"நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற அரசு அதிகாரிகள் முயற்சிப்பதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது குறித்து...' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
சிரமமே!
நீதிமன்ற பார்வைக் கண்ணோட்டத்தில் சரியாக இருக்கலாம். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற அதிகாரிகள் களத்தில் இறங்கினால் அரசியல்வாதிகள் முதல் முட்டுக்கட்டை போடுவார்கள்; அதையும் மீறிப் போனால் அரசின் உயர் அதிகாரிகள் போடுவது இரண்டாவது தடைப் பலகை. மூன்றாவது, நீதிமன்ற தீர்ப்பின் கீழ் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் போனால் பொதுமக்கள் - அதிகாரிகள் மோதும் சூழ்நிலை. நடைமுறை தடைகளைக் கடந்து உயர்நீதிமன்றம் திருப்தி காண்பது சிரமம்.
இ.ஆர்.கிருஷ்ணன், மயிலாப்பூர்.
நிலைமை சீர்பட...
இன்றைய நாளில் பல அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் ரகசிய தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களது ஆணைகளை நிறைவேற்றுவதில் உள்ள ஆர்வத்தை நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதில் காட்டுவதில்லை. மேலும், அவர்கள் அரசியல்வாதிகளின் தொடர்புகளால் தங்களுக்கு ஆதாயம் உண்டு என்பதால் இதில் குறியாக இருந்து செயல்படுகிறார்கள். இப்படிப்பட்ட அதிகாரிகளை நீதிமன்றத்துக்கு அழைத்து அடிக்கடி கண்டித்தால் நிலைமை சீர்படும். நீதி அரசர்கள் இதில் தயக்கம் காட்ட வேண்டியதில்லை.
குரு.பழனிசாமி, கோயம்புத்தூர்.
தேவை பாதுகாப்பு
குற்றவாளிகள் அரசியல் பின்புலம் உள்ளவர்களாக இருப்பின் நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகள் தயங்குகிறார்கள். மேலதிகாரிகளின் உத்தரவையும் எதிர்பார்க்கின்றனர். நீதிமன்றமும் தீர்ப்புக்குப்பின் பணியின் முடிவு பற்றி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பதில்லை. அரசியல் பலம் இல்லாதவர்களாக இருப்பின் உடனடி நடவடிக்கை எடுக்கின்றனர். வேறு பல காரணங்களால் சில வேளைகளில் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த முடியாமலும் உள்ளனர். போதிய பாதுகாப்பு இருப்பின் அனைத்து நீதிமன்ற உத்தரவுகளையும் அமல்படுத்தலாம்.
கே.எ.நாராயணன், மருங்கூர்.
சரியே!
சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது சரியே. நீதிமன்றங்கள் சட்டங்களின் அடிப்படையில் வழக்குகளில் உத்தரவுகளை பிறப்பிக்கின்றன. அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அமைச்சரின், முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசென்று, நீதிமன்ற உத்தரவுகளை காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். சீராய்வு மனு மற்றும் உச்சநீதிமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகம் தழைத்திட சட்டப்பேரவையும், நிர்வாக அமைப்பும் நீதித் துறையோடு இணக்கமாகச் செயல்பட வேண்டும். லட்சக்கணக்கில் வழக்குகள் தேங்கியுள்ளன.
தாமஸ் எட்மண்டஸ், தாம்பரம்.
அதிகாரிகள் மட்டும் காரணமா?
நீதிமன்ற உத்தரவுகள் அதிகாரிகளுக்கு மட்டும் செல்வதில்லை; சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும்தான். நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகளே தன்னிச்சையாக நிறைவேற்றிவிடுவார்களா? அல்லது அமைச்சர்கள்தான் விட்டுவிடுவார்களா? அமைச்சர் கூறினால்தான் அதிகாரிகள் செயல்படுவர். அமைச்சர் முதல்வரின் ஒப்புதல் பெற்றே அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியும். நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம். ஆனால், அதை நிறைவேற்றுகையில், அமைச்சருக்குப் பாதகம் ஏற்படும் நிலை வந்தால் அரசு எப்படி நிறைவேற்ற முடியும்? சட்டங்களை, தீர்ப்புகளை தங்களால் வளைக்க முடியும் என்கிறபோது அரசும் சரி, அதிகாரிகளும் சரி. மெüனமே காக்க நேரிடும்.
மகிழ்நன், கடலூர்.
நடவடிக்கை எடுக்காததே!
உயர்நீதிமன்றம் பலமுறை இந்தக் கருத்தை வலியுறுத்தியும் எந்த அரசு உயர் அதிகாரிகளும் இது குறித்துக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அரசு அதிகாரிகள் மீது அரசும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அவர்கள் மெத்தனமாக நடந்து கொள்கின்றனர். பாதிக்கப்படுவது அப்பாவித் தொழிலாளர்கள், பொதுமக்கள். அதிகாரிகள் ஏதோ தங்கள் சொந்தப் பணத்தை வழங்குவதுபோல் நினைத்து, நமக்கேன் வம்பு என்ற நிலையில் செயல்படுவதால், உரிய காலத்தில் இழப்பீடு, இதர நன்மைகள் தொடர்பானவற்றை வழக்கு தொடுத்தவர் நீதிமன்ற ஆணை பெற்றும் பெற இயலாத நிலை உள்ளது.
வே.ம.இராமலிங்கம், காஞ்சிபுரம்.
