"இலங்கை அரசுக்கு நிதி உதவி செய்வது குறித்து இந்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்கிற வேண்டுகோள் சரியானதா?' என்ற கேள்விக்கு  வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

"இலங்கை அரசுக்கு நிதி உதவி செய்வது குறித்து இந்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்கிற வேண்டுகோள் சரியானதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

"இலங்கை அரசுக்கு நிதி உதவி செய்வது குறித்து இந்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்கிற வேண்டுகோள் சரியானதா?' என்ற கேள்விக்கு
 வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
 மறக்க முடியாது
 இலங்கை அரசுக்கு நிதி உதவி செய்வது குறித்து இந்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்கிற வேண்டுகோள் சரியானதே. ஏற்கெனவே, லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கையின் ராஜபட்ச அரசு கொன்று குவித்தது. அதற்கு நம் நாட்டு ராணுவத்தையே பயன்படுத்தியதை நம்மால் மறக்க முடியாது. அப்படிப்பட்ட நயவஞ்சக நாடான இலங்கைக்கு நாம் ஏன் உதவ வேண்டும்? இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பிரச்னை ஏற்பட்டால் இலங்கை சீனாவின் பக்கமே நிற்கும். வடக்கே பாகிஸ்தானும், தெற்கே இலங்கையும் நமக்கு எப்போதும் தலைவலிதான்.எனவே, அரசு பரிசீலனை செய்ய வேண்டியது அவசியமே.
 கலைப்பித்தன், கடலூர்.
 ராஜதந்திரம்
 நமது எதிரி நாடான சீனா, அண்மைக்காலமாக இலங்கையை தன்வசப்படுத்தி வருகிறது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். இருந்தாலும் இந்த நேரத்தில், நாம் நமது அண்டை நாட்டை எதிரி நாடாகப் பார்க்கக் கூடாது. மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு நிதி உதவி அளித்து அதனை நமது நட்பு நாடாக ஆக்கிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்வதுதான் ராஜதந்திரம் ஆகும். அதே நேரம் இந்தியா இலங்கைக்கு பணிவதுபோல் தோன்றாமல், நம்மைவிட சிறிய நாட்டுக்கு உதவி செய்வதுபோல் இந்தியாவின் அணுகுமுறை அமைய வேண்டும்.
 அண்ணா அன்பழகன்,
 அந்தணப்பேட்டை.
 தடுமாற்றம்
 நோய்த்தொற்று காலத்தில் சரிந்துபோன பொருளாதாரத்தை மீட்டெடுக்க இயலாமல் இந்தியா இன்றுவரை தடுமாறிக் கொண்டிருக்கிறது. இங்கும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு எல்லாவற்றின் விலையும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது. மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலையும உயர்ந்து வருகிறது. உள்நாட்டில் சரிந்துபோன பொருளாதார நிலையை மீட்டெடுக்காமல், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல், இலங்கை அரசுக்கு நிதி உதவி செய்வது, இந்தியாவையும் விரைவில் பொருளாதாரத்தில் இன்னொரு இலங்கையாக மாற்றத்தான் உதவும்.
 ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், சோமனூர்.
 அவசியம்
 நாம் ஆப்கானிஸ்தானுக்கு நிது உதவி செய்திருக்கிறோம். அப்படியிருக்க இப்போது பரிதாப நிலையில் இருக்கும் இலங்கைக்கும் இந்தியா நிதியுதவி செய்ய வேண்டியது அவசியம். எந்த நாடாக இருந்தாலும, தனது அண்டை நாடு பாதிக்கப்படும்போது அந்நாட்டுக்கு உதவுவதுதான் மனிதாபிமானம். மேலும், நாம் நிதி உதவி செய்யத் தயங்கினால் இலங்கைக்கு உதவுவதற்கு சீனா தயாராக இருக்கிறது. சீனா அப்படிச் செய்வது நமது நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை உருவாக்கும். இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்த்து இலங்கைக்கு இந்தியா நிதியுதவி செய்ய முன்வர வேண்டும்!
 எஸ்.வி. ராஜசேகர், சென்னை.
 கண்காணிப்பு
 இலங்கையை வளப்படுத்த உழைத்த தமிழ் இனத்தின் உரிமைகளை நம் கண்முன்னரே பறித்து அவர்களை அழித்தொழித்து விட்டது இலங்கை அரசு. இன்று கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் அந்த அரசு அண்டை நாட்டுகளுக்கு உதவும் நம் அரசின் தார்மிக உதவியை வெட்கமின்றிப் பெற்று வருகிறது. நம் அரசு, பாதிக்கப்பட்ட நம் தமிழர் நலனுக்காக அந்நிதி செலவிடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்; அதனைக் கண்காணிக்கவும் வேண்டும். அந்த நிதி தமிழர்க்கு உதவாமலும் தமிழர்க்கு எதிராகவும் பயன்படுத்தப்படுவது தெரியவந்தால் உதவிகளை உடனே நிறுத்திவிடுவது நல்லது.
 அ. கருப்பையா, பொன்னமராவதி.
 கடமை
 இலங்கை அரசுக்கு நிதி உதவி செய்வது குறித்து இந்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள் சரியானதல்ல. நமது அண்டை நாடான இலங்கை வறுமையில் உழலும்போது உதவ வேண்டியது நமது கடமை. அதிக வறுமை காரணமாக இப்பொழுதே பலர் குடும்பம் குடும்பமாக அகதிகளாக இந்தியாவுக்குள் வந்து இறங்குகின்றனர். இலங்கையிலுள்ள வறுமையைப் பயன்படுத்தி ஏற்கெனவே சீனா அங்கு தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்று வருகிறது. இந்நிலையில் இந்தியா இலங்கைக்கு நிதி உதவி செய்து இலங்கையை நம் கட்டுக்குள் வைத்திருப்பதுதான் புத்திசாலித்தனம்.
