"மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய 9-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய 9-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருப்பது சரியல்ல.

 சரியல்ல
 மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய 9-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருப்பது சரியல்ல. புத்தகங்களை வாசிக்கும் திறன், பாடங்களை நினைவில் வைத்து தேர்வு எழுதும் திறன் இவற்றையெல்லாம் சோதித்துப் பார்ப்பதற்குத்தான் தேர்வு நடத்தப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி என்பது அரசு தெரிந்தே செய்யும தவறு. இது அரசுப் பள்ளிகளின் தரம் குறைவதற்குக் காரணமாகிவிடும். பெற்றோர் தனியார் பள்ளிகளை நாடுவதற்கும் இதுவே காரணமாகிவிடும். மாணவர்களின் ஆற்றலை சோதித்துப் பார்க்காமல் தகுதியை எவ்வாறு நிர்ணயிக்க முடியும்?
 இ. ராஜு நரசிம்மன், சென்னை.
 நியாயமாகாது
 மாநிலப் பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு தேர்வு எழுதியுள்ள 9-ஆம் வகுப்பு மாணவர்கள் கரோனா கால இரண்டு ஆண்டுகளில் அனைவருக்கும் தேர்ச்சி என்ற அடிப்படையில் வகுப்பு மாறி வந்தவர்களே. அதனால் அவர்களின் உண்மையான தரத்தை இந்த ஆண்டு மதிப்பிட முடியாது. மேலும் ஆறு முதல் ஒன்பது வகுப்பு வரை தேர்வுகள் இப்போது நடத்தப்பட்டிருப்பினும் எட்டாம் வகுப்பு வரை எல்லோருக்கும் தேர்ச்சி எனும் நடைமுறை இருப்பதால் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு அடிப்ப டையில் தேர்ச்சி அளிப்பது என்பது நியாயமாகாது.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 தவிர்க்க இயலாதது
 மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய 9-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருப்பது, இன்றைய சூழ்நிலையில் சரியான முடிவுதான். பொதுவாகப் பார்த்தால், தேர்வு எழுதிய அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிப்பது நியாயமற்ற செயல் என்பது சரிதான். ஆனால் கரோனா காலகட்ட சூழ்நிலையைகணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் இம்முடிவு தவிர்க்க இயலாதது என்பது புரியும். அதே நேரத்தில், இம்முடிவு இந்த ஆண்டுக்கு மட்டும்தான் என்பதும், தேர்வே எழுதாதவர்களுக்கு இது பொருந்தாது என்பதும் ஆறுதல் அளிக்கும் செய்திகள்.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 அலட்சியப் போக்கு
 9-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்திருப்பது பெற்றோர்களுக்கு மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது. மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட வேண்டுமென்றால் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே அனைவரும் தேர்ச்சி என்று அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். அனைவரும் தேர்ச்சி என்ற நிலையில் மாணவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வம் குறைந்துவிடுகிறது. மாணவர்களிடையே கல்வி குறித்து அலட்சியப் போக்கை ஏற்படுத்துகிறது. கல்வி சிறந்த தமிழகமாக விளங்க வேண்டுமெனில் ஐந்தாம் வகுப்புக்கு மேல் "அனைவரும் தேர்ச்சி' என்கிற நடைமுறை கூடாது.
 சொ. ராஜி, ஈக்காடு.
 சவால்
 இது தவறான முடிவு. ஏற்கெனவே கரோனா காலகட்டத்தில் அவர்கள் படித்துக் கொண்டிருந்த ஏழு, எட்டாம் வகுப்பிலிருந்து தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு ஒன்பதாம் வகுப்பிற்கு வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்கொள்வது என்பது அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஒன்பதாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு பொதுத் தேர்வு எளிதாக இருக்கும். இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பாடத்தினைக் குறைப்பதோ அனைத்து மாணாக்கரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதோ ஏற்புடையதாகாது.
 ப. தாணப்பன், தச்சநல்லூர்.
 வேறுபாடு
 இரு ஆண்டுகள் பள்ளிகள் சரிவர இயங்காத நிலையில், தற்போது 9-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை எடுக்க வேண்டியது அவசியம். அதற்கு பதிலாக, தேர்வு எழுதிய 9-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்திருப்பது தவறு. மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 10-ஆம் வகுப்புக்கு செல்வர். மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்று 10-ஆம் வகுப்பு செல்வர். இந்த வேறுபாட்டை 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் காட்டும்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 தயக்கம்
 தேர்வு எழுதினாலே தேர்ச்சி பெற்று விடலாம் என்ற மனநிலை வந்துவிட்டால் அது மாணவர்களுக்குப் படிப்பின் மீதான ஆர்வத்தைக் குறைத்து விடும். நோய்த்தாற்று காலகட்டத்தில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளை பணியில் சேர்ப்பதற்கு தனியார் நிறுவனங்கள் தயக்கம் காட்டும் நிலையில் ஒன்பதாம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என்பதும், ஓரளவு பதில் எழுதியிருந்தாலும் முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்பதும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும். மேலும் அனைவரும் தேர்ச்சி என்ற நடைமுறை மாணவர்களை தோல்வியைத் தாங்கும் மானநிலை அற்றவர்களாக மாற்றிவிடும்.
 ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
 கல்வித்தரம்
 ஏற்கெனவே தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியின் தரம் அதலபாதாளத்தை அடைந்து விட்டது. இந்த நிலையில் பள்ளிக் கல்வியின் தரம் உயர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளும் முயற்சியாகத்தான் அரசின் இந்த முடிவைக் கருதத் தோன்றுகிறது. 9-ஆம் வகுப்பு மாணவர்களைத் தேர்வு எழுதவைத்து, அவர்களுக்கு குறைந்தபட்சம் பத்து மதிப்பெண்களாவது தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் ஆக நிர்ணயித்திருக்கலாம். கல்வியில் தரத்தை எதிர்பார்க்கும் பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் அனைவருக்குமே அரசின் இந்த "அனைவரும் தேர்ச்சி' முடிவு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
 த. முருகவேள், விழுப்புரம்.
 வரவேற்கத்தக்கது
 பள்ளி மாணவர்களின் கல்வி கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகக்கடுமையாக பாதிப்புக்கு உள்ளானது. கிராமப்புற மாணவர்களுக்கு நோய்த்தொற்று காலத்தில் கல்வி கற்க போதிய வாய்ப்புகள் இல்லை. அந்த காலகட்டத்தில் இணைய வழியிலோ இன்னும் பிற வசதிகளைப் பயன்படுத்தியோ கல்வியை முழுமையாகப் பெற முடியாத நிலையில் மாணவர்கள் இருந்துள்ளனர். பாடத்திட்டம் குறைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. எனவே, மாணவர்களின் நலன் கருதி தேர்வு எழுதிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதே.
 மா. பழனி, தருமபுரி.
 எட்டாக்கனி
 நோய்த்தொற்று காலத்தில் வகுப்புகள் சரியாக நடைபெறாத நிலையில் படித்தவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக வேண்டுமானால், கூடுதல் மதிப்பெண் கொடுத்து தேர்ச்சியை நிர்ணயிக்கலாம். தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பால், தேர்வுக்கு வந்து, ஒன்றுமே தெரியாமல் வெறும் விடைத்தாளை கொடுத்தவன் கூட தேர்ச்சி என்ற நிலை வந்து விடுகிறது. அப்படிப்பட்ட மாணவன் பத்தாம் வகுப்பு செல்லும்போது அவனுக்கு தேர்ச்சி என்பது எட்டாக்கனியே . கூடுதல் மதிப்பெண் 10 தந்திருக்கலாம். அல்லது தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை 25 ஆகக் குறைத்திருக்கலாம்.
 க. அருச்சுனன், செங்கல்பட்டு.
 கற்றல் இழப்பு
 ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருப்பது சரியானதே ஆகும். கொள்ளை நோய்த்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் தேர்வு நடைபெறவில்லை. அதன் பின்னரும் கூட பள்ளிகள் காலம் கடந்தே திறக்கப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு கற்றலில் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்தான், அரசு இம்முடிவை எடுத்துள்ளது. இதனால் கற்றல் தடைபடாத நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று இருப்பது இந்த ஆண்டு மட்டும் ஒன்பதாம் வகுப்பிலும் அனைவரும் தேர்ச்சி என்று ஆகியிருக்கிறது. அவ்வளவுதான்.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 முன்னுதாரணம்
 கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக இரு ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. எனவே, பாடங்கள் குறைக்கப்பட்டன; தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டன. இந்த நிலையில், தேர்வெழுதிய அனைவருமே தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருப்பது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். இதனால் பாடங்களைப் படிப்பதில் மாணவர்களுக்கு இயல்பாக இருக்கக் கூடிய ஆர்வம் குறையும். மேலும், நன்றாகப் படித்துத் தேர்வெழுதிய மாணவர்களிடையே அவநம்பிக்கை ஏற்படவும் இது வழிவகுக்கும். நடந்து முடிந்த பாடங்களில் தேர்வு நடத்தி மாணவர்களுக்கு படிக்கும் உணர்வினை ஊட்டியிருக்க வேண்டும்.
 கே. ராமநாதன், மதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com