அன்பே சிவம் வாசகர் கவிதை பகுதி 3

அன்பே சிவம் வாசகர் கவிதை பகுதி 3

 
அன்பே சிவம்
 
காலை கதிரவனின் இதமும் சுகமும் நீ
மாலை நேர மயக்கமும் சொர்க்கமும் நீ

அருகம் புல்லின் அற்புத மருந்தும் நீ
அறியாப் பிள்ளை சிரிப்புக்கு சொந்தம் நீ

மதியுடைய மக்களின் சுடரும் ஒளியும் நீ
சுதியுடன் சுரமும் மயக்கும் இசையும் நீ

பிறப்பினை அருளியப் பெருமானும் நீ
இறப்பினை தொகுத்து வைத்த தூயவன் நீ

அண்டத்தில் அணுக்களாய் நிறைந்தவன் நீ
கண்டங்கள் வகுத்து வைத்தக் கடவுளும் நீ

மணக்கும் பூக்களின் வண்ணமும் அழகும் நீ
சுணக்கம் இல்லாத உலகின் சுழற்சியும் நீ

ஆதியும் அங்கமும் ஆயக்கலைகளும் நீ
ஆதாரங்கள் அனைத்திற்கும் அதிபதி நீ

- இசைக்கவி பி.மதியழகன், சிங்கப்பூர்

**
தாய்மையதன் சிறப்பினாலே தாயு மானான்
    தந்தையவன் கடமைகண்டு தந்தை யானான்
வாய்மொழியாம் பிரணவத்தின் பொருளு மானான்
    வல்லார்க்கு மொழிவதனால் குருவு மானான்
நோய்நீக்கும் மருத்துவரின் மருந்து மானான்
     நோன்பிருக்கத் தீர்வுதரும் அரணு மானான்
சேய்போலே அழுதாலே அடையும் பேற்றை
      சிவமென்னும் அன்பாலே உணர லாமே

ஆய்ந்தறியும் அறிவுக்கும் எட்டா நிற்பான்
       அன்பென்னும் சிறுபிடியில் அண்டி நிற்பான்
பாய்ந்தோடும் நதியெனவே மலம றுப்பான்
       பைந்தமிழின் சுவையினிலே தலைமை கொள்வான்
காய்சினத்தைக் கனிவாக்கிக் கவர்ந்து கொள்வான்
       கட்டளையாய்க் காணாமல் அன்பு செய்வான்
மாய்பிறவித் தளையறுக்கும் மாயஞ் செய்வான்
       மறுபெயராய் அன்பேதான் சிவமென் பானே.

தேய்பிறையாம் வாணாளில் தெய்வத் தன்மை
       தெளியவைக்கும் உத்தியென அன்பைச் செய்வான்
தூய்மைபெறு முள்ளத்தில் சுடர்வி ளக்காய்த்
        தூண்டிவிட்டு வெளிச்சத்தை அன்பே என்பான்
பாய்ந்தலையும் மனமடக்கும் வித்தை சொல்ல
        பண்பெனவே அன்பதனைச் சிவமாய்க் காட்டி
வேய்ங்குழலின் கீதமென இன்பஞ் சேர்க்கும்
        விந்தையதை அன்பேதான் சிவமென் பானே!

- கவிமாமணி "இளவல்" ஹரிஹரன்

**

நட்பு அது தொடர
உண்மை அன்புப் பிடிப்பு வேண்டும்.
தன்னை வருத்தி
பிறரை உயர்த்தி
தன்னலம் காணாதவர் யாரோ
அவர்
வசம் இருக்கின்ற அன்பே சிவம் என்பேன்.
ஆம் அன்று உலகத்தார் நலம் காக்க நஞ்சை உண்டவன் சிவனன்றோ?
அந்த அன்பிற்கு ஈடு ஏதும் உண்டோ?
அன்பென்றாலே அடிபணியும் தெய்வம் சிவன்.
63 நாயன்மார்களை சோதிக்கிறான்
அவர்களின் தியாகநிலையை
அன்பின் தரமதை
அறிந்ததும் அந்த
அன்பிற்கு சிவன்
அடிமையாகி
அவர்களை சிறப்பு
நிலையில் நிலைக்க வைக்கும் செயல் தான்
அன்பே சிவம் என்றே ஆனது.
யாரையும் அன்பால் வெல்லலாம்
அதனை அன்பே சிவம்
என்றே சொல்லலாம்.

