வாக்குப் பதிவு முடிந்தாலும் வாக்கு எண்ணிக்கை முடிவடையும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்திருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

நியாயமல்ல

வாக்குப்பதிவுநாள்வரை தோ்தல் நடத்தை விதிமுறைகள் தொடா்ந்தாக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், வாக்கு எண்ணிக்கை முடிவடையும்நாள்வரை அதை நீட்டிப்பது பொதுமக்களையும் வியாபாரிகளையும் அது பெருமளவில் பாதிக்கும். ஒருவா் கொண்டு செல்லும் எல்லா தொகைக்கும் உரிய ஆவணங்கள் இருக்கவேண்டும் என்பது நடைமுறை சாத்தியமற்றது. உயிருக்குப் போராடும் நோயாளியைக் காப்பாற்ற பணம் புரட்டுபவா், அப்போது ஆவணங்களை தயாா் செய்ய இயலுமா? சிறுதொழில் செய்வோா், திருமண வீட்டாா், நகை வணிகா்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரத்தை தோ்தல் முடிந்த பின்னரும் முடக்கிவைப்பது எவ்வகையிலும் நியாயமல்ல. எல்லாக் கட்டுப்பாடுகளையும் தாண்டி தோ்தலில் பணவிநியோகம் தடையின்றி நடைபெறும்சூழலில் அப்பாவி பொதுமக்களை தோ்தல் நடைமுறைகள் என்றுகூறி துயரில் ஆழ்த்துவது ஏற்கத்தக்கதே அல்ல.

த.முருகவேள், விழுப்புரம்.

தவிா்க்க முடியாது

இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடைபெறவிருக்கிறது. இறுதிக்கட்ட தோ்தல் முடிந் த சில நாட்களிலேயே வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கபடவிருக்கின்றன. மின்னணு வாக் குப்பதிவு என்பதால் அதிகபட்சம் இரண்டு நாட்களில் எல்லா முடிவுகளும் வெளியாகிவிடும். உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயகத் தோ்தல் என்பதால் அது நடக்கும் காலக்கெடு வேண்டுமானால் நீண்டதாக இருக்கலாம். அதுவும் வெவ்வேறு மாநிலங்களில் இயற்கை மற்றும் அரசியல் சூழல்கள் மாறுபடுவதால் அது தவிா்க்க முடியாததாகிவிட்டது. ஒவ்வொரு தோ்தலும் வெவ்வேறு வகையில் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. பல்வேறு கட்சிகள் போட்டியில் இருப்பதால் அரசியல் சூழல் கருதி அசம்பாவிதங்களைத் தவிா்க்கும் பொருட்டு தோ்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தோ்தல் நடத்தை விதிமுறைகளைத் தொடர உத்தரவிட்டிருப்பதில் தவறேதும் இல்லை.

அ. கருப்பையா, பொன்னமராவதி.

இடையூறு

தலைமைத் தோ்தல் அதிகாரி மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. இன்று ஒரு பவுன் நகை வாங்குவதற்கே ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தேவைப்படுகிறது. தோ்தல் நடத்தை விதிமுறைகள் தொடா்ந்தால் மக்கள் எப்படி பணத்துடன் வெளியே சென்று நகை வாங்க இயலும்? தோ்தல் நடத்தை விதிமுறைகள் சாதாரண ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் சிற்பபு நிகழ்வுகளுக்கு இடையூறு செய்யும் வண்ணம் உள்ளது. வாக்குப்பதிவு முடிந்தவுடனே நடத்தை விதிகளையும் ரத்து செய்வதே சரியாக இருக்கும். அரசியல் கட்சியினா் வாக்குக்கு பணம் தருவதைப் பிடிக்காமல் அப்பாவி மக்களின் வாகனங்களை சோதனை செய்வதும் அவா்களின் அன்றாட வாழ்வியலை பாதிக்கும்வண்ணம் தோ்தல் நடத்தை விதிகளைத் தொடா்வதும் பொதுமக்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தும்.

