'இந்த நாள் இனிய நாள்' வாசகர் கவிதை பாகம் 2

உண்ணும் உணவும் உயர்காய் கனியும் உலகில் இயற்கை தருகிறது
good day
good day

இந்த நாள் இனிய நாள்

உழைக்கும் வர்க்கத்தின் வியர்வை உறிஞ்சி,
சிவன் கோவிலிற்கு  சுவர் எழுப்புவார் !!
அரசுப்பணியில் அமர்ந்து,
அக்கிரமங்களை நுகர்ந்து,
“அந்தப்” பணத்தில்
அன்னதானம் செய்வார் !!
ஆற்று மணலை அரிந்து,  ஆக்கம் பெருக்கி ,
ஆங்காங்கே மரம் நடுவேன் என்று
அடம் பிடிப்பார்,  அதை படம் பிடிப்பார் !!  
களவும், கலப்படமும் கண்கள் இவருக்கு ,
கண் சிகிச்சை முகாம் ஒன்றை
தொடங்கி வைப்பார் !!
மாசுக்கட்டுபாடு இல்லாத மனித மனங்கள் –
முரண்களுக்குள் மூழ்கிய சமுதாயம்,
முகம் நிமிரும் நாள் உண்டோ ?
நெஞ்சத்தில் வஞ்சகக்குப்பைகளை,
தன் கருணைக்கடலால், இறைவன்
துடைக்கும் நாளே – இனிய நாள் !

- கவிஞர்.  டாக்டர் எஸ். பார்த்தசாரதி

**

இந்தநாள் இனியநாள் என்றாகக் காண்பதெலாம்
எந்தவொரு மாந்தர்க்கும் எளியதுவாம்! -- வந்தவரை 
அன்புடனே வரவேற்கும் அருமைமிகு பண்புதனை
என்னாளும் காப்பாய் இசைந்து!

இனியநன் நாளதுவாய் என்னாளும் அமைந்துவிட
கனிவுதனைப் பொழிந்திடுக காண்பவர்மேல்! -- புனிதமென 
ஆவதெலாம் மனதினிலே அன்புணர்வைக் கொள்ளுவதே,
தேவாம்சம் எனத்தக்க திது!

இனியநாள் எனப்போற்ற இலக்கணமென் றாவதெலாம்
புனிதசொயல் தனைபுரியும் பொன்னாளே! -- என்னாளும்
இன்னதனை மறவாமல் இருப்பவனே மனிதனாம்,
அன்னவனைப் போற்றாதார் ஆர்?

நல்லதனைச் செய்துவர நாள்பார்க்க வேண்டுவதோ,
எல்லா நாட்களுமே இனியநாள்! -- இல்லார்க்கு
உதவுகின்ற என்னாளும் உன்னதநற் திருநாளே,
இதனைவிட மகிழ்ச்சிவே றேது?

- அழகூர்.  அருண்.  ஞானசேகரன்

**

இந்த நாளும் இனிய நாளே!!
வருகின்ற எந்த நாளும் 
நல்ல நாளே!!
தன்னம்பிக்கை கொண்டு முயன்றிடு!! 
உன்னுள் இருக்கும் தைரியத்தை உசிப்பிடு!! 
நல் திட்டத்தைத் தீட்டி
ஆராய்ந்துச் செயல்படுத்து!!
கஷ்டங்கள், தோல்விகள்
எதிர்கொண்டு - கடந்து செல்
நினைத்தது முடியும் வரை
மாற்றம் ஒன்றே மாறாதது எனில்!!
நினைத்தது மாறும் வரை மாறாதே!!
உன்னுள் இருக்கும் தீப்பிழம்பு!!
அது ஆயிரம் சூரியனின் ஒளிப்பிழம்பு!
நடந்ததை எண்ணி வருந்தாதே!!
இன்றும் நமதே!! நாளையும் நமதே!!
மனமகிழ்வோடு ஆரம்பிக்கும் 
எந்த நாளும் இனிய நாளே!!!

- மு.செந்தில்குமார், ஓமன்

**

கடந்து விட்டதை மறந்து விட்டால்
நிகழ்வில் தெரியும்
சங்கடத்திலும் சுவைபடும் சுகம்...

நாளைக்கான நினைப்பில்
நிகழ்வதைத் தொலைத்துவிடத்
துணியும் மனத்திற்குச்
சவாலாக அமைந்துவிடுகிறது அறிவு...

இன்று
இப்போது
இக்கணம் தெரிக்கும் பொறி
துளியாயினும்
துளிர்க்கும் வெளிச்சத்தில்
இனிய உதயம்...

