"தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் தலைதூக்கியிருக்கிறது என்கிற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

ஆண்டாண்டு காலமாக அமைதிப் பூங்காவாக விளங்கிக்கொண்டிருந்த தமிழகம், தற்போது சட்டம்-ஒழுங்கு பிரச்னை அதிகம் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக மாறி இருக்கிறது என்பதே கசப்பான உண்மை

மாற்றம்
ஆண்டாண்டு காலமாக அமைதிப் பூங்காவாக விளங்கிக்கொண்டிருந்த தமிழகம், தற்போது சட்டம்-ஒழுங்கு பிரச்னை அதிகம் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக மாறி இருக்கிறது என்பதே கசப்பான உண்மை. அதற்குக் காரணம், தமிழகத்தில் அண்மைக்காலமாக ஆங்காங்கே புதிதாக முளைத்துவரும் வெடிகுண்டு கலாசாரம்தான். இதற்கு முன்னர் எத்தனையோ முறை பயங்கரவாதம் தலைதூக்கி இருந்த நேரத்தில்கூட தமிழக மக்கள் பயணங்களைத் தவிர்க்கவில்லை. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. முடிந்தவரை வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். காரணம் வெடிகுண்டு பயம்தான்!
சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
இரும்புக்கரம்
தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் தலைதூக்கியிருக்கிறது என்கிற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறு. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்கிற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக சில கட்சிகள் இப்படி வதந்தியைப் பரப்புகின்றன. கடந்த காலங்களில் சிலர் தாங்கள் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக, அவர்களே தங்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசியதை நாம் அறிவோம். தமிழர் குணம் அமைதியை விரும்புவதுதான். தமிழர்கள் வன்முறையை விரும்ப மாட்டார்கள். ஆட்சி அதிகாரத்தில் இல்லாத கட்சியினர் செய்யும் காரியங்கள்தாம் இத்தகைய குண்டுவீச்சு சம்பவங்கள். மாநில் அரசு இதனை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
ந. கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.
கண்கூடு
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு சரியல்ல. பொதுவாகவே தமிழகம் அமைதி மாநிலம்தான். எங்கோ ஒரு சில இடங்களில் நிகழ்வதைப் பொதுமைப்படுத்துவது தவறு. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இப்படிப்பட்ட செய்திகள் பரப்பப்படுகின்றன. தமிழகத்தில் எல்லா ஜாதியினரும், எல்லா மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்ந்துவருவது கண்கூடு. வடமாநிலங்களோடு ஒப்பிடுகையில் தென்மாநிலங்கள், குறிப்பாகத் தமிழகம் வன்முறையற்ற அமைதி மாநிலமாகவே எப்போதும் இருந்து வருகிறது. எனவே இந்தக் குற்றச்சாட்டைப் பொருட்படுத்தத் தேவையில்லை.
குரு. பழனிசாமி,
கோயமுத்தூர்.
களங்கம்
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ஏற்க இயலாதது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது உண்மைதான். அதற்குக் காரணம் சில சமூக விரோதிகள்தானே தவிர எந்தக் கட்சியும் அல்ல. அமைதிப் பூங்காவான தமிழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியே இது. அந்த சமூக விரோத சக்திகள் வெற்றிபெற முடியாது. ஏனெனில், தமிழக மக்கள் அமைதியையே விரும்புபவர்கள். எனவே, சமூக விரோதிகளின் திட்டம் நிறைவேறாது. ஆயினும், இந்த வன்முறை நிகழ்வை அரசு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அப்போதுதான் தமிழகம் அமைதிப் பூங்கா என்பது உண்மை என்றாகும்.
இரா. இரவிக்குமார், சென்னை.
ஆபத்து
எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு சரியே. தமிழகம் முன்பு அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது உண்மைதான். ஆனால், சமீப காலமாக வன்முறை நிகழ்வுகள் பெருகிவிட்டதால், இப்போது தமிழகம் அமைதிப் பூங்காவாக இல்லை. பல மாவட்டங்களிலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறுகின்றன. சில அரசியல் கட்சியினரின் பேச்சுகளே வன்முறையைத் தூண்டும் விதத்தில்தான் உள்ளன. ஜாதி, மத வெறுப்புகள் தூண்டப்படுகின்றன. பொதுமக்களிடையே ஓர் அச்ச உணர்வு எழுந்துள்ளது. அரசு உடனே வன்முறையாளர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வளர விடுவது ஆபத்து என்பதை அரசு உணர வேண்டும்.
கே. அனந்தநாராயணன், கன்னியாகுமரி.
சுணக்கம்
இது எதிர்க்கட்சிகள் சொல்லும் குற்றச்சாட்டாகத் தெரியலாம். ஆனால், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாநில காவல்துறை சுணக்கம் காட்டுவதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். சிறிய அளவில் தீவிரவாதமே, மதவாதமோ தலைதூக்கும்போதே அதை முற்றிலுமாக கிள்ளி எறிய காவல்துறையினர் முனைவருவதில்லை. தங்களது அரசியல் லாபத்திற்காக இது போன்ற நிகழ்வுகளுக்கு ஆதரவாகவும் சில அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. அதுவே பின்னர் பெரிய சமூக சீர்கேடு உருவாகக் காரணமாகவும் அமைந்து விடுகிறது. எனவே, இந்த விஷயத்தில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
சி. இரத்தினசாமி, திருப்பூர்.