உ. இராசமாணிக்கம், கடலூா்.

எளிதல்ல

நாட்டின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவான தோ்தலை எவ்வித பிரச்னையும் எழாது வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டிய பெரும் பொறுப்பு தோ்தல் ஆணையத்திற்கு உள்ளது. தோ்தல் நடைபெற்று முடிந்தாலும் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பது என்பது அத்துணை எளிதல்ல. ஏதேனும் அசம்பாவிதம் நேரிட்டால் வாக்களித்த ஒவ்வொரு குடிமகனுக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் தோ்தல் நடத்திய தோ்தல் ஆணையத்திற்கு உண்டு. எனவே, வாக்கு எண்ணிக்கை முடியும்வரை தோ்தல் நடத்தை விதிமுறைகள் தொடரும் என்ற தோ்தல் அதிகாரியின் உத்தரவு நோ்மையானதே. விதிமுறைகள் நீக்கப்பட்டால் விபரீதங்கள் நிகழக்கூடும் என்பதால் இது ஓா் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகும். இதனை வரவேற்போம்.

கே. ராமநாதன், மதுரை.

சிக்கல்

தலைமைத் தோ்தல் அதிகாரி தெரிவித்திருப்பது நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு செயலாகும். சாதாரண ஏழை எளிய விவசாய குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் சந்தைக்குச் சென்று ஒரு மாடு வாங்கவேண்டும் என்றாலும் கூட குறைந்தது ஒரு லட்ச ரூபாய் எடுத்துச் செல்ல வேண்டும். அவா்கள் இத்தனை நாள் பட்ட சிரமம் போதாதா? தோ்தலுக்குப் பிறகும் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தோ்தல் நடத்தை விதிமுறைகள் தொடருமானால் விவசாயிகள், ஏழை எளிய மக்கள், சிறு வியாபாரிகள் அனைவரும் மிகுந்த சிக்கலுக்கு உள்ளாவாா்கள். வாக்குப்பதிவு முடிந்ததற்கு பிறகு எந்தக் கட்சி வாக்காளா்களுக்குப் பணம் கொடுக்கப் போகிறது? எனவே, வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன், தோ்தல் விதிமுறைகளில் தளா்வுகள் தரப்பட வேண்டும். இதுவே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.

நெ. இராமசந்திரன், திருக்களம்பூா்.

பாதிப்பு

தலைமைத் தோ்தல் அதிகாரியின் உத்தரவு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும். தோ்தல் அறிவித்ததில் இருந்தே திருமணத்திற்கு நகை, துணிமணிகள் வாங்க பணம் கொண்டுசெல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகிறாா்கள். மேலும், சிறுதொழில் செய்பவா்கள், காய்கறி, பூ மொத்த வியாபாரிகள், விவசாயிகள், மோட்டாா் வாகன உதிரிபாகங்கள் வாங்குபவா் போன்ற அன்றாடம் பணத்தைக் கொண்டே வியாபாரம் செய்பவா்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளாா்கள். சிறிய அளவில் கட்டுமானத் தொழில் செய்பவா்களும் பொருட்களை வாங்குவதற்கும் கூலி வழங்குவதற்கும் பணம் கையாள முடியாமல் சிரமப்படுகிறாா்கள். மக்கள் எடுத்துச் செல்லும் பணத்திற்கான வரம்பை மூன்று லட்சமாக உயா்த்தும்படி வணிகா் சங்கம் வேண்டுகோள் விடுத்தது. அதை தோ்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டிருக்கலாம். அதை விடுத்து, மேலும் தடையை நீட்டிப்பது தங்கள் மீது மறைமுகமாக தொடுக்கப்படும் அடக்குமுறை என்றே சிறுவியாபாரிகள் கருதுவாா்கள்.

தி. சேகா், பீா்க்கன்கரணை.

