Enable Javscript for better performance
tamil poem about colors- Dinamani

சுடச்சுட

  
  mm18

   

  வர்ணஜாலம்

  வர்ணமே உலகத்தின் வளமான ஜாலவித்தை
  கர்மமே கண்ணாக காலமெல்லாம் இருப்போரும் 
  வானவில்லின் அழகினிலே மயங்கியே சிலநேரம்
  கானகத்தின் நிழலினிலே களித்து உளமகிழ்ந்து
  வாழ்வின் சுமைகளையே வழித்துப் போட்டுவிட்டு
  உல்லாச உலகினிலே உளவி வலம் வருவர்!

  அஸ்தமன வானத்தின் அழகு இளஞ்சிவப்பினிலே
  உள்ளத்தைப் பறிகொடுத்தோர் உலகோர் அனைவருமே
  என்று சொன்னால் அதனையும் ஏற்பதே முறையாகும்!
  கள்ளங்    கபடமற்ற   கனிவான   உளங்கொண்ட 
  இளம்பிள்ளை அனைவருக்கும் இனிமைதரும் வண்ணங்கள்
  என்றைக்கும் உவகை தரும்!இதயத்தில் தங்கி நிற்கும்!

  நீலக்கடலும்  நிலத்தின்  பல  வண்ணமும்
   ஓடும்  ஆற்றின்  ஒயிலான  நீர்வளமும்
  பாடும் பறவைகளின் பலவண்ண இறகுகளும்
  கானக மரங்களின் கண்கவரும் பல் நிறமும்
  வானத்து மேகங்களின் வர்ண ஜாலங்களும்
  உலகை இனிதாக்கும்!உள்ளங்களைக் களிப்பாக்கும்!

  - ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி

  **
  என்னதான் நகரங்களானாலும்
  நரகத்தை கடப்பதைப் போலத்தான்
  சில பொது இடங்கள் இருக்கின்றன

  சிறுநீர் கழித்தே நாசமாக்குவோரால் -
  அவ்விடமே முகம்சுழிக்க வைக்கிறது -
  அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க -

  சுகாதாரத்தையும் சுவரையும் காக்க - 
  கடவுள்களை வரிசையாய் வரைந்து -
  எச்சரிக்கை வாசகத்தையும் எழுதிடுவர் -

  ஓவியனின் வர்ணஜாலங்களால்
  சுவர்கள்யாவும் வண்ணமயமாகிறது -
  வாசமும்  சுவாசமாகிறது - புதுமழையின்
  மண்வாசமும் உணர முடிகிறது...

  என்ன செய்வது - இன்று
  தனியொழுக்கம்கூட  - கடவுள் வீதிக்கு
  வந்தால்தான் காப்பற்றமுடிகிறது...!!!

  -கவிஞர். நளினி விநாயகமூர்த்தி 

  **

  சிற்பி விரலிடை நுழைந்த உளி
  பதுங்கியிருந்த வர்ணஜாலத்தை
  சிற்பத்தில் செதுக்கி காட்டியதே !
  தேன்சுவை கலந்த மொழியில்
  பாடகனின் இசை பின்னிக் 
  கொள்ள இன்னிசையுடன் பாடலின்
  வர்ணஜாலமே !
  கற்பனை மேல் காதல் கொண்ட
  ,கவிஞனின் எழுத்துக்கோர்வைகள்
  வெளியானதோ கவிதையுள் வர்ணஜாலமே!
  ஓவியனின் எண்ணோட்டங்கள்
  தன் தூரிகை தீட்டிய ஓவியத்தில்
  பிரதிபலித்தே கற்பனையின் வர்ணஜாலமே !
  நெளிவு சுளிவுகளுடன் வாழ்க்கை
  நதி நீராய் நகர - எதிர்நோக்கும்
  வெற்றி தோல்விகளே வாழ்வின்
  ஒளிரும் வர்ணஜாலமே !!

  - தனலட்சுமி பரமசிவம்

  **
  வான பிரதேசத்தில்
  வளைந்த வில்லாக விரிந்து
  வெறுமை வெளியில்
  ஜாலம் காட்டுகின்றன வர்ணங்கள்...

  ஒவ்வொரு வர்ணங்களும்
  ஒவ்வொரு வருணமாகி விட்டதை
  ஒதுக்க முடியாமல்
  ஒட்டிப் பிழைத்துழல்கிறது ஜனத்திரள்...

