திகார் சிறைக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை அனுப்ப வேண்டாம் என உச்சநீதிமன்றத்தில் அவரது வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்தது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

திகார் சிறைக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை அனுப்ப வேண்டாம் என உச்சநீதிமன்றத்தில் அவரது வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்தது சரியா

தவறில்லை
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்று உச்சநீதிமன்றத்தில் அவரது வழக்குரைஞர் கூறியதில் தவறில்லை. ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை; விசாரிக்கப்படவில்லை; குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இறுதித் தீர்ப்பு வந்தபின் இது குறித்து விவாதிக்கலாம். குற்றச்சாட்டுகள் முழுவதும் கூறப்படாதபோதே, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை ஏன் திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும்? 
பூ.சி.இளங்கோவன், 
அண்ணாமலைநகர்.

சரியல்ல
திகார் சிறைக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை அனுப்ப வேண்டாம் என உச்சநீதிமன்றத்தில் அவர் தரப்பு வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்தது சரியல்ல. அவசரப்பட்டு ஒருவித அச்சத்தில் விடுத்த வேண்டுகோள் அது. குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு குற்றம் நிரூபணம் ஆகி தீர்ப்பே வழங்கப்படாத நிலையில் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் அர்த்தமற்றது. தீர்ப்பின் முடிவே சிறைக்கு அனுப்புவது என்றாகிவிட்ட பிறகு, அதை மறுக்க குற்றவாளிக்கோ, அவர் சார்ந்த வழக்குரைஞருக்கோ அதிகாரம் இல்லை. நடக்கப் போகும் குறிப்பறிந்து புத்திசாலித்தனத்துடன் முன்கூட்டியே செயல்படுவதுபோன்று ப.சிதம்பரம் வழக்குரைஞர் விடுத்த வேண்டுகோள் அவசர முடிவு. 
ச.கந்தசாமி, இராசாப்பட்டி.

வாதம்தான்
பொருளாதாரக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் யார், என்ன பதவியில் இருக்கிறார், என்ன பதவியில் இருந்தார் என்பது முக்கியமல்ல. குற்றம் எத்தகையது, சட்டம் என்ன சொல்கிறது என்பதே முக்கியம். இதைத்தான் நீதியரசர்கள் உற்றுநோக்குவார்கள். வழக்குரைஞர் எத்தனையோ வாதங்களை எடுத்துரைப்பார். அதுபோல்தான் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்று வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்தார். அவ்வளவுதான். 
கே.வேலுச்சாமி, தாராபுரம்.

வேண்டுகோள் சரி
விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே எந்தச் சிறைக்கு அனுப்பலாம் என்று விவாதம் நடத்துவது முறையற்றது. தற்போது விசாரணை மட்டுமே நடக்கிறது. இது முடிந்து தீர்ப்பு வந்த பின்னர் எந்தச் சிறையானால் என்ன? இதில் வழக்குரைஞர்களின் வேண்டுகோள் சரிதான் எனத் தெரிகிறது.
கோ.ராஜேஷ்கோபால், அரவங்காடு.

நியாயமில்லை
திகார் சிறையில் நிலவும் சூழ்நிலை, வசதிக் குறைவு ஆகிவற்றைத் தெரிந்து கொண்டு வேறு சிறைக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்மாற்றம் கோருவதுதான் சரியாக இருக்கும். இவரது வாதத்தில் நியாயம் இருப்பின், நீதிமன்றம் உரிய தீர்வை வழங்கும். அதை விடுத்து, தொடக்கத்திலேயே திகார் சிறை வேண்டாம் எனக் கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது? அப்படி நியாயமான கருத்துகள் இருப்பின் அதை ப.சிதம்பரத்தின் மூத்த வழக்குரைஞர் கபில்சிபல் முறையிடுவதில் தவறில்லை.
பொன்.கருணாநிதி, கோட்டூர்.

கோரிக்கை சரி
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சி.பி.ஐ. காவலில் இருந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வேற்றுக் கட்சிகளில் உள்ள ஊழல்வாதிகள் அவர்களிடம் (ஆளும் கட்சியான பாஜகவிடம்) சென்றால், 100 சதவீதம் நேர்மையாளராகவும், பண மோசடி வழக்கைச் சந்திப்பவர்கள் பரிசுத்தமானவராகவும் மாறும் நிலையைக் காண முடிகிறது. இவை அனைத்துக்கும் சி.பி.ஐ. ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகளைப் பார்க்கும்போது ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்று அவரது வழக்குரைஞர் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது சரியானதுதான். 
ச.கருணாகரன், கருவேலம்பாடு.

மனசாட்சி...
திகார் சிறைக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை அனுப்ப வேண்டாம் என உச்சநீதிமன்றத்தில் அவரது வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்தது சரிதான். மாண்புமிகு என்ற சொல்லே தள்ளாடிக் கொண்டிருக்கிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு இறுதியான தீர்ப்பு வரும்வரை, பாதிக்கப்பட்டவரை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என்பது அவரது வழக்குரைஞரின் கடமை. திகார் சிறையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் உள்ளிட்ட பலரும் ஏற்கெனவே அடைக்கப்பட்டுள்ளனர்.  குற்றவாளியை மனசாட்சி ஆட்டிப் படைக்கும். 
ச.கண்ணபிரான், திருநெல்வேலி.