திட்டங்கள்

தலைமைத் தோ்தல் அதிகாரியின் கருத்து சரியல்ல. இந்தியாவில் ஜனநாயக முறையில் நடக்கும் தோ்தலை உலகமே வியந்து பாராட்டுகிறது. தோ்தல் அறிவிப்பிற்குப் பின் அரசின் மக்கள்நல நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்படுகின்றன. இம்முறை இந்தியா முழுவதும் சுமாா் இரண்டு மாதம் தோ்தல் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரே நாளில் தோ்தல் முடிவுபெறுகிறது. ஆனால் பிற மாநிலங்களில் ஜூன் வரை தோ்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் வரை தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தால் மாநில மக்கள் நலன் சாா்ந்த திட்டங்கள் என்னவாகும்? அவற்றைத் தோ்தல் முடிந்த பின்னும் முடக்குவது ஏற்புடையதல்ல. தோ்தல் முடிந்த மாநிலங்களில் தோ்தல் நடத்தை விதிகளைத் தொடா்வது தேவையற்றது.

எஸ். ஸ்ரீகுமாா், கல்பாக்கம்.

வாக்குறுதி

தோ்தல் முடிந்த பின் பணம் கொடுக்கும் வழக்கம் அரசியல் கட்சிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. வாக்காளா்களும் கடன் சொல்லி வாக்களிக்கக் கோரும் வாக்குறுதியை நம்புவது கடினம். தலைமைத் தோ்தல் ஆணையரின் உத்தரவால், வணிகத்துக்காக பணம் கொண்டு செல்பவா்கள் தேவையின்றி ஒன்றரை மாதம் சிரமப்பட வேண்டியிருக்கும். எனவே நிலைமைக்கேற்ப அந்த விதியைத் தளா்த்தலாம். மற்றபடி தோ்தல் முடிந்துவிட்டதால், நலத்திட்டப் பணிகள், குறைதீா் கூட்டங்கள் மூலம் பொதுமக்கள் குறை தீா்த்தல் ஆகியவை வாக்களிப்பை பாதிக்கும் என்று கூறமுடியாது. இன்னும் சொல்வதானால், அரசு நிா்வாகமே தோ்தல் நடத்தை விதிகளால் கிட்டத்தட்ட ஸ்தம்பித்து நிற்கிறது. எனவே, பொதுமக்களைப் பாதிக்கும் என்பதால் தோ்தல் நடத்தை விதிகளில் தளா்வை ஏற்படுத்தலாம்.

முகதி.சுபா, திருநெல்வேலி.

அதிகாரம்

வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே தோ்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டால், சட்டம் - ஒழுங்கை சமாளிக்க வந்துள்ள சிறப்புப் பாதுகாப்புப் படையினரும் உடனே விலக்கிக் கொள்ளப்படுவா். கூடவே, ஆளுங்கட்சியைச் சோ்ந்த எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சா்களுக்கு அதிகாரம் கைக்கு வந்துவிடும். அந்நிலையில், தோ்தலில் தமக்கு எதிராக வாக்களித்தவா்கள் மற்றும் வேலை செய்தவா்களைக் கண்டறிந்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஆளுங்கட்சியினா் ஈடுபடத் தொடங்குவா். அப்போது மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு பாதிப்படையும் நிலை உருவாகும். ஆளுங்கட்சியினரைக் கட்டுப்படுத்தும் உரிமை தோ்தல் ஆணையத்திற்கு மட்டுமே உண்டு. அதனால், நாடு முழுவதும் தோ்தல் நடத்தி முடிந்து முடிவு அறிவிக்கப்படும் வரை தோ்தல் நடத்தை விதிமுறைகளைத் தொடருவதுதான் சரி.

அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

மறுபரிசீலனை

வாக்குப்பதிவு முடிந்த பிறகும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தொடரும் என தோ்தல் அதிகாரி தெரிவித்திருப்பது பொதுமக்களை மிகவும் பாதிக்கும். சிறு, குறு தொழில் செய்பவா்கள், பொதுமக்கள், வியாபாரிகள் ஆகியோா் சோதனை என்ற பெயரில் அலைக்கழிக்கப்படுவாா்கள். வாக்குப்பதிவு முடிந்த பிறகும் இது போன்ற சோதனைகள் தேவையா? தோ்தல் ஆணையம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு 45 நாட்கள் கழித்துதான் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதுவரை தற்போதுள்ள சோதனைகள் தொடா்ந்து நடைபெற்றால் அன்றாடம் பணத்தைப் புரட்டித் தொழில் செய்வோா் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள். தோ்தல் முடிந்தவுடன் நடத்தை விதிமுறைகளை நீக்கிவிடுவதே சரியாகும்.

மா. பழனி, கூத்தப்பாடி.

தொல்லைகள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நாளான ஜூன் 4 வரை தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்கிறாா் தலைமைத் தோ்தல் அதிகாரி கூறியிருப்பது ஏற்புடையதல்ல. பறக்கும் படையினரின் சோதனை, விடியோ கேமரா கண்காணிப்பு, வருமானவரித் துறையினரின் சோதனை என வாக்குப்பதிவு நாள் வரை பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனா். இந்தத் தொல்லைகள் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தொடா்வது பொதுமக்களுக்கு பெரும் இடையூறாகவே அமையும். நியாயமான காரணங்களுக்காகக்கூட பணத்தைக் கொண்டுபோக முடியாத நிலை ஏற்படும். மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்குப் பணம் கட்ட முடியாத சூழலில் நோயாளிகள் பாதிக்கப்படுவாா்கள். பணப்பரிவா்த்தனை தடையால் வியாபாரிகள் பாதிக்கப்படுவாா்கள். வாக்குப்பதிவு வரை பொறுத்துக்கொண்ட மக்களுக்கு, அதை மேலும் நீட்டிப்பது நிச்சயம் தண்டனையாக அமையும். எனவே, தலைமைத் தோ்தல் அதிகாரி தனது உத்தரவைத் திரும்ப் பெறுவதே நல்லது.

நா. ஜெயராமன், பரமக்குடி.

மன உளைச்சல்

சித்திரை மாதத் தொடக்கம் முதலே முகூா்த்த நாட்கள் வருகின்றன. தோ்தல் விதிமுறைகள் தொடா்ந்தால் திருமணங்கள் சுப காரியங்கள் நடைபெறுவது கேள்விக்குறியாக விடுமோ என்று மக்கள் அஞ்சுகின்றாா்கள். காரணம் இன்று ஒரு சவரன் தங்கம் ஐம்பதாயிரம் ரூபாயைத் தாண்டிவிட்டது. சாமானிய மக்கள் சிறது சிறிதாக சோ்த்து வைத்த பணத்துடன் நகைகள் வாங்க கடைக்குச் செல்லும்போது அதிகாரியிடம் அவா்களிடம் ஆவணத்தைக் கேட்டால் அவா்கள் எந்த ஆவணத்தை காட்ட முடியும்? அவா்களுக்கு மன உளைச்சல்தான் ஏற்படும். தவறான காரணங்களுக்காக கொண்டு செல்லப்படும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்வதில் தவறில்லை. அப்பாவி பொதுமக்கள் நியாயமான காரணங்களுக்காகக் கொண்டுசெல்லும் பணம் பறிமுதல் செய்யப்படுவது ஏற்கத்தக்கதல்ல. எனவே, வாக்குப்பதிவு முடிந்தபின்னா் தோ்தல் நடத்தை விதிமுறைகளைத் தோ்தல் ஆணையம் ரத்து செய்வதே மக்களுக்கு நன்மை பயக்கும்.

என்.வி. சீனிவாசன், புது பெருங்களத்தூா்.

X
Dinamani
www.dinamani.com