- களக்காடு வ ‌.மாரிசுப்பிரமணியன்.

**

அன்பைப் பொழியும்
ஆண்டவன் கைகளில்
ஆயுதங்களா...

அப்படித்தான்
வரைந்து கொண்டு வழிபடுகிறோம்
கடவுளர்களை நாம்...

வன்முறைக் கூடாதென்று
வன்முறைகளால்
வாழ்ந்து கொண்டிருப்பது
வாழ்க்கைமுறையென ஆகிவிட்டது

அவனும் நானும் இவனும்
நாமாக 
விடாமல் தடுக்கும் ஆட்சிமுறையை
ஜனநாயகம் என்கிறோம் நாம்...

கழிவுகளையும் சாக்கடைகளையும்
மறுசுழற்சிச் செய்யும் நாம்தான்
அனைவருக்குமானது
அன்பென்று
ஆகவிடாமல் தடுக்குகிறோம்...

அறிவொன்றால் ஆகாதெனினும்
அன்பினால்
ஆகிவிடுவதாக நேசிக்கிறோம்
சுயநலத்தை...

அன்பில்லையென்றால்
அன்பே சிவமில்லை
அது சவம்...

- அமிர்தம்நிலா

**
ஆசை அன்பு  அச்ச அன்பு இறை அன்பு 
என்று அன்பு எடுக்கும் பல அவதாரம் ! 
இது ஒரு  மஹரிஷியின் வாக்கு !
எல்லா உயிரையும் இறைவனாகப் 
பார்த்து பாவித்து இறை அன்பை 
வேண்டி நின்றால்  இறைவன் பொழிவான் 
அவன் அன்பை உன் மேல் தம்பி !

அன்பே சிவம் என்னும் உண்மை நிலை 
உனக்கு புரிந்து விட்டால் , இறை அன்பு 
தவிர்த்து , ஆசை அன்பும், அச்ச அன்பும்
துச்சமாகத்  தெரியும் மிச்ச வாழ்வில் உனக்கு !
இறை அன்பு ஒன்றுதான் நிலையானது 
என்னும் உண்மை  உனக்கு தெரிய வரும் நேரம் 
அன்பே சிவம் என்பதின் அர்த்தமும்  புரியும் 
உனக்கு  தம்பி ! 

- K. நடராஜன் 

**

அன்பிலா வித்தை குழிதோண்டி 
ஊன்றி இழிவுநீரூற்றி வளர்த்து 

கோடரியால் வெட்டிச் சாய்த்து 
தீமூட்டி குளிர் காயும் ஜகமிதிலே அன்பில்லையாம் 
அஃதே அத்துள் சிவமு மில்லையெனக் கண்டார்

ஒருவர் நற்செயலினைக் கண்டு 
அகமகிழ்ச்சி கொண்டோ மென்று முகமலர்ச்சியில் காணும் 
போதவ் வன்பேசிவ மென்றுத் தோன்றுமே 

நன்மையாவும் அன்பிலிருந்தே 
துளிர்விடு மவ்வன்பே சிவமாகும் 
தீமையாவும் அன்பின்மையாலே 
நிகழ்பவை சிவமின்றி சவமாகும் 

அன்பை இழந்து வாழும் வாழ்க்கை 
சிவமில்லா தொரு நரகமென்பார்
அன்பில் தோய்ந்த வாழ்க்கையன்
பில் சிவம் கலந்த மோட்சமேயாம்

- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான் 

**

நெற்றியிலே நீறணிந்து நினைவெல்லாம் சிவனென்ற
பற்றுடனே சைவரென்று பக்தியுடன் திரிபவரே
திருநாமம் நுதல்வைத்துத் திருமாலின் புகழ்பாடிப்
பெருமையுடன் வைணவரென்று பேசிதினம் தொழுபவரே
கழுத்தினிலே சிலுவையுடன் கர்த்தரிடம் மண்டியிட்டுக்
கிறித்துவராய் மேய்ப்பானின் கிருபைக்காய் செபிப்பவரே
குல்லாவைத் தலையணிந்து குனிந்துதினம் ஐந்துமுறை
அல்லாலைத் தொழுமிசுலாம் அன்பரென நிற்பவரே
மதங்களெல்லாம் காட்டுகின்ற மகத்தான ஒருசின்னம்
அகந்தன்னில் அணியாமல் அவலத்தை விதைக்கின்றோம்
அன்பென்னும் பொதுச்சின்னம் அகமேந்தி மாந்தநேயப்
பண்புடைய மனிதனானால் பகையின்றி வாழ்வோமே !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**                              
அன்பே சிவம்
அன்பே சிவமென்று 
ஆதி முதற்கொண்டே
இந்த உலகத்தில்
ஈகைக் குணமுடையோர்
உரக்கச் சொல்லியே
ஊராரை ஏற்கச்செய்து
எல்லோர் மனதிலும்
ஏற்றத்தைத் தோற்றுவிக்க
ஐயமது போக்கி
ஒற்றுமை நிலவிடவே
ஓங்கி ஒலித்ததை
ஔடதமாய்ப் பாவித்து
அஃதையே பின்பற்றிட்டார்!
அன்புதான் சிவமென்றும்!
சிவனே அன்புமயம்!
எல்லா மதங்களுமே
ஏற்பதும் அன்பினையே!

- ரெ.ஆத்மநாதன்,,கூடுவாஞ்சேரி

**

அன்பே சிவமென்ற
அறிவிப்புப் பலகையின்
அருகமர்ந்திருந்த ஆன்மீகவாதியவன்;
வாயிலில் ஐயா என்றைக்கும்
வறுமையின் உருவமாய்
கந்தலே ஆடையாய்
வயதுமுதிர்ந்த மூதாட்டியின் 
பசிப்பிணியின் அவலக்குரல்..

கண்டும் காணாதவனாக
கேட்டும் கேளாதவனாக
முகம்திருப்பி அப்படியே
அதிகார குரலெழப்ப 
ஆசிரியருடன் வந்து நன்று

அவதூறாக திட்டிவிட்டு
வேண்டிநின்றவளை அப்புறப்படுத்த 
மனமொடிந்து மாற்றுவழி
நாடியே நகர்கிறாள்...
விரட்டிவிட்ட வெற்றியில்
எக்காளமாய் நகைத்தான்
ஆன்மீகவாதி.. அங்கிருக்கும்
சிவனும் சிரிக்கிறார்....
அவன் செய்த விணைப்பயனை
எண்ணி... எண்ணி.....

- கவி தேவிகா, தென்காசி.

**

அருளாய்
ஆக்கமாய்
இன்பமாய்
ஈகையாய்
உலகாய்
ஊக்கமாய்
எழுச்சியாய்
ஏற்றமாய்
ஐயுணர்வாய்
ஒழுக்கமாய்
ஓம்பலாய்
ஔடதமாய்
அஃதே வான அன்பே இறை!

(ஓம்பல்  - காத்தல்; ஔடதம்  - மருந்து)

- கு. இரா, வடக்கு அயர்லாந்து.

**

உமையவளின் பாதி சிவன் 
முக்கண்ணன்  அவனின் 
எக்கண்ணும்  பூவுலகை 
நோக்கும் .......அதில் 
இருக்கும்  முழுவதுமான  அன்பு!
அன்பு உள்ள இடத்தில்  இரக்கம் பிறக்கும்!
இரக்கம் உள்ள இடத்தில்  கருணை பிறக்கும்!
கருணை உள்ள இடத்தில்  கடவுள் பிறப்பான்!
பிறக்கும் கடவுள் போதிப்பது  அன்பை....
எம்மதத்திலும்  கடவுளை 
அன்பின் வடிவில்  ஆராதிக்கும் 
பண்பான செயலையே 
அறிவுறுத்துவது  வியப்பில்லையே!
கடின  சொல் கடுப்பை  வளர்க்கும்
அன்பு சொல் நட்பை வளர்க்கும்!
துன்பம்  தரும்  கடின சொல்லை  மறந்து 
இன்பம் தரும் அன்பான  சொல்லையே  பேசுவோம்!
அந்த அன்பில் கடவுள் உறைவதால் 
எந்த தயக்கமும் இன்றி சொல்வோம் 
அன்பே  சிவம்........................!
அன்பே சிவம்.........................!
அன்பே  சிவம்.........................! 

- பிரகதா நவநீதன்.  மதுரை 

**

அன்பு என்ற    மூன்று  எழுத்து 
துன்பம் என்ற   நான்கு  எழுத்தினை 
ஓடச்  செய்யும்  சிவனின் 
திடமான சக்தி  கொண்டது!
அதிகாரத்தை  மறந்து 
சாதிக்காரரிடமும்   அன்பை  காட்டினால்
மதி குளிர  மனம் மாறி 
நட்பு உள்ளதோடு பழகி 
கடவுளாகிய  சிவனை
கண்முன்னே  கொண்டுவரும் 
தன்னிகரில்லா சக்தி உடைய 
வன்முறையினை  மறக்கச் செய்யும் 
ஆயுதம்...........அன்பு!
குழந்தையின்  அன்பு உலகை 
மறக்கச் செய்யும்.........
முதியவரின்  அன்பு உலகை 
அளந்து  நடக்க நல்லவழியினை
பிளந்து  காட்டும்  பண்புடையதே!
அனைவரிடமும்  அன்பு காட்டு
இதில்.................. கிடைப்பது  
 நட்பும்   உற்றமும் சுற்றமும்!
அன்பு செய்வோம்..........
உறவை  வளர்ப்போம்.............!

- உஷாமுத்துராமன்,  திருநகர்

**

பூஞ்சோலையில் தேன்வார்ப்பது பூவின் தவம்!
---பூமியில் தானென்பதை அழித்தலது அன்பே சிவம்!
தீஞ்செயல் எல்லாம் அவன்கையில் ஆகும் வதம் !
----திருமுடி அணிந்தோனை வணங்கிட வந்திடு நிதம்!
செஞ்சூரிய விழிகளால் பொசுங்கியது கரும்புவில் மன்மதம்
-----சேவைகளிட்டு பூஜைகள் செய்திடுக சிவனின் பொன்பதம்!

உள்ளமே அன்பென மனிதா உயர்வென நம்பிடு!
----------உயிரைவிட உணர்வே சிறந்த கடவுளென கும்பிடு!
கள்ளமே இல்லாது சேயாய் இறைவனையே தொழுதிடு !
---------காலத்தால் சேர்ந்திட்ட உந்தன் மனக்கசட்டை கழுவிடு!
வெள்ளமே வந்தாலும் பயமறியாது அவன்கை பற்றிடு!
------வெண்ணிற நீர்பூசி சிவசிவயென சிவசன்னதி சுற்றிடு !

கந்தலே கட்டினாலும் பகட்டை அன்பது விரும்பாது!
-----கன்னியர் கவரிவீசினாலும் கண்கள் அங்கே  திரும்பாது!
சிந்தையிலே சிவனிருந்தால் உன்னில் எதுவுமிங்கு தாழாது!
----சித்திதனை நித்தம் பெற்றால் உன்மனம் வீழாது!
பந்தியிலே பணமிருந்தும் களவாட கரமதை தொடாது!
----படுகுழியில் நீ! விழுந்தினும் அன்பு காக்காமல் விடாது!

-அ.அம்பேத் ஜோசப்

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com