இருட்டில்...
நாடாளுமன்றம் அமளியால் முதல் நாளிலேயே முடங்குவது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. இதற்கு எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல; ஆளும் கட்சிக்கும் பொறுப்பு உண்டு. இந்த அமளியைப் பயன்படுத்தி ஆளும் கட்சி, தான் நிறைவேற்ற வேண்டிய மசோதாக்களை எவ்வித இடரும் இல்லாமல் உரிய விவாதங்கள் இன்றி நிறைவேற்றி வருகிறது. மாநில அரசுகள் தங்களுக்குத் தேவையான நிதி, சேவைகள் மற்றும் பெற வேண்டிய ஆதாயங்களை அவையில் கோரமுடியாமல் திண்டாடுகின்றன. ஜனநாயகம் இருட்டில் மறைந்துவிட்டது.
நா.குழந்தைவேலு, மதுரை.
காட்சிகள் மாறவில்லை
நாடாளுமன்றம் அமளியால் முடக்கப்படுவது புதிது அல்ல. எத்தனை ஆண்டுகளாக இந்த நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சிதான் மாறுகிறது; ஆனால், காட்சிகள் இதுவரை மாறியதே இல்லை. எதிர்க்கட்சியாக இருந்து இப்போது ஆளும் கட்சியாக இருந்தாலும் அதே கதைதான். எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக இருந்த போதும் இதே கதைதான். உறுப்பினர்கள்தான் மாறுகிறார்களே தவிர, காட்சிகள் மாறுவதில்லை. மக்கள் மாக்களாக இருக்கும் வரை இந்த நிலை தொடரத்தான் செய்யும்.
ஜீவன்.பி.கே., கும்பகோணம்.
இருவரும் இணைய வேண்டும்
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, எதிர்க்கட்சியாக இருந்த பாஜக கூட்டணியினர் அதுவரை இல்லாத வகையில் மன்மோகன் சிங்கின் மெüனமான அணுகுமுறையைப் பயன்படுத்தி அவையை பல முறை முடக்கினார்கள். அதையே காங்கிரஸ் கூட்டணியினர் 2014 முதல் நாடாளுமன்றத்தில் அமளிகளை சற்று கூடுதலாகவே அரங்கேற்றி வருகின்றனர். ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஏற்படும் ஞானம் எதிர்க்கட்சியானதும் மறைந்து விடுவது துரதிருஷ்டம். நாட்டுக்காக மசோதாக்களை நிறைவேற்றும் வகையில் இருதரப்பும் உதவுவதே விவேகம்.
ஆர்.ஜி.பாலன், திசையன்விளை.
பலித்துவிடும்
அமளிக்குக் காரணமே, கூட்ட விவாதத்தால் உறுப்பினர்கள் தங்களுக்கு எந்தப் பயனும், பலனும் இல்லை என்று எண்ணுவதுதான், அமளி ஏற்படுத்தி நடக்கவிடாமல் செய்துவிட எண்ணுவர். இதனால், அவர்களின் எதிர்பார்ப்புகள் சில நிறைவேறலாம். பள்ளியில் வகுப்பு ஆசிரியரைப் பாடம் நடத்தவிடாமல் தடுக்க மாணவர்களில் ஒருவர் மயக்கம் போட்டு விழுவதைப்போல் நடிக்க, உடனே அந்த வகுப்பில் பரபரப்பு ஏற்பட்டு ஆசிரியர் நடத்த வந்த பாடத்தை நடத்த முடியாமல் போவதால் மாணவர்களுக்கு வரும் மகிழ்ச்சி போலத்தான் அமளியும்...
உஷா முத்துராமன், மதுரை.
இயல்புதானே...
நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் கேள்விகள் பற்றி தெரிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதைப் பற்றி விவாதிக்க விரும்பாமல் தொடக்கத்திலேயே இப்படி அமளி ஏற்படுத்தி, தொடர்ந்து நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்தவிடாமல் செய்வதற்கான முயற்சிதான் இது. முன்பு சொன்னதைப் போல, இது அரசியல் நாடகம் என்று எண்ணி வேடிக்கை பார்க்கத்தான் தோன்றுகிறது. விவாதம் அமைதியாக நடைபெற்றால்தான் வியப்பு. ஆகவே, தொடக்கத்தில் அமளி ஏற்பட்டது வியப்பல்ல.
பிரகதாம்பாள், கடலூர்.
வருத்தம் அளிக்கிறது
தொடக்கத்திலேயே நாடாளுமன்றம் அமளியால் செயல்படாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. நாடாளுமன்றம் என்பது நாட்டின் சட்டங்களை இயற்றுதல், அந்தச் சட்டத்தை நடைமுறைபடுத்துவதால் எழும் சாதக, பாதகங்களை ஆராய்வது, பொதுமக்களின் குரலாக இருப்பது, ஆளும் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துவது, தொடர்ந்து கண்காணிப்பது போன்ற பணிகள் நிகழும் இடமாக உள்ளது. பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்பதையும் கவனத்தில் கொண்டு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
உதயா ஆதிமுலம், திருப்போரூர்.
கனிவற்ற தன்மை
பிரதமர் அவைக்கு வராமல் இருப்பதும், முக்கிய நிகழ்வுகளில் மட்டும் அவர் பேசுவதும், மறைந்த முன்னாள் பிரதமர்கள் குறித்து குற்றஞ்சாட்டி பேசுவதாலும் எப்படிச் சுமுகமாக அவை நடைபெறும். மக்களவை, மாநிலங்களை தலைவர்கள் கடினமாக நடந்து கொண்டால் அவையை எப்படி அமளி இல்லாமல் சுமுகமாக கொண்டுசெல்ல முடியும். பின்னர் விவாதிக்கப்படும் எனக் கூறிய விஷயங்களை முன்னதாகவே விவாதித்தால் என்ன தவறு நடந்துவிடப் போகிறது?
பொன் மனோகரன், மதுரை.
திருமணத்தைப்போல...
நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படுத்தக் காரணமே அந்த நாடாளுமன்றம் கூடுவதை சில உறுப்பினர்கள் விரும்பவில்லை என்பதால்தான்; அதற்குக் காரணம் அங்கு பேசப்போகும் விவாதத்தை உறுப்பினர்கள் விரும்பவில்லை. வீட்டில் மகனுக்கோ மகளுக்கோ திருமண பேச்சு தொடங்கி அதைப் பற்றி விவாதிக்கும்போது அவர்கள் ஏதேனும் அமளி செய்து திருமணப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினால், அதன் பின்னணியில் ஏதோ இருக்கும். அதுபோலத் தான் இந்த அமளியும்.
நந்தினி கிருஷ்ணன், மும்பை.
அறுவடை
நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்படுவது குறித்து மக்கள் வேதனைப்படுகின்றனர். காரணம், வரிப்பணம் வீணாக்கப்படுவது குறித்து ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் ஏன் யோசிக்க மறுக்கின்றனர். பொதுவான விவாதங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு பிரதமரின் விளக்கங்களை எதிர்பார்ப்பது நியாயம்தானே! எதிர்க்கட்சியாக பாஜக இருந்தபோது நாடாளுமன்றத்தில் எப்படி நடந்து கொண்டதோ அதையே இன்று எதிர்க்கட்சிகள் கடைப்பிடிக்கின்றன; எதை விதைத்தோமோ, அதைத்தானே அறுவடை செய்ய முடியும்.
என்.வி.சீனிவாசன், புது பெருங்களத்தூர்.
வேறு வழியில்லை
நாடாளுமன்ற தொடக்கத்திலேயே ஆரவாரத்துடன் செயல்பட்டால்தான் தீர்வுக்கான வழி, விளக்கம் விரைவாகக் கிட்டும் என்பது நடைமுறையாக உள்ளது. தற்போதைய அமர்வில், அதிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளுக்காக குரல் எழுப்ப வேண்டிய தேவை உள்ளது. ஆபரேஷன் சிந்தூர், பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, குடியரசு துணைத் தலைவரின் திடீர் விலகல் போன்றவற்றுக்கு விளக்கங்கள் பெறவும், தீர்வு காணவும் அமளியில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன.
ஆ.லியோன், மறைமலைநகர்.
ஏற்புடையதல்ல
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மிகப் பெரிய தூண்களில் ஒன்றாக இருப்பது நாடாளுமன்றம். உள்நாட்டு பிரச்னைகள், அண்டை நாடுகளுடனான உறவு, நாட்டின் பாதுகாப்பு, வர்த்தகம், மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எட்டப்பட்டு சட்டம் இயற்றப்படவேண்டிய இடம் நாடாளுமன்றம். எதிர்க்கட்சி, ஆளும்கட்சி உறுப்பினர்களின் அமளியால் முடங்குவது ஏற்புடையதல்ல. நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதால் மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது. இதற்கு ஆளும்கட்சிகள், எதிர்க்கட்சிகள் பொறுப்பேற்க வேண்டும். ஆக்கபூர்வமான விவாதங்கள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும்.
பா.சிதம்பரநாதன், கருவேலன்குளம்.
முக்கியக் கூட்டம்
மழைக்கால கூட்டத் தொடர் அதிக நாள்கள் நடைபெறுவதால் அரசின் திட்டங்கள், அறிவிப்புகள், நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் குறித்த விவாதங்கள் இடம்பெறும். அரசு பொறுப்பாக நடந்து கொண்டிருந்தால் இந்தக் கூட்டத்தொடரில் அமளிக்கு அவசியம் ஏற்பட்டிருக்காது. முக்கியப் பிரச்னைகளுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்த நிலையில், அவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார்.
அ.கருப்பையா, பொன்னமராவதி.
பிரச்னைகளின் அணிவகுப்பு
மக்கள் பிரச்னைகளை முன்வைத்து விவாதங்கள் நடத்த எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை என்பதையும் ஆளும்கட்சியும் அவர்களை சமாதானம் செய்ய விரும்பவில்லை எனவும் தெரிகிறது. ஆபரேஷன் சிந்தூர், விலைவாசி உயர்வு, பாலங்கள், கட்டடங்கள் இடிந்து விழுதல், நாடுமுழுவதும் ஏற்பட்டுள்ள சுங்கச் சாவடிகளின் அடாவடிக் கட்டண வசூல் என பிரச்னைகள் அணிவகுத்து நிற்பதை எதிர்க்கட்சிகள் உணரவில்லை. துணை குடியரசுத் தலைவர் விலகல் விவகாரம் மட்டும் நாட்டின் பிரதான பிரச்னையல்ல.
உ.இராசமாணிக்கம். கடலூர்.
விரக்தியால் அமளி!
எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு எவ்விதப் பதிலும் பெறப்படாமல் நிழலோடு சண்டை போடுவது; விவாதமே நடைபெறாத நிலையில் விரக்தியில் அமளியில் ஈடுபடுகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பு குறைந்தபட்சம் பிரதமர் இருக்கையில் அமரவேண்டும் என்பதுதான். தமிழக மீனவர்களை சிறைப்பிடித்தல், உள்நாட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் இருப்பது என எல்லாவற்றையும் அமளியால் தவிர்த்துவிட்டார்கள் மக்களுக்கானவர்கள். ஆளும் கட்சி மட்டுமல்லாமல் எதிர்கட்சிகளும் விவாதப் பொருளை கருத்தில் கொள்ள வேண்டும்.
எஸ்.வேணுகோபால், சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.