பாலியல் புகார் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் அணுகுமுறை சரிதானா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

பாலியல் புகார் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் அணுகுமுறை சரிதானா 

 மீள்பார்வை தேவை!
தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணையில் இயற்கை நீதியின் அடிப்படைத் தத்துவங்கள், முன்னர் வகுக்கப்பட்ட வழங்கப்பட்ட தீர்ப்புகளின் கோட்பாடுகள் ஆகியவை புறக்கணிக்கப்பட்டது ஏன் என்பது புரியவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் அக்பர் மீது அண்மையில் இவ்வாறு குற்றச்சாட்டு எழுந்தபோது, அவர் பதவி விலகியது நினைவுகூரத்தக்கது. நீதித் துறையின் சுதந்திரம் என்பது, நீதியின் சுதந்திரமாகும்; அது நீதித் துறையினருடைய சுதந்திரமன்று. ஒரு பெண்ணுக்குத் தன் கற்பை காத்துக் கொள்ளும் சுதந்திரத்தைவிட வேறு எதுவும் உயர்ந்ததாக இருக்க முடியாது. இன்று ஒரு பெண்ணின்  கற்புரிமை சிறைபட்டுள்ளது. எனவே, மறு விசாரணை நடத்தி நீதியின் மாண்பு  காக்கப்படவேண்டும். பாலியல் குற்றங்கள் பற்றிய சட்டங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்தில், நீதியின் சுதந்திரம் பற்றிய மீள்பார்வையும் தெளிவான வரையறையும் மேற்கொள்ளவேண்டிய தருணம் வந்துவிட்டது. 
என்.ஆர்.ஸத்யமூர்த்தி, கடலூர்.

ஏற்கத்தக்கதல்ல!
சாதாரண நிறுவனங்களில்கூட உரிமையாளர் மீது பாலியல் புகார் வந்தால் உரிமையாளருக்குச் சாதகமாகவே விசாரணை அமையும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்பவர், நாட்டின் நீதி பரிபாலனத் தலைவர் தகுதியில் இருக்கிறார். எனவே, அவர் மீது நடைபெறும் விசாரணை இந்தத் தன்மையாகத்தான் இருக்கும். தொடர்ந்து பணியில் இருந்து விட்டு, காலம் கடந்து ஒரு பெண் பாலியல் புகார் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. இந்த நடைமுறைதான் நீதிபதியின் முன்னாள் பெண் ஊழியருக்கும் பொருந்தும்.
மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

பாதி சரி, பாதி சரியல்ல!
முன்னாள் பெண் ஊழியரின் பாலியல் புகார் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் அணுகுமுறை சரியல்ல. இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்தது; விசாரணையைக் காலம் கடத்தாமல் விசாரித்தது; விசாரணை நீதிபதிகள் குழுவைப் பாரபட்சத்துக்கு இடம் அளிக்காமல் இரண்டு முறை மாற்றி அமைத்தது. இதுவரையிலும் சரி. இதற்கு அப்பால் நிகழ்ந்த நிகழ்வுகள் சரியல்ல. பாலியல் புகார் அளித்த முன்னாள் பெண் ஊழியர் 
வாக்குமூலம் அளிக்க உரிய சூழலை உருவாக்காமை - நீதிமன்றத்துடன் தொடர்பில்லாத மூன்றாவது நபரை விசாரணைக் குழுவில் இடம் பெறச் செய்யாமை - விசாரணையைப் பதிவு செய்யாமை - விசாரணை எந்த முறையில் அமைய வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகளுடன் ஒருவர் (நீதிபதி சந்திரசூட்) கூறியுள்ள வேண்டுகோளும் ஏற்றுக் கொள்ளப்படாமை--இன்ன காரணங்களையும் பொருத்திப் பார்க்கும்போது உச்சநீதிமன்றத்தின் அணுகுமுறையில் ஏதோ சிறிய தடை இருப்பது போலவே மற்றவர்கள் கருதுவர்.
ச.கந்தசாமி, தூத்துக்குடி.

