இனிமேல் மழைக் காலம் வாசகர் கவிதை பகுதி 2

மழை வந்ததால் மட்டையாட்டம் நின்றதென
இனிமேல் மழைக் காலம் வாசகர் கவிதை பகுதி 2

இனிமேல் மழைக்காலம்

மழை வந்ததால் மட்டையாட்டம் நின்றதென
பாதி உலகம் பதறிப் போய் கிடக்க,
விவசாயமாம் - வேளாண்மை யாம்,
உழுதுண்டு வாழ்வாரே - வாழ்வாராம் , 
ஏனையோர் - விவசாயியை சட்டை செய்யார் - காண்,
எனுமாறு _ மழைக்காலத்தை ஏடுகளில் படிக்கும் படியாச்சு,
நாடு தாங்காது,
கூடு திரும்பா - பறவைகளாய்
ஓடும் நதி -நீரின்றிப் போனது.
தேடும் கண்களும் பூத்துப் போனது,
நீரின்றி அமையாது உலகு
எப்போ வருமோ நிஜமான மழைக்காலம்.

- கவிதா வாணி, மைசூர்

**

பரிதாப மாக்கள் கண்டு
பட்டோடப மானிடம் கெட்ட
நிலையைப் பார்த்த இறைவா
இறங்கி வருக தயங்காமல் தருக
மழையெனும் செல்வத்தை;
காட்டை விலங்குகள் அமுத மகிழ்வாக;
நாட்டைக் கெடுத்த கயவர்கள் விட விருந்தாக
இதுவே தண்டனை இதுவே செய்வினை
அமுத கீற்றுகள் புவியை ஆராதிக்க;
ஊற்று வளங்கள் வரப்பைக் குறைக்க;
கதிர்கள் விரிந்து  அமுதசுரபியாக
தா இறையே இரையாகும் நீரை
நீரே அதன் வடிவு தானே...

- முகில் வீர உமேஷ், திருச்சுழி

**

இனிமேல் மழைக்காலம்தான்
உழவர்களே!
விதைக்கத் தயாராகுங்கள்!
விதைக்கிற காலத்தை வீணடித்தால்
அறுவடைக்காலம் நம்மை வேதனைப்படுத்தும்!

இனிமேல் மழைக்காலம்தான்
ஏரி குளங்களே மூச்சு வாங்கிக்கொள்ளுங்கள்
மூச்சு முட்ட நீர் குடிக்க!
கால்வாய்களே! கால்வாய்களே!
உங்கள் தொண்டை அடைக்காமல் இருக்க
தூர் வாரிக் கொள்ளுங்கள்!

மரங்களே!
தலை குளித்துக்கொள்ளுங்கள்!
வேர்களே! நீர் குடித்துக்கொள்ளுங்கள்
அருவிகளே!
தரையில் குதிக்கத் தயாராகிக் கொள்ளுங்கள்!
எறும்புகளே! எறும்புகளே!
உணவு சேமித்துக்கொள்ளுங்கள்!
மனிதர்களே! மனிதர்களே !
மழைநீர் சேமித்துக்கொள்ளுங்கள்!
தண்ணீர் லாரிகள் ஓய்வெடுத்துக் கொள்ளட்டும்!
தண்ணீர்க் குழாய்கள்
தன் பணியைத் தொடங்கட்டும்!
வானம் பூக்களுக்கே! பூக்கள் தூவட்டும்!

- கு.முருகேசன்

**

மழையே.. மழையே.. வா.. வா..
மண்ணில் இறங்கி வா.. வா..
அழைத்தேன் உன்னை வா.. வா..
அமுதாய் திரண்டு வா.. வா..

வானில் மேகக்கூட்டங்களாய்
திரண்டு வந்து பார்க்கின்றாய்..
ஆனால் மாரியாய்ப் பொழியாமல்
    எங்கோ மறைந்தே போகின்றாய்..

சுழன்றும் ஏர் பின்னது உலகம்
நன்றாய் நீயும் அறிவாயே..
சற்றே இறங்கி மழையாய் விழுந்தால்
எங்கள் உழவன் எழுவானே..

