அதிரூபன் தோன்றினானே வாசகர் கவிதை பகுதி 2

ஒவ்வொரு திசை நின்று ஒவ்வொரு தீர்க்க தரிசிகள்
அதிரூபன் தோன்றினானே வாசகர் கவிதை பகுதி 2


அதிரூபன் தோன்றினானே

அந்த அகன்று விரிந்த சாலையோரத்தில்
அடிபட்டுக் கிடந்த நாய்குட்டியொன்றை
வாஞ்சையுடன் வருடிக் கொடுத்து
மருந்திட்டுக் கொண்டிருக்கிறான் ஓர் அதிரூபன்!

அந்த மூவர்ணச் சமிக்ஞையில்
முடமானவளை முதுகில் தூக்கிச் சுமந்துகொண்டு
அழுக்குருவாய் அலைந்து கொண்டிருக்கிறான்
இன்னொரு அதிரூபன்!

அந்த ஆளரவமற்ற சிறுதெருவில்
படர்ந்திருக்கும் அடர் இருளில்
தனித்து நடந்தவளைப் பின் தொடர்ந்தவனை
அக்கினிப் பார்வையால் துரத்தி
அண்ணனாய் துணைவந்தவனிடமும்
அப்படியே அப்பியிருக்கிறது அதிரூபனின் சாயல்!

இப்படி ..
அங்கங்கே பல அதிரூபன்கள்
தோன்றிக் கொண்டுதானிருக்கிறார்கள்..
அதைக் கண்டுகொள்ளாத கண்களில்தான்
ஊனம் தொற்றிக் கொண்டிக்கிறது!

- கீர்த்தி கிருஷ்

**

ஆண்டாண்டு காலம் மறைந்திருந்த வரதன் 
மண் மீது தோன்றினானே,
மக்களும் காணவே - மலர் படுக்கை காட்சியாய்
ஆனந்தசயனத்திலும வன்,
இன்று வருமோ என்று வருமோ என யானறியேன் 
எனுமாறு - முண்டியடித்துக் கதை முடித்துக் கொண்ட
நால்வர்,
உள்ளத்து ஒருவனை - உள்ளுறு ஜோதியை
தள்ளுமுள்ளு ஏதுமின்றி
தரிசித்தேன் - நானும் தொலைக்காட்சி வாயிலாய்
நாராயணம் பரமம் குரு
நாற்பதாண்டு அல்ல
தெரியாதவர் மனதிற்கு என்றும்
மறைபொருள் - தான்
இறைவன்.

- கவிதா வாணி - மைசூர்

**

குவலயத்தில் ஐம்பூதம் குறுங்கல்லாய் ஒடுங்கியது.!
புவனத்தில் உயிர்களெலாம் புத்துக்குள் ஒளிந்திடவே,!
அவதாரம் அவனெடுத்தான் அரக்கனையே ஒழிப்பதற்கு.!
தவமிருந்தோர் நலம்பெற்றார் தவசீலன் அருளாலே.!
.
அதிரூபன் தோன்றினானே அண்டத்தின் குலைநடுங்க.!
விதிவலியை நிரூபிக்க வியாபித்தான் நரசிம்மன்.!
சதிசெய்த இரணியனின் சரீரத்தைக் கிழித்தானே.!
மதிசெய்த வியூகத்தால் மடையனையே மாய்த்தானே.!
.

அதிகமான நேரமில்லை அழிப்பதற்கே அரைநிமிடம்.!
உதித்தானே ஒருநொடியில் உதைத்தபடி தூண்பிளக்க.!
விதிவென்று பகைவெல்ல விலங்குமுக வடிவானான்.!
இதிகாசம் போற்றுகின்ற இச்சிங்க முகரூபன்.!
.

இரணியனை நாடறியும் இரக்கமற்ற தந்தையென.!
வரமாகும் சிங்கமுகன் வதம்அவனைச் செய்தற்கும்
பிரகலாதன் பக்தியினைப் பார்போற்றும் சக்தியாக்க
நரசிம்ம அவதாரம் நன்கெனவே நாமுணர்வோம்.!
.
மலிவாகும் தலைவனாக மக்களுக்குச் சவாலாக
கலியுகத்து இரணியனைக் கண்டதுண்ட மாக்குதற்கு
புலிமுகத்தில் அவதாரப் புதியரூபத் தோன்றலிலே
பலிகொடுக்கும் பீடத்தில் பக்தனுக்குக் காட்சிகொடு.!

