முற்றிலும் உண்மையே!
தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையின் கீழ் அனைத்தும் இடம்பெறாத அவல நிலை கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவுகிறது என்பதை அமைச்சர் அவையில் உரைத்துள்ளார். உயர் கல்வி, தொடக்கக் கல்வி என கல்வியில் பிரிவுகள் இருப்பதைப் போல, குறு, சிறு தொழில்கள், கனரக தொழில்கள் என தொழில்களைப் பிரிப்பதைப் போல தகவல் தொழில்நுட்பத்தில் வகைபாடு இல்லை. அமைச்சர் சொன்னது போல் டைடல், நியோ டைடல் உள்ளிட்ட அனைத்தையும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் கொண்டுவந்தால், அதற்கான நிதி ஒதுக்கீடும், செயல்படுத்தும் முழு அதிகாரமும் கிடைக்கும் என்பதையே அமைச்சர் அவ்வாறு கூறியுள்ளார்.
சீனி.மணி, பூந்தோட்டம்.
போதிய நிதி ஒதுக்கீடு
தமிழக சட்டப்பேரவையில் தன்னிடம் நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பதை அவரது மன உளைச்சல் மற்றும் விரக்தியின் வெளிப்பாடாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. அவர் சார்ந்துள்ள தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என்பதைத் திறந்த மனதுடன் சொல்லியிருக்கிறார். இனியாவது அவருடைய துறைக்கு முதலமைச்சர் போதிய நிதி ஒதுக்கீடு செய்து அமைச்சரின் ஆதங்கத்தைப் போக்க வேண்டும்.
மு. நடராஜன், திருப்பூர்.
நல்ல பண்பு
தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகளின் அமைச்சராக இருக்கும் பழனிவேல் தியாகராஜன் சொல்வது மிகவும் சரியானதே. அரசின் நிதி நிர்வாகம் என்பது முன்பு அவரிடம் சில காலம் இருந்தது. ஆனால், தற்போது அவரிடம் இல்லை என்பதால் அவர் சொல்வது சரியானதே. அமைச்சராக இருந்தாலும் அவருக்கு என்று ஒரு வரைமுறை உள்ளது. அதை நன்கு உணர்ந்த பழனிவேல் தியாகராஜன் தன் இயலாமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் அமைச்சராக இருக்கும் அந்த துறைகளில் முன்னேற்றம் காண அவர் செயல்படுத்தும் திட்டங்களுக்கே அவர் அடுத்தவர் கையை எதிர்பார்ப்பதால்தான் "என்னிடம் நிதி அதிகாரம் இல்லை' என்று பகிங்கரமாகச் சொல்லி இருக்கிறார். பொய்யான தகவலைச் சொல்லி பிறரை ஏமாற்றுவதை விட இப்படி உண்மையைச் சொல்வது அவருடைய நல்ல பண்பையே காட்டுகிறது.
உஷாமுத்துராமன், மதுரை.
ஆதங்கம்
திராவிட அரசியல் சித்தாந்தத்தில் வழிவழியாக வந்த திறமையான ஆளுமையாக கோலோச்சும் பழனிவேல் தியாகராஜன் கரோனா காலகட்டத்தில் சிறப்புடன் பணி செய்தார். ஆடியோ சர்ச்சையால் இவர் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளாக இந்த துறை முன்னேற்றம் அடையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி இந்த துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்ற தனது ஆதங்கத்தை சட்டப்பேரவையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ரமிலா ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.
அதிருப்தியின் வெளிப்பாடு
ஓர் அமைச்சரவையில் அமைச்சர் ஒவ்வொருவரும் தாம் சார்ந்துள்ள துறைக்கு முழு அதிகாரம் உடையவர்களாகவே இருப்பர். நிதியும் அதிகாரமும் இல்லாதிருந்தாலும், அதை வெளிப்படையாகக் கூறுவதில்லை. அவையில் பேசும்போது கண்டிப்பாக அவை நாகரிகத்தைப் பேண வேண்டும். என்னிடம் நிதி, அதிகாரம் இல்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளது முதல்வர் மற்றும் அரசிடம் அவர் கொண்டுள்ள அதிருப்தியின் வெளிப்பாடாகத்தான் புரிந்துகொள்ளப்படும்.
வீ.வேணுகுமார், கண்ணமங்கலம்.
விரக்தி
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாசுக்கானவர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவர். எதனையும் நிதானமாக-அவசரமின்றி எந்த உரையையும் சுருக்கமாகப் பேசக் கூடியவர். அதேசமயம் இடம், பொருள், ஏவல் ஆகியவற்றை மட்டும் தவறவிடுபவர். இப்படிப்பட்ட சூழலில்தான் நிதி அதிகாரம் தன்னிடம் இல்லை என்று விரக்தியடைந்ததை வெளிப்படுத்தியிருக்கிறார்.
எஸ்.ஜி.இசட்சான், திருப்பூர்.
வளர்ச்சிக்கு....