கேள்வி
தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் தலைதூக்கியுள்ளது என்கிற எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு சரியானதே. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசப்பட்டதை ஊடகங்களில் காண முடிந்தது. மக்கள் நடமாட்டம் மிகுதியாக உள்ள பகுதிகளிலேயே, குறிப்பிட்ட சில தலைவர்களின் வீடுகளைக் குறிவைத்து சிலரால் பெட்ரோல் குண்டுகளை வீச முடிகிறதென்றால் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கேள்வி எழுவது இயல்பே. மேலும் இது தீவிரவாதத்தின் தொடக்கப் புள்ளியைக் காட்டுகிறது. இதன் மூலம் வெடிகுண்டு கலாசாரம்
தமிழ்நாட்டில் தலைதூக்கியுள்ளது நன்கு தெரிய வருகிறது.
பி.கே. ஜீவன், கும்பகோணம்.
முற்றுப்புள்ளி
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு சரியானதே. தமிழகத்தில் தற்போது தலைதூக்கியிருக்கும் வெடிகுண்டு கலாசாரம் மிகவும் ஆபத்தானது. கடந்த மாதத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசப்பட்ட செய்திகளை ஊடகங்கள் மூலம் அறிந்தோம். இத்தகைய வன்முறை நிகழ்வுகளுக்கு தொடக்கத்தியே முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அமைதி மாநிலமான தமிழகத்தில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். காவல்துறையை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உண்டு. சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பது பெயரளவில் இல்லாமல் நடைமுறையில் அமைய வேண்டும்.
வீ. வேணுகுமார், கண்ணமங்கலம்.
அச்சம்
மாநிலத்தின் ஓரிரு இடங்களில் நடைபெறும் சம்பவங்களை வைத்து தமிழகமே வெடிகுண்டு கலாசாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத முடியாது. ஒரு குறிப்பிட்ட தேசியகட்சி மாநிலத்தில் காலூன்ற முயல்வதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத சில தீய சக்திகளே இந்த எண்ணத்தை ஏற்படுத்த முயல்கின்றன. ஒரு ஜனநாயக நாட்டில் எந்தக்கட்சிக்கும் தன்னை வளர்த்துக்கொள்ள உரிமை உண்டு. உறுதியான கொள்கையும் மக்களின் அசைக்கமுடியாத ஆதரவும் உள்ள எந்த கட்சியும் வளரநினைக்கும் மற்றொரு கட்சியைப் பார்த்து அச்சம் கொள்ளாது. அச்சப்படுத்துவதன் மூலம் ஒரு கட்சியின் வளர்ச்சியைத் தடுத்திட முடியாது.
த. முருகவேள், விழுப்புரம்.
வாடிக்கை
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு சரியானது இல்லை. தமிழகத்தில் எந்தக் காலத்திலும் வெடிகுண்டு கலாசரம் தலைத்தூக்கியது இல்லை. நம் தமிழக அரசியல் கட்சிகள் வன்முறையை என்றுமே விரும்பியது இல்லை. ஒரு கட்சி ஆளும் பொழுது இன்னொரு கட்சி குற்றம் சாட்டுவது வாடிக்கைதான். அதில் அதிசயமில்லை. ஆளுங்கட்சி மீது ஏதேனும் குற்றச்சாட்டு சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை. இதை ஒரு வதந்தியாக எண்ணி புறம் தள்ள வேண்டுமே தவிர இதை பற்றி விவாதிப்பதே தவறு. எந்தக் காலத்திலும் தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் தலை தூக்காது என்பது உறுதி.
உஷாமுத்துராமன், மதுரை.
கடமை
தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் தலைதூக்கியிருக்கிறது என்கிற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு சரிதான் என்பது போலத்தான் கள நிலவரம் உள்ளது. பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் தமிழகத்தின் பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட நிகழ்வுகளைக் காணமுடிந்தது. பெட்ரோல் குண்டு வீசியவர்கள் கணடுபிடிக்கப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டிது காவல்துறையின் கடமை. குற்றத்தை நிரூபித்து அவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதுவரை இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியின் மீது வைப்பது தவிர்க்க இயலாதது.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
நூற்றுக்கு நூறு
தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் தலைதூக்கி இருக்கிறது என்கிற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு சரியே. காலங்காலமாக அமைதிப் பூங்கா என்று பெயர் பெற்று இருந்த தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக ஆங்காங்கே பெட்ரோல் குண்டுகள் வீசப்படுவதைக் கண்டு மனம் பதைக்கிறது. இந்த வன்முறை நிகழ்வுகளை தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகள் மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்த வன்முறை தொடராத நிலை உருவாகும்.
ந. கண்ணையன்,
கிருஷ்ணகிரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com