றத்தில் குற்றவாளி என்று சொல்லாமல் குற்றம் சுமத்தப்பட்டவர் என்று சொல்லிதான் வழக்காடுவர். அமைச்சர், பதவி விலகாமலேயே தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தவறு என நிரூபிக்கலாம். விசாரணை முடிந்து அவர் நிரபராதி என்று தெரிய வரும் போது அவர் பதவி விலகியதால் எத்தனையோ முக்கியமான பணிகள் முடங்கி இருக்கும். அதனால் பதவியில் இருந்தே அமைச்சர் விசாரணையை எதிர்கொள்ளலாம்.
உஷா முத்துராமன், மதுரை.

தேவையற்றது
குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாலேயே ஓர் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றால், எந்த அரசும் இயங்காத நிலை ஏற்படும். கீழமை நீதிமன்றம் குற்றவாளி என்று கூறியவரை மேல் நீதிமன்றம் நிரபராதி என்று கூறுகிறது. தற்போது அரசியல் கட்சிகளுக்கிடையே காழ்ப்புணர்வு மிகுதியாகக் காணப்படுகிறது. எனவே எளிதாக யாரையும் யாரும் குற்றம் சுமத்திவிடுகிறார்கள். குற்றச்சாட்டுக்காக ஓர் அமைச்சர் பதவி விலக வேண்டுமென்றால் பெரும்பாலான அமைச்சர்கள் பதவியை இழக்க வேண்டியிருக்கும். எனவே, விசாரணை நடைபெற்றாலே போதுமானது. பதவி விலகல் தேவையற்றது.
குரு. பழனிசாமி, கோயமுத்தூர்.

ஐயம் எழும்
அமைச்சர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி. அவர் பதவியேற்கும்போது மக்களுக்கு நேர்மையாகப் பாடுபடுவேன் என்று உறுதி கூறியிருப்பார். எனவே, தன் மீது குற்றச்சாட்டு வந்தவுடன், தனது பதவியை உதறிவிட்டு விசாரணையை எதிர்கொள்வதே ஒரு நல்ல அமைச்சருக்கு அழகு. அதைவிடுத்து, சட்டப்படி பதவி விலகத் தேவையில்லை என்று கூறுவது, அவர் குற்றத்தை மறைக்க முயற்சிக்கிறாரோ என்கிற ஐயத்தை ஏற்படுத்தும். எனவே, தன்மீது குற்றச்சாட்டு வந்தவுடன் ஒருவர் பதவி விலகுவதே அவருக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது.
எம்.ஆர். செல்லப்பன், சென்னை.

சட்டத்தின் அடித்தளம்
ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதே சட்டத்தின் அடித்தளம். ஒருவர் நீதிமன்றத்தால் குற்றவாளி என குறிப்பிடப்படும்வரை அவர் நிரபராதியாகவே கருதப்பட வேண்டும். எனவே, ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாலேயே ஒருவர் பதவி விலகத் தேவையில்லை. அவர் பதவியில் தொடரலாம். அவர் மீதான விசாரணை முறையாக நடத்தப்பட்டு அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பதவி விலகலாம். வெறும் குற்றச்சாட்டுக்கே பதவி விலகல் என்றால் எல்லா அமைச்சர்களும் பதவி இழக்க நேரிடும்.
என்.பி.எஸ். மணியன், மணவாள நகர்.

அரசியல் கணக்கு
குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலகி, விசாரணை நடத்தப்பட்டால்தான் அவர் தவறு செய்தாரா, இல்லையா என்பது தெரியவரும். பதவி விலகாமல் அவர் அமைச்சர் பதவியில் தொடரலாம் என்பது அரசியல் கணக்கு. தமிழ்நாட்டில் ரயில் விபத்து ஏற்பட்டதும் தில்லியிருந்த அமைச்சர் பதவி விலகினார் எனும்போது குற்றம் சுமத்தப்பட்டவர் பதவி விலகினால் என்ன? இன்றைக்கு பெரும்பாலான அமைச்சர்கள் பதவி ஆசை கொண்டவர்களே. அதனால் குற்றம் சுமத்தப்பட்டவுடன் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதே சரி.
கே. மகிழ்நன், சென்னை.

கால விரயம்
மடியில் கனமில்லையெனில் வழியில் பயமேன்? ஓர் அமைச்சர், தன்மீது குற்றச்சாட்டு எழுந்தவுடன் பதவியை உதறிவிட்டு விசாரணையை எதிர்கொள்வதே சரியாக இருக்கும். அமைச்சர் பதவியில் இருப்பவர் குறித்த விசாரணை நிச்சயமாக சரியான திசையில் செல்லாது. பதவியும் அதிகாரமும் சாட்சிகளைக் கலைத்துவிடும்: தடயங்களை அழித்துவிடும். இதனால் காலம்தான் விரயமாகும். நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என நிரூபித்து மீண்டும் அதே பதவியில் கம்பீரமாக அமர எந்தத் தடையும் இல்லையே! எனவே குற்றச்சாட்டு வந்தவுடன் பதவி விலகுவதே சரி.
சுல்தான் ஸலாஹீதீன், 
காயல்பட்டிணம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com