செயற்கை நுண்ணறிவுச் செயல்பாட்டின் மூலம் இந்தப் பிரபஞ்சத்தை ஆட்டிப் படைக்க முடியும் என்று அறிவியல் சார்ந்தவர்கள் கூறிவரும் இந்நாளில், தொழில்நுட்பத் துறை வளர்ச்சி ஏன் முடக்கப்படுகிறது என்ற கேள்வி எல்லாருடைய மனதிலும் எழுவது நியாயம்தானே! குறைவான நிதியை வைத்துக் கொண்டு புதிதாக தொழில்நுட்பவியல் பூங்காக்களை எப்படி பராமரிக்க முடியும்? மற்ற மாநிலங்களைப் போல் அனைத்து தொழில்நுட்ப பூங்காக்களும் எங்களது துறையில் செயல்படுவதில்லை என்றும் அமைச்சர் கூறுவதை பார்க்கும்போது எங்கே பிரச்னை என்றும் அதற்குத் தீர்வு என்ன என்றும் மக்கள் யோசிக்கத்தானே செய்வார்கள்?
என் வி சீனிவாசன், புது பெருங்களத்தூர்.
பொறுப்பான பதில் அல்ல
தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் கூறிய கருத்து அந்தத் துறைக்குப் போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்பதையும், தொழில்நுட்பத் துறையில் மாநிலத்தின் பங்கில் முழுமையாக அதிகாரம் செலுத்த முடியவில்லை என்பதையும்தான் குறிக்கிறது. மத்திய, மாநில உறவுகளை விமர்சனம் செய்ய முடியாத நிலையைத்தான் தர்மசங்கடமான நிலை என்றும் கூறியிருக்கிறார். இதையே அவைத் தலைவர், "முதல்வருடன் கலந்து பேசி பொறுப்பான
பதிலை அமைச்சர் கூறியிருக்க வேண்டும்' என்று தீர்ப்பாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
அ.கருப்பையா, பொன்னமராவதி.
ஒளிவு மறைவில்லை
என்னிடம் நிதி, அதிகாரம் இல்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளது, அவரது உள்ளக்கிடக்கை மற்றும் எதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது. பேரவையில் அவர் எழுப்பிய கேள்வியில் இடம்பெற்ற டைடல்பார்க் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் வரும் காரணத்தால் அமைச்சர் அவ்வாறு பேசியிருக்கக் கூடும். ஒளிவு மறைவின்றி பேசுவது அவர் சுபாவம். ஆனால், பேரவையில் சிறிது கவனமாக தொழில்துறை அமைச்சரே இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று கூறியிருக்க வேண்டும்.
ந.கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.
அழகல்ல
என்னிடம் நிதி, அதிகாரம் இல்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது ஏற்புடையது அல்ல. ஓர் அரசு என்பது முதல் அமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களின் கூட்டு பொறுப்புதான். அப்படி இருக்கும்போது தனது இலாகாவிற்கானது இல்லையென்றாலும் தொடர்புடைய துறையில் துறை அமைச்சரிடம் கேளுங்கள் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். அதை விடுத்து சட்டசபையில் இப்படி பேசுவது ஓர் அமைச்சருக்கு அழகல்ல.
என்.எஸ்.சண்முகம், தேவராயபுரம்.
அவல் கிடைத்த மாதிரி
என்னிடம் நிதி அதிகாரம் இல்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பது உண்மை. மற்ற கட்சிகளைப் போலவே திமுகவிலும் உட்கட்சிப் பூசல் இருப்பதையே இது காட்டுகிறது, முன்மாதிரி அரசு என்று தம்மை பிரகடனப்படுத்திக்கொள்ளும் முதல்வர், அமைச்சர்களை ஒருங்கிணைக்க வேண்டும். அவர்களுடனான உரையாடலை அதிகப்படுத்த வேண்டும். அதே வேளையில் பழனிவேல் தியாகராஜனும் அவையில் இவ்வாறு பேசியதைத் தவிர்த்திருக்கலாம். அவர் அப்படிப் பேசியதால் வெறும் வாயை மெல்லுகின்ற எதிர்க்கட்சிகளுக்கு அவல் கிடைத்த மாதிரி ஆகிவிட்டது. இனியாவது முதல்வர், அமைச்சர்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
உதயா அதிமூலம், திருப்போரூர்
வெளிப்படையான பேச்சு
என்னிடம் நிதி அதிகாரம் இல்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளது அவரது துறையில் இருக்கும் உண்மை நிலையைச் சொல்கிறது. தனது துறைக்கு ஒதுக்கப்படுகின்ற குறைவான நிதியையும் மற்றும் சிக்கல்களையும் ஏற்கெனவே தாம் பதிவு செய்திருப்பதாக பழனிவேல் தியாகராஜன் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். மேலும் எல்லா தகவல் தொழில்நுட்ப பூங்காவும் தனது துறையில் செயல்படுவதில்லை; ஒரு சிறிய பிரிவே தனது துறையின் கீழ் செயல்படுகிறது. எனவே அதற்கு என்ன உண்டோ அதை மட்டுமே தன்னால் செய்ய இயலக்கூடிய நிலையில் இருக்கிறதென்று வெளிப்படையாகப் பேசியிருக்கின்றார்.
ப. தாணப்பன், தச்சநல்லூர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.