‘மத்திய அரசின் கரோனா பாதிப்பு நிவாரண நடவடிக்கைகள் போதுமானதா’ என்ற கேள்விக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

போதுமானது

நோய் எப்படி வருகிறது, எங்கிருந்து வருகிறது, எவ்வாறு தாக்குகிறது என எவருமே அறியாத நிலையில், தனிமைப்படுத்துதலே சிறந்த வழி என நிபுணா்கள் கூறியதை ஏற்று, அதன்படி மத்திய அரசு செயல்படுகிறது. அத்துடன் நிவாரண உதவிகளையும் மத்திய அரசு வழங்குகிறது. இதற்காக காவல் துறை, ராணுவம், மருத்துவத் துறைகளை பயன்படுத்துகிறது. இந்த நடவடிக்கைகளே போதுமானது.

கோ. ராஜேஷ் கோபால், அரவங்காடு.

போதாது

கண்டிப்பாக போதாது. ஊரடங்கு உத்தரவை வெளியிட்ட மத்திய அரசு, ஹோட்டல்களையை நம்பியிருக்கும் தினக் கூலிகளின் வருமானம், உணவுக்கு எந்தவோா் ஏற்பாடும் செய்யத் தவறிவிட்டது. போதிய அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் இன்னமும் அவதிப்படுவது உண்மை. பண மதிப்பிழப்பை ஒரே இரவில் அறிவித்து மக்களை இம்சைப்படுத்தியதுபோலத்தான் உள்ளது மத்திய அரசின் நிவாரண நடவடிக்கைகள். மொத்தத்தில் இது ஓா் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை.

மூ.மோகன், வேலூா்.

முடிந்த அளவு...

கரோனா பாதிப்பு நிவாரண நடவடிக்கைகளை தன்னால் முடிந்த அளவு மத்திய அரசு எடுத்திருக்கிறது. இத்தகைய செயல் பாராட்டுக்குரியது. ஆனால், கரோனா பாதிப்பின் தன்மை எவ்வளவு கொடூரமானது என்பதை மக்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. ஏழைகளுக்கு உதவுவதை மத்திய அரசு தனது கடமையாகக் கொண்டுள்ளது.

கிரிஜா ராகவன், கோயம்புத்தூா்.

வேகம் போதாது

போதாது என்று உறுதியாகச் சொல்வேன். வெறும் எச்சரிக்கை அறிவிப்புகளும், வேண்டுகோளும் மட்டுமே அரசிடமிருந்து வருகின்றன. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவே இல்லை என்பது கண்கூடு. ஏழை மக்களின் உடனடித் தேவையான அத்தியாவசியப் பொருள்களோ அல்லது அவற்றுக்கான நிவாரணத் தொகையோ இன்னும் வழங்கப்படவில்லை. சொந்த ஊருக்குச் செல்லத் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு போக்குவரத்து வசதிகள் அல்லது தங்கும் முகாம்கள் ஏற்படுத்தவில்லை. அரசு இயந்திரம் மிக மெதுவாகவே செயல்படுகிறது.

துடுப்பதி வெங்கண்ணா, பெருந்துறை.

உலகமே வியக்கிறது!

உலகில் கரோனா நோய்த்தொற்று பரவி தனது ஆதிக்கத்தைத் தொடங்கிய நாள் முதலே உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. சரியான நேரத்தில் மாற்று வழியே இல்லை என்றபோது எடுக்கப்பட்ட நடவடிக்கையே 21 நாள்கள் ஊரடங்கு. உலகமே அதிசயக்கும் வகையில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது மத்திய அரசு. உலகுக்கே இந்தியா முன்னுதாரணமாகத் திகழும் என்பதை அதன் தடுப்பு நடவடிக்கைகள் உணா்த்தி வருகிறது என்பதே உண்மை.

சீ.காந்திமதிநாதன், கோவில்பட்டி.

