நெடுவாழ்வின் நினைவு வாசகர் கவிதை இரண்டாம் பகுதி

உலக வரலாறு அறிந்த இளைஞர்கள் அனைவரும்         உணருவோம் ! அறிவோம் ! சூயஸ் கால்வாயை
நெடுவாழ்வின் நினைவு வாசகர் கவிதை இரண்டாம் பகுதி
Published on
Updated on
4 min read

நெடுவாழ்வின் நினைவு..!

என் பிஞ்சு நெஞ்சிலே
காதலை நிறைத்து விட்டு
காத்திருக்க சொன்னாய்
காத்திருந்தேன் காதலோடு

என்னுள் நிறைந்த நீ 
எனக்கானவளே  
என்றது என் மனம்
 
உறவுப்பெண் என்பதால் 
உரிமையோடு 
உதறி தள்ளிவிட்டாய் 
என்னையும் என் காதலையும்

பிரிவு தந்து
இணைந்தே வாழ்கின்றாய் 
என்னுள்
நெடு வாழ்வின் நினைவாக.. 

- கவிஞர் ஜீவா காசிநாதன் 

**

இரவின் நிலவறையில்
இறைந்துகிடக்கும் நேற்றுகளை
வழிய வழிய கைகளால் அள்ளியேந்தித்
தடுமாறி நடக்கும் இன்றுகள்
அக்கரையில் தளர்நடை போடும்
நாளையோ முகம் காட்டாமல்
முக்காடு போட்டபடி ’தா’வெனக்
கைகளை நதிவழியே நீட்டுகிறது
நீர்ச்சுழற்சியில் கல்லெறிந்தவண்ணம்
வாழ்க்கை வெறித்துப் பார்க்கிறது
ஆயிரமாயிரம் கனவுகள் குமிழியிட
நதி கர்ப்பிணியாய் முனகுகிறது
அதோ!
ஒவ்வொருவரும் நீண்டு வாழ்ந்துமுடித்து
மிச்சம் வைத்துவிட்டுப் போன நினைவுகள்
நரைமயிர்களாய்த் தொங்க
புதைமணலில் தத்திச்செல்லும்
காலக்கிழவன் தன்பங்கிற்கு
கற்களை நதியில் வீசிவிட்டுச்
செல்கிறான்
காலமற்ற அகாலத்தில் கால்பதித்தபடி!

- கவிஞர் மஹாரதி

**

சோதர பாசம் பொங்கிப் பெருகியதன்று
ஆதரவாய் சுற்றம் சூழ நின்றேனப்போது
சேதாரமின்றி செழித்தது நட்பு வட்டங்கள்
பூதாகாரமான துன்பங்கள் தூர ஓடியதே

காலம் காதல் களிப்பில் களித்திருந்தது
ஆலகால நஞ்சும் இனிப்பாய் தோன்றியது
பாலமாய் அன்பு அணைத்துக் கொண்டது
மூலமாய் உண்மைக் காதலாய் இருந்ததது

பிள்ளைச் செல்வங்களின் மழலை இனிக்க
உள்ளக் களிப்பில் இல்லறம் இனித்ததன்று
அள்ள அள்ளக் குறையாத அன்பாயிருந்ததது
துள்ளியோடி விளையாடி மகிழ்ந்தேன் அன்று

முதுமையும் வந்தது உடலியக்கம் குறைந்தது
புதுமையுலகில் சுயநலமும் சுற்றிச் சுழன்றது
பதுமையாக அதனைப் பார்த்துத் திகைத்தேன்
முதுமையின் இருப்பிடம் முதியோர் இல்லமானது

நெடுவாழ்வின் நினைவுகள் பொங்கிப் பெருகுது
அடுக்கடுக்காய் இன்ப துன்பங்கள் மாறியதால்
மிடுக்கான வாழ்வும் இடுக்கண் வாழ்வுமாய்
நடுக்கமுடன் நினைவுகளில் தூங்குகிறேன் நான்.