சிறகை முறித்துவிட்டு
ஆகாயம் சுருட்டும் பேராசை
முடத்தின் கொம்புத் தேனெனத் தெரிந்தும்
போதுமென்ற விருப்பத்தை
முடிந்து கொள்ள முயலுவதில்லை
வெறித்த மனம்...

இந்த நொடியின் இனிமையை
அட்சயப் பாத்திரமாய் ஆக்கிக் கொள்ள
உழைக்காமல்
ஆகாயச் சுகத்தை அள்ளத் துடிப்பது
அறியாமையெனத் தெரியாமலில்லை
அறிவுக்கு...

நேற்றை மறந்துவிடு
நிகழ்வை விரட்டி  விட்டு
கனவுக் காணாதே நாளைக்கு
நாளைக்கான நகர்வு இன்றுதான்...

இப்பொழுதின் நிஜத்தை நேசி
இந்த நாளின் இனியநாள் தான்
வாழ்க்கையின் பரிபூரணம்...

- அமிர்தம்நிலா, நத்தமேடு

**
மனிதனென ஆகிவிட்டதில்
மயங்கங்கள் வருவதிலிருந்து
தப்பித்துக் கொள்ள முடிவதில்லை

மனதிற்கும் அறிவிற்கும்
நிகழும் போராட்டங்களிலிருந்து
விடுதலைப்பெற வேண்டி
முடிவெடுக்க முடியாமல்
ஊஞ்சலாடும் வேட்கையில் தவிக்கிறது
நாட்கள்

நிச்சயமும்
நிச்சயமற்றதுமான முரண்களில்
முந்தி வருத்தும் விருப்பங்கள்
விலகுவது போல்
இருந்து கொண்டிருப்பதால் துடிக்கின்றன
புலரும் அஸ்தமனப் பொழுதுகள்

இன்று பிறந்ததில்
மகிழ்ந்து கொள்ளும் பிரமிப்பில்
வழிநெடுக முட்களும் மலர்களும்

அன்று தொடங்கிய
வாழ்வின் போராட்டங்ளுக்கிடையில்
நாவில் விழும்
தேன்துளியின் இனிப்பில்
இந்த நாள் இனிய நாளென்று
சொல்லிக் கொள்ள விடுவதில்லை
ஆசையின் நிர்வாணம்

எனினும்
திருப்திப் படுத்திக் கொள்ள முயலுகிறது
அறிவும் மனமும்
காலங்காலமாக...

- கா.அமீர்ஜான்/ திருநின்றவூர்.

**
இன்றைய பொழுது இனிதாகட்டும் சுகராகமாக
கன்றுக்கு தாய் தரும் பாலமுதாகட்டும் உணவாக
குன்றெனவே நிமிர்ந்து நிலையாகட்டும் நிறைவாக
நன்றெனவே நாளும் பொழுதும் நலமாகட்டுமே

அன்புக்கு மரியாதை தரும் அற நெறியாகட்டும்
பண்புக்கும் பணிவுக்கும் பொருள் புரிவதாகட்டும்
என்றென்றும் உண்மையின் பக்கமாய் நிற்கட்டும்
வென்றிடட்டும் ஏழைகளின் மனங்களை அன்பாலே

பொல்லாப்பு பொறாமை பறந்தோடிப் போகட்டும்
இல்லாதவர் மனங்களில் இன்பப் பூ பூக்கட்டும்
கல்லாதவரையும் கற்க வைத்து இன்பம் பெறட்டும்
நல்லாரை நாடுபோற்ற வாழ்த்தும் நெஞ்சாகட்டுமே.

பகிர்ந்துண்டு வாழும் பரந்த மனதின் நாளாகட்டும்
அகிலம் புகழும் மதிப்போடு நடை போடட்டும்
சகிப்புத் தன்மையில் தனித்துவம் பெறட்டும்
மகிழ்ச்சிக் கடலில் குளித்து புத்துணர்ச்சியாகட்டும்

இந்த நாள் இனிய நாள் இன்றுபோல் என்றுமாக
சந்தம்நிறை பாடலாக இனிய இசையாகட்டும்
பந்தம் பாசமெனும் கட்டுக்கோப்பில் கனியட்டும்
நந்தகோபனின் புல்லாங்குழல் இசையாகட்டுமே

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

வெண்மையான மல்லிகையே
மென்மையான  உன்னிடம்
தூய்மையினை கற்ற  நான்
ஏழ்மையினை மறந்தேன்
என்பதால்  அந்த நாள்
எனக்கு இனிய நாள்!
முத்து முத்தான முல்லையே
கொத்துக் கொத்தாக  மலர்ந்து
பூத்து குலுங்கும்  உன்னிடம்
கூடி வாழக் கற்ற  அந்த நாள்
எனக்கு இனிய நாள்!
பூக்களிடம் பாடம்  கற்ற நான்
புரிந்துக் கொண்டது உலகத்தை!
இருபது வயதில்  இருக்கும் இளமை!
அறுபது வயதில் இருக்கும் பொறுமை!
இப்படி  வாழும் ஒவ்வொரு நாளும்
இனிய   நாள்தான்!
எந்த நாளையும்  நம்பிக்கையோடு தொடங்கு,
அந்த  நாள் இனிய நாளாகவே அமையும்!.
இனிமை....இனிமை....இனிமை.... என்று
தினம் பல முறை சொல்வோம்!
மகிழ்ச்சியோடு   வாழ்வோம்! 