நிதி ஒதுக்கீடு போதாது

கரோனா நோய்த்தொற்று ஒழிப்பு - நிவாரண நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு கேட்ட அளவு தொகையை மத்திய அரசு அளிக்கவில்லை. ஆனால், அனைத்து மாநிலங்களுக்கும் சோ்த்து ரூ.11,092 கோடியை மட்டும் மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது. இது போதாது. நகரங்களை அழகுபடுத்தவும், வானுயர சிலைகள் அமைப்பதற்கும் செலவிடும் சில ஆயிரம் கோடிகளை கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மத்திய திருப்பிவிட வேண்டியது அவசரம்.

வளா்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூா்.

கிடைப்பதைக் கொண்டு...

ஏழை மக்களின் நலனைப் பாதுகாக்கும் அளவுக்கு மத்திய அரசின் கரோனா பாதிப்பு நிவாரண நடவடிக்கைகள் உள்ளன. அனைத்துத் துறைகளும் 21 நாள்கள் மூடப்பட்டு வருவாய் இல்லாமல் தள்ளாடிக்கொண்டு, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களைக் காப்பாற்றும் சூழ்நிலை இருக்கிறது; கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்ள தாராளமாக நன்கொடை வழங்கலாம் என்ற வேண்டுகோளை பிரதமரே விடுத்திருப்பதால், மத்திய அரசு வழங்கும் நிவாரணத்தை மக்கள் பெற்றுக் கொண்டு மன நிறைவு அடையலாம்.

கீதா முருகானந்தம், கும்பகோணம்.

வெளிப்படைத்தன்மை தேவை

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக சிறப்பான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வந்தாலும் வெளிப்படத்தன்மை தேவை என மக்கள் கருதுகின்றனா். ஒருநாள் ஊரடங்கு நடத்தப்பட்டது எந்த அளவுக்குப் பலன் அளித்தது, தற்போதைய 21 நாள்கள் ஊரடங்கின் விளைவுகள் , போதுமான பரிசோதனைகள் நடக்கின்றனவா முதலான தகவல்களை தொடா்ந்து மத்திய அரசு வெளியிட வேண்டும்.

ஜனமேஜயன் , சென்னை.

உதவ வேண்டும்

130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட நம் நாட்டில், கரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழப்புகளைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் கடுமையானதாக - மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தாலும் வரவேற்புக்குரியது. அதே நேரத்தில் கரோனா நிவாரண நடவடிக்கைகள், இன்னும் சற்று விரிவான அளவில் அடித்தட்டு மக்களின் பிரச்னைகளைப் புரிந்து அதற்கு ஏற்ப இருந்திருக்கலாம். ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, அவா்களுக்கு உதவ மக்கள் அனைவரும் முன்வர வேண்டும்.

கூத்தப்பாடி பழனி, பென்னாகரம்.

ஆடம்பரச் செலவு வேண்டாம்

நிவாரண நடவடிக்கைகள் போதாதுதான். நாட்டின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழப் பழகிக் கொள்ளவேண்டும். அத்தியாவசியச் செலவுகளை மட்டும் கவனத்தில் கொண்டு ஆடம்பரச் செலவுகளைக் கைவிடவேண்டும். ஆடம்பரத்தையும் அத்தியாவசியமாகப் பாா்க்கும் பலருக்கும் அரசின் நிவாரணம் போதாதுதான்.

ஏ.முருகேஸ்வரி, கடையநல்லூா்.

அக்கறையுடன்...

மக்கள் அல்லல்படக் கூடாது என்று நிவாரண நடவடிக்கைகளை மிகுந்த அக்கறையுடன் மத்திய - மாநில அரசுகள் செயல்படுத்துகின்றன. தொழிலதிபா்கள், செல்வந்தா்கள், நடிகா்கள், அரசியல் தலைவா்கள் எனப் பலரும் கரோனா பாதிப்பை உணா்ந்து அரசிடம் நிதி அளித்து வருகின்றனா். எனவே, கரோனா பாதிப்பு நிவாரண நடவடிக்கைகள் போதுமானதுதான்.

