கட்டுப்பாடு தேவை!
எந்த ஒரு விஷயமுமே ஒரு கட்டுப்பாட்டுக்குள் இயங்கினால்தான் மக்களுக்கு நன்மை கிடைக்கும். எடுத்துக்காட்டாக, திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் தேவையில்லை என்ற நிலை வந்தால், மனிதகுலத்துக்கு துன்பம் விளைவிக்கும் வன்முறைக் காட்சிகள் மற்றும் ஆபாசக் காட்சிகள் தாராளமாக இடம்பெறும். தற்போது ஊடகப் பதிவுகளை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசு பரிசீலித்து விரைவில் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.
மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.
வரம்பு மீறி...
சமூக ஊடகங்கள் அண்மைக்காலமாக வரம்பு மீறிச் செயல்படுகின்றன. சமூக ஒழுக்கக் கேடு, மக்களைத் திசைதிருப்புதல், பொய்யான தகவல்களை வெளியிடுதல் ஆகியவையே சமூக ஊடகங்களின் செயல்களாக உள்ளன. இதைப் பார்க்கும் மக்கள் எது உண்மை, எது பொய் என்று தெரியாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால், சமுதாயத்தில் பல பிரச்னைகள் உருவாகின்றன. எனவே, சமூக ஊடகப் பதிவுகளை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் கொண்டுவர வேண்டும்.
கே.அனந்தநாராயணன், கன்னியாகுமரி.
கட்டுப்படுத்த நினைக்கிறார்கள்!
சமூக ஊடகம் என்றால் என்ன? அதுவும் பொது மக்களால் நடத்தப்படும் ஒரு செய்தி சேவைதான். இதுநாள்வரை இந்த சேவையில் அரசு தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் என்று பல பிரபலங்கள் சிக்கியுள்ளனர். சமூக ஊடகப் பதிவுகள் சிலருக்கு மனக்கஷ்டத்தையும் வருத்தத்தையும் கொடுத்திருக்கலாம். சமூக ஊடகம் என்றாலே அவர்களின் வேலையே அடுத்தவரைப் பார்த்து பதிவுகளை வெளியிடுவதுதான் என்று மன வருத்தம் அடைந்தவர்கள் அமைதியாகச் செல்லவில்லையா? சமூக ஊடகங்களில் வரும் பதிவுகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று கருதுவதால்தான், மத்திய அரசு புதிய சட்டம் மற்றும் அதைப் பரிசீலனை செய்கிறேன் என்று சொல்கிறதோ எனத் தோன்றுகிறது.
பிரகதாம்பாள், கடலூர்.
நெறிமுறைகளின் மூலம்...
தங்கள் கொள்கைகள் சார்ந்த செய்திகளை சமூக ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசும், மாநில அரசும் மறைமுகமாக வற்புறுத்தினால், சமூக ஊடகப் பதிவுகளை ஒழுங்குபடுத்தக் கொண்டுவரும் சட்டத்தினால் எந்த பயனுமில்லை. சமூக ஊடகங்களுக்கு கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவற்றில் வெளியிடப்படும் ஒருதலைப்பட்சமான, கருத்துகள் மற்றும் ஆபாசத் திணிப்புகள் களையப்பட வேண்டும். அதற்கான நெறிமுறைகள்மூலம் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.
மகிழ்நன், கடலூர்.
கடுமையான கண்காணிப்பு!
சமூக ஊடகப் பதிவுகளை ஒழுங்குபடுத்துவது அவசியம். அதேபோல எதிர்க்கருத்துகளை வெளியிடும் சமூக ஊடகத்தினர் மீது பொய் வழக்குப் போட்டு அலையவிடுவதும் கடுமையாகக் கண்காணிக்கப்பட வேண்டும். அதற்கேற்ற சட்டம் தேவை.
எஸ்.சுந்தரேஸ்வர பாண்டியன்,
பூந்தமல்லி.
காலந்தாழ்த்தக் கூடாது!
சமூக ஊடகத் தளங்களில் சர்ச்சைக்குரிய மற்றும் ஆபாசமாக வெளிவரும் பதிவுகள் தொடர்ந்து பகிரப்படுவதை ஒழுங்குபடுத்துவது அவசியம். எப்போதோ நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டிய சட்டம் இது. இனியும் தாமதிக்காமல் புதிய சட்டம் கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம். மேலும், தொலைக்காட்சி நாடகங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருக்கின்றன. திரைப்படத்துக்கு உள்ளது போலவே தணிக்கைமுறையை தொலைக்காட்சி நாடகங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
பவள வண்ணன், நடுவக்கோட்டை.
செயல்படுத்த முடியாத சட்டம்!
மத்திய அரசு செயல்படுத்த முடியாத சட்டங்களில் இதுவும் ஒன்று. சமூக ஊடகங்கள் ஒரு நாட்டின் கட்டுப்பாட்டிலா இருக்கின்றன? உலகின் பல வல்லரசு நாடுகளின் கைகளில் சமூக ஊடகம் இருக்கிறது. மத்திய அரசு சில இணையதளங்களை வேண்டுமானால் தற்காலிகமாகக் கட்டுப்படுத்த முடியும். ஊடகப் பதிவை இங்கே தடை செய்தால் வேறு நாடுகளில் இருந்து அவற்றைப் பதிவிடுவார்கள். காற்று அதிகமானால் ஜன்னலை மூடுவதைப் போல சில கட்டுப்பாடுகளை வேண்டுமானால் கொண்டுவரலாம். காற்றைக் கட்டுப்படுத்த முடியாது.
ச.கற்பகவிநாயகம், புளியங்குடி.
பகைமைத்தன்மை
தற்போது சமூக ஊடகங்களில் அவரவர் தங்கள் விருப்பம் போல் பதிவு செய்து, காணொலிகளாகப் பதிவேற்றம் செய்கிறார்கள். ஆனால், அதன் உண்மைத்தன்மையை அறிய இயலாது. மேலும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி உண்மையைத் தெரியவிடாமல் குழப்புவதே நோக்கமாக இருக்கிறது. தனக்கு வேண்டாதவர்கள் குறித்த அவதூறுகளை எளிதாக ஊடகங்களில் பரப்பி விடுகின்றனர். பாதிக்கப்பட்டவரின் பின்னணியில் ஒரு குடும்பம் இருக்கிறது; அது எவ்வாறு பாதிக்கப்படும் என்பதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படுவதே இல்லை. காழ்ப்புணர்ச்சியும் பகைமைத்தன்மையும் ஆரோக்கியமற்ற சூழலுமே ஊடகங்களில் உள்ளது. இதை ஒழுங்குபடுத்த உடனடியாக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டியது அவசியம்.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.
தடுப்பணை போல...
ஊடகச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் ஜாதி, மத, மொழி மோதல்களுக்கான கருத்துகளைப் பதிவிட்டு, கலவரத்தைத் தூண்டுகின்றனர். வேகமான வெள்ள நீருக்கு தடுப்பணை கட்டுவதுபோல, ஊடகப் பதிவுகளை ஒழுங்குபடுத்த சட்டம் தேவை.
இ.ஆர்.கிருஷ்ணன், சென்னை.
தீமைகளே மிகுதி!
சமூக ஊடகப் பதிவுகளை ஒழுங்குபடுத்த அவசியம் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும். தான் அறிந்திராத செய்திகளை மற்றவர்களிடம் கொண்டுசேர்ப்பது வழக்கமாக உள்ளது. தனக்குப் பிடிக்காதவர்களைப் பற்றி ஊடகங்களில் பொய் பிரசாரம் செய்வதும் இதில் அடங்கும். அதேபோன்று, தனது குழந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பொய் சொல்லி பணம் சம்பாதித்தல், பொருள் விற்பனை செய்வதாக சொல்லி ஏமாற்றுதல் போன்ற தீய செயல்கள் ஊடகங்களில் அதிகமாகி வருகின்றன. ஆண்கள், பெண்கள் ஒருவருக்கொருவர் நேசிப்பதாகச் சொல்லி மோசடிகள் செய்வதும் தினந்தோறும் அரங்கேறி வருகிறது. சொல்லப் போனால் சமூக ஊடகங்கள் மூலம் நன்மைகள் ஒருபுறம் இருந்தாலும் தீமைகளே மிகுதியாக உலா வருகின்றன. சமூக ஊடகப் பதிவுகளை ஒழுங்குபடுத்த புதிய சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
க.இளங்கோவன்,
மயிலாடுதுறை.