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

துன்பத்தை தன்னுள்ளே ஏற்றுக் கொள்ள
துயர்நீங்கத் தன்னுயிரைத் மாற்றிக் கொள்ள
அன்பரென அனைவரையும் சேர்த்துக் கொள்ள
அவர்தானே உலகத்தில் முதலாய் நின்றார்
வன்கொடுமை செய்தோர்க்கும் மன்னிப் பென்றே
வாஞ்சையுடன் சேர்த்தணைத்துக் கொண்டார் என்றும்
மன்பதையில் பாவமெனும். சிலுவை தாங்கி
மனிதமெனும் மேல்நிலையைக் காட்டித் தந்தார்!

புரியாது தவித்திருக்கும் மனிதர்க் கென்றே
புதுப்பிறப்பாய் புறப்பட்டார் மூன்றாம் நாளில்
தெரியாதே செய்கின்ற குற்றம் நீங்க
தெளிவாகத் தீர்க்கின்ற உரைகள் தந்தார்
பரிவாலே வருகின்ற மழையைப் போலே
பரிசுத்த ஆவியெனப் பாசம் தந்தார்
அரிதென்றோர் அவதாரம் என்றே மண்ணில்
“அதிரூபன் தோன்றினானே” அன்பின் ஏசு!

- கவிஞர் 'நம்பிக்கை' நாகராஜன்.

**
மறக்கின்ற மனத்தின் உள்ளே
மங்காத ஜோதியாய் ஒளிர்ந்து
அகரத்தைக் காட்டி
சிகரத்தில் நிறுத்தும்
சிந்தாந்தம் அருளிய
சிருங்காரக் குணங் கொண்ட
சித்தியைத் தரும் சித்தனே!

கண்ணுடை மனிதன்
காட்சியைச் சொல்லான்
கண்கெட்ட மனிதன்
காட்சிக் கண்டு, 
அவ்வேடங் கொண்டு
நானே என்பான்
அசுரகுணங் கொண்ட
அடங்காத அஞ்ஞானி
ஞானத்தைத் தேட 
மானமிழந்தவன்,
இது போல் திரிவோரை
அடக்கிட அப்பா உன்
அதிரூப பெருங்ஜோதி காட்டு.....

- முகில் வீர உமேஷ், திருச்சுழி.

**

அச்சுறுத்துகிறது
கரும்பாம்புகளோ என மிதந்து நெளியும்
இரவுக் கடல்
திகைக்க வைக்கிறது
திசைகளைப் பறிகொடுத்துக் கிடக்கும்
புவி
விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில்
கருஞ்சாந்து
நிரம்பி வழிகிறது
வாழ்க்கையின்
எந்தப் பக்கம் திரும்பினாலும்
முட்டுகிறது
இருட்டால் பிசைந்து எழுப்பிய சுவர்
காத்திருந்தேன்... நம்பிக்கையுடன்
காத்திருந்தேன்... பொறுமையுடன்
அதோ
கையில் விளக்கோடு
அதிரூபன் தோன்றினானே....

- கோ. மன்றவாணன்

**

இல்லாத ஒன்றுக்கு
ஏன் சண்டை
பகுத்தறிவின் கேள்வி?
இருக்கின்ற பல வழிக்கு
புரியாத பேய்ச் சண்டை;

உலகைப் படைத்தவன்
உயிரை விளைத்தவன்
உணர்வாய் வந்து
உணரு என்பவன்

கற்பனைக்கு எட்டா
அற்புதப் படைப்பினன்
ஆலாலம் போன்ற
ஆபத்தைத் தடுப்பவன்

அந்த அதிரூபன்
அரூபமாய் பிரிந்து
உருவருமாய் ஒளிர்ந்து
தோன்றி அருளுபவன்......

- சுழிகை ப.வீரக்குமார்.

ஒவ்வொரு திசை நின்று ஒவ்வொரு தீர்க்க தரிசிகள்
ஒவ்வொரு காலத்தில் ஒற்றுமைக்காக 
ஓங்கிப் பிரசங்கித்தார்கள், போலவே
ஒவ்வொரு பிரசங்கிப் பின்னும் தொடர்ந்தார்கள்
அவரவர் விருப்பமானவர்களின் பின்னும்
குழுக்களாகி குன்றுகள் மலையடிவாரங்கள் பாலையென
விரிந்து பரவியவர்களின் நெறிகளில்
உடல் பொருள் ஆவியென அர்ப்பணிக்க பிளந்தன
பிளவுகளில் தம்மைத் தான் உயர்த்திக்காட்ட

கிலேசங்கள் கிளர்ந்தெழ கிழக்கு மேற்கு வடக்கு தெற்கென
திசைகளாகி பொருதுவதிலிருந்து மீளவும்
மானுடம் காக்கவும் வேண்ட
அதிரூபன் தோன்றுவானென நம்பி
திரும்பிப் பார்க்கக் காணாமல்
சூன்யமாகிக் கிடந்தது வெளி...

- அமிர்தம்நிலா.நத்தமேடு

**

அத்தி வரதரெனும் அதிரூபர் காஞ்சியிலே….
முத்தி தருவாரென்றே முண்டி யடித்தபடி
சித்தமெலாமந்த ஸ்ரீ் ஹரியையே நிரப்பி
பக்தியிலே ஊறிப் பலபேர் வருகின்றார்.

கண்ணுக்கு விருந்தாகி கருத்துக்கும் நிறைவு தரும்
உண்மை யுணர்விக்கும் உபாசனைகள் செய்வதனால்
எண்ணம் புனிதமுறும், இறைவன் அருள்தருவான்
என்னும் நம்பிக்கையதே இங்கவர்க்கு மீட்சி தரும்

ஆழக் குளமிருந்து அத்திவரதப் பெருமாள்
வாழ்விக்க மேல்வந்தார் மக்கள் சேவிக்கின்றார்
மீளத் திரும்பியவர் மீண்டும் சயனிக்கப்
போனாலும் நம்பிக்கை போகாது ஓர்நாளும்.

 - சித்தி கருணானந்தராஜா.

**

தீக்குள்ளே உடல்தன்னை மூழ்கச் செய்யும்
----தீர்ப்புக்கே உடன்பட்டுச் சாவ தற்கா
ஏக்கத்தை மனம்வைத்து மணம்மு டித்தாய்
----ஏனிந்த அவலங்கள்! தங்க மேனி
பாக்குமரக் கழுத்தினிலே மாலை போடப்
----பணத்தாளின் கட்டுகளைத் தட்ச ணையாய்
வாக்களித்த காரணத்தால் அன்றோ வஞ்சி
----வடிக்கின்றாய் செந்நீரைக் கணிணீ ராக !
புன்னகையின் அழகுதனைப் பார்க்க வில்லை
----பூரிக்கும் பண்புதனைக் காண வில்லை
பொன்னகையும் பொருள்நகையும் பார்த்துத் தாலி
----பூட்டுதற்கு வருகின்ற பேடி யர்க்குத்
தன்தலையைத் தாழ்த்துகின்ற நெஞ்சின் கோழைத்
----தனத்தாலே விலைதன்னைப் பேசு கின்றார்
வன்நெஞ்சர் பெண்களினை அடிமை யென்றே
----வன்முறையில் தன்முறையைச் சாதிக் கின்றார் !
நாற்குணத்தின் நளினத்தைப் படைக ளாக்கு
----நாணிக்கண் புதைக்கின்ற போக்கை மாற்று
வேற்படையில் தீக்கனலைப் பாய்ச்சு பெண்ணே
----வெகுண்டெழுந்தே உன்னினத்தை ஒன்றாய்க் கூட்டு !
சேற்றுமன ஆடவரை எதிர்ப்பாய் நன்று
-----சேர்க்கின்ற வாழ்விற்கோ அன்பே நாற்று
சாற்றிடுவாய் செயல்படுவாய் ஆண வத்தைச்
-----சாய்த்திடுவாய் அதிரூபன் வருவான் மணக்க !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com