"புதிதாகத் தோன்றும் கட்சிகள் கூட திமுக அழிய வேண்டும் என்ற நினைப்பில் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது பற்றி...' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

Updated on
3 min read

நல்லாட்சிக்கான விமர்சனம்

பொதுவாகவே அனைத்துக் கட்சிகளும் ஆளும் கட்சியின் செயல்பாடுகளையே விமர்சனம் செய்யும். ஆளுகின்ற கட்சிதான் தன் மீது ஏதும் குற்றச்சாட்டு வராதபடி நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். புதிய கட்சிகளும் பழைய கட்சிகளும் திமுக மீது குற்றச்சாட்டு வைப்பது அந்தக் கட்சி நல்லபடியாக ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, அந்தக் கட்சி அழிய வேண்டும் என்பதற்காக அல்ல.

மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

தவறுகளைத் திருத்தட்டும்

புதிதாகத் தோன்றும் கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெற ஆளும் அரசின் குறைகள் மற்றும் நிர்வாக சீர்கேட்டினைச் சுட்டிக்காட்டிதான் அரசியல் செய்தாக வேண்டும். திமுக அழிய நினைத்து யாரும் அரசியல் கட்சி தொடங்குவது கிடையாது. ஆளும்கட்சியான திமுக நல்ல ஆட்சியை வழங்கவில்லை என்று மக்கள் நினைத்தால் அவர்களே புறக்கணித்துவிடுவார்கள். திமுக நிலைத்து நிற்க வேண்டுமானால் தவறுகளைத் திருத்திக்கொண்டு மக்களுக்கான சிறந்த ஆட்சியைத் தந்தால் மட்டுமே முடியும்.

ப.சுவாமிநாதன், அம்பத்தூர்.

குறை கூற இயலாது

திறமையற்ற வாரிசு அரசியல், பதவிகள், சுயமாக மக்கள் நலனைப் பற்றித் திட்டமிடாது இயங்குதல், போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த இயலாது இளைய தலைமுறை பாதிப்பு, மொழிப் பிரச்னையில் குழப்பமான நடைமுறை, தேசிய நீரோட்டத்தில் கலந்து, தமிழகத்துக்குரிய ஒதுக்கீடுகளைப் பெறாதது, வீண் காழ்ப்புணர்ச்சி, அரசு அலுவலகங்களில் முறைகேடுகளைக் கட்டுப்படுத்த இயலாமை போன்ற மக்கள் விரோதமாக செயல்பட்டால், அந்தக் காட்சியை அகற்ற வேண்டும் என்று பிற கட்சிகள் நினைப்பதில் குறை கூற இயலாது.

ச.நடராசன், ஊத்துக்குளி.

துடிப்பாகச் செயலாற்றினால் ஆதரவு

ஜனநாயக நாட்டில் பல கட்சிகள் தோன்றுவது இயற்கையானதே. அரசியல், சமூக, பொருளாதார கொள்கைகளின் அடிப்படையில் சமுதாயத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பதிய வைக்கும் எந்த கட்சி அல்லது கூட்டணி கட்சி அரசு, துடிப்புடன் செயலாற்றுகிறதோ, அந்த அரசுக்கு மக்கள் ஆதரவு தொடரும்.

தாமஸ் எட்மண்ட்ஸ், தாம்பரம்.

மக்கள் ஆதரவுதான் மூலதனம்

ஜனநாயகத்தில் ஒவ்வொரு கட்சியும் தங்களின் கொள்கை கோட்பாடுகளை முன்வைத்து அரசியல் செய்வது வாடிக்கை. ஆளும் கட்சி மீது எதிர்க்கட்சிகள் வைக்கின்ற குற்றச்சாட்டுகளைக் களைந்து சிறப்பான ஆட்சி கொடுக்க வேண்டியது ஆளுங்கட்சியின் கடமையாகும். புதிய அரசியல் கட்சிகள் ஒரு கட்சியை அழித்துவிட்டு முன்னேற்றம் காண முடியுமா என்பதை யோசிக்க வேண்டும். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் மக்கள் கொடுக்கும் ஆதரவுதான் மூலதனமாக இருக்கிறது.

மா. பழனி, கூத்தப்பாடி.