-  பிரகதா நவநீதன்.  மதுரை  

**
புலரும் பொழுதிலே
மலரும் அழகு 
எத்தனை எத்தனை !?
நித்தம் தோன்றும் வானம்!
சத்தமின்றி உதிக்கும் சூரியன்!
புத்தம் புதிய வண்ணமலர்கள்.!  
காணக் காண பரவசம் !
மழையின் ஈரத்தில
மணக்கும் மண்வாசம் !
மரங்களின் அசைவும்
மகரந்த வாசமும்
மகிழ்ச்சி ஊட்ட......
மண்ணோடும்
விண்ணோடும்
மனது பயணிக்க......
காதுகளை நிறைந்த
காக்கையின் கரைதல்...
குக்கரின் விசிலுடன்
கைபேசியின் சிணுங்கல்....
அருமைப்பேத்தி பிறந்த செய்தி!.
ஆனந்தத்தை அள்ளித் 
தெளிக்க......
இந்த நாள் இனிய நாள்... 
இதயமது கூவிட
இனிய கவிதையும் பிறந்தது..

- ஜெயா வெங்கட், கோவை 45 

**

எத்தனை கோடி
இன்பம் 
எதில் கண்டிட
கண்டோம்...

இத்தனை இருந்தும்
இந்த
நாட்டில்  யார்
 திருப்தி அடைந்திட
 கண்டோம்.

வெட்டும் கோடாளிக்
கூட,
வெட்கப்படும் அளவிற்கு
மரங்கள் 
இல்லா  காடுகள் 
கண்டோம்..,

கொடியில் பூ 
மலர்ந்தால் மகிழ்ந்திட
கண்டோம்.,
வீட்டில் பெண்
பூப்பெய்தினால் செலவு
என்று பழித்திட
கண்டோம்...,

போலி உலாவும்
உலகில் உண்மை
மட்டும் எங்கோ
இருட்டில் மறைந்திட
கண்டோம்...

தொழில்நுட்ப இருந்தும்
கைக்கு  எட்டாத
இன்பதை தேடியே
தினமும் அழைக்கிறோம்,
இந்த நாள்
இனிய நாள்....,

-கவிஞர். மைக்கேல் மனோஜ், மதுரை

**

இந்தநாள் இனியநாள் என்றே எண்ணி
இனிய கதிரோன் எழவில்லை !-இரவு
இந்தநாள் இனியநாள் என்றே எண்ணி
இனிய நிலவு வரவில்லை !

பூக்கள் பூப்பதும் பூமணம் கமழ்வதும்
பொறுப்பாய் நாளும் நடக்கிறது !- அதில்
ஈக்கள் மொய்ப்பதும் தேனை குடிப்பதும்
இயல்பாய் இனிதே நடக்கிறது !

வெய்யில் மழையும் வெண்பனிப் பொழிவும்
வேண்டித் தானே வருகிறது !- அதை
செய்செய் என்றே எவர்சொல் ஆணை,
சிறப்பாய்த் தானே செய்கிறது !

வெடியாய் இடியும் வியக்கும் மின்னலும்
வில்லேழ் வண்ணம் விளைகிறது !- அதன்
விடிவும் முடிவும் வியக்கும் வரவும்
விந்தை காட்டி சிரிக்கிறது !

ஆற்றுப் பெருக்கும் அணைநீர் தேக்கமும்
அகத்தில் மகிழ்ச்சி சேர்க்கிறது !- நீர்
ஊற்றுப் பெருகி உவக்கவே ஓடி
உண்மை அழகை விரிக்கிறது !

உண்ணும் உணவும் உயர்காய் கனியும்
உலகில் இயற்கை தருகிறது !- உயிர்
மண்ணில் வாழ மட்டில் லாத
மாட்சி தானே மலர்கிறது !

நல்ல நாளெது என்றிவை பார்த்தா
நாளும் பணிகள் நடக்கிறது ?- யார்
சொல்லும் கேளா தெந்த நாளும்
தொடரும் பணிகள் தொடர்கிறது !

-படைக்களப் பாவலர் துரை மூர்த்தி,ஆர்க்காடு.

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com