மழையே.. மழையே.. வா.. வா..
மனம் இறங்கி வா.. வா..
தரணியில் உயிர்கள் தழைத்திட நீயும்
தாமதியாமல் குதித்தோடி வா!

- வே.தனசெல்வி, கோயம்புத்தூர்.

**
ஏர்பூட்டி நானும் நிலத்தில்
…..எருதுகள் கொண்டு உழுதேன்
வேர்பிடிக்க விதையை விதைத்து
…..வியர்வை சிந்த உழைத்தேன்
நீர்கிடைக்க வேண்டும் என்று
…..நிலத்தில் காத்துக் கிடந்தேன்
ஈரநிலமாய் மாற எண்ணி
…..இயற்கையை வேண்டி நின்றேன்

வெயில்வந்த காலம் முடிந்தது
…..வெள்ளம் வரும்காலம் வந்தது
வயல்கள் வறுமை நீங்கிட
…..வானமும் நீர்த்துளிகள் தந்தது
மயில்களும் தோகை விரித்தாடியது
…..மறைந்து போனது கோடைகாலம்
குயில்களும் குரலால் இசைபாடியது
…..குறைதீர்ந்தது இனிமேல் மழைக்காலம்

- கவிஞர் நா. நடராஜ், கோயமுத்தூர்

**

துயில் கொண்ட குடைகளெல்லாம்
சோம்பல் முறிக்கும் நேரமிது ...
மண்ணில் புத்தம் புதிதாய்
காளான் குடைகள் பிறக்கும் காலமிது....
துயில் கொண்ட குடைகளெல்லாம்
சோம்பல் முறிக்கும் நேரமிது ...
மண்ணில் புத்தம் புதிதாய்
காளான் குடைகள் பிறக்கும் காலமிது....
வருண தேவனும் கர்ணனாய் மாறி
மழை முத்துக்களை வாரித்தரும்
பொன்னான தருணமிது !
முத்துக்களை மழைநீர் சேகரிப்பு 
பெட்டகத்துள் பொக்கிஷமென பாதுகாக்க 
வழிவகை செய்ய வேண்டிய
கட்டாயக் காலமிது !
உணர்ந்து தெளிந்தால் 
வாழ்வென்று ஒன்றுண்டு !
இல்லையேல் அருகும் இனப்பட்டியலில்
மனிதனும் சேரும் நாளும் வெகு அண்மையிலுண்டு !
                     
- பி.தமிழ் முகில், டெக்ஸாஸ்

**

மழைகாலம் வருகிறது மகிழ்ச்சியில் உழவரெல்லாம்
மழைகாலம் வருகிறது மகிழ்ச்சியில் பெண்கள் எல்லாம்
அலை அலை என அலைந்து திரிந்து அன்றாடம் தண்ணீர் எடுப்பர்
விலைகொடுத்து தண்ணீர் வாங்கும் ஏழை பாளை மக்களெல்லாம்
மலையென நினைக்கும் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்,நம்பிக்கை
மக்களுக்கு மனிதர்கள் மேல் இருக்கும் நம்பிக்கையைவிட இயற்கைமீது
அசைக்க முடியாத நம்பிக்கை அதானால் மழைக்கும் ஏங்கும் மக்கள்
மழைகாலம் வருகிறது மகிழ்ச்சியில் மக்கலளெல்லாம்
 
மழைகாலம் வருகிறது பரிதவிக்கும் சில பிரிவு மக்கள்
அன்றாடம் காய்சிகள் அலுவலர்கள், பள்ளி செல்லும் சிறார்
மழை பெய்கிறது தொடர்ந்து பெய்கிறது ஏரிகளுக்கு நீர் வரத்து கூடும்
எப்ப திறப்பார்களோ தலைநகர் சென்னை புற நகர் மக்கள் அச்சத்தில்
மழைகாலம் வருகிறது லோடு மேன்கள் ,கூலி வேலை செய்வோர்
எத்தனை நாள் மழைபெய்கிறதோ அத்தனை நாள் ஊதியம் வராது
மழைகாலம் வருகிறது அதிகாரிகள், அரசின் மெத்தனத்தால்
தவறு நேருமோ அச்சத்தில் அன்றாடம் மக்களெல்லாம்

