Enable Javscript for better performance
dinamani poems | மௌனச் சிறை வாசகர் கவிதை 2- Dinamani

சுடச்சுட

  
  place-of-silence-416x290-cm-premium-non-woven-130gsm-i64523

  மௌனச் சிறை

  என்னவளே -
  காற்றும் புகாது - ஔியும் படாது
  காரிருள் சூழ்ந்த இருட்டு சிறையினிலே
  கதியற்று கிடக்கும் சிறைகைதி நிலையைவிட
  கொடுமையானது நீ தரும் மௌனசிறையானது!

  நான் புழலில் அடைக்கப்பட்ட கைதியல்ல
  உன்மௌனப் புயலில் அடைக்கப்பட்ட கைதி
  உனது மௌனசிறையால் - நீ எனக்களித்த
  உன்னதபரிசு - மறவாத உனது நினைவுகள்!!!

  உனது மௌனசிறையால் - எந்நிலையிலும் எனக்குள்
  உன்னுடைய ஆட்சியே தொடர்ந்திருக்கின்றது - அது
  ஒருபோதும் ஆட்சி கவிழ்ப்பிலும் ஈடுபடாது - அது
  ஒருபோதும் ஆட்சி மாற்றத்திலும் ஈடுபடாது!!!

  உன் மௌனசிறை - பேச்சுரிமைக்கு எதிரானது;
  உன்நலனுக்காக நானே பேசினாலும் - நீ
  என்மீது காதல்- தேசதுரோக வழக்கைப்பதிவிட்டு-
  எனக்கு காதல்தேசத்தின் அரசியலை கற்பிக்கின்றாய்!

  எனது கருணை மனுக்களையும் படிக்காமலே
  என் கண்முன்னே கருணையின்றி குப்பையிலிடுகிறாய்
  அவை பெருங்குடியில் மக்கும் குப்பையாகவும்
  என்மனவெளியில் மக்காத குப்பையாகவும் உள்ளன!!!

  மௌனசிறை என்கிற உன்னுடைய போதிமரத்தடியில்
  எனக்கு ஞானம் கிடைக்காவிட்டாலும் பராவயில்லை
  எனக்கு குறைந்தபட்சம் நிழலையாவது கொடு-
  நான் வாழ்வதற்கல்ல- நாம் வாழ்வதற்கு!!!

  - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

  **
  அழுகுரல் கேட்டத் தாய் அன்று - உன் பொன் குரலாேசை கேட்க ஏங்கி நின்றேன்!!
  விதி வசம் சிக்கிய நீ அன்று
  என் வசமாக உன்னை மாற்றிக் கொண்டேன்!!
  நெடு நாள் கழிந்த பின்பு, நான் "அம்மா" எனும் ஒலி கேட்க  வரம் பெற்றேன்!!
  பலநாள் நானிருந்தேன்
  உன் மௌன சிறைக்குள்!!
  உன் அன்பான குரலைக் கேட்டு
  நான்  மீண்டும் பிறந்தேன் எனக்குள்ளே!!
  உலகிலே எவ்ஊனமும் வேண்டாம் இன்றிலிருந்து அனைவருக்கும்.
  நிம்மதியாக வாழ வழி சொல் இறைவா என் மக்களுக்கு!
  உன் அன்பான குரலிலே
  "அம்மா" எனச் சொன்னாலே
  பிறவி பயன் அடைந்தேன் இன்று நான்
  மகனே!! விவரம் தெரிந்த பிறகு பேசாமல் இருக்காதே!!
  ஏனெனில்  உன் குழந்தைப்பருவத்தில்  மெளன சிறையில் இருந்தேன்
  வேண்டாம் இந்த "மௌன சிறை"

  - மு.செந்தில்குமார், ஓமன்

  **

  பொன்னின் நிறமே பூவின் மனமே
      பொழியும் மோக மழையே!
  தென்றல் உறவே தெவிட்டா அழகே
      தெள்ளு தமிழின் சுவையே!
  என்னைக் காதல் சிறையில் அடைத்து
      இன்பக் கவிதை கொடுத்தாய்
  உன்னை மௌனச் சிறையில் அடைத்து
      உண்மை ஏனோ மறைத்தாய்?

