நீட் தேர்வு வணிகமயமாக்கப்பட்டு விட்டது. எனவே, தமிழகத்திற்கு நீட் தேவையில்லை என்று பா.ம.க. தலைவர் கூறியிருப்பது சரியா? என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

Updated on
3 min read

சரியே
தமிழகத்திற்கு நீட் தேவையில்லை என்கிற பா.ம.க. தலைவரின் கருத்து சரியே. தகுதியுள்ள மதிப்பெண் பெற்ற மாணாக்கர்கள் பலர், போதிய வசதியின்மையால் இந்த வணிகமயத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல் மனம் நொந்து கனவுகளைத் தொலைத்து நிற்பதைக் காண்கிறோம். அதுவும் நீட் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்கூடப் பெறமுடியாமல் தோல்வி கண்டவர்களுக்கு, விதியைத் தளர்த்தி மருத்துவ இடங்களைத் தந்துவிட்டு, ஆண்டுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற ஏழை குடும்பத்து மாணாக்கர்களுக்கு, வாய்ப்புகளைத் தடுக்கிறது நீட். இதனால், கல்வியின் தரம் சீரழிவதுடன், திறமையுள்ள மருத்துவர்களும் உருவாக மாட்டார்கள்.
கு.மா.பா. திருநாவுக்கரசு, மயிலாப்பூர்.
நியாயம்
பா.ம.க. தலைவர் கருத்து ஏற்புடையதல்ல. இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டும் அதற்கு விலக்கு கொடுங்கள் என்றால், எப்படிக் கொடுக்க முடியும்? எதிலும் தகுதிக்கான தேர்வு என்று ஒன்று தேவைதானே? தமிழகத்தில் "நான் முதல்வன்' திட்டத்திற்குக்கூடதேர்வு வைத்துத்தான் பயனாளிகளைத் தேர்வு செய்கிறார்கள். மாநில அரசுக்கு ஒரு நியாயம் மத்திய அரசுக்கு ஒரு நியாயம் என்று தமிழக அரசியல்வாதிகள் பேசி வருவது தவறு. நீட் தேர்வு என்பது தவிர்க்க முடியாதது என்பதை மாணவர்கள், பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். அரசியல்வாதிகள் இதை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம். 
கு. அருணாசலம், தென்காசி.
மனச்சோர்வு
முன்பு மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி அந்த மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெற்று வந்தார்கள். இன்றோ பிளஸ் 2 மதிப்பெண் பயனற்றுப் போய் மருத்துவக் கல்வி மட்டுமல்ல, கலை, அறிவியல் கல்லூரிகளிலும் சேரவும் சிறப்புத் தேர்வுகள் எழுத வேண்டியுள்ளது. இதனால், மாணவர்கள் மனச்சோர்வு அடைந்து முடிவில் தற்கொலை முடிவை எடுக்கும் அளவிற்குப் போய்விடுகிறார்கள். எப்போதும் மாணவர்களை தேர்வு பயத்தில் வைத்தால், அவர்களுக்கு படிப்பில் சோர்வு ஏற்படும். எனவே வணிகமயமாக்கப்பட்ட நீட் தேர்வு தமிழகத்திற்குத் தேவையில்லை.
எஸ். ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
கேலிக்கூத்து
பா.ம.க. தலைவர் கூறியிருப்பது வரவேற்பிற்குரியது. சமீபத்தில் முதுகலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வில், நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்தது கேலிக்கூத்து அல்லவா? தகுதி எங்கே போயிற்று? மருத்துவ கல்லூரிகளில் நிலவும் காலி இடங்களை நிரப்ப வர்த்தக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு என்றுதான் இதைக் கருதவேண்டியுள்ளது. நீட் தேர்வும், அதற்கான பயிற்சிகளும் மாணவர்களுக்கு மன உளைசலைத்தான் தருகின்றன. பிளஸ் 2 மதிப்பெண்  அடிப்படையில் சேர்க்கை என அறிவிப்பதே சிறந்தது. அது பள்ளிக் கல்விக்கும் மதிப்பைக் கூட்டுவதாய் அமையும்.