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

பசுமையான கனவுகள் மாறவில்லை-மனதை
…….பக்குவப்படுத்திய காயமும் ஆறவில்லை
பசுமரத்தாணியாய் எதுவும் மறக்கவில்லை-நான்
…….பட்டினிகிடந்த நாட்களில் தூக்கமில்லை
பசிதந்தபாடத்தை யாரும் சொல்லவில்லை-காலத்தில்
…….பணமும் கையில்வந்து சேரவில்லை
ஊசிபோல் உழைத்தால் பாரமில்லை-தளராது 
……உழைத்தால் வாழ்வில் தோல்வியில்லை

நெஞ்சினில் நினைவுகள் நிழலாடியது-அதுதான்
…….நெடுங்காலமாய் என்னோடு உறவாடியது
கொஞ்சிப்பேசிய காலம் கரைந்தோடியது-அதுவும்
…….கெஞ்சியே கண்ணீராய் வழிந்தோடியது
பஞ்சுஇதயம் கவலையை பந்தாடியது-சுதந்திரப்
…….பறவையாய் வானில் இசைபாடியது
பஞ்சமில்லா வாழ்வுஉழைப்பால் வந்தது-வாழ்க்கை
…….பயணத்தின் அனுபவத்தை நாளும்தந்தது

 -கவிஞர் நா.நடராஜ், கோயமுத்தூர்

**

எண்சீர் ஆசிரிய விருத்தம்

கண்டிப்பும் நேர்மையுமே கருத்தில் கொண்டு
……………கடமைகளில் கொள்கைகளில் கவனம் உண்டு.!
பண்புடனே தம்மக்கள் படிப்பால் ஓங்க
……………பகலிரவாய் உழைத்தபடி பாடு பட்டோம்.!
துவளாது தோல்விகளைத் துரத்தி விட்டோம்
……………தளராது குடும்பத்தைத் தாங்கி நின்றோம்,!
வண்டுகள்போல் சுறுசுறுப்பாய் வாழ..நாமும்
……………வளமுடனே மகிழ்ந்திருக்க வாய்ப்பும் நல்கும்.!
 
வேண்டியதைச் செல்லமாக வழங்கி வந்தே
……………வியப்பாகப் பிள்ளைகளை வளர்த்தெ டுத்தோம்.!
காண்கின்றோம் காலத்தின் கூற்றை எல்லாம்
……………கடமைகளைப் பயிர்செய்தோம் காலம் வெல்ல.!

ஆண்டுகளும் ஒவ்வொன்றாய் அடுத்த டுத்து
……………அகவைகளாய்க் கழிந்தனவே அழியா நெஞ்சில்.!
நீண்டகால நெடுவாழ்வின் நினைவு மட்டும்
……………நிச்சயமாய்த் தொடர்ந்துவரும் நீங்கா தென்றும்.!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**

நெடுவாழ்வின் நினைவுகளில்
நெஞ்சுக்குள்ளே இருப்பதெல்லாம்
மேலெழுந்து சிலநேரம்
மெதுவான ஊர்கோலம்
போடுகின்ற பொழுதினிலே
புயலும் புன்னகையும்
மாறிமாறி வருகையிலே
மகிழ்ந்து அழத்தோன்றும்!

எளிமையாய் எத்தனைபேர்
இவ்விதய வீட்டுக்குள்ளே
நிரந்தரமாய்க் குடியேறி
நிம்மதியைத் தருகின்றார்!
ஆனாலும் சிலபேரின்
அடாவடி ஆசைகளால்
மனங்குமுற நிம்மதியும்
மங்கியே மயக்கமுறும்!
-ரெ.ஆத்மநாதன்,
  கூடுவாஞ்சேரி

- ரெ.ஆத்மநாதன்,கூடுவாஞ்சேரி 

**

நெடுவாழ்வு நேராய் நினைவில் புகுந்து
வடுவென்று வாட்டும் வலியே -- படுகின்ற
பாடு படவேண்டாம் பட்டதே போதுமென்றால்
தேடுதே துன்பம் தொலை:………
தொலைத்தாலும் போகாது தோன்றிடும் மீண்டும்
அலையாய் வந்து அதிர்ந்து – நிலையே
தெரியா விளக்கமே தோன்றிடும்; நம்முள்
விரிந்திடும் வீழ்த்தும் வினை:…….
வினைதந்த வேகம் விளையாடல் போலே
துணையின்றி நாளும் துடிக்க – சுனையொன்று
தந்திடும் நீரே தணலாய் கொதித்தது
நொந்திட நூலானேன் நைந்து:……..
நைந்து முடித்திட நாளெண்ணும் வேகத்தில்
பைந்தே புடைத்துப் பழுதாக – உய்ந்து
“நெடுவாழ்வு நேர்நினைவு” நீங்கா திருக்க
தொடுவானைத் தேடும் துணிவு:…….. ‌