  - கோ.வேல்பாண்டியன், இராணிப்பேட்டை

  **
  நாகாக்க வேண்டுமென வள்ளுவமும் 
  நாவடக்கம் தேவையென  விவிலியமும்   
  சொல்லுவதை கேட்போம் ; பொல்லா  ,
  சொல்லை மௌன சிறையில் இடுக ।

  பொய்யுரைத்து புகழ்பெறும் காலத்தில்
  மெய்யுரைக்க துணிவின்றி நிற்கின்றோம் !
  பொய் சேர்ப்பர் பேசுகையில்  சுவைக்காக;
  பொருள் சேர்க்க எவ்வழியும் செல்வோர்கள் ! 

  பெட்டகத்தில் நகைகளை வைப்பதுபோல்
  நெஞ்சில் பட்டதையே பூட்டிவைப்பர்-எதற்கும்
  பொருத்தமில்லா நபரை   நீள கைகூப்பி
  பெருத்த  விழா எடுப்பர்: பலன்  பெறுவார் !

  தனிநபர் பெரிதல்ல ; தத்துவமே பெரிது ;
  உத்தமரே  வந்தாலும் உதவும் இயக்கமின்றி
  ஒன்றும் முடியாதென   உணரா  நபருக்கு
  உரைப்பதை மௌன சிறையில் இடுக !

  அறிவுரைஎன்றாலும் ஆலோசனை என்றாலும்,
  ஆசிர்வாதமோ ,  அரிய மந்திரமோ யானாலும்,  
  அதை பெறுபவர் விரும்பாவரை  பேசாமல் 
  அப்பொருளை  மௌன  சிறையில் இடுக  !

  அகவை எழுபதை தாண்டிய முதியவாரா;
  தகுதிஇருந்தாலும் தளர்ந்து போனவரா;
  நலியவரா ; வறியவரா  எனில் எதையும்
  நவில்வதை மௌன  சிறையில் இடுக 

  - முத்து இராசேந்திரன் , சென்னை

  **

  உலவும் நிலவும் மவுனம் காத்தால் உலகம் எங்கும் இருளாகும் !
  இலங்கும் இருளின் மவுனம் கலைந்தால் எழுவான் கதிரால் பகலாகும் !

  ஆணும் பெண்ணும் காணும் போதில் அமைதி பார்வை மொழிபேசும் !
  ஆணும்பெண்ணும் கலந்த மவுனம் அழகு மழலை வரவாகும் !

  மவுனம் பலரின் வாழ்வை உயர்த்தும் மாட்சி வரவு வழியாகும் !
  மவுனம் பலரின் வாழ்வை வீழ்த்தும் மனத்தை வாட்டும் துயர்கூட்டும் !

  முகிலாம் சிறையை விலக்கி விட்டால் முழுவெண் நிலவு முகங்காட்டும் !
  அகிலை அடைத்தே வைத்தால் கூட அகத்தைக் கவ்வும் மணம்வீசும் !

  கருத்த முகிலின் மவுனம் கலைந்தால் காணும் மழையும் காட்டாறாம் !
  நெருப்பாம் வெய்யில் மவுனம் காத்தால் நிலத்தில் எங்கும் நிழல்நிலவாம் !

  உருகும் பொன்னும் நெருப்பால் மின்னும் உவக்கும் அணிகள் பற்பலவாம் !
  உருகும் மெழுகாய் நாட்டுக் குழைத்தோர் உலகில் என்றும் வாழுயிராம் !

  அண்ணல் காந்தி மவுனப் போர்தான் அடிமைச் சிறையை உடைத்ததுவாம் !
  மண்ணெல் லாமும் இன்றும் போற்றும் மாண்பார் இந்திய விடுதலையாம் !