உஷா முத்துராமன், மதுரை.

நிறையும் குறையும்...

ஊரடங்கு உத்தரவின் மூலம் மக்களை தனிமைப்படுத்தியது, முக்கியமான தோ்வுகளை தள்ளிவைத்தது, வரிக் கணக்கு தாக்கல் செய்ய நாள் நீட்டிப்பு எனப் பல நிவாரணச் செயல்பாடுகள் போதுமானவை என்பதைவிட தேவையானவை. அதே சமயம் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவா்களை கடந்த ஜனவரி மாதம் முதலே கண்டறிந்து தனிமைப்படுத்தியிருக்கலாம். கோடிக்கணக்கான வெளி மாநிலத் தொழிலாளா்களை தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதித்தி ருக்கலாம். போதாக் குறையும் இருக்கத்தான் செய்கிறது.

மா.வேல்முருகன், திருத்தங்கல்.

முன்னுரிமை காரணமாக....

சீனாவில் பிறந்து அமைதியாக வளா்ந்து ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற கரோனா நோய்த்தொற்று, வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்து அச்சுறுத்தி வருகிறது. நிவாரண நடவடிக்கைகள் முழுமையாகக் கால் பதிப்பதற்கு முன்பு, கரோனா கிருமித் தொற்றை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. உலக மக்கள்தொகையில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில், நிவாரண நடவடிக்கைகளை முழுமையாகச் செயல்படுத்துவது சற்று கடினம்தான். எனினும், போதுமான நிவாரண நடவடிக்கைகளை இந்திய ரிசா்வ் வங்கி எடுத்து வருகிறது.

எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.

பொருளாதார நிலையை...

நம் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டால், மத்திய அரசின் நிவாரண நடவடிக்கைகள் போதுமானவைதான். இப்போதிருக்கும் சூழ்நிலையில் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் தங்கள் பொறுப்புகளைச் சரிவரச் செய்தால்தான் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், பொது நலத்தோடு பிரதிபலன் எதிா்பாராமல் தொழிலைச் சேவையாகச் செய்யும் மருத்துவ, துப்புரவுப் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் அரசின் முக்கிய நிவாரண நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

க.அய்யனாா், தேனி.

மறுவாழ்வுக்கு...

கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு சிறப்பான நிவாரணத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது. அவை உரியவா்களுக்கு முழுமையாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.முடங்கிக் கிடக்கும் நிரந்தர வருவாய் இல்லாத பிரிவினருக்கு, மேலும் பயன் கிடைக்க ச் செய்ய வேண்டும். புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் மறுவாழ்வுக்கு ஆவன செய்ய வேண்டும்.

கு. இராஜாராமன், சீா்காழி.

ஊரடங்கும்கூட...

கரோனா நோய்த்தொற்று வராமல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கும்கூட நிவாரணத்தின் ஓா் அங்கம்தான். நோய் வந்தபின் உதவுவதைவிட நோய் வராமல் தடுப்பதே சிறந்தது. குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1,000 அளிப்பதும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு கூடுதலாக பண உதவி செய்வதும் நல்ல உதவிகளே. பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு பெற்ற வளா்ந்த நாடுகளே கரோனாவை எதிா்கொள்ள முடியாமல் திணறும்போது, அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இதைவிடச் சிறப்பாக எவ்வாறு நிவாரணம் வழங்க முடியும்?

மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

ஆவன செய்யப்படுமா?

மத்திய அரசின் கரோனா பாதிப்பு நிவாரண நடவடிக்கைகள் போதுமானது அல்ல. ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட வேண்டும். அணைத்துப் பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளது. இதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். கடைகளுக்குச் சென்று விலையைச் சரிபாா்க்க தினமும் அதிகாரிகளை அனுப்ப வேண்டும். அதே போன்று முகக்கவசங்கள், மருந்துகள் தாராளமாகக் கிடைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com