தவறில்லை!
பாலியல் புகார் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் அணுகுமுறை சரிதான். வரம் கொடுத்த இறைவன் தலையிலேயே அதன் பலனைச் சோதித்துப் பார்க்கும் குணமுடைய சமூகம் என்பதால், உச்சநீதிமன்றத்தில் இதுபோன்ற அணுகுமுறைதான் தவறு செய்தவர்களைத் தண்டிப்பதுடன் எதிர்காலத்தில் பாலியல் தவறினைச் செய்யத் தூண்டுபவருக்கு பயத்தினைக் கொடுக்கும். பாலியல் புகார்களை மிகத் துல்லியமாக உச்சநீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்குவதால் இந்த அணுகுமுறை மிக மிக சரியே.
உஷாமுத்துராமன், மதுரை.

நீதித் துறையின் பொறுப்பு
"சீஸர் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்' என்பதற்கு ஒப்ப 
இந்தியா போன்ற சமதர்ம ஜனநாயக நாட்டில் சட்டம் அனைவருக்கும் ஒன்றே. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியவர்களே அதைப் புறந்தள்ளக் கூடியவர்களாக மாறுகிறார்களோ என்ற எண்ணம் மக்கள், மனதில் எழும்போது சட்டம் யாருக்கும் வளைந்து கொடுக்காது என்ற உண்மையை நிலைநாட்ட வேண்டியது நீதித் துறையின் பொறுப்பாகும்.
எம்.ஜோசப்லாரன்ஸ், 
சிக்கத்தம்பூர்பாளையம்.

பொய்ப் புகார்
உச்சநீதிமன்றத்தின் அணுகுமுறை சரிதான்.  தனக்குப் பிடிக்காதவர்களைப் பழிவாங்க பாலியல் புகார் அளித்து இன்றைக்குச் சிலர் முயன்று வருகின்றனர். தங்களின் சுயநலன் கருதி பணத்தை பிறரிடம் வாங்கிக் கொண்டு, பிறர் மீது பாலியல் புகார் கூறுவதை அனைவரும் அறிவார். சமுதாயத்தில் உயர்ந்த நிலையில், தலைமைப் பொறுப்பில் இருப்பவர் மீது பொய்யாக புகார் அளிக்கும் துணிவு சிலரால் அளிக்கப்படுவதுதான் இதற்குக் காரணம். பொய்ப் புகார், அதுவும் பாலியல் புகார் கொடுப்பவர்களை தயவு தாட்சண்யம் இன்றி தண்டனை அளிப்பது அவசியம்.
ந.சண்முகம், திருவண்ணாமலை.

தவறான வழிமுறை!
பாலியல் புகாரில் முகாந்திரம் இல்லை  என்பது தீர்ப்பு. அப்படியானால்  பொய்ப் புகார் கொடுத்த முன்னாள் பெண் ஊழியர் மீது என்ன நடவடிக்கை? பாதிக்கப்பட்ட ஆணுக்கு என்ன பரிகாரம்? என்றெல்லாம் கேட்க முடியாதபடி அமைந்துவிட்டது விசாரணை நடத்தப்பட்ட விதமும், தீர்ப்பு வந்த வழியும்.  தீர்ப்பில் நியாயம் இருக்கலாம்தான். வந்த வழிமுறை சரியில்லை. மிகவும் தவறான முன்னுதாரணம்.
சொ.முத்துசாமி, பாளையங்கோட்டை.

சந்தேகம் இயல்பு!
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற கோணத்தில் பார்த்தால் உச்சநீதிமன்றத்தின் அணுகுமுறை திருப்தி அளிக்கவில்லை. விசாரணையில் பங்கேற்ற முன்னாள் பெண் ஊழியர் பாதியில் வெளியேறிய காரணங்களை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். விசாரணை முழுமையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டை நாம் ஒதுக்கிவிட முடியாது. விசாரணை அறிக்கை வெளிவராதது சந்தேகத்தை உருவாக்குகிறது. விசாரணை அறிக்கை இல்லாமல் அந்த முன்னாள் பெண் ஊழியர் எப்படி மேல் முறையீடு செய்வார்? இந்தக் கேள்விகளுக்கு உரிய விடை இல்லை. இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.
பொன்.கருணாநிதி, கோட்டூர்.