தண்டிக்கப்பட வேண்டும்
அரசு அதிகாரிகள் முயற்சிப்பதில்லை என்பதைவிட பலர் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற விரும்புவதில்லை. உயர்நீதிமன்ற உத்தரவுகளுக்கே இந்த நிலைமை என்றால் கீழமை நீதிமன்றங்களின் தீர்ப்புகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. திட்டமிட்டே அவமதிப்புக்கு உள்ளாகிறது. இதற்கான நிரந்தரத் தீர்வு என்பது தொடர் தேடலுக்கு உரியது. அவமதிப்பு சட்டம் தெளிவாக திருத்தப்பட வேண்டும். அந்தந்த தீர்ப்புகளில் அதை அமலாக்கத் தவறுவோருக்கு உரிய எதிர் விளைவு என்ன என்பது இடம் பெறவேண்டும். நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட நாளன்று பொறுப்பிலிருந்த அதிகாரிகள் தெரிந்தே செய்யும் தவறுக்கு தனிப்பட்ட முறையில் தண்டிக்கப்பட வேண்டும்.
மோ. சேவியர், ஏர்வாடி.
உண்மை அல்ல...
நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்ற முயற்சிப்பதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிருப்தி முழுவதும் உண்மை அல்ல. நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்து கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. உயர் அதிகாரிகளிடம் இந்த பொறுப்பை ஒப்படைக்க, கீழ்நிலை அதிகாரிகள், அரசு, ஆட்சியாளர்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. காலக்கெடு நீட்டிக்கப்பட்டு, தற்போது அது மறக்கப்பட்டது. கருவேல மரங்கள் எப்போதும்போல் இருக்கிறது. அதேபோல் ஹெல்மெட், நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று சொல்லிக்கொண்டே போகலாம். நீதிமன்ற உத்தரவுக்கு ஒத்துழைத்தாலும், நிதி ஒதுக்கீடு இல்லாமல் எந்த உத்தரவையும் செயல்படுத்த முடியாது.
ஜீவன்.பி.கே., கும்பகோணம்.
வேதனைக்குரியது
நீதிமன்றம் என்றால் அரசு அதிகாரிகளின் அகராதியில் என்ன பொருள் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். உயர் அரசு பதவியிலிருக்கும் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை புறக்கணிப்பதுடன் தங்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இவர்களுக்கு நீதிமன்றம் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் கூட தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த உத்தரவு விதிக்கப்பட்டவரையும் மதிக்கவிடாமல் செய்துவிடுவதுதான் வேதனைக்குரியது. இப்படி அரசு அதிகாரிகள் கடமையை மறந்து செயல்படுவதால் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூற்று உண்மையானது மட்டுமல்ல; வேதனைக்குரியதும்தான்.
பிரகதி நவநீதன், கடலூர்.
சிறிதும் கவலை இல்லை
நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற அரசு அதிகாரிகள் முயற்சிப்பதில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவிப்பது வியப்பாக உள்ளது. நீதிமன்றம் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானது. அதில் ஒருவரின் மீது குற்றம் சொல்லப்படுகிறது என்றால், அதற்கு நீதிபதி என்ன தீர்ப்பு சொல்கிறாரோ அதை மதிக்க வேண்டியது கட்டாயம். ஆனால், சில அரசு அதிகாரிகள் அதை மதிக்காமல் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒதுக்கிவிடுவதுதான் உண்மை. இதைத் தான் உயர் நீதிமன்றம் அதிருப்தியாக சொல்கிறது. அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவு பற்றிய கவலை சிறிதும் கிடையாது. அவர்கள் தங்கள் பதவியைக் காப்பற்றிக் கொள்ள நீதிமன்ற உத்தரவுகளையும் நிராகரிப்பதால் உயர் நீதிமன்றத்தின் இந்த அதிருப்தியை கண்டும் காணாமலும் போவதுதான் நடைமுறையில் தினமும் நடக்கும் செயல்.
உஷா முத்துராமன், திருநகர்.
அக்கறை காட்டுவதில்லை
நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற அரசு அதிகாரிகள் முயற்சிப்பதில்லை என்பதைக் காட்டிலும், அதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை என்று சொல்லலாம். நீதிமன்றங்களுக்கு தங்களுடைய உதவியாளர்களை அனுப்பி விடுகிறார்கள். வழக்கின் தன்மை, நீதிபதியின் ஆணை இவற்றைப் பற்றி முழுமையாக அறியாமல் அரசு அதிகாரிகள் செயல்படுவது உண்மையே. பல வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகள் அரசு அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்கிற எண்ணத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கும் கருத்து சரியே.
ந. சண்முகம், திருவண்ணாமலை.
வழக்குகள் குறைய...
அரசு அலுவலர்கள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்வதில்லை. துறையின் தலைமை அலுவலராக உள்ள செயலாளரிடம் முறையிட்டாலும் ஒன்றும் நடப்பதில்லை. எத்தனை முறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவல் கேட்டாலும் ஒரே பதிலைத்தான் தருகிறார்கள். நீதிமன்றம் சென்றால் நிச்சயமாக தீர்வைப் பெறலாம் என்பதற்காக செல்கிறோம்; நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்தும் அதை அலுவலர்கள் நிறைவேற்ற மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது. மீண்டும் அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கிறது. அலுவலர்கள் விதிகளின்படி செயல்பட்டாலே நீதிமன்றத்தில் வழக்குகள் குறையும்.
தி.ரெ.ராசேந்திரன், திருநாகேச்சரம்.