நெற்றிக்கண் திறந்தாலும்....
திகார் சிறைக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை அனுப்ப வேண்டாம் என உச்சநீதிமன்றத்தில் அவரது வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்தது என்பது வழக்குரைஞர் தொழில் சம்பந்தப்பட்ட விஷயம்; அது வருமானம் தொடர்புடைய விஷயம். எனவே, வழக்குரைஞர் தன் கடமையைச் செய்தார் என்றாலும், நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமேதான்.
எம்.சம்பத்குமார், ஈரோடு.

திகாரை மட்டுமே...
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மூத்த வழக்குரைஞர் தேசிய அரசியல்வாதி; பாரம்பரிய குடும்பச் சொத்துகளுக்கும் உரியவர். பன்னாட்டு பயங்கரவாதிகள், தேசத் துரோகிகள், கடத்தல்கொலைகொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டோர் அடைக்கப்படும் இடம் தில்லி திகார் சிறை. இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற காரணத்தால்  பாதுகாப்பு கருதி அவரை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என அவரது வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்திருக்கலாம். எனவே, திகார் சிறையை மட்டுமே குறிப்பிட்டதால் வழக்குரைஞர் வேண்டுகோள் சரிதான்.
மு.அ.ஆ.செல்வராசு, வல்லம்.

தவறு செய்யாமல்....
காங்கிரஸ் ஆட்சியின்போது தொகுதி எம்.பி., நிதியமைச்சர் எனப் பல பதவிகளை பல்வேறு கட்டங்களில் வகித்தவருக்கு இந்தியாவின் சட்டங்கள் தெரியாமலா இருக்கும்? வயதை காரணம் காட்டி, சிறை செல்லாமல் இருக்க நினைப்போர், தவறு செய்யாமல் இருந்திருக்கலாமே? சட்டத்தின் முன் அனைவரும் சமம்; தவறு செய்தவர் சிறை செல்வதே சரியான தீர்வாகும். வீட்டுக் காவல் என்பது பணியிலிருந்து ஓய்வுபெற்றது போலாகும். 
வி.சரவணன், சிவகங்கை.

சலுகை கூடாது
ப.சிதம்பரத்துக்கு சட்டம் என்ன சொல்கிறதோ அதையே செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் திகார் சிறைக்கு பதில் வீட்டுச் சிறையை அனுமதிக்கக் கூடாது. அதே நேரம் அவரது நிலைக்கேற்ப சிறையில் என்னென்ன வசதிகள் செய்துதர சட்டம் அனுமதிக்கிறதோ அதைக் கண்டிப்பாக செய்து தர வேண்டும். மாறாக, அவருக்கு மட்டும் சிறப்புச் சலுகையை அனுமதித்தால் நாளை அதையே காரணம் காட்டி மற்றவர்களும் கேட்க வாய்ப்புள்ளது. இன்று அவருக்கு என்னவோ அதுவே நாளை அனைவருக்கும் என்பதை அறிய வேண்டும். 
வரதன், திருவாரூர்.

அழகல்ல!
குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்காகவும், அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என நீதிபதியிடம் அவரது வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்திருக்கலாம். மாறாக, திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்று குறிப்பிட்டுக் கேட்டுக் கொண்டது அழகல்ல, அது முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் சிறப்பு தராது.
கோதைமாறன், திருநெல்வேலி.

கெஞ்சல்
இது வேண்டுகோள் அல்ல. கெஞ்சல்தான். அவரது வழக்குரைஞர் தனிப்பட்ட முறையில் இதைச் சொல்லியிருக்க மாட்டார். ப.சிதம்பரம் அனுமதியின்றி அவர் கேட்டிருக்கவும் மாட்டார். ப.சிதம்பரத்துக்கு இத்தகைய வேண்டுகோள் அவமானம்தான்.
மகிழ்நன், கடலூர்.

நியாயமானது
திகார் சிறைக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை அனுப்ப வேண்டாம் என  அவரது வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில்வேண்டுகோள் விடுத்தது நியாயமானது. வங்கி மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை நடத்துகிறார். நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்பினால், இந்திய சிறை பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருக்காது என்று நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைத்துள்ளார். அவருக்காக வசதிகள் கொண்டதாக சிறைச்சாலையை மாற்றித்தர மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.  எனவே, காங்கிரஸ் ஆட்சியில் பிரதமருக்கு அடுத்த நிலையில் இருந்த ப.சிதம்பரம் சார்பில் அவரது வழக்குரைஞரின் திகார் சிறை வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தது நியாயமானது. 
பி.துரை, காட்பாடி.

சிறை பொதுவானது
திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்று சொல்வது சரியல்ல. எந்தச் சிறையாக இருந்தால் என்ன? வேலூர் சிறை, திகார் சிறை, சென்னை சிறை, மதுரை சிறை என்று ஊர்கள்தான் வேறே தவிர சிறை என்ற சொல் பொதுவானதுதானே. அப்படியிருக்க குறிப்பிட்ட சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்று சொல்வது சரியல்ல. 
உஷா முத்துராமன், மதுரை.


ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்டம் குறித்து என்ன கருதுகிறீர்கள்?

இதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு
விவாத மேடை பகுதி, தினமணி, 
29, இரண்டாவது பிரதான சாலை, 
அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
சென்னை  600 058 
என்ற முகவரிக்கு அனுப்பவும்.
இமெயில்: edit.dinamani@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com