-  கவிஞர் அரங்ககோவிந்தராஜன்

**

வாழும் உயிர்களின் 
ஜீவாதாரம்  "தண்ணீர்"
நீரின் ஜீவாதாரம் "இயற்கை"
மனிதன் இயற்கையை எதிர்க்கிறான்
இயற்கை தன்னை தானே அழிக்கிறது!
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!
இயற்கைக்கும் உண்டு வாழ்வு!
இயற்கையை நாம் வாழ வைத்தால் 
இயற்கை நம்மை வாழ வைக்கும் புரிதலோடு 
நாம் நில்லாமல் இயற்கையோடு இணைவோம் 
இயற்கையை அழிக்காமல் காப்போம்! 
காத்தால் இனி வரும் காலம் எல்லாம் 
மழைக் காலம் மழைக் காலம்

- செந்தில்குமார் மு, திருநெல்வேலி

**
குளம்
காத்திருக்கிறது
பறவைகள் வருமென்று
வயல் பொறுத்திருக்கிறது
மறுபடியும்
பசுமை குலுங்குமென்று
பூமியின் நா
நீண்டு கிடக்கிறது வான்நோக்கி
அருவியின் கால்பதிந்த மலைப்பாறையும்
அண்ணார்ந்து பார்க்கிறது
மழைநீரில் சூடு தணிக்கச்
சூரியனும்
முந்தி வந்து நிற்கிறான்
இனிமேல் மழைக்காலம்
என்ற அறிவிப்பை
நம்பி...

- கோ. மன்றவாணன்

**

தனிமையில் அமர்ந்து
இனிய மழைபொழியக் கண்டு
கனிமரங்கள் காய்க்கும்
கதிரவன் வெப்பக்கதிர்கள்
சப்தமில்லாமல் தணியும்!
வானில் வானவில்
வர்ணஜாலம் காட்டும்
கருமேகங்கள் உறவாடி
தெருவெங்கும் நீரோடும்
மழைபொழியக் கண்டு
மக்கள் இன்பத்தில் மிதப்பர்!
வறட்சியால் ரேகைபோல்
விரிந்த பரந்த நிலங்கள்
இனிமேல் மழைக்காலம் கண்டு
இன்பக் காதலர்கள் இதழ்கள்
சந்திப்பதுபோல்
சத்தமில்லாமல் முத்தமிடும் !
இனிமேல் மழைக்காலம் கண்டு
மான்கள் துள்ளி ஓடும்
மீன்கள் துள்ளி விளையாடும்
ஆடு மாடுகள் பசுமை கண்டு
ஆனந்தத்தில் அசை போடும்
ஏங்கிய ஏரிகுளங்கள்
தூங்கிய கிணறுகள்
மழைநீரைக் கண்டு
தாங்கி தங்க வைக்கும் !

- கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

**

வெப்பக் காற்றின் வீச்சில் எரிந்தோம்
தப்பாது வியர்வைக் குளியல் குளித்தோம்
ஒப்பிலா சூரியன் மறைய மேகங்களில்லை
தப்பிய வெண் மேகங்கள் வானுலாவிலே

தென்றல் மெல்லென எழுந்து நடந்தது
கன்றாய்ப் பசுவாய் வளர்ந்து கனிவானது
ஒன்றாய் இருந்த மேகங்களைத் திரட்டியது
நன்றாய் அவற்றை சூல்கொள்ளச் செய்கிறது

சூடு தணிந்து சுகமெங்கும் சுழன்றாடியது
ஈடுசெய்ய முடியாத இன்பம் பரவியது
ஓடும் மேகங்கள் ஒன்றுகூடி மாநாடிட்டன
ஆடும் ஆட்டத்தில் நிறைசூல் கொண்டன

கனிந்த மேகங்களிலிருந்து பன்னீர்த் துளிகள்
புனிதத் துளிகளெனயெங்கும் சாரல் மழை
மனிதரைக் குளிர வைத்துக் கொண்டாடியது
இனிமேல் மழைக்காலம் இனிதாக நடக்குமே.