விமர்சனக் காற்று வீசும்!

எதிர்ப்புகளும், இடையூறுகளும் மேலும் நல்லாட்சிக்கு துணை நிற்கும் என்பதை முதல்வர் உணர்ந்து, எங்கே தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதை ஆய்ந்து, இனி அவ்வாறான தவறுகள் நிகழாவண்ணம் பாதுகாப்பதே ஒரு நல்லரசின் இலக்கணமாகும். விமர்சனக் காற்றுபடாத அரசியல் கட்சியோ, தலைவர்களோ இல்லை என்பதை முதல்வர் உணர்ந்துகொள்வார் என்று நம்புவோமாக!

பவளவண்ணன், நடுவிக்கோட்டை.

சாதனையை எடுத்துச் சொல்லுங்கள்!

புதிதாக கட்சி தொடங்கும் எவருமே ஆளும் கட்சியை வீழ்த்திவிட்டு தாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இது உலக இயல்பு. ஆட்சி சிறப்பாக இருந்தால், ஆளும் கட்சி மக்களிடம் தங்களது சாதனைகளை எடுத்துச் சொல்லி ஜெயிக்கலாமே! இப்படிப் புலம்புவதால் புதிய கட்சியை பார்த்து ஆளுங்கட்சி உள்ளூர பயப்படுவதாகத்தான் எண்ணத் தோன்றுகிறது.

வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்.

அவசியமற்ற ஆதங்கம்

புதிதாகத் தோன்றும் கட்சிகள் எப்போதும் மத்திய, மாநில ஆளுங்கட்சிகளை விமர்சனம் செய்து காய் நகர்த்துவது ஒன்றும் புதிதல்ல! திராவிட கொள்கைகளையும், கோட்பாடுகளையும் நகலெடுத்ததுபோல உள்ள விஜயின் தவெக, திமுகவின் வாக்குவங்கியை சிதறடித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற நினைக்கிறது. ஆளுங்கட்சியின் மீது உள்ள மக்களின் அதிருப்தியை அறுவடை செய்ய விஜய் முயற்சி செய்கிறார். இதில் முதல்வரின் ஆதங்கம் அவசியமற்றது எனத் தோன்றுகிறது.

பா.சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

யாரும் விதிவிலக்கு இல்லை

"ஒன்றின் வீழ்ச்சியில்தான் இன்னொன்றின் வளர்ச்சி இருக்கிறது' என்ற நியதியின் அடிப்படையில் புதிய கட்சி தொடங்கியவர் அவ்வாறு சொல்லியிருக்கலாம். ஒன்றின் செல்வாக்கு சரியும்போதுதானே மாற்றுக் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்கின்றனர். எனவே அரசியல் கட்சிகள் ஒன்று மற்றொன்றைச் செல்வாக்கு இழக்கச் செய்வதில்தான் முனைப்புக் காட்டும். அதில் யாரும் விதிவிலக்கு இல்லை.

மெüலவி நூ.அப்துல் ஹாதி பாகவி, பட்டினப்பாக்கம்.

கீரைக் கடை ஆயினும் எதிர்க்கடை

ஜனநாயக நாட்டில் புதியதாக கட்சிகள் தோன்றும் பொழுது, அதை வரவேற்க வேண்டுமே தவிர எதிர்க்கக் கூடாது. கீரைக் கடை ஆயினும் எதிர்க்கடை அவசியம் என்பது போல எதிர்க்கட்சியும், மற்ற கட்சிகளும் களத்தில் இருந்தால்தான் நாட்டின் உண்மையான களநிலவரம் அறிந்து கொள்ள முடியும்.

அசோகன், ஒரகடம்.

பதற்றம் தேவையில்லை

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பித்து ஆட்சியை கைப்பற்ற முயலலாம். அதில் தவறேதும் இல்லை. அந்த புதிய கட்சியினர் பிற கட்சிகளை குறிப்பாக ஆளும் கட்சியினரை விமர்சனம் செய்வது இயல்பே. ஒரு கட்சியின் தலைமையும் தொண்டர்களும் உறுதியாக இருக்கும் பட்சத்தில் புதிய கட்சிகள் உதயமாவது குறித்து கவலையோ பதற்றமோ தேவையில்லை. 1972-இல் எம். ஜி.ஆர். கட்சி துவங்கியபோது அன்றைய தி.மு.க தலைமை இருந்த அதே மனநிலையில்தான் இன்றைய முதல்வரும் உள்ளார் என எண்ணத் தோன்றுகிறது. அதைதான் முதல்வரின் கூற்று உறுதிப்படுத்துகிறது.

கோ.ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி.

தார்மிக கருத்து சுதந்திரம்

ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. தனிமனித கருத்து சுதந்திரம் செவ்வனே, தார்மிகமாக இருந்தால்தான் ஜனநாயகம் அந்நாட்டில் நன்கு பேணப்படுகின்றது என்று அர்த்தம். தனி மனித கருத்து சுதந்திரம் எத்துணை முக்கியமோ, அத்துணை முக்கியமானது வளரும் இளம் அரசியல்வாதியான நடிகர் விஜயின் கருத்தும். நாம் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மு.திரிபுரசுந்தரி, திருச்சி.

வரவேற்க வேண்டும்

விமர்சனங்களில் உள்ள நியாய அநியாயங்களை ஆய்ந்து, சரிப்படுத்த வேண்டியதே ஒரு கட்சியின் தலைவராக அவர் ஆற்ற வேண்டிய பணி. திமுக அழிய வேண்டும் என புதிய கட்சிகள் நினைப்பதாக கருத்து தெரிவிப்பது சரியாகாது. புதிய கட்சிகளை வாழ்த்தி வரவேற்பதே அரசியல் முதிர்ச்சி. திமுகவும் ஒருகாலத்தில் புதிய கட்சியாக முளைத்ததுதான்.

த.முருகவேள், விழுப்புரம்.

அரசியல் நடைமுறை

அரசியலில் தலையெடுக்கும் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க முயல்வதும், அதற்காக ஆட்சியில் இருப்போரை கடுமையாக விமர்சிப்பதும் வழக்கமான அரசியல் நடைமுறைதான். அப்படியிருக்க த.வெ.க.வின் ஆளுங்கட்சி மீதான நியாயமான விமர்சனங்களை தி.மு.கவை அழிக்கத் துடிக்கும் நினைப்பு என்று கூறுவது கண்ணியமான அணுகுமுறை அல்ல. ஜனநாயகத்தில் விமர்சனங்களை எதிர்கொள்ளும் பக்குவத்தை முதல்வர் கற்றுக்கொள்வது நல்லது.

முகதி.சுபா, திருநெல்வேலி.

சமாளிக்க வேண்டும்

ஒன்றின் முடிவில் இருந்துதான் இன்னொன்றின் தொடக்கம் என்பது உலக இயற்கை. காங்கிரûஸ தோற்கடித்துவிட்டுத்தான் திமுக அரியணை ஏறியது. ஆளுங்கட்சிக்கு எதிராக இருக்கும் அதிருப்தியைக் குறிவைத்து அவர்களைத் தம் பக்கம் இழுக்கின்ற வேலையை புதிய கட்சிகள் காலங்காலமாக செய்து வருகின்றன. இது மாதிரியான சூழலை ஆளும்கட்சிகள் சமாளித்துதான் ஆக வேண்டும். அதற்கு தி.மு.க வும் விதிவிலக்கு அல்ல.

உதயா ஆதிமூலம்,

திருப்போரூர்.

உணர்ச்சிவசப்பட்ட முதல்வர்

தன்னையும் அறியாமல் உணர்ச்சி வசப்பட்டு முதல்வர் மு க ஸ்டாலின் இக் கருத்தை பொது மேடையில் பேசியிருந்தாலும் அதில் சிறிதும் உண்மையில்லை என்பதை அவரே அறிவார். 75 ஆண்டு கால பாரம்பரியமும், வலுவான கட்டமைப்பும், கொள்கைப் பிடிப்பும் கொண்ட தொண்டர்களையும் கொண்ட மாபெரும் இயக்கம் என்பதால் தமிழகத்தில் தி.மு.கவை எந்தச் சக்தியாலும் அழிக்க முடியாது என்பது எல்லோரும் அறிந்ததே.

அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com