கட்டுப்படுத்த நினைப்பவர்கள் யார்?
பெரும் நிறுவனங்களின் நலன்களின் அடிப்படையில் அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவான கருத்துகளை மக்களிடம் உருவாக்குவதற்கே இதுநாள்வரை ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போது அதற்கு நேர்மாறான கருத்துகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. தற்போது சாதாரண மக்கள் தங்களுடைய கருத்துகளை சமூக ஊடகங்களின் மூலம் வெளியிடுகிறார்கள். இதனால் பாதிப்படைபவர்களே சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த நினைக்கிறார்கள். ஒருகட்டத்தில் சமூக ஊடகங்களை நடத்தும் நிறுவனங்களே, பெரும் நிறுவனங்களின் நலன்களுக்கு எதிரான கருத்துகளைத் தடை செய்யும் காலம் வந்தாலும் வியப்படைவதற்கில்லை.
கு.ஜெயப்பிரகாஷ், அவனியாபுரம்.
சமூகத்தின் கடமை!
செய்திகளைப் பரிமாறிக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட சமூக ஊடகங்கள் இன்று இடம்பெறாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தம்முடைய எல்லையை விரித்துக் கொண்டுவிட்டன. அதனால் விளையும் பயன்கள் அதிகம் என்றாலும் தீமைகளும் மிகக் கடுமையானவை. அத்தகைய பதிவுகளைக் கையாள்வதைத் தம் கடமை என்றும் அவை சொல்வதுதான் மிகப் பெரிய கொடுமை. அதைச் சட்டங்களால் ஒழுங்குபடுத்தாவிட்டால் விரும்பத்தகாத விளைவுகளை மனித குலம் சந்திக்க நேரும். எனவே, அவற்றை ஒழுங்குபடுத்த கடுமையான சட்டங்ளைக் கொண்டுவருவதும், அவற்றை நடைமுறைப்படுத்துவதும் அரசு மற்றும் சமூகத்தின் கடமையாகும்.
அ.கருப்பையா, பொன்னமராவதி.
தேவையான திருத்தங்கள்!
சர்ச்சைக்குரிய பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதற்கு சட்டம் இல்லாததால், அனைத்துவிதமான விஷயங்களும் சர்வசாதாரணமாக வெளியிடப்படுகின்றன. யூ டியூப் போன்றவற்றில் மோசமான பதிவுகள் பெருகிவிட்டதால், தற்போது உள்ள சட்டங்களில் தேவையான திருத்தங்களைச் செய்வது அவசியம்.
சுவாமிநாதன், திருவானைக்கோவில்.
எதிர்நோக்குவோம்!
இன்று கைப்பேசியில் உள்ள வலைதளங்களை பெரும்பாலானோர் பார்க்கின்றனர். ஒரு நல்ல செய்தியோ அல்லது கெட்ட செய்தியோ, சமூக ஊடகத்தில் அது பதிவு செய்யப்பட்டவுடன் அடுத்த விநாடியே பலகோடி மக்களால் பார்க்கப்படுகிறது. அதனால் சமூக ஊடகப் பதிவுகளில் ஓர் ஒழுக்கம் இருக்க வேண்டும். அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு உரிமை உண்டு. புதிய சட்டம் கொண்டுவரப்பட்டால் எந்த ஒரு செய்தியையும் வெளியிடுவதற்கு முன்பு யோசிக்க வேண்டிய நிலைக்கு சமூக ஊடகங்கள் தள்ளப்படும். மாற்றம் ஒன்றே மாறாதது என்ற எண்ணத்துடன் அந்தப் புதிய சட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்குவோம்.
உஷா முத்துராமன், மதுரை.