இனிமேல் மழைக்காலம் எங்கும் கோலாகலம்
தணியாத வெப்பமெல்லாம் தறிகெட்டு ஓடும்
பிணியாக இருந்த தண்ணீர் வறட்சி போகும்
கனி காய்களென நாடெல்லாம் சிறந்திடுமே.

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

கொட்டும் மழையால் வரும்வெள்ளம் கூடி வரவே வழிசமைப்போம் !
வெட்டி வைப்போம் ஓடையையும் விரிந்த கால்வாய் அத்தனையும் !
திட்ட மிட்டே ஏரிகளை சிறப்பாய் ஆழப் படுத்திடுவோம் !
மட்டில் லாத வெள்ளத்தை மறித்தே அணையில் தேக்கிடுவோம் !

நகரக் கால்வாய் அத்தனையும் நரகக் கால்வாய் ஆகாமல்
தகவாய் ஓட சரிசெய்வோம் தடைகள் நீங்க முறைசெய்வோம் !
நகரம் சிற்றூர் மூழ்காமல் நாளும் மக்கள் தவிக்காமல்
பகரும் திட்டம் பலசெய்வோம் படாமல் இன்னல் பார்த்திடுவோம் !

வடிகால் வசதி இல்லாமல் வதைந்த துன்பம் வாராமல்
விடிய விடிய மாடியிலே விழித்த நிலையை வீழ்த்திடுவோம் !
வடியா வெள்ளம் வீட்டுள்ளே வறட்சி நீக்க வழியில்லை !
பிடியாய் உணவும் இல்லாமல் பிறர்கை ஏந்தும் பிழைகளைவோம் !

வெள்ள நீரால் குளம்குட்டை விரிந்த ஏரி அணைகளினால்
உள்ளம் உவக்கும் உயிர்ப்பயிர்கள் ஓங்கி வளர்ந்தே உயர்வாக்கும் !
வெள்ள மழையை வரவேற்போம் வேண்டும் அளவில் நாம்சேர்ப்போம் !
வெள்ளம் வெல்லம் போலாகும் விரும்பும் இன்பம் விளைவாகும் !

- ஆர்க்காடு. ஆதவன்

**
(தரவு கொச்சக கலிப்பா )

வான்நிறைந்த கார்முகிலின் வடிவங்கள் கண்டிருந்தோம்
மான்துள்ளும் நிலைபோலே மனந்துள்ளி மகிழ்ந்தோம்
தேன்என்றே வரும்மழையைத் தேடுகின்றோம் வாடுகின்றோம்
ஏன்காணோம் மழைத்துளிகள் இரங்காதோ எமைக்காக்க
..............................
நீர்இன்றி நிலமெல்லாம் நிலைகுலைந்து போனதிங்கே
தூர்வாரிக் குறைபோக்கத் தோன்றிடுக மாமழை
சேர்ந்துவர வேண்டுமிங்கே சிலிர்க்கின்ற இடியுடனே
நேர்நின்று வேண்டுகின்றோம் நீர்நிறைக்கும் மழைத்தாயே
..............................
மண்ணின்றிப் பயிர்வருமோ மழையின்றி எதுவளரும்
கண்ணின்றிக் காட்சியினைக் காணுதற்கே வகையுண்டோ
விண்மழையே நீயின்றி வேருக்கு யார்தருவார்
பெண்போலும் கருணையிலே பேர்சொல்லும் தாய்நீயே
..............................
தவிக்கின்ற தாகத்தை தாயின்றி யார்தணிப்பார்
குவிந்திருக்கும் மேகத்தைக் குளிர்விக்க யார்வருவார்
செவித்திரையில் கேட்காதோ சேயெங்கள் கூக்குரலே
புவியெங்கும் பொய்க்காது “இனிமேலும் மழைக்காலம்”
..............................

-- கவிஞர் “நம்பிக்கை” நாகராஜன்.

**

வெயில் நாவில்
கருமுகிலிடம் இரவல் வாங்கிய
சொற்கள்
சட சட பட படவென உதிர்ந்து நின்றன
குழாயடியில் வெறுங்குடங்கள் மோதி உருண்டன போல்...

குடையற்று இருந்த மரம்
கொஞ்சம்
ஆட்டுவித்தக் காற்றில் விரித்துக்கொண்டன 
கிளைகள்...

நிலம் மீது விழுந்த துளிகள்
மணல் துளைத்த நண்டெனப்
புகுந்து கொள்ள
கொஞ்சம் அனல் உமிழ்ந்து கனன்றது
மண்ணின் உதடுகள்...

வானம் பார்த்தப்  பூமியும்
ஏரி,நதிகளால் வாழ்ந்த நிலமும்
உடுத்திக் கொண்டிருந்தன பாலையை...

கால்நடைகள் கவனிப்பின்றிக் கடக்க
அலறிப்புடைத்து மழைவரும் முன்
கூரை நோக்கி ஓடினர்
தாகம் தணித்துக் கொள்ளத் துடிப்பவர்கள்...

இனிமேல் மழைக்காலம் என்றாலும்
புறத்தை எரித்தவருக்கு 
அகம் குளிர யாது செய்யும்
இயற்கை...!?

- கவிஞர். கா.அமீர்ஜான்

**

புல்லதுவும் நெல்லதுவும் பூஞ்செடியும் கொடி,மரமும்
பொல்லாத வெய்யிலினால் பொசுங்கித்தான் போனதுவே !

ஆடையில்லா மரமாக அழகில்லாக் கொடியாக
கோடையதன் கொடுமையினால் குமைந்துத்தான் போனதுவே !

கட்டழகுக் காட்சியெலாம் காணாமல் கருகியதே !
தோட்டத்துப் பூவெல்லாம் சுருண்டேதான் வீழ்ந்தனவே !

ஆடுமாடு எல்லாமும் அலைந்தனவே நீரின்றி !
வீடுகளில் இல்லத்தார் வேதனையில் நீரின்றி !

கொடுங்கோடை சுட்டெரிக்கக் குமுகத்தார் கொடுமையிலே !
நெடும்பார்வை இடமெல்லாம் நிகழ்கானல் நீரோட்டம் !

கோடையனல் குளிர்விக்கக் கூடிவரும் மழைக்காலம் !
ஆடையெலாம் நனைந்திடவே அடிக்குமழை ஊர்கோலம் !

மழையுன்னை வரவேற்று மண்ணெல்லாம் பட்டினியாய் !
மழையுன்னை வரவேற்று மன்னுயிர்கள் கண்சோர்வாய் !

விண்ணுக்கும் மண்ணுக்கும் விரித்திடுவாய் மழைப்பாலம் !
கண்ணீரை விட்டவர்க்குக் கனிமழையால் தேன்பாயும் !

தாவரங்கள் எல்லாமும் தழையணிய நீரளிப்பாய் !
காவழகும் பூவழகும் காணவழி வகுத்திடுவாய் !

மழைக்காலம் உன்னாலே மறுமலர்ச்சி எங்கெங்கும் !
விளைவெல்லாம் விளைவாகும் விரிவானாய் மகிழ்வெங்கும் !

மழைக்காலம் அறிந்தேதான் வரிசையாய் எறும்பெங்கும் !
விழைந்துணவைச் சேர்க்கிறது விழிக்கநமை வைக்கிறது !

எறும்பைப்போல் நாம்கூட ஏற்றதெலாம் சேர்த்திடுவோம் !
சுறுசுறுப்பாய் இயங்கிடுவோம் தொடர்மழைநீர் சேமிப்போம் !

- து.ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி (திமிரி)

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com