அரசின் கடமை!
ஓர் இடத்தில், ஒரு தேசத்தில் உயர்ந்த நிலைக்கு, அதிகாரத்துக்கு வர வேண்டுமானால், அந்த இடத்திலுள்ள மக்கள் பேசும் மொழியை, அந்த தேசத்தின் மொழியை நாம் முதலில் கற்க முன்வர வேண்டும். ஒரு மொழியைக் கற்றால்தான் அந்த மொழி பேசும் மக்களுக்குத் தலைவனாக, அதிகாரம் மிக்கவனாக வளர முடியும். கூடுதல் மொழியைக் கற்பதால் ஏற்கெனவே கற்ற மொழிகள் அழிந்துவிடாது. ஆங்கிலேயர் வருகையால் அறிமுகமான ஆங்கில மொழியால் தமிழ் என்றும் குறைவுபடவில்லை. கற்பது மக்கள் உரிமை. கற்பவர்களுக்கு உரிய வழிகாட்டுவது அரசின் கடமை. ஏழை, எளிய மாணவர்களுக்கு வழிகாட்டுவது அரசின் கடமை.
சுகிராஜ், மதுரை.
மும்மொழிக் கொள்கை அவசியம்!
இந்திய நாட்டில் தமிழ்நாடு தவிர, இதர மாநிலங்களில் ஹிந்தியை வைத்து சுலபமாக அனைத்து மக்களிடமும் உரையாடலாம். சமீபத்தில் நான் காசி சென்றபோது, கங்கையில் படகோட்டுபவர் தொடங்கி, சில்லறை அங்காடிகளிலும் நான் சரளமாக உரையாட பாடசாலையில் படிக்கும்போது கற்ற ஹிந்தி, உதவியது. எனவே, தமிழ், ஆங்கிலம் தவிர, இன்னொரு மொழியைக் கற்க வழி செய்யும் மும்மொழிக் கொள்கை பாடசாலையில் அவசியம். பிறமொழிகளைக் கற்பதால் நன்மை மட்டுமே விளையும். இன்றும் மாணவர்கள் தனியே ஹிந்தி ஆசிரியர்கள் மூலம் ஹிந்தி படித்து முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.
சுயசிந்தனை!
தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் தவிர ஒரு மொழியைக் கற்கத் தேவையில்லை. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளைக் கற்பிக்கிறார்கள்.மாணவர்கள் விருப்பப்பட்டால் பிற மொழிகளைத் தனியாகக் கற்கலாம். இந்திய நாடு பலமொழிகளைக் கொண்டதாகும். ஆகவே மற்ற மாநிலங்களில் பேசுவதற்கும், உலக வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கும் ஆங்கிலம் இணைப்பு மொழியாகும். தாய்மொழியான தமிழ்தான் சுயசிந்தனையை வளரச் செய்யும்.
இரா.கோவிந்தராசன், சென்னை.
வாய்ப்பை வழங்க வேண்டும்!
தற்போதைய ஆட்சியில் இந்தியாவின் அலுவலக மொழியாக ஹிந்தி இருப்பதால், அதை நாம் மூன்றாவது மொழியாகக் கற்பதில் தவறில்லை. அத்துடன் நமது தனியார் பள்ளிகளில் தமிழ் தவிர்க்கப்பட்டு வேறு மூன்று மொழிகளிலும் பாடம் நடத்துவதை நமது அரசு தடுக்கவில்லை. அப்படி இருக்கும்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் மூன்று மொழியைக் கற்கும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று சொல்வதில் தவறு இல்லை. மொழிக்கொள்கை சண்டையால் ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்றே பெற்றோர்களும், கல்வியாளர்களும் நினைக்கிறார்கள்.
மகிழ்நன், கடலூர்.
தேவையில்லை!
தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் தவிர மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்றுத்தர தேவையில்லை. ஏனென்றால், இன்று பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மொழித்திறன் சிறப்பாக இல்லை. ஆங்கிலம், தமிழ் கற்றுத்தரும் பள்ளிகளில் பயிலும் பல மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் திறமைமிக்கவர்களாக இல்லை. நிலைமை இப்படி இருக்கும்போது எதற்கு தேவையில்லாமல் மூன்றாவது மொழியைக் கற்றுக் கொடுக்க வேண்டும்?
ரா.மூர்த்தி, மதுரை.
முடக்குவது அநீதி!
1965 வரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி படித்த எனக்கு அதன்பிறகு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஹிந்தி தெரியாததால் இந்தியாவில் பல நகரங்களில் எனக்குக் கிடைத்த நல்ல வேலைவாய்ப்புகள் பறிபோயின.விசாலமான ஞானம், திறன் கொண்டு எதையும் உள்வாங்கி கிரகிக்கும் மாணவர்களின் நினைவாற்றலை இரு மொழிகளுக்குள் முடக்குவது அநீதியாகும்.
கோபால் மாரிமுத்து, சென்னை.
கூடுதல் சுமை!
பள்ளிக் கல்வி என்பது வெறும் மொழியைக் கற்றுக் கொள்வதற்கான இடம் அல்ல. அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கும், ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கும், நல்ல பண்புகளை உயர்த்திக் கொள்வதற்கான இடமே பள்ளி. மொழியை அவரவர் தேவைக்கேற்ப கற்றுக் கொள்ளலாம். அதற்கான வாய்ப்புகளும் இங்கு இருக்கவே செய்கின்றன. மும்மொழிக்கொள்கையின் மூலம் மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள கட்டாயப்படுத்துவது மாணவர்களுக்கு கூடுதல் சுமையாகவே இருக்கும். இருமொழிக் கொள்கையே போதுமானது.
மா.பால்ராஜ், தேவதானப்பட்டி.
உண்மையான ஜனநாயகம்!
ஹிந்தி தெரிந்தவர்கள் இந்தியாவில் எந்தப் பகுதியிலும் சென்று வாழலாம். சில மாணவர்கள் அயல்நாட்டு மொழிகளையும் கற்று வருகின்றனர். எனவே பள்ளிகளில் ஹிந்தி கற்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கு உரிய வசதிகளைச் செய்துதர வேண்டியது அரசின் பொறுப்பு. இதுதான் உண்மையான ஜனநாயகம். மக்கள் வாழ்வில் முன்னேற பல மொழிகளை அறிந்து கொள்வது நல்லது.
கே.அனந்தநாராயணன், கன்னியாகுமரி.
கட்டாயப்படுத்தக் கூடாது!
பிற மொழிகளை அறிந்திருந்தால்தான் நம் தாய்மொழியின் சிறப்பும் பெருமையும் புரியும். பாரதியார் பலமொழிகளை அறிந்திருந்ததால்தான் அவரது தாய்மொழி பற்றி சிறப்பாக அறுதியிட்டுக் கூற முடிந்தது. பிறமொழிகளைத் தெரிந்து கொள்ள ஆர்வம் ஒன்றே போதும். பிறமொழிகளைப் பயின்றே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. எந்த ஒரு செயலையும் கட்டாயப்படுத்துவதன் மூலம் நடைமுறைப்படுத்த முடியாது.
எம்.ஜோசப் லாரன்ஸ், சிக்கத்தம்பூர் பாளையம்.
ஆங்கிலமே போதும்!
வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் தமிழ் மொழியைக் கற்க முன்வருவார்களா? நம் மாணவர்கள் ஆங்கிலத்தையே சரி வர கற்றுத் தேர்வதில்லை. அவ்வாறு இருக்கையில், எவ்விதம் மூன்றாவது மொழியைக் கற்றுக் கொள்வதற்காகத் தேர்ந்தெடுப்பது? உலக அளவில் தமிழர்களின் அறிவுத்திறன் புரிந்து கொள்ளப்பட்டு உயர் பதவிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. எனவே இணைப்பு மொழியாக ஆங்கிலமே போதும்.
எஸ்.வேணுகோபால், சென்னை.
கல்வி கற்கும் உரிமை!
தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் தவிர வேறு ஒரு மொழி, கண்டிப்பாக கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளிகளில் சிபிஎஸ்இ, மெட்ரிக் பாடத்திட்டத்தில் மூன்றாவது மொழியாக ஹிந்தியைப் பயிற்றுவிக்கும்போது, ஏழை, எளிய மக்களின் பிள்ளைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில் மட்டும் தமிழ், ஆங்கிலம் தவிர மூன்றாவது ஒரு மொழியைக் கற்பிப்பதை ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரில் தடுப்பது, ஏழை மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையைப் பறிப்பதாகும்.
சி.சோழபூபதி ராஜா, திட்டச்சேரி.
சொந்த விருப்பம்!
தாய்மொழி அறிவு தாய்ப்பால் உணவு ஆகும். தாய்மொழியைத் தவிர மற்ற எந்த மொழியையும் கற்றுத் தெளிவு பெற தடை ஏதும் இல்லை. மொழித்திணிப்பு என்பதே எதிர்ப்பாக மாறுகிறது. நமது தாய்மொழி மேலும் சிறப்புற்று விளங்க வேண்டும். திணிப்புகளால் மொழியானது திணறி, காணாமல்
போகக் கூடாது என்பதாலேயே மொழி திணிப்புக் கொள்கையை தமிழர்கள் எதிர்க்கிறார்கள். மும்மொழி அல்ல, முப்பது மொழிகளை வேண்டுமானாலும் ஒருவர் கற்று, தேர்ச்சி பெற்றவராக விளங்குவது அவருடைய சொந்த விருப்பமாகும்.
சீனி.மணி, பூந்தோட்டம்.
தவறு இல்லை!
பெருந்தொகை கொடுத்து மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தாய்மொழியான தமிழைக் கூடப் படிக்காமல் வேற்று மொழிகளைப் படிக்கின்றனர். மும்மொழிக் கொள்கையின் மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ், ஆங்கில மொழிகளுடன் கூட அவர்கள் விருப்பப்படும் வேறு மொழி ஏதாவது ஒன்றைப் படிப்பதனால் அவர்
களின் எதிர்கால வாழ்வுக்கு நிச்சயம் அது உதவும். மும்மொழிக் கொள்கையில் தவறு இல்லை.
சு.பாண்டியன், திருநெல்வேலி.
இருமொழியே போதுமே!
பிரிட்டன் அறிமுகப்படுத்திய கல்விமுறை சீராக இருந்தது. அதன்படி மாநில மொழி ஒன்றையும், உலக மொழி ஒன்றையும் பள்ளிகளில் பயிற்றுவித்தார்கள். இம்முறையால் மாநிலங்கள் பல இருந்தாலும், தேசம் என்ற ஒன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆங்காங்கே பல தலைவர்கள் உருவானார்கள். நாடு முன்னேற்றம் கண்டது. இதை யாரும் மறுக்க முடியாது. மூன்றாவது மொழி ஒன்றைக் கற்க வேண்டும் என்று கூறுவது அதிகப்படியான சுமையாகவே இருக்கும். இருமொழியே போதுமே!
எஸ்.இ.இசட்கான், திருப்பூர்.
சர்ச்சையை ஏற்படுத்தும்!
இன்றைய நிலவரப்படி கிராமப்புற குழந்தைகள் மற்றும் ஏழைக் குழந்தைகளில் பெரும்பாலானோர் தாய்மொழியான தமிழையே சரியாகப் படிக்கத் தெரியாமல் திணறுகின்றனர். குழந்தைகளுக்கு கல்வியில் உற்சாகத்தை உண்டாக்க வேண்டும். குழந்தைகள் விரும்பினால் வேற்று மொழியைக் கற்றுக் கொடுக்கலாம். ஆனால் அவர்களின் மீது மூன்றாவது மொழியை- அது எந்த மொழியானாலும்- திணிப்பது சர்ச்சையை ஏற்படுத்தும்.
ஆர்.பட்டாபி, சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.