அப்பாவின் நாற்காலி வாசகர் கவிதை 2

தன்னின் பிள்ளைத் தானே உயரத் துயரம் களைந்த திறமைசாலி
அப்பாவின் நாற்காலி வாசகர் கவிதை 2

அப்பாவின் நாற்காலி

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தன்னின் பிள்ளைத் தானே உயரத் துயரம் களைந்த திறமைசாலி..!
பின்னால் எவரும் பிறரை நம்பிப் பிழைக்கா நிலைக்கு உழைத்தகூலி..!
தன்பசி பொறுத்துத் துன்பம் களைந்துத் தலையாய்க் குடும்பம் காத்தவேலி..!
அன்னார் நினைவை அழகா யுரைக்கும் அவரின் விருப்ப நாற்காலி..!
.
குடும்பத் தலைவன் குலத்தின் அரசன் களத்தில் வீரன் கண்ணியவான்..!
உடும்புப் பிடியாய் உயரும் கொள்கை ஊரே மதித்த உத்தமனாம்..!
இடும்பைக் களைந்து இல்லம் காத்து இனிதாய்க் கவர்ந்த எளியவனாம்..!
மிடுக்கு வீச்சில் மிளிரும் தமிழில் மின்னல் வேகக் கவியாவான்..!
.
பிடிக்கும் அம்மா பிடிக்கா தந்தை பிரிக்கும் எண்ணம் எமக்கில்லை..!
அடிக்கும் அப்பா அணைக்கும் அம்மா அருமை இயல்புப் பெற்றோரே..!
துடிக்கும் இதயம் துன்பப் பட்டால் தொய்வே இலாது துயர்களைவார்..!
படிக்க வைத்தார் பண்பின் அப்பா பயனாய் அதுவே விளைகிறதே..!
.
அப்பா என்பார் அன்றும் என்றும் அன்பின் உருவ ஆணாவார்..!
தப்போ? சரியோ? தவறா துரைப்பார் தனியே நிற்கத் தூணாவார்..!
அப்பா அம்மா இன்றோ இல்லை ஆனால் நினைவில் வரும்மேவி..!
அப்பா பண்பை அனைத்தும் அறியும் அவரின் ஆசை நாற்காலி..!
 
- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

அப்பாவிற்கு நாற்காலி ஏதுமில்லை ,
அமர்ந்திட  அவருக்கும்  நேரமில்லை ,
பிறரை  அமர்த்தியே   மகிழ்ந்ததுண்டு;
பலரை  உயர்த்தியே  வாழ்ந்ததுண்டு !

எதிலும்  அவருக்கு  ஆசையில்லை ,
எதற்கும் கவலைப்  படுவதில்லை,
உரிய மரியாதை இல்லையெனில்; 
உயரிய பதவியையும்  ஏற்பதில்லை! 

பாசம் முழுதும்  மனதில் இருந்தும்- முக  
பாவத்தில்,  பழக்கத்தில்  மறைத்திடுவர், 
நெஞ்சில் எங்கள் நலமே நிறைந்திருக்க 
கொஞ்சம் காட்டாமல் திரையிடுவார் !   

இதுதான்  வழிமுறை என்றுரைத்தோ,  
இப்படி  செய்திட வேண்டுமென்றோ,
கட்டளை இடுவதும்   பிடிக்காது -   எங்கள் 
கருத்தை   ஒதுக்குதல்  கிடையாது !   

படித்திட  நாங்களே முயன்றுகொண்டோம்;
பதவியும் தேடி  பெற்றுக்கொண்டோம் ;
எதிலும்  முயன்றிட எம்மை ஆதரிப்பார் ,
எங்கும்  வென்றிட  கரம் கொடுப்பார் !

உண்மை நேர்மை ஒழுக்கமென்று 
உயிருள்ளவரை அவர் வாழ்ந்ததுண்டு;
நாளும் அவர் கொண்ட வழக்கங்களே   
நாங்கள்  போற்றும் உயர் மந்திரங்கள்!  

- முத்து இராசேந்திரன் , சென்னை

**

கைலையின் ஆசனமாய்
கண்களுக்குள் படிமம்;
கடலலைத் தாக்கா உயர் கரை;
கற்பனைக்குக் காசு தரும் இயந்திரம்;
கடவுளின் அவதாரத்துள் ஒன்று;
காணாமல் போனபின்தான் புத்திக்குத் தெரியும்;
மந்திர உச்சாடனையே அதன் மொழி;
மங்காத அறிவின் தீபச்சுடர்;
மயக்கத்தை விரட்டும் எலுமிச்சை;
அதன் நாற்காலியே நமக்கு பங்காளி;
விதியினில் பிறந்து மதியினால் உணரும்;
ஆனந்த கல்லாலம் அது;
நமது முன்னோட்டத்தின் முகவரி;
நாற்காலியின் அருமை பெரிதெனில்;
நாற்காலியில் அமர்ந்த அந்த
நாயகன் பற்றி புரிக மானுடமே!.....

- முகில் வீர உமேஷ், திருச்சுழி

**

இல்ல நீதிபதி
அமரும் ஆசனமாய்;
எல்லாக் குறைகளையும்
களைந்து மனமேற்றி;
தொல்லை இலாத்
தன் இல்லம் ஒளிர;
தீபமாய் தெரிந்த 
அகல் அமர்ந்த
அரியாசனம் இது;
பிள்ளையை முல்லையாய்
உடலில் படரவிட்டு;
மயிலின் மானங்காக்கும்
பேகனாய் எழுந்த
குடும்ப விளக்கின்
சுடராகும் உன்னத மனிதன்;
பெருமை காணாது 
தன்னுயிர் தந்த தங்கத்தை
ஒளிர விடத் துடிக்கும்
மகோன்னத திரைமறைவு
இயக்குநரின் மறுவடிவத்தின்
இயல்பான இருக்கை 

- சுழிகை ப. வீரக்குமார்

**

சிரமம் பார்காமல்
பள்ளிக்கு சைக்கிளில்
அழைத்துச் சென்ற
அவருக்கொரு  நாற்காலி  ஓய்வு,
அரைக்கால்  டவுசர்  
உடுத்துனக்  காலத்துல
ஊர்    திருவிழாவுல
நீங்க  உழைச்சக்  காசுக்கெல்லாம்
எனக்கு  பலூனும், கிளுகிளுப்பும்
வாங்கி  தந்த  அவருக்கொரு நாற்காலி  ஓய்வு.,
கிராமத்து  மண்பாதையில்
சைக்கிள்  ஓட்டி,ஓட்டி
களைச்சுப்  போனாலும்
வளர்ந்த  எனக்கு 
தார்சாலையில்  போவதற்கு 
மோட்டர் பைக்
வாங்கி தந்த
அவருக்கொரு நாற்காலி  ஓய்வு.,
பல வார்தைகளில்  தீட்டினீர்கள்,
இறுதி வரை – எதற்கு
என்பதே தெரியவில்லை ? நானும்
தந்தை   யாகும்  வரை.,
என் தந்தைக்கோர்  நாற்காலி  ஓய்வு

-கவிஞர். மைக்கேல் மனோஜ், மதுரை.

**

சிறியதாக இருந்தாலும்
சிம்மாசனமாக நினைத்து
தனது நாற்காலியில்
அரசனைப் போல்
அமர்ந்திருப்பார்
எங்கள் அப்பா !
இருக்கின்ற இடத்திலேயே
இருக்கும் நிலையிலே
இதம் தருவதில்
இந்த நாற்காலிக்கு
நிகர் எதுவும இல்லை
என்று கூறிக்கொண்டே
எந்நேரமும் 
அதில் அமர்ந்து
உரையாடிக் கொண்டோ
உறங்கிக் கொண்டோ
இருப்பார் !
அந்தக்காலத்தில்
அப்பாவின் அப்பா தனது
தோட்டத்தில் 
தோகையாய் விரிந்திருந்த
முதிர்ந்த வேப்பமரத்தினால்
முனைந்து செய்த நாற்காலி  என்பதால் அதன்மீது  
அவருக்கு பற்று அதிகம் !
அந்திம காலத்தில்
அவரின் உயிர்
பிரிந்த போது அவருக்கு
பிரியமான நாற்காலியில் தான் அமர்த்தியிருந்தோம் !
பழையது ஆனாலும
பத்திரமாக அப்பாவின்
நாற்காலியை இன்றும்
பொக்கிஷமாய் மூடி வைத்து
காத்து வருகிறாள்
அம்மாவும்  அவரின்
நினைவாக !

- ஜெயா வெங்கட்,   கோவை

**

அறிவுக் கடலாய் என்அப்பா ஆற்றல் அரிமா என்அப்பா !
நெறியே நிழலாய் என்அப்பா நிலவின் ஒளியாய் என்அப்பா !

கடமை அவரின் கண்ணாகும் கல்வி அவரின் சொத்தாகும் !
தடையை தகர்க்கும் இடியாவார் தலைவர் வீட்டில் அவராவார் !

அன்பு மழையைப் பொழிந்திடுவார் அடாது செய்தால் கடிந்திடுவார் !
கன்னல் அமுதம் போலாவார் காலம் பொன்போல் போற்றிடுவார் !

வீட்டுக் காக எந்நாளும் விரும்பி வேலை செய்திடுவார் !
நாட்டுக் கான நற்பணிகள் நனிதே செய்யத் தயங்காதார் !

ஓய்வு நேரம் கிடைத்தாலே உறங்க மாட்டார் சிந்திப்பார் !
ஆய்ந்தே பலவும் எழுதிடுவார் அதனை அம்மா படித்திடுவார் !

எழுத்தில் பேச்சில் அவரைப்போல் எவரும் இல்லை எனப்பலரும்
அழுந்தச் சொல்லி மகிழ்ந்திடுவார் ஆசான் அவரே என்றிடுவார் !

அப்பா போல நான்கூட அன்பாய் என்றும் நடந்திடுவேன் !
அப்பா போல அறிவாக ஆக நானும் படிக்கின்றேன் !

வீட்டுக் காக உழைத்திடுவேன் வேண்டும் யாவும் செய்திடுவேன் !
நாட்டுக் காக உழைத்திடவும் நாளும் சிறிதும் நான்தயங்கேன் !

அப்பா போல பலர்புகழும் ஆற்றல் அனைத்தும் வளர்த்திடுவேன் !
அப்பா வழியே நான்செல்வேன் அறிவால் எதையும் நான்வெல்வேன் !

அப்பா அமர்ந்த நாற்காலி அதிலே நானும் அமர்ந்திடுவேன் !
அப்பா போல பேசிடுவேன் அம்மா அணைப்பார் நான்மகிழ்வேன் !

-து.ஆதிநாராயணமூர்த்தி,பரதராமி (திமிரி)

**

அப்பா இல்லை இப்போது அவர் நாற்காலி 
மட்டும் வீட்டில் !
நடக்க முடியாமல் இருந்தவருக்கு அவர் 
நாற்காலிதான் அலுவலகம் !
வீட்டில் இருந்தபடியே எல்லா வேலையும் 
செய்து முடிப்பார் எல்லோருக்கும் ! 
அது அவர் தனித்துவம் !
எல்லோருக்கும் இரண்டு கால் என்றால் 
அப்பாவுக்கு நாலு கால் !
அப்பாவின் நாற்காலி கேட்கிறது இன்று 
நான் என் கால் இழந்து நிற்கிறேன் 
எங்கே என் சொந்தக்காரர் என்று ? 

- கந்தசாமி நடராஜன் 

**
அப்பாவின் நாற்காலி அப்பாப்போல் நிற்கிறது !
அப்பாவின் ஆசனமாய் அழகாகத் திகழ்கிறது !
அப்பாதன் நாற்காலி அமர்ந்தாலே அழகாகும் !
அப்பாவும் அரசர்போல் அதிலமர்ந்தே சிறப்பிப்பார் !

தப்பேது செய்தாலும் சரியாகச் செய்யென்பார் !
எப்போதும் யாரிடத்தும் இதமாகப் பேசிடுவார் !
ஒப்பேதும் இல்லாமல் உயர்ந்திடவே உரைத்திடுவார் !
சிப்பிக்குள் முத்தேபோல் சிரித்தென்றும் ஒளிர்ந்திடுவார் !

கணக்காகக் கணக்கெல்லாம் கனிவாகச் சொல்லிடுவார் !
பிணக்கின்றி எப்போதும் பேசிமிக மயக்கிடுவார் !
சுணக்கம்தான் இல்லாமல் சுறுசுறுப்பாய் இயங்கிடுவார் !
மணக்கின்ற மலரேபோல் மகிழ்ந்தென்றும் வலம்வருவார் !

இனிக்கின்ற பேச்சேதான் எப்போதும் இனிதென்பார் !
கனிவான பேச்சேதான் காலத்தின் கனியென்பார் !
பனியான துயரெல்லாம் பரிதிவரப் போமென்பார் !
நனிதான செயலேதான் நமையுயர்த்தும் நடப்பென்பார் !

அப்பாவே முதலாசான் அறிவினிலும் பேராசான் !
அப்பாவே ஒப்பில்லா ஆற்றலிலே மிகவல்லார் !
அப்பாவே எப்போதும் அனைவர்க்கும் நிழலாவார் !
அப்பாப்போல் அறிவாளி ஆக்கிடவே துணையாவார் !

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நல்லதையே அவர்செய்வார் !
எல்லோர்க்கும் நல்லோராய் எப்போதும் அவரிருப்பார் !
வல்லவராய் யாவருமே வணங்கிடவே வலம்வருவார் !
கல்லாதார் கற்றாரும் கண்டுவந்தே வாழ்த்திடுவார் !

அப்பாவின் நாற்காலி அவருக்காய்க் காத்திருக்கும் !
அப்பாவின் நாற்காலி அவரைப்போல் தான்பார்க்கும் !
அப்பாவின் நாற்காலி அவர்வரவே தானேங்கும் !
அப்பாவின் நாற்காலி அவரமர்ந்தால் சிறப்பாகும் !

- ஆர்க்காடு. ஆதவன்

**

அறிவின் பிறப்பிடம் தந்தை
அறிவே  அமரும் நாற்காலி !

தந்தை சொல்லே சரியென்று
தரணி முழுக்க அறியும் ஞானம் !

பெண்ணிற்கு முதல் காவலன்
பெண்ணின் முதல் ஆண் நண்பன்!

தந்தையின்  நினைவு தினமும்
அந்த நாற்காலியை பார்க்கையிலே !

அடித்தாலும் நம் நன்மைக்கே
நாற்காலியின் கால்கள் சொல்லும் !

அன்பின் அறிவாய் உன்னத இறைமை  
அகிலம் கொண்டாடும்  தந்தை உறவு !

- கா. மகேந்திரபிரபு

**

எனக்கு அது வேண்டும் ...எனக்கு இது வேண்டும் 
அப்பாவின் நினைவாக ....பிள்ளைகள் கேட்கின்றார்கள் 
அப்பாவின் ஆஸ்தி ஒவ் வொன்றாக   ...அப்பாவின் 
அஸ்தி கடலில் கரைத்தவுடன் ! 
ஓரு பிள்ளை மட்டும் கேட்டான் அப்பாவின் நாற்காலி 
மட்டும் போதும் தனக்கு என்று ! 
அவனுக்குத் தெரியும் அவன் அப்பாவின் கட்சிப் 
பதவி நாற்காலியின் மதிப்பு என்ன என்று ! 

- கந்தசாமி நடராஜன் 

**

வரும்போதும் போகும் போதும்
ஆடிக் கொண்டிருக்கும்
அந்தச் சாய்வு நாற்காலியை அன்போடு
வருடிக் கடக்கும் கண்கள்...

அதைக் கடக்கும் போது
நான் நினைத்ததுப் போலவே
அதுவும் கூட
நினைத்திருக்கக் கூடும்
அசை போடும் மனம் போல...

தென்காற்றை வாங்கிக் கொண்டு
அமர்ந்திருக்கும் அழகை
ஓரம் நின்று ரசித்துக்கொண்டிருப்பாள்
அம்மா...

தன்னை நினைத்திருக்க
வேண்டிக் கொண்ட அம்மாவுக்கு
அப்பாவை நினைக்க வேண்டியதாயிற்றே
என்று வருந்தி
எங்களுக்காக உயிர்ப்பிடித்துக் கொண்டிருக்கிறாள்
அம்மா...

பேரப்பிள்ளைகளின் அட்டகாசங்களுக்கிடையிலேயும்
எதை நினைத்தோ வழியும் கண்ணீர்
தெரியாமல் சிரிப்பாள்...

அதன் அர்த்தம்
அப்பாவுக்கு மட்டுமே புரிந்திருக்கக் கூடும்
இல்லையென்றால்
தன் பார்வையிலேயே வைத்திருக்கும்
அப்பாவின் சாய்வு நாற்காலி
ஆடிக் கொண்டிருக்குமா...!?

~கா.அமீர்ஜான்

**

அனுபவச் சுவடுகள்
ஆயிரமாய் அப்பாவின்
மனதில்...

அந்தச் சுவடுகளை
அவர் அசைவுகளின் நிழல்கள் கூட
வெளிப்படுத்தியதில்லை
எப்போதும்...

காயங்கள் கசிவுகள் வலிகளென
நிரம்பி எழுப்பும் அலைகளை
விழிகளின் கரைகளிலும்
ஈரம் காட்டாத அப்பா
அதிசயக் குளம்...

புனைவுகளில்லா புன்னகையால் பின்னி நெய்துவிட்ட
அன்பின் சால்வையைப் போர்த்தி
அணைத்துக் கொள்வதில் ஆண் தாய்...

ஓய்வெடுக்க
சாய்வு நாற்காலில் அமர்ந்து
பொழுதுகளின் கண்கள் பார்த்ததாகத் தெரியவில்லை...

அப்பா
கடைசியாக அமர்ந்து
எழாமல் சாய்ந்தது அன்றுதான்...

பின் எழவே இல்லை
அன்றுமுதல் அப்பா சாய்ந்த நாற்காலி
பூசை அறையில்...

நாளும் கிழமையும்
அப்பா படத்தில் கீழிருக்கும் நாற்காலியை ஆட்டிவிட்டு
வணங்கி போவது வழக்கமாகிவிட்டது
நாற்காலியில்
அப்பா அமர்ந்திருப்பதாகக் கருதி...

- அமிர்தம்நிலா, நத்தமேடு

**
கை ஒடிந்த நிலையிலும்
செல் அரித்த நிலையிலும்
மழை வெள்ளம் நாற்காலியின்
காலை முத்தமிட்ட வேளையில்
இரும்புப் பெட்டி பணம்
நீரில் ஓட சிதையாத
மனம் அப்பாவின் நாற்காலி
கடலைத் தொட்டுவிட
ஓட்டப்பந்தயம் நடத்தியதில்
இதயம் ரணமாக
ஆண்டாண்டு காலமாய்
தலைமுறைகள் மாறினாலும்
உறவுகள் பாசத்தின்
பிணைப்புகளாய் உயிரற்ற
நாற்காலியிலும் பிரதிபலித்ததை
கடல்தேவதை கண்டு
அதிசயித்தாளே!

- நிலா

**

அப்பாவின் நாற்காலியில் அமர்ந்து கொண்டே தப்பான தளை தட்டும் வெண்பாவம்
அப்பாதான் சிறு திருத்தம் கொடுப்பார் அதன்பின் தளைதட்டாது களைகட்டும்
அப்பா நற்காலியில் அமர்ந்தபடி  இலக்கியங்கள் சொல்ல நாம்  நுகரும்போது
அப்படியே விளங்கும் தனிச்சிறப்பு எப்போதும் புரியாத அர்த்தமெல்லாம்  புரியும்
அப்பா இல்லாதபோது  அதில்அமர்ந்து யார்சொன்னாலும் குன்றிலிட்ட விளக்காகும்
அண்ணன் , தம்பி , அக்காள், எல்லார்க்கும் இலக்கியம் தெரியும் ஓரளவிற்கு
யாருக்கு எவ்வளவு தெரியும் என்பதைப் பார்க்க நாற்காலி உதவிடும் இது உண்மை
பெயருக்கு சொல்ல வில்லை உண்மை தமிழ் கற்கவருபவருக்கு இது தெரியும்
கம்பராமயணம்,மகாபாரதம்,தற்கால இலக்கியங்ககள்பாரதி, பாவேந்தர், கண்ணதாசன்
ஒவ்வொன்றிலும் நாங்கள் முன்னோடிகள், நற்காலி காலி என்றால் பரிசோதிப்போம்
அப்பாவின் நாற்காலி காலியாகவே இருக்காது, அவரே அலங்கரிப்பார் ஆதரவாளர்
அருகிலுள்ள இருக்கைகளில் அமர்ந்திருப்பார், தமிழ் கற்பார் அரங்கம் நிறைந்திருக்கும்
அப்பா விளக்கமளிப்பார் , அதன்மூலம் எங்களின் வீட்டு அரங்கில் இருக்கை கூடும்
முதிர்ந்தபின் தமிழ்கற்போர் முன்னாணியினர்  ஆகி விடுவார் இலக்கியத்தில்
புலனதில் கவிஞர் சங்கமம், திருவள்ளுவர்குடில்,கம்பன் கலை இலக்கியம் என்று
கவி எழுத கற்றளிகின்றார் , தமிழ் இலக்கணம் கற்றளிக்கின்றார் கண்கூடு
சங்கத்தமிழ் இயக்கம் முறையாக தமிழ்கற்ற முன்னோடிகள் நீலண்ட தமிழன்
முத்தமிழ்அம்மா, குமார் ,,வெண்பா எழுத ஊக்குவிக்கும் வேதநாயகனார்,, சங்கரன் 
அப்பாவின் நாற்காலிபோல்தான் ,புலனங்கள், அத்தனையும் தமிழ் வளர்க்கும் வாழ்க
அவைபோல் எங்கு  தமிழ் வளர்த்தாலும் அவையெல்லாம் அப்பாவின் நாற்காலியே.!
 
- கவிஞர் அரங்ககோவிந்தராஜன், இராஜபாளையம்

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com