ஏ.பி. மதிவாணன், பல்லாவரம். 
தரம்
நீட் தேர்வு வணிகமயமாக்கப்பட்டு விட்டது என்பதால், தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்ற வாதத்தை சரி என்று எடுத்துக் கொண்டால், தனியார் பள்ளிகளும், கல்லூரிககளும் வணிகமயமாகி ஆண்டுகள் பல ஆகிவிட்டனவே. அதற்காக தனியார் பள்ளிகளையும், கல்லூரிகளையும் மூடிவிடலாமா? நீட் தேர்வு நடத்தப்படும்போதே, மருத்துவத் துறையின் தரம் தாழ்ந்து இருக்கும்போது, எந்தத் தேர்வும் இன்றி வெளி வரும் மருத்துவ மாணவர்களின் தரமும், திறனும் எப்படி இருக்கும்? மாணவர்களின் கல்வி பற்றி அக்கறை செலுத்தாமல், அரசியல் செய்வதே அரசியல்வாதிகளின் பணியாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் நீட் தேர்வு கட்டாயம் தேவை.  
பி.கே. ஜீவன், கும்பகோணம். 
புரியாத புதிர்
பா.ம.க. தலைவர் கூறியிருப்பது சரிதான்.  நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மாணவர்கள் பிளஸ் 2 முடித்த பின்னர், நீட் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயில வேண்டியுள்ளது. அதற்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. காலமும் வீணாகிறது. இதனால் மாணவர்கள் தேவையற்ற மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். நீட் தேர்வு மூலம் தேர்வு பெறுபவர்கள் மருத்துவர்கள் ஆகி என்ன சாதிக்கப் போகிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.  மாணவர்களின் திறமையை அளவிடுவதற்கு பள்ளி இறுதித் தேர்வு மதிப்பெண்ணே போதுமானதாகும். நீட் தேர்வு அவசியமில்லாதது.
மா. பழனி, கூத்தப்பாடி.
அதிக கட்டணம்
நீட் தேர்வு வணிகமயமாக்கப்பட்டு விட்டது. எனவே, தமிழகத்திற்கு நீட் தேவையில்லை என்று பா. ம. க. தலைவர் கூறியிருப்பது முற்றிலும் சரியே. நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்கள் மிகவும் அதிகம். சாமானிய குடும்பத்து மாணவர்களால் இதனை எதிர்கொள்ள இயலாது. ஆகையால் பிளஸ் 2 இறுதித் தேர்வு மதிப்பெண் தகுதியே இளநிலை மருத்துவப் படிப்புக்கு போதும் என்று அறிவிக்க வேண்டும். ஒரு படிப்பின் இறுதித் தேர்வில் மாணவன் எடுக்கும் மதிப்பெண்ணே அவனுடைய அடுத்த நிலை படிப்புக்கான தகுதியானதாக இருக்க வேண்டும். இதுவே ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணம். 
ந. கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.
அங்கீகாரம்
இந்தியாவில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் தேவை. ஆனால், தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வு தேவையில்லை என்றால் தமிழகத்திலிருந்து ஒரு மாணவர் கூட மருத்துவராக வரமுடியாது. மேலும், வெளிநாடுகளில் மருத்துவத்தில் முதுநிலைப் படிப்புகளைத் தொடர வேண்டுமென்றால் அங்கும் இந்தியாவில் பெற்ற நீட் மதிப்பெண்ணையே தகுதி சான்றிதழாக வைத்துள்ளனர். நீட் மதிப்பெண் இல்லாமல் தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவருக்கான அங்கீகாரத்தை பெற முடியாது. இந்நிலையில், நீட் தேர்வு வணிகமயமாக்கப்பட்டு விட்டதால் தேவையில்லை என்பது மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவதற்குச் சமம்.
அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.
வெளிப்படை
இந்தியாவிலுள்ளஅனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்திவரும் நிலையில், தமிழகத்திற்கு மட்டும் நீட் தேர்வு வேண்டாம் என்று கூறுவது நம் மாநில மாணவர்களின் திறமையைக் குறைத்து மதிப்பிடுவதாகும். நீட் தேர்வு உச்சநீதிமன்ற ஒப்புதலோடுதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசோ, உச்சநீதிமன்றமோ நிச்சயமாக தயாராக இல்லை என்பது வெளிப்படை. இந்த நிலையில், அரசியலுக்காக நீட் பிரச்னையை அவ்வப்போது சில கட்சிகள் பயன்படுத்துவது மாணவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. நீட் தேர்வு கட்டாயம் தேவை.
அ. யாழினிபர்வதம், சென்னை.
வியாபார தந்திரம்
நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரிக்குப் போனால் அங்கே பாடம் நடத்துபவர்களும் நீட் தேர்வில் படித்து தேறாதவர்கள்தானே? வடமாநில மாணவர்கள் நீட்டில் மட்டும் எப்படி அதிக அளவில் தேர்வாகின்றனர்? அதில்தான் வியாபார தந்திரம் உள்ளது. மருத்துவ மேல்படிப்புக்கு பர்ஸன்டைல் பூஜ்ஜியம் ஆக்கியதும் வியாபாரம்தான். நீட் பயிற்சி மையம் நடத்தி அதில் கோடிக்கணக்கில் வியாபாரம். வட மாநிலங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளை உருவாக்காமல் நம் மாநில கல்லூரி இருக்கைகளை வட மாநிலத்தவர்களுக்கு விற்கும் வியாபார நிறுவனம்தான் நீட் பயிற்சி மையங்கள். எனவே இக்கருத்து சரியே. 
தி. சேகர், பீர்க்கன்கரணை.
மறுக்க முடியுமா?
பா.ம.க. தலைவர் கூறியிருக்கும் கருத்து ஏற்கத்தக்கதல்ல. தங்கள் மகனோ, மகளோ மருத்துவராக வேண்டும் என்று கனவுகூடக் கண்டிராத, பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த பெற்றோரின் பிள்ளைகள்கூட மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பதை மறுக்க முடியுமா? பிளஸ் 2 -விற்கு முக்கியத்துவம் கொடுத்து பிளஸ் 1 பாடங்கள் தவிர்க்கப்படுகின்றன. மனப்பாடம் செய்வதால் பயனில்லை. மாணவர்கள் நீட்டை எதிர்கொள்ளும் வகையில் என்சிஇஆர்டி பாடத்திட்டம் அமையவேண்டும். நமக்கு இப்போது தேவை நீட் விலக்கல்ல, அதில் வெற்றியை அள்ளுவதற்கான வழிமுறையே. 
 நா. ஜெயராமன், பரமக்குடி.
அவலநிலை
அண்மையில் நீட் தேர்வு பயிற்சி பெறுவதற்காக ராஜஸ்தான் மாநிலம் சென்று அதிக பணத்தை செலவு செய்து பயிற்சி பெற்றவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் தற்கொலை செய்துகொண்டார்கள். அதனால்தான் தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு கோரப்படுகிறது. இன்று கல்வி வணிகமயமாகிவிட்டதால்தான் கல்லூரிகளுக்கு நிகரான எண்ணிக்கையில் நீட் பயிற்சி மையங்களும் உருவாகி பொருள் ஈட்ட ஆரம்பித்துவிட்டன. இந்த அவலநிலையை மாற்ற வேண்டுமானால், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும். பா.ம.க. தலைவரின் கருத்து நூற்றுக்கு நூறு சரி.
என்.வி. சீனிவாசன், புது பெருங்களத்தூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com