ஒருதலைப்பட்சம்
பாலியல் புகார் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின்  அணுகுமுறை சரியல்ல; ஒருதலைப்பட்சமான அணுமுறை போல் தோன்றுகிறது. குற்றம் சுமத்தியவர், சுமத்தப் பெற்றவர் ஆகிய இருவரையும் வைத்து விசாரணை செய்ய வேண்டும். உச்சநீதிமன்றமும், நீதிபதிகளும், வழக்குரைஞர்களும் மரியாதைக்குரியவர்கள். யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், மனுநீதிச் சோழன், சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னன் மற்றும் பழிநாணுதல் என்ற திருக்குறள் நெறிப்படி அணுகுமுறை அமையவில்லை. வருந்தத்தக்கது.
ச.கண்ணபிரான், திருநெல்வேலி.

அணுகுமுறை தவறு
பாலியல் புகார் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் அணுகுமுறை முற்றிலும் சரியல்ல. பாலியல் புகார் அளித்த முன்னாள்  பெண் ஊழியருக்கு பயமின்றி ஆஜராக வேண்டிய சூழலை நீதிமன்றம் உருவாக்கித் தரவில்லை. விசாரணையும் முறையாக நடைபெறவில்லை என்பது வல்லுநர்களின் கருத்து. இந்த நிலையில் விசாரணை அறிக்கையும் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.
எஸ்.ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.

ஏன் அவசரம்?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது முன்னாள் பெண் ஊழியர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக உடனடியாக தலைமை நீதிபதியும் சக நீதிபதிகளும் அமர்ந்து உத்தரவு பிறப்பிக்கிறார்கள். பாலியல் புகாரை மறுத்த நீதிபதியும் பிற நீதிபதிகளும் சேர்ந்து விசாரணை அமைப்பை ஏற்படுத்தி பாலியல் புகாரில் முகாந்திரம் இல்லை என்று அவசரமாக முடிவெடுத்துவிட்டனர். உச்சநீதிமன்ற நீதிபதிக்கு இந்தப் புகாரில் தொடர்பு இருப்பதாகக் கூறக் கூடிய அந்தஸ்தில் எவரும் நீதித் துறையில் இருக்க முடியாது என்பது எதார்த்தம். இதைவிட, நீதித் துறைக்கு தொடர்பு இல்லாத கல்வியாளர்கள், கட்சி சார்பற்ற அமைப்பு, மதச்சார்பற்ற பெண் அமைப்பு எனக் கூட்டாக விசாரித்து புகார் குறித்து முடிவு எடுத்திருக்கலாம். இதில் காட்டிய அவசரம் தேவையற்றது.
பி.துரை, காட்பாடி.

கருத்தில் கொள்ளாமல்...
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரின் பதவிப் பொறுப்பை உணர்ந்து விரைந்து செயல்பட்ட நீதிமன்றம்; குற்றம் சுமத்தியவர் கோரிய நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்ளாமல் அணுகியுள்ளது நீதிமன்றத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியதாக்கியுள்ளது. ஆதலால் பாலியல் புகார் மீதான உச்சநீதிமன்ற அணுகுமுறை சரியன்று.
ஆதிலெமு, மதுரை.

=
'ஏழை மக்களின் ஜாதி எதுவோ,அதுவே எனது ஜாதி' என பிரதமர் மோடி கூறியிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?

இதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் 
எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு
விவாத மேடை பகுதி, தினமணி, 
29, இரண்டாவது பிரதான சாலை, 
அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
சென்னை - 600 058 
என்ற முகவரிக்கு அனுப்பவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com