  ஏழுவண்ணங்கள் தோரணமாக
  மின்னித் தெரிந்தாலும் தெரிவதில்லை  கருப்பு...

  இது
  எந்த வருணத்தின் வண்ணமாக
  வாழ்க்கைப்படுகிறதோ...

  மேகங்களென
  வனப்பைக் குழைந்து
  வானின் தோகையாக விரிகிறது
  வண்ணங்கள்...

  வானிற்கு அழகு தான் வண்ணங்கள்
  ஆனாலும்
  வாழ்க்கைக்கு அழகென்பதாக இருக்க வேண்டும்
  மனம் தீட்டும் வருணங்கள்...

  - அமிர்தம்நிலா, நத்தமேடு

  **

  வார்த்தையில் திறமையைக் காட்டி
  வலைகளை போடுவார் நீட்டி
  நேர்மையைப் போலவே நின்று
  நிறையவே ஏய்ப்பவர் உண்டு
  தேர்தலில் நிற்பவர் வாக்காய்
  திகழ்வதோ மனிதரின் போக்கே
  வேர்வையில் உழைத்திடா வர்க்க
  வீரமேவர்ண ஜாலம்

  இயற்கையை இறையெனச் சொல்லி
  இருந்திடும் தருவினைக் கொல்வார்
  நயந்திடும் உரைகளில் தேனாய்
  நலிந்தவர் வாழ்வினில் நஞ்சாய்
  அயர்ந்திடாப் பொய்களில் நாளும்
  அசைந்திடக் கொட்டிடும் தேள்கள்
  மயக்கியே சுகத்தினில் வாழ்வோர்
  மார்க்கமே வர்ண ஜாலம்

  நிறவெறி ஆணவப் பேய்கள்
  நிகழ்த்திடும் கொலையெனும் நோய்கள்
  அறத்தினை விலையிலே வீழ்த்தும்
  அரசியல் செய்திட வாழ்த்தும்
  தரத்தினில் கீழெனும் காலம்
  தாழ்ந்திடும் துன்பமே கோலம்
  திறத்திலே வாய்மையும் பொய்யால்
  தோற்பதேவர்ண ஜாலம்

  -- கவிஞர் நம்பிக்கை நாகராஜன்

  **
  வர்ண ஜாலம் ஆனதென் மனம் ,
  பர்ணசாலையில் நீ ஆநிறைகள் ,
  மான் , மயில் , மிருகங்களுடன்
  தான் இருந்தாய் , புல்லாங்குழல்
  கானம். பறித்ததென் இன்னுயிர்
  மானமழிந்தேன் , மதியிழந்தேன்
  ராதையாய் ஆனேன் நீ. வகுத்த
  பாதையில் உனைத் தொடர்ந்தேன்
  வேண்டேன் மாயாலோக மயக்கம்
  மீண்டேன் பாழ் வாழ்வினின்றும்
  உன்னையடைந்த பிரேமையினால்
  என்னை மறந்தேன் , பெரும் பேறு
  பெற்றேன் ,. கார்மேக வண்ணனே !
  உற்றேன் மட்டிலா ஆனந்த மே

  - ராணி பாலகிருஷ்ணன்

  **

  வானத்தில் ஜாலம் காட்டும் 
  ஏழு நிறங்கள் 
  பூமியிலே கோலம் போடும்
  பூக்களுக்கோ பல நிறங்கள் 
  மாந்தர்கள் மகிழ்கிறார் 
  இந்த வர்ணங்கள் கண்டு
  பள்ளியில் பாடம் சொன்னார்
  நிறப்பிரிகை என்று.... 
  ஒளி ஒன்றே... பிரிந்தது பலவாய் 
  என்று. புரியாத புதிர்தான் 
  வர்ணங்களின் ஜாலம் 
  வர்ணாஸ்ரமம் ஆகி
  நிறப்பிரிகையாய்
  மனித குலத்தையே் பிரிக்கிறது. 

  - எஸ். ஜெயஸ்ரீ 

  **

  பொன் மஞ்சள் நிறத்திலே கதிரவன்!
  வெண்பஞ்சு நுரையாக கடல் அலைகள் !
  வெண்ணிலவு!
  கண் கொள்ளாக் காட்சியாக
  வண்ணமிகு வானவில் !
  கருங்குயில்கள்! வண்டுகள் மொய்த்திருக்கும்
  வண்ண மலர்கள்!
  எண்ணமதில் பூரிப்புதரும் வண்ணத்துப்பூச்சி   
  மண்ணிலே விரிந்திருக்கும்
  பச்சைப் புல்வெளி என வண்ண வண்ண உலகம்
  தினம்தினம் வர்ணஜாலம்!

  - ஜெயாவெங்கட்

  **

  விண்ணில் ஒரு வண்ணக்கோலம் 
  விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் 
  வானவில் ! அது ஒரு வர்ணஜாலம் !
  என் வீட்டு வாசலில் ஒரு மாக்கோலம் 
  வெள்ளை மாக்கோலம் செம்மண் கட்டி !
  அதுவும் ஒரு வர்ண ஜாலம் ! 
  கோலம் போடுவது எப்படி? ...தேடுகிறார் 
  சிலர் கூகிளில்!
  அது இந்த காலத்தின் கோலம் ! 
  கோலம் போடும் கலை  சிலருக்கு 
  இன்னும் ஒரு மாயாஜாலம் !

  - K.நடராஜன் 

  **
  கிணற்றுக்குள்
  நிறைந்த நீருக்குள்
  விரிந்த வானம்
  விண்ணில் விளையாடும்
  கருமேகக் கூட்டங்கள்
  குளிர்ந்த சூரியன்
  கிணறு விளிம்பில்
  காணும் மரக்கிளைகள்
  எட்டிப் பார்த்தபோது
  என் முகம்!
  கிணற்று நீரில்
  சிறுவன் போட்ட
  சிறுகல் விழுந்துபோது
  சூரியன் கருமேகங்கள்
  வானம் மரக்கிளைகள்
  என் முகம்தான்
  நீர்த் துளிகளாக தெறித்தன!
  சிறுகல் மூழ்கியபின்
  அமைதியான நீரில்
  மீண்டும் கிணற்றுக்குள்
  நீருக்குள் வர்ணஜாலம் !

  - கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன், வன்னியம்பட்டி

  **

  விழிகளா ?  மந்திர ஜாலங்களா ?

  மொழிகளா ? இன்னிசைச் சதங்கைகளா ? --கொவ்வைக்

  கனிகளா  ? இதழ்கள் முகக்குவைகளா? --பேழையில்,

  காத்தலா? முத்தானச்சொத்துக்களா?

  --உந்தன்

  நினைவுகள் நீங்கிடா ஜாலங் காட்டுவதே !

  எந்தன்,

  கனவுகள் கலைந்திடா வர்ணஜாலமாகுதே!

  நீ நடந்தாலேப் பூந்தென்றல் உருவாகுதடி !

  எனை

  நீ கடந்தாலோ புயலாகச் சுழற்றியடிக்குதடி!

  இன்ப,

  வர்ணஜாலங்கள் இரத்தநாளங்களில் மின்னலடிக்குதடி  !

  உன்,

  வருகைக் காணில் என்னுடலெங்கும்  மின்சாரமடி !

  உண்பதிலெல்லாம்  உன் முகந் தெரிய, என்னுள் அணைத்தேனடி !

  உறங்கிய நேரம் குறைவே,  என் பணியிலும் நீ தெரிந்தாயடி  !

  ஏனிந்த வேதனை ; நீ கொஞ்சம் என்னை மணந்திடடி  !

  ஏழ்பிறப்பும் உலகு வெல்வேன் ; நீ என்னோடு வாழ்ந்திடடி  !

   

  கண்ணே என்னோடு வாழ்ந்திடடி; உயிரேச் சுடராகுமடி  !

  கட்டிக் கரும்பே, வர்ணஜாலமாய் வாழ்வே ஜொலிக்குமடி  !

  - கவி அறிவுக்கண்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai