கடந்த வாரத் தலைப்பு யாரோவாகிப் போன அவள்! வாசகர் கவிதைகள்

இளமையிலிருந்தே இல்லாமையோடு இசைந்திருந்தாள்இல்வாழ்க்கை எட்டாக் கனியாகவே அவளைப் பொருத்தவரை இருந்தது. 
கடந்த வாரத் தலைப்பு யாரோவாகிப் போன அவள்! வாசகர் கவிதைகள்

யாரோவாகிப் போன அவள்..

எங்கே பிறந்தாள்? 
யாருக்காகப் பிறந்தாள்?
எங்கே போனாள்?  

வெகு நாளுக்குப் பிறகு மீண்டும் 
அவளை வறுமையின் நிறம் கூறும் விளக்குப் பகுதியில் சந்தித்தேன். 

பள்ளிக்குச்  செல்லும் வயதில் பள்ளியறையில் 
எத்தனை பேருடைய உடல் பசியைப் போக்கியிருப்பாளோ? 

இளமையிலிருந்தே இல்லாமையோடு இசைந்திருந்தாள்
இல்வாழ்க்கை எட்டாக் கனியாகவே அவளைப் பொருத்தவரை இருந்தது. 

விடியாக் கனவிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள
வாழ்க்கையெனும் போர்க்களத்தில் வீழ்ந்து விட்டாளோ?

என்னுடன் கடற்கரை மணலில் இல்லம் சமைத்து 
கற்பனைக் குவியல்களுடன் கரம் கோர்த்தவள். 

அன்று என் கண்களால் எத்தனை முறை 
அவளுடைய அழகை கொள்ளையடித்திருக்கிறேன். 

எல்லாமே அறிந்த அவள் 
எப்பொழுது இப்படி ஆனாள்? 

இன்று எல்லாமே  மறந்தவள் போல் மருகி நிற்கிறாள். 
அவளைப் போன்றவர்களுக்கு என்று தீரும் இந்த தீராத தீர்ப்பு? 

- பான்ஸ்லே 

**

யாங்கும் நிறைந்த இறைநிலையே
யாரொடு யாரென முடிவுசெய்து..
யாழினி அவளை என்னோடு
யாவரும் மகிழ இணைத்ததுவே..!!

யாதும் உணர்ந்த முன்னோர்கள்
யாவரும் காட்டிய வழியினிலே..
யாக்கையும் உள்ளமும் இணைந்தாற்போல்
யானும் அவளும் இருந்தோமே..!!

யாரோ ஒருவர் சொல்கேட்டு
யாமத்தில் நிலவும் காரிருளாய்..
யாவும் மறைந்த அவள்மனதில்
யாது சொல்லியும் நுழையவில்லை..!!

யாரையும் எதனையும் தாங்குகின்ற
யாவையும் காக்கும் இவ்வுலகில்..
யானும் அவளும் வேறானோம்
யான்மை கொண்டவள் இருப்பதாலே..!!

யாரால் உலகம் இயங்குதென்று
யாவரும் சிந்தித்துத் தெளிந்துவிட்டால்…
யாரும் யாரையும் குறைகூறல்
யாங்ஙனம் இயன்றிடும் உணர்வோமே..!!


பொருள் :-
யாங்ஙனம் - எங்ஙனம்
யான்மை - செருக்கு
யாக்கை - உடல்
யாமம் – நள்ளிரவுப் பொழுது
யாழினி – யாழின் இசை போன்ற குரலை உடையவள்

- ஆ. செந்தில் குமார்.

**

அவளை  காணும்  வரை  நான்  குருடன் ,
அவள்  சொல்  கேட்கும்  வரை  நான்  செவிடன் ,
அவளிடம்  பேசும்  வரை  நான்  ஊமை ,
அவளோடு  கை  கோர்த்த  போது  நான்  கணவன் ,
அவளோடு  ஒன்றாய்  பயணித்த  நாட்கள்  என்  வாழ்க்கை ,
என்  காதலை  நேசித்த  அவள்   என்னை  நேசிக்க  மறந்தாளோ?
மன  வருத்தம்  நீங்க  சமாதானமாய் , ‘என்ன  வேண்டும்  கேள்  என்றேன் ’
அவளோ  ‘விவாகரத்து ’ என்றாள்!!
அந்த  ஒற்றை வார்த்தையில்,
உறைந்தேன்  பிணமாய்  நானும்!
யாரோவாகி போனாள்  அவளும்!

- பிரியா ஸ்ரீதர்  

**

கருவிலே நான். மகிழ்ந்து வந்து சுமந்த
உருவிலே என் அன்பனின்தாய். போல்
திருவுடையாள். ஒக்க எனக்கு வந்துதித்த
மருவிலா என் மாணிக்க மகள் அவள்

கற்றலிலே முற்றும் சிறந்து ஒழுக்கப்
பற்றுடையவளாய். இனிதே வளர்ந்து. நல்
பெற்றமும் சுற்றமும் நட்பும் கொண்டாட
மற்ற‌ ஓர் மனை மாண்புடன் புகுந்த. அவள்

முந்தை அவள் பெயர் பின் தொடர்ந்த
தந்தை பெயர். விலக்கித் தள்ளி இன்று
விந்தையாய். தற்கொண்டான் பெயர் பின் வர
சிந்தையில். யாரோவாகிப்போனஅவள்

குலம்மாறி, வாழ்ந்த குடும்பம் மாறி
குலதெய்வம் மாறி ஊர் நாடு மாறி
தலம் மாறி யாரோவாகிப் போன
மகளே
பலபேரும் போற்ற வாழ்வாய் கண்ணே

தாழ்நிலை நோக்கிப் பாயும் நதிநீராய்
பாழ்மனம் நாடி, ஏங்கித் தவித்துப் பின்
சூழ்நிலைப். புரிந்துனை வாழ்த்துகிறேன் தாயே
வாழ்வாங்கு. வாழ்ந்து செல்வம் பதினாறும் பெறுகவே

- ராணி பாலகிருஷ்ணன்

**

கண்ணோடு கண் நோக்கிய மின்னல்
தண்ணென்று இதயச் சுவற்றில் உரசியதோ
வண்ணக் கனவுகள் வலம் வந்தனவோ
எண்ணம் முழுதும் அவளே நிறைந்தாளே

எனை மறந்தேன் நிலை துறந்தேன் சிலையாகி
சினையான மனதின்  சிறப்பில் நனைந்தேன்
சுனையின் நீருற்றென பொங்கியதே காதல்
பனையாகப் பலதிலும் இனித்தாளே அவள்

அவளும் நோக்கினாள் அ்ன்பைத் தேக்கினாள்
துவளும் நெஞ்சை அணைத்து காதலாளானாள்
உவகை வாழ்வின் எதிர்காலம் காண்பித்தாள்
தவழ்ந்த மனதைத் தாங்கி அணைத்தாளே

சாதி மதச் சேற்றில் சிக்கியது எங்கள் காதல்
ஆதி மனிதர்கள் போலே அடிதடியாகவே
மோதிப் பார்த்தால் காதலன் உயிர்போகுமென
நாதியற்று எனைவிடுத்து மணமும் புரிந்தாளே

உள்ளம் முழுதும் நானே ஐயமில்லை எனக்கு
கள்ளம் இல்லா காரிகை உண்மைக் காதலால்
பள்ளம் என்றறிந்தும் வாழ்வுச் சுழிப்பிளானாளே
வெள்ளப் போக்கில் வேறிடம்  சென்றுவிட்டாளே

காதலில் கட்டுண்ட நானோ கலங்கிப் போனேன்
சாதல் வரை காதல் வருமென நினைத்திருந்தேன்
மோதலின்றி முகிழ்த்த காதல் முனை முறிந்ததே
காதலி என்றிருந்தவள் யாரோவாகிப் போனாளே.

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

யாரோவாகிப்போன அவள்
அன்று ஆண் மகவையை
ஆனந்தமாகவே பெற்றாள்
ஊரும் உறவும் மெச்சும் வண்ணம்
அன்னை நன்றாகத் தான்  வளர்த்தாள்
தந்தை பொருளுடன் போதிய  
கல்வியும் ஞானமும் அளித்தாள்
மகனுக்கு துணைவியாக பாசமான 
பெண்ணையே மணமுடித்தாள்.
ஆனாலும் தாய் மறந்து போனாள்
மகன்களே இப்படித்தான் என்று.
அவனிதயத்தில் அன்னையவள்
யாரோவாகிப்போன அவள்.

- இரா.அண்ணாமலை, திருவண்ணாமலை

**

கூடப்பிறந்தவரோ பிறவாதவரோ வது
யாராயினும் மொருவரே யெனுமன்பின்
கோட்டைத் தூணாய்த் தாங்கிநின்றாள் யாதொரு பாரபட்ச முமின்றி யவள் 

என்னை மணக்கப் போகிறவர்
என்னிலும் குறைந்திரா திருக்கவே 
வெறுத்து வெறுமனே விட்டுவிடாது கொடுத்து தனக்கு ஈடாக்கி மணந்தவள் 

அரிதாரம் இல்லை அழகிற்கு அறிவே 
அரிதாரம் அழகிற்க்கழகு தருமென 
வருவாயைப் பெருக்க செலவு குறைய 
வழிவகைகளை உணர்த்தியவளவள்

நேற்று ஒரு ஊராகவே மதியாத ஊரை 
தேராக ஊர்ந்து வந்து பெரும் பேராக 
போற்றும் ஊராக நிலைத்து நிற்கச் செய்திட்டவ ளென்றும் யாரிடத்தும் 
பலன்கள் எதையு மெதிர்பாராமல் 
சுதந்திரமாய் தனிமையில் அம்மயில் 

இன்று "யாரோவாகிப் போன அவள் " 
ஊராக ஒடியேற தியாகத்தை புரிந்தவள் 
ஊராரால் அடையாளம் தெரியாமல் 
பாராரால் போற்றப்பட்டப்பின் ஊரார் 
கண்டெடுத்த மாணிக்கமாய் கருதியே 
கண்வடித்து நன்றிதனை சமர்ப்பணம் 

- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

**

அதிகம் எழுதத் தேவையில்லை
அந்நியப் பட்ட‌தைச் சொல்ல
பாதைகள் விலகிய எண்ணங்கள்  
நெருங்கி நடந்த பாதைகள்
முரண்களில் தெளிந்த பார்வைகள்
தேடுதல் தந்த‌ வாழ்க்கைகள்
தோள்கள் சுமந்த கனவுகள்
தேவைகள் சொன்ன‌ பிரிவுகள்
விலகி விலகின‌  பாதைகள்
எனப் படிமங்களில் எல்லாம் 
அவளே படிந்த வண்ண‌ங்களாய்..
இருந்தும் இன்று
யாரோவாகிப்போன அவள்
நினைவுகள் சுமக்கும் கணங்களில்
என்றும்
யாதுமாகியே நிற்கிறாள் !!

- ரமேஷ் கோபாலகிருஷ்ணன், பீனிக்ஸ், அமெரிக்கா

**

புத்தகப்பை தோள்மாட்டி மழலை பேசிப்
புதிதாகப் பள்ளிக்கு வந்த வள்தான்
சித்திரங்கள் பலகையிலே வரைந்து காட்டிச்
சிரிப்புடனே என்னருகில் அமர்ந்த வள்தான்
பத்திரமாய்க் கமர்கட்டை எடுத்து வந்து
பாசமுடன் நான்கடிக்கத் தந்த வள்தான்
முத்திரையாய் நட்புதனைப் பதித்து நெஞ்சுள்
முன்பருவம் என்னுடனே படித்த வள்தான் !
கண்கொள்ளாக் காட்சியாகப் பருவம் பூத்துக்
கவின்கொஞ்சும் எழிலாக மிளிர்ந்த போது
பண்ணாக அவள்குரல்தான் இனிமை யாகிப்
பசுஞ்சோலை குயில்போல ஒலித்த போது
விண்முகிலின் இடைமறைந்த நிலவைப் போல
விட்டென்னைப் பிரிந்துயர்ந்த கல்வி கற்கக்
கண்மறைந்தே ஊர்மாறிச் சென்ற தாலே
காலத்தால் யாரோவாய்க் கனவாய்ப் போனாள் !
எங்கெங்கோ அலைந்துநானும் அனுப வங்கள்
எத்தனையோ பெற்றின்று முதுமை தன்னில்
தங்கத்தாய் மடியான சொந்த ஊரில்
தாள்பதித்த போதெழுந்த உணர்வைப் போல
மங்கலமாய் ஊர்நடுவில் நின்றி ருக்கும்
மாக்கல்வி தந்தபள்ளி கண்ட போது
எய்கேயோ போனஅவள் நினைவு வந்தே
என்னுள்ளே பரவியதை எப்படிச் சொல்வேன் !

- பாவலர் கருமலைத் தமிழாழன்

**

என் வரவுக்காக வாயிலிலே
காத்திருந்த கண்கள்
நான் கேட்பதற்காகவே
அடிக்கடி சங்கீதமிசைக்கும்
அவளின் கால்கொலுசுகள்
எனது பெயரை
உச்சரிக்கும் அவளிதழ்கள்
எனக்கென பிறந்து
என்னவளாக வலம்வந்தவள்
இன்று பக்கத்துவீட்டுக்கு
சொந்தமானாள்; பழகிய
எனக்கோ யாரோவாகிப் போனாள்...

- கவி தேவிகா

**

அவளே உலகமென்று அவளே அனைத்துமென்று
அவன் கிடந்த கோலத்தை அறிந்தோர் பலருண்டு!
இல்லை அவளென்றால் இவ்வுலகே வேண்டாமென்று
பேசிப் பேசியே நித்தம்  பிதற்றி அவன் அலைந்தான்!
'எப்படி இருந்த அவன் இப்படி ஆயிட்டானே!'யென்று
ஊரெல்லாம்  பேசிற்று! உறவுகளும்  முழங்கிற்று!
மதம் வேண்டாம் இனம் வேண்டாம் மற்ற எதுவுமே
அவர்கள் இணைந்திடவே ஆற்றும் இடையூறென்றால்
அத்தனையும் நீக்கிடுவோம்! அவரிருவர் வாழ்ந்திடவே
இருவரையும் இணைத்திடுவோம்!இன்பத்தை வழங்கிடுவோம்!
என்றே  உறவுகளும்  ஏகோபித்து  நல்  முடிவெடுக்க 
நன்னாள்  ஒன்றில்  நடத்தினர்  திருமணத்தை!

ஆசை அறுபது நாள்! மோகம் முப்பது நாளென்று 
சொல்லியவர்கள் வாய்க்குச் சொடுக்கிடுவோம் சர்க்கரையை!
அவன் போடும் காபி அவளுக்குப் பிடிக்கலையாம்!
அவளுக்கோ சமையலென்றால் என்னவென்றே தெரியலையாம்!
இருவருக்கும் தினந்தினமும் மூண்டிட்டாம் பாரதப்போர்!
வீட்டிற்  குள்ளிருந்து  வீதிவரை  வந்த  சண்டை
கோர்ட்டுக்கும் போயிற்றாம்! கொடுத்திட்ட தீர்ப்பதுவோ
இருவரையும் பிரித்துவைக்கும் இனிமையில்லா விவாகரத்தாம்!
விட்டுக் கொடுக்கவில்லை! விரிவான பொறுமையில்லை!
கட்டுக்  கடங்காத  காதல்   என்றதெல்லாம் 
விளையாட்டாய்ப் போயிற்று!வீதியெல்லாம் சிரித்திட்டு!
யாரோவாகிப் போனாள் அவள்!ஜீரோவானான் அவன்!

- ரெ.ஆத்மநாதன், அமெரிக்கா

**

காதலித்து திருமணம் செய்து கொண்டால் காலம் முழுவதும் களிப்புடன் வாழலாம் கொள்கை யடிப்படையில் காதல் பிறந்ததால் கருத்துமாறுபாடு வாராது காக்கலாம் எடுத்ததற்கெல்லாம் சாத்திரம், சம்பிரதாயம், சகுனம் சடங்கு முன்னோர் வழி  என்று பார்ப்பவள் எனது இல்லாள், எது வாழ்வில் பாதகமாக நடந்தாலும் எடுத்ததற்கெல்லாம் நாள், கிழமை, நல்லது கெட்டது பார்ப்பவள், அதனால்தான்   இது நடக்கவில்லை “மிகவும் கறாராக கடைப்பைடிக்க என்னை வற்புறுத்துவள் எத்தனை நாள் விட்டுக் கொடுப்போம் ஒத்துப் போவோம் என முயன்றாலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை சில வந்துவிடும் வேலை செய்யவந்தனுக்கு கூலி விளக்கு வைத்த பின் பணம் கொடுப்பது, எடுத்ததற்கெல்லாம் கணக்கு பாராது இரைப்பது இடுக்கு முடுக்காகி மனக்கசப்பு தொடர்ந்தாற்போல் நடந்து பிரிவாகிவிட்டது எவ்வளவுதான் அன்பாக நடந்து கொண்டாலும் சொன்னபடி கேட்டு நடந்தாலும் வந்திடும் திடீரென்று ஒரு பிரச்னை எங்கோ புறப்பட்டு கொண்டிருப்போம் நண்பர் வருவார் சீட்டுக்கட்டை அடிக்கி கோட்டை கட்டி அது இடித்து விழுந்திடும், அதபோல கெட்டுவிடும்   சிதைந்து விடும் இணக்கம் முட்டைமுடந்தியதா? குஞ்சு முந்தியதா/? எப்படியோ முறிந்திடும் வாட்டி வதைக்கின்றாள், வணிதாமணி வலுவில் போய் பேசினாலும் வராது ஒற்றுமை வலுக்கட்டாயமாக இங்கே வரவழைக்க முடியவில்லை யாரோவாகிப் போனவள் போட்டிகளில் கலந்து வென்றவள்தான்! பொருத்தமான ஜோடியில் போய் வென்றுள்ளோம் வாட்டி வதைக்காமல்  வந்துவிடுவாளானால் எனக்கு அதுவே போதும் யாரோவாகிப் போனவள் இன்று என்னெதிரே நடமாடி கொண்டுதான் இருக்கிறாள்   பெற்றவர்கள் சொல்லியும் கேட்காமல் தனியாக வாழ வழிதெரிந்து கொண்டாள்! யாரோ பெற்ற சீமாட்டி இன்று என்னை தனிமைப் படித்து விட்டு தனியாவர்த்தனம் செய்கின்றாள் சிரிக்கின்றாள் நானோ தனியாய் தவிக்கின்றேன் அழுகின்றேன்
 
- கவிஞர் அரங்க.கோவிந்தராஜன், இராஜபாளையம்

**
காதலித்தேன் போக்குக்காட்டினால் பின் ஆதரித்தாள், மாதரசி கைப்பிடித்தேன் மகிழ்வாய் வாழ்ந்திருந்தோம். போதவில்லை வருமானம் சொல்வதை எல்லாம்செய்ய ! போனாண்டு தான்வாங்கியவை மிக்ஸியும் கிரைண்டரும் புதுசுவந்துள்ளது வசதியோடு விளம்பரத்தைக் காட்டினாள். கைகொண்டு எடுக்க கொண்டு எடுக்க வேண்டாம் மாவை,கவிழ்த்தினால் விழும் தன்னால்,கழுவுவதும் சுலபமென்றாள் கைப்பிடியே இல்லாத ஜாருடன் வாங்கி விட்டோம் மிக்ஸியை கண்டிப்பாய் மாற்ற வேண்டுமென்றாள் காட்டினாள் விளம்பரத்தை கைக்கு அடக்கமாக கைப்பிடிகளோடு ஜார்களெல்லாம் பிரமாதம்
வேண்டாம் என்றால் கேட்கவா போகிறாள் வாங்கிவிட்டோம் அக்கம்பக்கதாரை அழைத்துக் காட்டி பெருமை படுவாள் ஆனந்தம் துணி வைக்க சரியாக அலமாரி இல்லை தோழிவீட்டில் பார்த்தேன் தோதகத்தி மரத்தில் வார்னிஷ் அடிக்க வேண்டாம் கூடத்துக்கு அழகு ஆணி அடிக்க வேண்டாம் தொங்கும் ஹாங்கரெல்லாம் பிரமாதம் அதற்குள்ளேயே அமைப்பாய் அப்படியே பட்டுப்புடவை தொங்கும் இரும்பு பீரோ வுக்குள் இருந்தால் கறுத்துப் போகும் ஜரிகையெல்லா இனிமேல் கேட்கமாட்டேன் இத்தோடு நிறுத்திக்கோள்வோம் என்றாள் ஓகே சொல்லிவிட்டேன் உடன் அலங்கரித்தது ஹாலில் அழகாய் ஒரு பிளாட் வாங்க ஒதுக்கியது காலி அடுத்த நிலுவையில் பார்க்கவேண்டும் இப்படியே நிலைமை தொடர்ந்த தாலே நெருக்கடியில் நானிருந்தேன் அக்குவா சுத்திகரிப்பு , வடமாநிலச்சுற்றுப்பயணம் இவற்றுக்கு அச்சாரம் தோழியர் அனைவரும் சேர்ந்தே வீட்டுமனை ஒன்றாக கட்ட திட்டம் நல்ல வேளை நகை சீட்டு இல்லை நிறைய வட்டி தரும் நிறுவனத்தில் தோழிகளுடன் சேமிப்பு வீடு கட்டமுனைப்பு இவையெல்லாம் என்னை துரத்தியது ஆம்! நான் தனி இனிமேல் அவள் யாரோவாகிப்போனாள் 
        
- கவிஞர் .ஜி.சூடாமணி

**

இன்னொரு வீட்டில் ஆண் ஒருவனுக்கு தாரமாக ஆகி, அந்த வீட்டின்
மருமகளாக ஆகி பின்
தாயாக ஆகி
குடும்பத்தலைவியாக
ஆகி
என் குடும்பம் என்று
தன் புகுந்த வீட்டின்
பெயரை நிலை நிறுத்தி,
என்னை விட்டு புதுக்குடும்பத்தை உருவாக்கி,
யாரோவாகிப் போன‌
அவர்கள், என் மனைவியைப்போல
இல்லத்து அரசிகளே! அவள் அவர்களே.

- களக்காடு வ.மாரிசுப்பிரமணியன் 

**

சீரோடும் சிறப்புகளைத் தந்த ருள்வாய்
……….சிங்காரத் தோற்றமுடன் திகழ வென்றும்.!
ஆரோக்கி யக்கிரகம் என்பார் உன்னை
……….ஆருக்கும் உன்னைப்பி டிக்கும் உண்மை.!
வேரோடு அழித்துவிடு விரோத எண்ணம்
……….விரைந்துமன இருளைநீக்க வருவாய் நீயே.!
யாரோவா கிப்போன நீநி லாவே
……….யாரெல்லாம் உனக்கடிமை சொல்லு நீயே.!
.
 மண்மீதில் வாழ்தற்குப் பற்று வேண்டும்
……….மனத்துள்ளே அதைவளர்க்க உறுதி வேண்டும்.!
எண்ணத்துள் எத்துணையோ ஆசை உண்டு
……….யாரறிவார் அத்துணையும் எங்கே காண.!
கண்முன்னே காதலிக்க அனைத்தும் உண்டு
……….கடவுளரே அன்பாலே படைத்தார் எல்லாம்.!
வெண்ணிலவை உலகுக்குக் கொடுத்த தாலே
……….வியந்துன்னைக் கவிகளுமே காத லிப்பார்.!

இறைவனாகப் பார்க்கின்றார் ஏக்கத் தோடே
……….இங்கெல்லாம் உன்னையறி யாதார் உண்டோ.!
மறைவதுமே உதிப்பதுமே உன்வா டிக்கை
……….மனதுக்குள் ஏற்படுத்தும் உன்னின் தாக்கம்.!
மறைந்திருந்து மேகத்தில் விளையா டினாலும்
……….மனதுக்குள் நீயாரோ வாகிப் போனாய்.!
குறையிலாமல் எழுதவைத்த முழுநி லாவே
……….கவிகளெலாம் கூப்பிட்டால் விழுமா காதில்.!
 
- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**
மலைப்போடு மேகமெல்லாம் விண்ணெங்கும் நீந்தும்
பெண்ணவளின் பேர் சொல்லி
மின்மினிகள் பறக்கும்
அணங் கவளின் வதனத்தால் மயில் அக விக் கலையும்
கார்முகிலும் குமுறிப் பின் மண் மீது குலுங்கும்,
அலுங்காது மரங்களெங்கும் சிலுசிலுப்பு படரும்
அவனி எங்கும் இரவினிலே 
ஆழ்ந்து நல் உறங்க
ஆழ்மனதின் ஓசையது அனாகதமாய் ஒலிக்கும்
நீ இல்லா நினைவுகளோ
தீயாகச் சுடவே
அன்பிலும் - ஆசையிலும் வார்த்தைகள் தான் தோயும்
காதலது காற்றினிலே காத தூரம் செல்ல
கண்ணாட்டி மறந்தாலே மனசார என்னை - என
கலைந்த மேகங்கள்
கை கொட்டி சிரிக்க
ஏனோ அறியேன் - எதற்கென்று தெரியேன்
இப்போதும் உருகுகிறேன் - யாரோவாகிப் போன அவளுக்காக.

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**

உயிரும் உடலுமாய்க் கலந்திருந்தாள்
உருகியெனை அன்று அன்பு செய்தாள்
எருமையேறாஅவ் எமதூதர்
எனைக் கவர்ந்தெங்கோ கொண்டு சென்று
ஒருவருமறியா வதைகள் தமை
ஒருங்கே ஆங்கு பரிசளிக்கப்
பெருக விழிநீர் உகுத்தவள் தான்
அருகில் நான் அற்றுப் போனதனால்
தரு நீரொழியப் பசும்பாலுண்
குருகாயிருக்க மறந்தனளோ?
பெருந்துயரில் எனை மூழ்கடித்து
அருகில் கண்டும் ஆரோ போல்
"ஒரு பறவை" என மதிமயங்கி
கருநாகத்துடன் போந்ததென்ன...!

- குகதர்சனி

**

பழகிய காலங்கள்
அரும்பிய வார்த்தைகள்
மயங்கிய கோலங்கள்
சுற்றிய நகரங்கள்
துணையாய் வருமென்ற
நம்பிக்கை
பொய்த்த பின்
எங்கே சென்றாளே
என் இதயம் தின்று
காற்றோ அலையோ
மாறித் திரும்பிய
பந்தாய் தாக்கி
வடிவிலியாய் எங்கு
போனாளோ
நினைவினைக் கொடுத்து....

- ப.வீரக்குமார், திருநின்றவூர்

**

காதல் என்ற
ஒற்றை வார்த்தையில்
உள்ளத்தை நிறைத்து
உணர்வினை ஊட்டி
அரும்பிய உதடினால்
விரும்பிய இடத்தில்
ஒத்தடம் தந்து
உயிரே நீ என்றாள்
உலகம் உன் இதயமென்றாள்
என் வேலைச்சுமையால்
சிறு காலம் ஓடிட
பின் தேடினேன் ஓடினேன்
கரம் பிடித்த கண்ணாளா
எனும் கொஞ்சும் மொழியுடன் இளைஞனொருவனிடம்
கற்பனையைக் கிளறி விட்டு
காட்டாற்று வெள்ளம் போல்
மனதில் புகுந்து மரண அடியாய் விழுந்து
காதலி என்றவள்
இன்று யாரோ
ஒருத்தியாய் எனைக் கடந்து
கைகள் கோர்த்து நடந்தாளே!....

- முகில் வீரஉமேஷ், திருச்சுழி

**

அருந்தவம் புரிந்து
அடிமடியில் சுமந்த
அரிய பொக்கிஷமாம்
அன்பு மகள் அவளை
அமுது புகட்டி
அறுசுவை உணவு படைத்து
அள்ளி எடுத்து
ஆராரோ பாடி உறங்கச்செய்து
அல்லும்பகலும் காத்துவளர்த்த
அன்பு அன்னையையும்

அழகு தேவதையாக
அற்புத கவிதையாக 
அகத்தில் நிறைத்த
அருமைத் தந்தையையும் பிரிந்து
இதயமதை
இரும்பாக்கி கொண்டு
யாரோவாகிப்போனாள்  அவள்
யாரையோ.கைபிடித்து சென்றதால் !

- ஜெயா வெங்கட், கோவை 

**

முதல் முதலாய்
அவளைக் கண்டவுடன்,
மெல்லிய துணியுடன்
எவரெஸ்டிலா இருக்கிறோம் ?
சிலுசிலுப்புடன் நான் –--
மதுவிற்குள் தேன் கலந்த உதடுகள்
அவற்றில் ஒரே ஒரு
முணுமுணுப்பு போதும்
நான் ஊமை –--
விரல்களில் எனக்கு
நீ கட்டை விரல் ,
அதனால் அதில்
மோதிரம் அணிந்தவன் நான்---
கைகள் கோர்க்காத
கடற்கரை நடைகள்—
மெய்கள் படாத “மெய்”காதல் அது—
சமயம் வந்ததும் “சமயம்” நுழைந்தது .
“ஸ்டேட்டஸ்” பிறந்தது –
புதிய மாப்பிள்ளையுடன்
நெருக்கும் உறவினர் –
ஒரு செயற்கை திருமணத்துடன்
நாளடைவில் அவள் இயற்கையானாள்—
யாரோவாகிய அவளின்
நினைவலைகளுடன்  
கடற்கரையில் மீண்டும் நான் –

- கவிஞர் டாக்டர்.  எஸ். . பார்த்தசாரதி 

**

பார்த்து - பேசி - பழகிய முகமொன்று
என்னை நோக்கி என்னருகே வந்தது..
நீங்கள்.. யாரென்று நான் யோசித்தபோதே
அவள் பேசத் தொடங்கினாள் - நான்
உன் தோழனாய் இருந்தவன் - இன்று
உன்முன் தோழியாய் நிற்கிறேன் என்றாள்..
ஏன் இந்த திருநங்கை கோலமென்றேன்..?
இது இறைவன் தந்த கோலம்
நாளாக.. நாளாக.. மாற்றம் கண்டன
என் உணர்வுகள் பெண்தன்மை கொண்டன;
ஆண்-பெண் சமத்துவத்தை - இறைவன்
அகிலத்தில் வைப்பதற்கு பதில் - மறந்தாற்போல
எங்கள் தேகத்துக்குள்ளே வைத்துவிட்டாா்போல;
எல்லோரும் கடவுளின் படைப்பு என்றுரைத்துவிட்டு
எங்களைப் பாவத்தின் படைப்பாய் பார்ப்பதேனோ..?
எங்கள் குடும்பமும்  உறவும் - ஏன்
எங்கள் உயிரான சில நட்பும்கூட
அருவருப்பாய் பார்த்தன ; வெறுத்தன- 
நாங்கள் தொட்டு ஆசிர்வதித்தால்
நலம்பெருகும் என்றுரைக்கும் சமூகம் -
எங்களை ஒருபோதும் ஆசிர்வதிப்பதில்லை-
நாங்கள் வேண்டுமென்றே - யாருக்கும்
தொல்லைகளை கொடுப்பதில்லை - எங்களுக்கு
தோள் கொடுக்கும் உறவுகள் இல்லை -
தேள்போல் கொட்டும் உறவுகளே அதிகமுண்டு -
இறுதியாய் கண்ணிர்மல்க  என்னிடம் கேட்டாள்
என் குடும்பம் நலமா என்று...?
நலம்தான் என்றுரைத்து - அவளுக்கு
நம்பிக்கையான வாா்த்தைகளையும் கூறிவிட்டு -
அவ்விடமிருந்து  அவளிடத்தே விடைப்பெற்றேன்;
இன்றும் அவளது  வாழ்க்கையொரு....
விடையறியா வினாத்தாள் தான்.....?
இன்று  - அவள் குடும்பத்திற்கே
அவள் யாராவாகிப் போனாள்...!

- கவிஞர். நளினி விநாயகமூர்த்தி

**
உனக்காக  நான் எனக்காக நீ 
உயிர் உள்ள வரை பிரியோம் !

உடல் இரண்டு உயிர் ஒன்று 
உள்ளம் இரண்டும் ஒன்றானது !

உலகமே எதிர்த்தாலும் நான் 
உந்தன் கரம் பிடிப்பேன் !

நான் இன்றி நீ இல்லை 
நீ இன்றி  நான் இல்லை !

என் வாழ்வு உன்னோடுதான் 
உன்னைப் பிரிந்தால் உயிர் வாழேன் !

இப்படியெல்லாம் சொன்ன அவள் 
இன்று என்னோடு இல்லை !

காலத்தின் கோலம் பிறந்தோம் 
கள்ளி என்னை மறந்தாள் !

வேறு ஒருவன் கரம் பிடித்து 
வசதியாக குழந்தைகளுடன் !

யாயும் ஞாயும் யாரா கியரோ
யாரோவாகிப் போன அவள் ! 

- கவிஞர் இரா .இரவி

**
மனதில் மலரும்  உணர்வுகளை 
தினம் ஒரு கவிதையாக எழுதி 
மனம் விரும்பும் என  அனுப்பினால் 
படித்த நீ  யாரோவாகிப்  போனாயே!
நான் எழுதும் கவிதைகள்  
வான் வழியே  வர இயலாததால் 
கண் கொண்டு படிக்கும் புத்தகமாக 
கொடுத்ததால்.......
யாரோவாகிப் போனாயே!
காட்டில் பறக்கும் பறவை  ஒலியுடன் 
நாட்டில் நடக்கும் எதை பார்த்தாலும் 
உன்  முகமே  தெரிந்தாலும் 
நீ ஏன் "யாரோவாகிப் போனாய்"
என்று மனம் கேட்கும்  
கேள்வியின் விடைதான்  என்ன?
அறிய துடிக்கும் மனதுடன் 
அனுப்புகிறேன்  என் தூதினை!
பதில் சொல் பெண்ணே!
மதில்மேல் பூனையாய்  தவிக்கும் 
என் மனம் தேடும்    நிம்மதிக்காக  
பதில் சொல் கண்மணியே!

- உஷாமுத்துராமன். மதுரை 

**

அகரங்களை அர்த்தமாக்கி ஆளுமையாக்கிய
ஆரோகண ரேகையவள்!
நிகரின்றி நானிருக்க இன்று
யாரோவாகிப் போனவளும் அவளே!
இருட்டுப் பாதையிலும் குருட்டுப் பாவியெனை
கைபிடித்து கரை சேர்த்தவள்!
விடியல் வந்ததும் கை தடி தந்து
விலகிச் சென்றதும் ஏனோ!
வார்த்தையில்லா வருடல்களை
தன் பார்வையாலே பரிசளித்தவள்!
நீர்த்திவலைகளை என் நேத்திரங்கள் உதிர்த்த
தீர்ந்திடாத வலியுணர்த்தி தூரச்சென்றாளே..
இவன் உயிர்த்தீயும் உறைந்து போக!

கீர்த்தி கிருஷ்

**

நேற்று வரை அவளுக்கு ராஜ உபசாரம் 
சற்றும் குறைவில்லா கவனிப்பு ...அவள் 
மேல் அப்படி ஒரு அக்கறை !  ஒரு கருவை 
சுமக்கும் தாய் அல்லவா அவள் !
பெற்றெடுத்தாள்  ஒரு குழந்தையை அவள் 
இன்று ! மாறி மாறி குழந்தையை தூக்கி 
கொஞ்சுது உறவினர் கூட்டம் !
மறந்தும் கூட பிறந்த குழந்தை அவள் 
கையில் இல்லை ! நேற்று வரை அவள்தான் 
எல்லாமே ! ஆனால் இன்று யாரோவாகிப்போன 
அவளை கவனிப்பார் யாரும் இல்லை !
யாரோவாகிப் போன  அவளுக்கு அதில்  வருத்தமில்லை !
வாடகைத் தாய் அவளுக்குத் தெரியாதா 
என்ன ...அவள் எல்லை எது வரை என்று ?

- K.நடராஜன் 

**
முத்தமிழும் செந்தமிழும் பைந்தமிழும் போல,
    முகிழ்த்திருக்கும் நூறுதமிழ் சுவைமறந்து, இன்று 
பித்தரென எந்தமி்ழர் தமிழ்ச்சிறப்பை உணராப் 
    பிழைப்பாலே பொதுவறிவை இழந்துவிட்டு நாளும்
முத்திருக்கக் கிளிஞ்சலினைப் பற்றுகிற பாங்கில் 
    முடமாகி ஆங்கிலமும் பிறமொழியும் ஏற்று 
நித்தமிங்கே பிழைப்புக்காய் கற்க,யாரோ வாகி 
    நசிந்துபோன அவள்என்றன் தமிழ்த்தாயே அந்தோ! 

தமிழராகப் பிறந்துவிட்டு தமி்ழராக வளர்ந்து 
    தமிழராகத் தமிழ்க்கல்வி கற்கமட்டும் வேற்று 
மொழியினராய் நடிக்கின்ற தமிழரெல்லாம் வீணாய் 
   தமிழ்க்கற்றால் வேலையுந்தான் வாய்க்காதே என்று 
அமிழ்தமொழி தமிழ்தன்னைப் புறந்தள்ளும் ஈன 
   அறிவிளிகாள் கூற்றாலே எந்தமிழர் 
தாயும்
தமிழர்க்கே யாரோவா கிப்போன அவள்தான் 
    தனிச்சிறப்பு செம்மொழியாள் என்பதையும் மறந்தர்! 

மயில்சாமி அண்ணாது ரையும்அப்துல் கலாமும் 
   மாத்தமி்ழைக் கற்றுத்தான் அறிவியலில்  வென்றர்;
வெயிலில்தான் நிழலருமை தெரியுமென்பர்; வேற்று 
   வெயில்மொழியால் நிழல்குளுமை தமிழருமை தெரியா
வயிற்றுப்பி ழைப்புக்காய்த் தாழ்ந்துபோன தமிழா 
    வழிமாறி போகாமல் வளத்தமிழை ஏற்பாய்;
உயிரற்றப் பிண்டமான தமிழராலே இன்று 
    யாரோவா கிப்போன அவள்தான்தாய்த் தமிழே! 

-"நெருப்பலைப் பாவலர்" இராம இளங்கோவன், பெங்களூர்

**

வரும் பாதையில்
கொடிமலர் என அசைந்து புன்னகைத்தேன்
பார்த்த மாதிரியே தெரியவில்லை என்னை
நூலகக் கூடத்தில்
எதிரில் அமர்ந்து அவளை வாசித்தேன்
புத்தகத்தை மூடிவைத்துப் போனாள்
உணவகத்தில்
உட்கார்ந்தேன் அவளருகே
குப்பைக் கூடையில் கொட்டிச் சென்றாள்
அன்றருளிய அமுதை
அம்மன் சந்நிதியில் காத்திருந்தேன்
அவள்வணங்கும் பொழுதறிந்து
வெளிக்கும்பிடு போட்டு விரைந்து மறைந்தாள்
இரவலர்க்குப் பிச்சையிட்டு
தொடர்வண்டியில் ஏறிச் சென்றாள்
தண்டவாளத்தில் நசுங்கிக் கிடக்கிறேன்
சோடா பாட்டல் மூடியாய்
முன்பொருநாள்
அவள்மடியில் நான்கிடந்து குழல்கோதிவிட்ட
அந்தக் காட்சி மட்டும் ஒட்டிக்கிடக்கிறது
எல்லாத் திசைகளிலும்

-கோ. மன்றவாணன்

**
 
பெண்கள் காப்பகமே 
கற்பை சூறையாடிப் போவதையும்!
கோயில் கர்பகிரஹத்திலேயே
சிறுமிகள் சீரழிக்கப் படுவதையும்!
பாதிரியார்களே சிறுமிகளை 
சின்னா பின்னப் படுத்துவதையும்!
முகம்மூடி ஆடையணிந்தாலும் 
காமுகனின் கதிர்வீச்சுப் பார்வைக்கு 
பலியாகும் செய்தி கேட்டும்!
மாநகரப் பேருந்தில் பயிர்ப்பு இழந்தும்!
ரயில் நிலையத்தில் உயிர் இழந்தும்!
முக்காடு போட்டவளையும்
முதிர்கன்னியானவளின் நிலையறிந்தும்! 
பள்ளியே அறையையே பள்ளியறையாக்கும்
பாதகத்தை அறிந்தும்!
கலை வித்துவான்களின் 
விருப்பத்தை நிறைவேற்றியே 
அரங்கேற்றம் செய்ய வேண்டிய 
அவல நிலை கேட்டும்!
காவிகளே காமன் அவதாரம் 
எடுக்கும் நிலையை எண்ணியும்
மனம் வெம்பி,சுய நினைவிழந்து 
யாரோவாகிப் போன அவளை!
யார் வருவார் மீட்டெடுக்க?

- கு.முருகேசன்

**

தூங்கும்போதில் விரல் சொடுக்கி
என்  உயிரைத் தாங்கும்
என் உயிர் சகியே! 
நாடு காக்கின்ற   நன்றி மிகுந்த
இனங்களம்மா!
அன்பு எனும் சொல் தேடி
முகமதுநபி புராணத்தில்
அகிலத்து அகராதியில்
தேடித்தான் பார்க்கின்றனர்! 
தெரசாவின் இன்முகம்
மறந்து போன 
திரைமறைவு காலன்
நிகழ்த்திய போரினிலே சின்னஞ்சிறு 
குழந்தைகள் முகம் பார்க்காமலே
மரித்துத் தான் போனேனே !
பிஞ்சுவிரல் தொட்ட
என் கண்ணாடி புகைப்படம்
கண்ணீரால் கசங்கித்தான் கிடக்கிறது!
உடல் மட்டும்தான் அழியும் என்றால்
யாரோவாகிப்போன அவளாய்
நீ நிற்க மாட்டாய்! 
இனவெறி மதவெறி கடந்து ஒன்றாகிய
எங்கள் வாழ்வு நாட்டுநலனுக்காக
அர்ப்பணம் என்பதால் பெருமிதத்துடன்
உன்னருகில் ஆத்மாவாய் 
காத்துக்கொண்டே சிரிக்கின்றேன் !
ஆயிரம் உண்டிங்கு சாதி
பாடிய புலவரை வாழ்த்தி
நாட்டைக் காக்கும் காந்திவழி
நன் மக்களை வளர்த்திடும் பொறுப்பை
பிரிய சகியான நீயும் செய்திடுவாய்!
இந்தியத்தாய் வயிற்றினில்
பிறந்த நீ ஒன்றுபட்டால்
உண்டு வாழ்வு என்றே 
உணர்த்தி வாழ்ந்திடுவாய்!
பூவும் பாட்டும் பொட்டும் என்றுமே 
பெண்ணுக்கு உரிமை என்று கண்ணீர் இல்லாமல்
வந்தேமாதரம் என்றே முழங்கிடுவாய்!
என்று முடியும் என்ற மகனின்
வினாவிற்கு யாரேனும் பதில்
சொல்வாரோ! !
-- சீனி