-- கவிஞர் நம்பிக்கை நாகராஜன்

**

சீராடும் நினைவுகளே! உறவாடும் உணர்வுகளே!
களித்துக் கரை சேர்ந்தக் கல்விக் காலங்களே  ! 
-உளங்கிளருஞ்
சீரோடு உன்னதமாய்  பூந்தென்றல் 
அள்ளித் தந்த அன்னையின் கானங்களே !
அறிவார்ந்த நன்னெறிகள் எனை 
மெருகேற்றத் தந்தைத் தந்த மொழிப் பேழைகளே !
அறநெறிகள் நினைவேறப் புடம் போட்ட 
ஆசிரியத் தங்கங்களே !  
தேன் தமிழ் நன்னெறி ஏடுகளே !
சித்திரமாய் நான் சிறகடிக்கச், 
சூத்திரமாய்ச் சுருதிச் சேர்த்த 
அன்புத் தோழனே ! அன்னையானவனே !
சிதறா அன்பின் கனிகளாய், வாழ்வின் சுவையாய், 
என்னுதிரத் துதித்த, இப்புவியின் அற்புதங்களே !
கைமாறு கருதாதுக்,  காலத்தே உதவிட்டத், 
தோழமைகளே ! நல் மானுட உறவுகளே! 
- ஏடுகளில்,
கண்டு வியந்து, தலை வணங்கி, நெஞ்சுரங் 
கொள்ள வைத்தத் தலைவர்களே !  அறிஞர்களே !      
உறவுப் பூப்பந்தாய்  பின் பிறந்த, 
சிந்தனைத் தீவுகளே !
உன்னதப் படைப்பான என்னரும் மாணவச் செல்வங்களே ! 
நாட்டின் சுடர்களே !
இந்தியக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி 
ராதாக் கிருட்டிணன் அவர்தம் விரல் பிடித்து நின்றதும்,
எனைத் தூக்கிப் பிடிக்க, எம்பி,  
பிரதமர் நேரு அவர்களுக்கு மாலை அணிவித்ததும், 
எம்பி, எம்பியும் முதலமைச்சர் காமராசர் 
அவர்களுக்கு மாலை அணிவிக்க இயலாமையும், 
நெடுவாழ்வின் நினைவுகளில், 
முத்தான, என் சொத்தான நினைவுகளே !!

- கவி. அறிவுக்கண்.

**

கால் நடையாய் பயணித்ததும்
கால்நடையில் பயணித்ததும்
கால்நடை வண்டியில் பயணித்ததும், இன்று
கண் இமைக்கும் நேரத்தில்
காற்றில் பறப்பதும்
நெடுவாழ்வில் அசைபோடும்
நீங்க நினைவுகள்!

அரைகால் சட்டையில்
ஆறு கல் தூரம் போய்
பாடம் படிச்சதும்!
மண்ணெண்ணெய் விளக்கு வச்சு
வீட்டுப் பாடம் படிச்சதும்!
படிப்பின் நினைவலைகள்!

ஒசந்த மரக்கிளையில்
ஓணாங் கொடிகட்டி
ஊஞ்சல் ஆடியதும்!
ஒசந்த பனைமரத்தில்
விழுந்த பனம் பழத்தை
சுட்டு சுவைத்ததும்
நெடுவாழ்வில் நிழலாடும்
நீங்கா நினைவுகளாய்!

- கு.முருகேசன்

**

நித்தம் ஒரு யுத்தம் என நீருக்கு சித்தம் இங்கு சுத்தும்,
மொத்தம் இந்த பூமி இயற்கை பித்தம் கொண்டு கத்தும்,
துத்தம் - கைக் கிளை என தமிழின்
ராகம் தரம் கூட,
முப்போகம் விளைந்த மண்ணால் 
வறுமை இல்லாதிருந்தோம் அன்று,
பாட்டில் அடைத்தோம் நீரை
தொட்டில் மறுத்த குழவிகளாய்
காட்டில் தொலைந்த கனவுகளோடு
ஏட்டில் பார்க்கும் பாரம்பரிய வாழ்வை
எட்டிப் பார்க்கும் இன்றைய பொழுதுகளில் - 
நெடுநல் வாழ்வின் மண் வாசனை முகிழத்தான் செய்கிறது, 
மழை வராத வறண்ட பொழுதுகளில் . 

- கவிதாவாணி, மைசூர்

**

உலக வரலாறு அறிந்த இளைஞர்கள் அனைவரும்
         உணருவோம் ! அறிவோம் ! சூயஸ் கால்வாயை
உலகம்பயன்பெற நாட்டுஉடமை ஆக்கினது எகிப்து
        இதனை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா  எதிர்க்க  
உலகில் இது மெடிரியன் கடலிலிருந்து இந்தியன் கடலுக்கு
          ஐரோப்பிய விலிருந்து ஆசியாவுக்கு வழிதிறந்தது
உலகை இணக்கும் ஒருபாதை இதில் இந்தியாவுக்கு பங்கு
          நாஸரும், நேருவும் கலந்து செய்த நன்மையாகும்.
 
குதிரை பூட்டிய டயர் வண்டியிலே கொண்டு சென்றனர்
       மன்னர்கள் எண்ணெய்யை நில வழியே ஒருகாலம்
அதிகாரம் செய்துபோர்தொடுத்துஅடுத்தடுத்து கொண்டுசென்றார்
       விமானத்தில், கப்பலில் பேரல் பேரலாக்கிகடத்துகின்றார்
அதுயார்?என்று நான் சொல்லத்தேவை இல்லைஅறிவோம் நாம்!
       ஆணவம் இன்று தலை விரித்து தாடும்  நிலையில்

எதிலும் அதிகாரம், சொந்தக்கரனுக்கு அதில் உரிமை இல்லை
    கிணறுகள் யாருக்கோ சொந்தம்! எண்ணெய்யாருக்கு சொந்தம்?
ஆயிரத்தி தொள்ளாயிரத் ஐம்பத்தாறில்திறந்தது சுயஸ்கால்வாய்
     எகிப்பது அதனை உலகுக்கு அளித்தது, வணிகம் சூடுபிடித்தது
ஆனால் சிலநாடுளுக்கு பிடிக்கவிலை,அமைப்புஒன்று உருவானது
    அரபுபெட்ரோலிய ஏற்று மதி அமைப்பாகும்(OPEC)போர்மூண்டது

ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி மூன்றில்மீணடும் மூண்டது
    ஈரன்மன்னர் ஷா நிறுத்தினார் எண்ணெய்யை பொங்கியதுலகம்    
ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ஒன்பதில் மீண்டும் போர்
     அடுத்தடுத்து ஓப்பந்தம் பேரல் $147க்கு மேலே ஓடிவிட்டது
நெடுவாழ்வு நினைவு, எண்ணை அரசியலை உலகம்
    எதிர்கொள்ளும், அவ்வப்போது உண்மையும் வெல்லும்
வடுக்கள் விழுந்த வாழ்வாக இருந்தாலும் வலுவான
      உலகம் மறுபக்கம் தயார் ஆகிக் கொண்டிருக்கிறது

- கவிஞர் அரங்க.கோவிந்தராஜன், இராஜபாளையம்  

**

திருமணத்திற்கு பிறகு காதல் என்பதால்
வீட்டில் விரிசல்கள் சுவர்களில் மட்டுமே –
காண்டம் தெரியாமல் ஆண்டுக்கொருமுறை
கருப்பை நிரப்பிய நாட்கள் –
நான்கு குழந்தைகள் –  ஆம் முதல் முதலாய்
முதலீடு வேர்களில் துளிர்விட்ட பள்ளிகள் தெரிந்தன –
தலைமுறை தலைமுறையாய் தனக்கென்ற மாளிகையின்
அஸ்திவாரத்தை அகற்றி நால்வரின் வணிகத்தை பெருக்கினான்—
தளர்ந்த உடலுடன் முக்காலுடன்  நடந்தான் –
அந்த நாலு கால்கள் எங்கே ?  
நான்கு திசைகளில் பெற்றவனைத்தள்ளின !!  
சுயநலம் சுடாத சுகம், ஒட்டிய மனையாள் ,
நெடுவாழ்வின் நினைவுகளுடன் இப்பொழுது
முதியோர் இல்லத்தில் ---