  - ஆர்க்காடு ஆதவன்

  **

  தாயின் வயிற்றுச் சிறையினிலே
       தானே வளர்ந்த குழந்தையது
  தாயின் தமிழள் மடியினிலே
       தன்னேர் இன்றித் தவழ்கிறது !
  தாயின் மொழியைத் தான்கற்றே
       தனித்த தமிழை மொழிகிறது !
  வாயில் தமிழே வான்மழையாய்
       வாஞ்சை யோடே பெய்கிறது !

  உரமும் மறமும் தனித்தமிழால்
       உயிராய் உடலாய் வளர்கிறது !
  அரம்போல் அறிவும் கூராகி
       அழிவை அழித்தே எழுகிறது !
  மரத்தில் ஆலாய் அரசாகி
       மண்ணில் நிலைத்தே நிற்கிறது !
  பரந்த உலகில் பைந்தமிழே
       பற்றிப் படர்ந்து செழிக்கிறது !

  சிறையும் கூட சிலநேரம்
       சிந்தை வளர வைக்கிறது !
  அறையும் கூட சிலநேரம்
       அறிவை மிளிர வைக்கிறது !
  பறையும் கூட முன்னோரின்
       பண்டைக் கலையை வளர்க்கிறது !
  கறையும் கூட சிலநேரம்
       கற்புக் கனலாய் தெரிக்கிறது !

  காற்றும் சூரைக் காற்றாகும்
       கனலும் கூட ஊரழிக்கும் !
  நாற்றே விளையும் பயிராகும்
       நஞ்சும் கூட உயிர்காக்கும் !
  சேற்றில் செந்தா மரைபூக்கும்
       தேன்தான் பலவாம் நோய்நீக்கும் !
  கூற்றாம் சிறையும் பலர்வாழ்வை
       குமுகம் போற்ற வாழ்விக்கும் !

  -சோழமாமல்லன்,இராணிப்பேட்டை மாவட்டம்

  **

  நாகாக்க வேண்டுமென வள்ளுவமும் 
  நாவடக்கம் தேவையென  விவிலியமும்   
  சொல்லுவதை கேட்போம் ; பொல்லா  ,
  சொல்லை மௌன சிறையில் இடுக ।
  பொய்யுரைத்து புகழ்பெறும் காலத்தில்
  மெய்யுரைக்க துணிவின்றி நிற்கின்றோம் !
  பொய் சேர்ப்பர் பேசுகையில்  சுவைக்காக;
  பொருள் சேர்க்க எவ்வழியும் செல்வோர்கள் ! 
  பெட்டகத்தில் நகைகளை வைப்பதுபோல்
  நெஞ்சில் பட்டதையே பூட்டிவைப்பர்-எதற்கும்
  பொருத்தமில்லா நபரை   நீள கைகூப்பி
  பெருத்த  விழா எடுப்பர்: பலன்  பெறுவார் !
  தனிநபர் பெரிதல்ல ; தத்துவமே பெரிது ;
  உத்தமரே  வந்தாலும் உதவும் இயக்கமின்றி
  ஒன்றும் முடியாதென   உணரா  நபருக்கு
  உரைப்பதை மௌன சிறையில் இடுக !
  அறிவுரைஎன்றாலும் ஆலோசனை என்றாலும்,
  ஆசிர்வாதமோ ,  அரிய மந்திரமோ யானாலும்,  
  அதை பெறுபவர் விரும்பாவரை  பேசாமல் 
  அப்பொருளை     மவுன சிறையில் இடுக  !
  அகவை எழுபதை தாண்டிய முதியவாரா;
  தகுதிஇருந்தாலும் தளர்ந்து போனவரா;
  நலியவரா ; வறியவரா  எனில் எதையும்
  நவில்வதை மவுன சிறையில் இடுக !

  - முத்து இராசேந்திரன், சென்னை

  **

  மவுனத்தைச் சிறைப்பிடித்து
  காவலுக்கிருந்தன
  சுற்றியிருந்த வார்த்தைகள்...

  மனதுக்குள்
  குமுறும் போது உச்சரித்துக் கொண்டிருந்தது புறத்தில்
  நம்பிக்கை...

  ஆதாரங்களை
  வீசி எறிந்து விட்டு தீயைக்காட்டின
  பார்வைகள்...