 அ. பட்டவராயன், திருச்செந்தூர்.
 ஏற்கத்தக்கதல்ல
 இலங்கையை வளப்படுத்திய லட்சக்கணக்கான தமிழர்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்து இனப்படுகொலை செய்த இலங்கை அரசுக்கு நிதி உதவி செய்வது என்பது தமிழர்களுக்கு எதிரானது. மேலும், தினமும் தமிழக மீனவர்களை மனிதாபிமானம் இல்லாமல் சிறைபிடித்து அராஜகம் செய்துவரும் இலங்கைக்கு நிதியுதவி செய்வது என்பது ஏற்கத்தக்கதல்ல. ஏற்கெனவே இலங்கைத் தமிழ் அகதிகள் பலரை நாம் வாழவைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னும் பலர்அகதிகளாக தமிழகம் வரக்கூடிய சூழ்நிலை உருவாகும். எனவே நிதி உதவி செய்வதை பரிசீலனை செய்வது காலத்தின் கட்டாயமாகும்.
 ஏ. நாகராஜன், கடலூர்.
 நட்புறவு
 இந்த வேண்டுகோள் சரியானதல்ல. நிதி உதவி செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு முன்னர், விரிவாகப் பேசிவிட்டு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். ஒப்பந்தம் போட்டபின் இலங்கை அதனை மீறினால் மட்டுமே மறு பரிசீலனை செய்ய வேண்டும். மேலும், நாம் உதவி செய்யவில்லையென்றால் சீனா இலங்கைக்கு உதவத் தயாராக உள்ளது. அது மட்டுமல்ல, நாம் நமது அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேணவேண்டியது அவசியம். இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும். அதற்கும் நிதி உதவிக்கும் தொடர்பில்லை.
 தி.ரெ. ராசேந்திரன், திருநாகேஸ்வரம்.
 வரவேற்போம்
 இலங்கை அரசுக்கு இந்திய அரசு சென்ற மாதம் சில ஆயிரம் கோடி கடன் உதவி செய்து உள்ளது. மேலும் சில ஆயிரம் கோடி கடன் உதவி செய்ய முடிவெடுத்துள்ளது. இந்திய அரசின் இந்த நிதி உதவி அளித்தலை நாம் வரவேற்க வேண்டும். இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக அங்கிருக்கும் பலர் தமிழகம் நோக்கி அகதிகளாக வர ஆரம்பித்துவிட்டார்கள். தமிழக முதலமைச்சரும் அப்படி வருகின்ற தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்போம் என்று கூறியிருக்கிறார். எனவே, இலங்கைக்கு நிதி உதவி செய்வது அவசியமான ஒன்று. இதைப் பரிசீலனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
 ந. சண்முகம், திருவண்ணாமலை.
 விழலுக்கு இறைத்த நீர்
 ஈழத் தமிழர்களின் நல்வாழ்விற்காக இலங்கை அரசுக்கு இந்தியா இதுவரை அளித்து வந்த நிதி உதவி அவர்களின் நல்வாழ்விற்குப் பயன்பட்டதா என்பது இதுவரை இந்திய அரசிடம் தெரிவிக்கப்படவில்லை. இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கப்படும் பெருந்தொகை விழலுக்கு இறைத்த நீராக வீணாகிவிடக் கூடாது. அங்குள்ள தமிழர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். நமது நிதி அவர்கள் நல்வாழ்விற்குப் பயன்படும் என்கிற உறுதி கிடைத்த பின்னர், நிதி உதவி வழங்கலாம். அதுவரை நிதி உதவி வழங்குவதை நிறுத்தி வைப்பதே நல்லது.
 ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.
 பட்டியல்
 கடந்த காலத்தில் இலங்கை நமது முதுகில் குத்தியது உண்மையே. பாகிஸ்தானுடனான போரின்போது பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பியது; நாம் அறிவுறுத்திய 13}ஆவது சட்ட வரைவை அமல்படுத்தாதது என பட்டியல் நீளும். இருப்பினும் அவற்றையெல்லாம் மறந்துவிட்டு நாம் அவர்களுக்கு இப்போது நிதி உதவி செய்ய வேண்டும். இலங்கை தனிநாடாக அறியப்பட்டபோதும் அதன் வளர்ச்சியும், தளர்ச்சியும் நம் நாட்டையும் பாதிக்கவே செய்யும். இந்த நேரத்தில் சீனாவின் சதிவலைகளை முறியடித்து, இலங்கையை நமக்குக் கட்டுப்பட்ட நாடாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.
 சோம. இளங்கோவன், தென்காசி.
 தள்ளிப் போடலாம்
 நோய்த்தொற்று காலத்தில் சீர்கேடடைந்த நம் நாட்டின் பொருளாதாரம் இன்னும் மீண்டெழவில்லை. இயற்கைப் பேரிடரால் பாதிப்படைந்த மாநிலங்கள் மத்திய அரசின் நிதி உதவியை எதிர்நோக்கி இருக்கின்றன. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. உக்ரைன்}ரஷிய போர் காணமாக நாடு திரும்பியுள்ள மாணவர்களின் மருத்துவப் படிப்பைத் தொடர வழிகாண வேண்டி இருக்கிறது. இலங்கையிலிருந்து அகதிகளாக வருபவர்களை ஆதரிக்க வேண்டும். இந்த நிலையில் இலங்கைக்கு நிதி உதவி செய்வதை சிறிது காலத்திற்குத் தள்ளிப் போடலாம்.
 த. நாகராஜன், சிவகாசி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com