- கவிஞர் டாக்டர். எஸ்.பார்த்தசாரதி  -- MD DNB PhD

**

நெடுநாள் வாழ்வின் நினைவை
எங்கிருந்து தொடங்குவது எனத் தெரியவில்லை?
பாலர் பள்ளியில் விட்டுவிட்டு 
அம்மா சென்ற பின்
கண்மாய்க்கரையில் அழுது கொண்டே 
காணாமல் போனது
தமிழில் முதல் மதிப்பெண் வாங்கியதற்காக
தனம் டீச்சர் முத்தம் கொடுத்தது
தச்சநல்லூர் கோயில் பிரகாரத்தில்
தங்கையைத் தொலைத்தது
சென்னை வானொலியில் தமிழில் 
கிரிக்கெட் வர்ணனை கேட்டது
அழகாய் எழுதுவதற்கு அப்பா
கைபிடித்துப் பழகியது
அண்ணனின் உதவியோடு 
மிதிவண்டி பழகியது
புறா பிடிப்பதற்காக வலை விரித்து, 
தானியம் பரப்பி நாள் முழுதும்
வயல்வெளியில் காத்துக் கிடந்தது
கோயில் திருவிழாக்களின் நாடகங்களில்
முன்வரிசையில் அமர்ந்து தூங்கி வழிந்தது
அணிவகுத்து வரும் ஞாபகங்கள்
அடங்கிடாது பதினாறு வரிகளுக்குள்.

- மகாலிங்கம் இரெத்தினவேலு, அவனியாபுரம்

**

நீளும் கனவில் நீங்காத் துயரமாய்
வாழும் நிலையிலும் மங்கிடா நினைவாய் மெய்யும் பொய்யென்றே உணர்ந்து  மீளாத் துன்பக் கடலில் வாழ்நிலை  எமக்கே! 

தனலும் காட்டை அழிக்கையில் அணைக்கும்  ஆறுகளாய்க் கண்களிருக்கப் போராகப் போகுதே வாழ்வும்! ஊரார் வாழும் போரில் வெற்றியுண்டு  வந்ததும் ஏனோ? 

கேளாச் செவியில் இன்சொல் சேரா நிலை பாரா அன்பும் பற்றிச் சென்றதே!  சாகா நிலையுந்தானே; மூடா விழிகளில் எங்கும் படர்ந்த உம் நினைவு தானே! 

ஓடாக உழைத்துழைத்து உயிர் ஈந்தது உள்ளம் உடைந்து வாடிடும் நிலைக்காணவோ?  ஏட்டினில் எழுத்துகளாய்ப் பிறப்பெடுத்திடினும் எண்ணம் மாறுமோ?   நான் வாழ்ந்தக்  கருவறைக்கு கூடும் மறைந்ததே!  ஆயினும், உன்னைத் தேடி அலையாத கணமும் உண்டோ எம் வாழ்வில்? 

 ஈரைந்து திங்கள் பூட்டிப் பொத்திக் காத்தாயே!   ஆணி முத்தாய் என்னை மூன்று பத்து ஆண்டுகளாய்க் கோர்த்துக் கோர்த்து நறுமண மாலை கழுத்தில்  சேரும் முன்பே நீ போகா ஊருக்குப் போய்ச் சேர்ந்த  உம் மரணத்தால் தாயே  உடல்வாழும்  உயிரற்ற உணர்வை ஏன் எனக்களித்தாய்? 

மூடுபனியால் மறைந்திடும் பாதையில் காலைக்கதிர் விலக்கும் காட்சியைக் காணும் நிலையும் வாராதோ?  நெடுவாழ்வின் நினைவாய்ப் பிறவாயோ? என்றே உன்னைத் தேடி அலைகிறேன் தாயே! 

- கவிஞர், பேராசிரியர். மு. கலைமதி, புதுவை.

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.