**

எதிர் வீட்டு ஜன்னலில்
எத்தனை நாள் பூத்தது?!
ஏக்கத்துடன் என்னை மட்டும்
எப்படி எல்லாம் பார்த்தது?

விழித்திரையைத் தாண்டி நிதம்
விபரீதங்கள் விளைத்த சுமை
விளக்கிடத்தான் கூடிடுமோ?
விவரிக்க மனம் விரும்பிடுமோ?!

கல்லால் ஆன எம்மிதயத்திலே
கடுகி காதல் முளைத்ததுவோ?
காலங்காலமாய் நிலைத்திருந்த
குலப் பெருமைக்கு இழுக்காகிடுமோ?

பாவையின் பார்வைக்குத் தடைபோட
பலநங்கையர் பேசிடும் விருந்தானேன்
காலமும் அவளுக்குக் கைகூடிடவே
கணவனுடன் வந்து வணங்கினாளே!

நித்தமும் பார்த்த அவளது முகம்
நினைவுகளில் கனவுகளில் மிதக்க
யாரோவாகிப் போன அவள் வாழட்டும்
யான் சொல்லாமலே மனம் கூறிடுதே!.

- புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன், சிறுமுகை

**

இன்று வெறும் கல்லாக  இருப்பதை 
நாளை யாவரும் வணங்கும்  
தெய்வ சிலையாக  வடித்த  சிற்பியின்  
தொய்வான நிலைபோல  நீ  ஏன் 
யாரோவாகி போனாய்.......
புரியாத புதிராக மனம் குழம்பியதே!
கோவிலுள் குடியிருக்கும்  தெய்வ  
சிலையினை  வடித்த சிற்பியே  
ஆயினும்   கோவிலினுள்ளே   நுழைய   
வரிசையில்  காத்திருக்க வேண்டும் என்பது 
போல.......மனம்  விரும்பிய  உன்னை 
காண  நான்  காத்திருக்கிறேன் 
என்ற உண்மை தெரிந்தும்  நீ  
யாரோவாகி  போனதற்கு   காரணம்தான்  என்ன?
முரண்பாடுகள் கொண்ட வாழ்க்கையில் 
எதை அதிகம் நேசிக்கிறோமோ  அது 
விலகி விலகி சென்று துன்பத்தில் 
தள்ளுவது  போல   உன்னை நேசித்த 
என்னை விட்டு நீ விலகி  
யாரோவாகி  போனாய்?  இதன் 
காரணத்தை அறிந்தால்  
மரணத்தைக்கூட நிம்மதியாக ஏற்பேன்!
சொல்லடி  என் சிவசக்தி!
  
- பிரகதா நவநீதன், மதுரை  

**
நீரோ நெடும்புனலோ நெஞ்சையள்ளும் மணிச்சரமோ
தேரோ தேனிசையோ தென்றலாட்டும் மெல்லிசையோ
சோராக் கற்கண்டோ செங்கரும்புச் சுவைதானோ
வேரோ சந்தனமோ முகர்ச்செண்டின் நல்மணமோ
ஈரோ இளங்குளிரோ குளுமைகொண்ட சுனைநீரோ

தீராவளம்  அருளும்   பொன்னி என்னும் 
பேரும் கொண்ட அன்னையெங்கள் காவிரிதான் 
பாராமல் வாராமல் பயிரெல்லாம் வாடவிடும்
யாரோவாகிப் போன அவள்

- கு. இராமகிருஷ்ணன் - வடக்கு அயர்லாந்து

**
இந்த இருள்காட்டின்
மெளனத்தைச்
சப்தப் பின்னங்களாக்கிப்
பின்தொடரும்
சலங்கை ஒலிகள்
யாருடையவை?

யுகச் சந்தியின்
இருண்மைக் கணத்தில்
கனவுகளில் நெய்த
முகத்தில் தெறிக்கும்
நட்சத்திரச்சத்தங்கள்
யாருடையவை?

முள்தைத்த மென்மலர்ப்
பாதத்திலிருந்து
எடுத்து வீசிய முள்ளால்
யுகங்கள் முடிந்த பின்னும்
நித்தம் இரவில்
நெஞ்சைத் தைக்கும்
கண்கள் யாருடையவை?

சாலையின் கூட்ட நெரிசலில்
ஒருகணம் எறிந்து விட்டுக்
கடந்த பார்வையில்
சட்டென்று மின்னிய
கவிதைகள் யாருடையவை?

எங்கோ ஒரு பர்ணசாலையில்
தொடங்கிய காலடி ஓசைகள்
எங்கோ ஒரு ஷாப்பிங் மாலில்
தொடர்ந்து கேட்டதே
அந்தப் பாதங்கள் யாருடையவை?

அடர்காட்டில்
தாகத்துக்குத்
கையில் தண்ணீர் ஊற்றி
யுகங்கள் கழிந்து
பழச்சாறுக் கடையில்
திராட்சை ரசத் தம்ளரை
முகம் அறியாது என் கையில்
கடத்திய கைகள் யாருடையவை?

யாதுமாகி நின்றாய் நீ எனக்கு
என்று என் கல்லறையில்
எழுதி விட்டுச் சென்றவள், இன்று
யாருடையவள்
யாரோவாகிப் போன அவள்?

- கவிஞர் மஹாரதி

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com