  சுவரற்ற வெளிக்கு
  வெறுமையைப் போர்த்திவிட்டு
  இதுதான் குடியிருந்த வயிறென்று
  உரிமைக் கொண்டாடியது
  ஈன்று புறந்தந்த கருவறையை இடித்த
  கடப்பாறை மனங்கள்...

  மனதில்
  புலனாய்வற்ற நம்பிக்கையின்
  அரூப எண்ணங்களுக்கு
  இடங்கொடுத்து
  அழகு பார்த்தது சிம்மாசனம்...

  ஆதாரங்களோடு
  வீதி வீதியாகச் சுற்றிவந்தும் பாராமல்
  செவிகளற்றவர்களாகி இருந்ததில்
  இன்னோர் குருதி யாத்திரைக்கு அஞ்சிய
  சட்டங்களுக்கு முன்
  தனக்குத் தானே
  சிறையிட்டு இருந்து கொண்டன
  அமைதி விரும்பும் மனங்கள்...

  வழக்கத்தை மாற்றிக்கொள்ளாமல்
  எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு
  மவுனத்திற்குள் இருந்து கொண்டாலும்
  பார்த்தபடியே இருந்தனர்
  எல்லா கடவுள்களும்...
   
  - அமிர்தம்நிலா/நத்தமேடு

  **

  உன் கண்கள் பேசிய வார்த்தைகளில்
  நான் மௌனமானேன்!
  உன் இதழோர சிரிப்பில்,
  ஆயுள் கைதியானேன் 
  மௌன சிறையில் நானே!
  இன்று மொழி உணர்த்தாததையும்    
  உணர்த்தியது உன் மௌனம்!
  என்றும் மௌனமே  
  நம் காதல் மொழி என ஆனது!
  உன் மௌனம் கலைத்து
  பேசு கண்ணே,
  நம் மௌனம் கலைக்க,
  இல்லையேல் நான்  பேச மறந்துபோவேன்!!.

  - ப்ரியா ஸ்ரீதர்  

  **

  மௌனம் சிறைதான் என்றாலும் பல வினாக்களுக்கு விடை கொடுக்கும்
  பேசிமுடியாத பிரச்சினைகள் கூட பேசாமல் சாதிக்கமுடியும் மௌனத்தால்
  மௌன சிறையில்  சவமாக தவமிருந்தாலும் கடவுளை காண்பதில்லை
  மௌனம் இருந்தால் மோகமற்று மோனமாயிருந்தால் கிட்டுமென்பார்
  தேடப்படுபவனாக இருக்கும் அவனை தரிசிக்க மௌனம் ஒரு வழிதான்
  தேடப்படுபவன் கிடைத்து விட்டால் அவனும் சாதாரணன் ஆகிவிடுவான்
  ஞானிகள் மட்டுமே காண்பார் நமது ஊனக்கண்ணுக்கு காணக்கிடையார்
  ஞானிகள் கையாண்ட வழிகளில் ஒன்றுதன் மௌனம் சிறை அறிவோம்
  இமயம் போனாலும் கருவரையில்,சர்ச்சில், தொழுகையிடத்தில் காண
  எவர் முயன்றிடும் கண்டேன் சொல்லலாமே ஆனால் காணமுடியாது
  அமைதியாய் இருந்து ஓரிடத்தில் யோகம் செய்து ஆன்மாவுடன் பேசலாம்
  அதில் லயித்து சுகித்து இருக்கும் நிலை கைவல்யம் என்கின்றார். ஆனால்
  ஆழ்வார்கள் இதனை விரும்பியதில்லை ஆண்டனின் திருவடியடைய
  ஆயிரங்கள் பாடி அன்பாய் அழைக்கின்றார்கள் திவ்யபிரபந்தமாக
  ஆனால் உறுதியாக நம்பலாம் மௌனம் மனநோயை போக்கவல்லது
  அமைதியான  வாழ்வினிலே மோனத்து இருந்து அடையலாம் நிம்மதி!

  - கவிஞர் சூடாமணி .ஜி 638290809    இராஜபாளையம்     

  **

  TAGS
  Poem
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai