Enable Javscript for better performance
woman centric poetry | பெண்ணென்று சொல்வேன் வாசகர் கவிதை பகுதி 2- Dinamani

சுடச்சுட

  
  ancient_woman

  பெண்ணென்று சொல்வேன்    

   
  பெண்ணென்று  சொல்வோம் பெருமிதமாக!
  பெண் என்றால்  மென்மை  என்று  ஒடுக்கிவைத்தது  போக,
  பெண் உரிமை  என்பது  மாறி,
  பெண்  என்றால்  முதன்மை  என்றானது  இன்று !!
  நம்  சிந்தனையில்  நிற்கும் பெண் சாதனையாளர்களையும்,
  நம்  நெஞ்சில் நிற்கும் நம் பெண் உறவினர்களையும்,
  நம்  வாழ்வில்  நீங்காத  இடம்  பெற்ற நம் தோழிகளையும்,
  இன்று  வாழ்த்தி என்றும்  போற்றி 
  நானும், 
  (ஒரு) பெண்ணென்று சொல்வேன் பெருமிதமாக!

   - ப்ரியா ஸ்ரீதர்

  **
  என்னென்று சொல்வேன்
  பெண்ணான உன்னை
  பொன்னென்று கொள்வேன்
  ஆயிரம் கவலைகள்
  ஆழ்மனதில் சுமந்தாலும்
  அலட்சியமாய் மறைத்துவிட்டு
  உற்றாரும் பெற்றோரும் சிறக்க
  வைரமாய் ஜொலிப்பாள்
  கொத்து மல்லிகையாய்
  கூடி குடும்பம் சிறக்க
  உள்ளக மந்திரம் கொண்டு
  இயந்திரமாய் இயங்கி
  உதிரத்தை நீராய் இறைப்பாள்
  பின் விளைவை முன்னறிந்து

  தன்னவனுக்கு மந்திரியாய்
  குலவிளக்கு ஒளிர
  தன்னை நெய்யாக்கி
  வெண்ணிலவாய் காட்சி கொடுப்பாள்
  வேரோடறுந்த வெற்று மரமாய்
  வேறோரிடத்தில் நட்டுவைத்தாலும்
  வேரூன்றி தழைத்தெழுவாள் நீரின்றி
  இடர்கள் நடுவில் கிளைகள் பரப்பி
  துயர்கள் துடைப்பாள்!

  - யோகராணி கணேசன்/ நோர்வே

  **
  பெண் என்று சொன்னால் !
  வையத்துள் வாழ்வதுதான் சிறந்தது
  வாழத்துணை நன்கு அமைந்தால்
  வையம்செழிக்க வரும்வான் மழைபோல்
  அவளிருந்தால்பெண்என்றுசொன்னால் அவள்
  மனைத்தக்க மாண்புடைய அப்பெண்ணாள்
  மாண்புறு புகழோடு மண்ணில் சிறப்பான்
  மனைமாட்சி இல்லாமல் அவளிருந்தால்
  மண்ணில் அவன் சிறப்புக்கள் மாயும்
  சிறப்பு பெற்ற பெரியவர்களை தொழவேண்டாம்
  வாய்க்கப்பெற்ற மணாளனைதொழுதால் போதும்
  மறுப்பின்றி அவள்சொன்னால் மழைபெய்யும்
  மனைமாட்சிப் பெண்என்றுசொன்னால்அவள்தான்!
  இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழக்கற்றால்
  ஏறுபோல் பீடுநடை போடுவான் கணவன் !
  குடும்பப் பெருமை குறையாமல் செயலாலே
  குடும்பம் நடத்துபவளே!பெண் என்றுசொல்வேன்.

  - கவிஞர்அரங்க.கோவிந்தராஜன், இராஜபாளையம்

  **

  அவசரமும் ஆத்திரமும் அகமெல்லாம் நிறைந்திருக்க
  அவையே   சரியென்று  அப்படியே  நினைத்திருக்க
  இல்லற    வாழ்க்கையின்   இனிய    துணையாக
  அவளும் வாய்த்திட்டாள்! அனைத்தையும் மாற்றிட்டாள்!
  அமைதியும்   நிதானமும்  அன்பான   சொற்களுமே
  வாழ்வைச் சீராக்கும் வாய்பாடு என்றுரைத்தாள்!

  வருமானக் குறைபாட்டை வாழ்வினிலே சீராக்க
  படித்த படிப்பதனைப் பயன்படுத்தி நானுந்தான்
  உற்ற துணையாவேன் ஒருசில பிள்ளையர்க்கு
  டியூஷன் எடுத்திடுவேன் சிலரூபாய் பெற்றதனை
  ஓட்டைவிழும் பட்ஜட்டை ஒட்டிடவே முயன்றிடுவேன்
  என்றவளும் களமிறங்கி என்துயரைப் போக்கிட்டாள்!

  மழைநேர மாலையிலே குடையின்றிப் பேரூந்தில்
  நிறுத்தத்தில் இறங்கினால் நிற்கிறாள் குடையுடனே!
  மனமறிந்து செயலாற்ற மங்காவவள் எங்குதான்
  படித்தறிந்து கொண்டாளோ! பாசத்தைக் கற்றாளோ!
  அப்பாவாய் எனையாக்கி அன்பான பிள்ளைகளை
  வளர்த்துவிட்ட அவளை வாழ்த்திடவோ வார்த்தையில்லை!

  பெண்ணென்று அவளையே பெருமைப் படுத்தாவிடில்
  நன்றிகொன்ற பாவந்தான் நம்மைச் சேருமென்று
  உள்மனது என்னையுமே ஒவ்வொரு விநாடியுமே
  எச்சரித்துப் பயமுறுத்தும்! இந்தப் பிறவியிலே
  இனிதாய் நான்வாழ ஏகமாய் உழைத்திட்ட
  மங்களத்தை வாழ்த்துகிறேன்!மகிழ்ந்தவளும் களிக்கட்டும்!

  -ரெ.ஆத்மநாதன்,அமெரிக்கா

  **

  விண்ணும் மண்ணும், ஒரு விந்தை கண்டது, மானுடமே  !
  விந்தை யாதெனில், பெண்ணென்று சொல்வேன், மானுடமே !

  மானுடம் தழைக்கப்,  பெருஞ்சக்தி பெண்தான், மானுடமே  !
  மங்கை நல்லாள் அன்பின்றி, உலகிலை, மானுடமே  !

  வையக  இயக்கமே, பெண்ணென்று சொல்வேன், மானுடமே !
  வாழ்வின் துவக்கமே, பெண்ணென்று சொல்வேன், மானுடமே !

  குடும்ப உயிரொளி, நற்பெண்தான்,  
  பெண்தான், மானுடமே !
  கும்பிடும் தெய்வம் பெண்ணென்று சொல்வேன், மானுடமே !
  தர்ம வழிதனில், பிள்ளைகள் வளர்ப்பாள் மானுடமே !
  தவற்றுக் கஞ்சிடப்,  பிள்ளைகள் வளர்ப்பாள் மானுடமே !
  அழகினில், அறிவினில் உயர்ந்திடினும், சிறப்பு அவள் மனோதிடமே !
  அவள் நாம் போற்றும், பெண்ணென்று சொல்வேன், மானுடமே !

  - இலக்கிய அறிவுமதி

  **

  பெற்று பேணி வளர்த்தவர் பேசக் கண்டே மகிழ்ந்தவர்
  கற்றுத் தந்தே களித்தவர் கடமை வழியே வகுத்தவர்
  பற்று பாசம் மிக்கவர் பரிவாய் என்றும் பார்ப்பவர்
  முற்றும் முன்னே நிற்பவர் மொழியும் அம்மா அம்மாவே !

  அந்தக் கால கதைகளை அடுக்கிச் சொல்வார் கேட்கவே !
  இந்தக் கால நிகழ்வினை எடுத்துச் சொல்வார் இனிக்கவே !
  விந்தை மிக்க விடுகதை விரும்பிச் சொல்வார் வியக்கவே !
  எந்த நாளும் இனியவர் எவர்க்கும் பிடித்த பாட்டியே !

  நிழலாய் என்றும் இருப்பவர் நித்தம் பேச்சுத் துணையவர்
  அழகு பூவைப் போலவே ஆசை யோடே அணைப்பவர்
  பழக்க வழக்கம் யாவையும் பார்த்துப் பழக்கும் பாங்கியர்
  மழையைப் போன்ற மனத்தவர் மணக்கும் மாண்பர் அக்காவே !

  அன்பாய் அழகுப் பொருட்களை அடுக்காய் வாங்கி வருபவர்
  என்றும் பார்த்து மகிழவே இழைந்து தந்து மகிழ்பவர்
  முன்னும் பின்னும் என்னையே முடுக்கி விட்டே முனைபவர்
  கன்னல் அமுத மொழியினர் கனிவு மிக்க அத்தையே !

  அம்மா, பாட்டி, அக்காவும் னஅத்தை அவரும் பெண்களே !
  சும்மா சும்மா பெண்ணெனச் சொல்ல மாட்டேன் அவர்களை !
  தம்மைப் போல எண்ணியே தாங்கும் ஆல மரமிவர் !
  நம்மை கண்ணாய்க் காப்பவர் நவிலும் பெண்கள் பெண்களே !

  -து.ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி ( திமிரி )

  **

  அளவில்லா அன்பு , கருணையாய் மழை ,
  வானமே – உன்னைச்சொல்வேனோ பெண்ணென்று ?
  பொறுமையின் வெள்ளம்,
  பொருமாத உள்ளம், பூமியே
  உன்னை அழைப்பேனோ ?
  வேர்களாய் உழைப்பு,
  கீழே நீரும் சத்தும் உறிஞ்சி
  மேலே நிழல் தருமே மரமாய்,
  அதைச் சொல்வேனோ?  
  மெல்லிய வருடலுடன்
  களைப்பாற்றுமே தென்றல்,
  அதைச்சொல்வேனோ ?
  தொடரும் உவமைகள், நம்மேல்
  படரும் உண்மைகள் ---இருந்தும் 
  தனக்குள்ளே இருட்டடக்கி,
  வெளியே வெளிச்சம் காட்டி
  உருகி வாழுமே மெழுகுவர்த்தி,
  அந்த உன்னத தியாகத்தை மட்டுமே
  பெண்ணென்று சொல்வேன் !!!

  - கவிஞர்.  டாக்டர் எஸ். பார்த்தசாரதி -- MD DNB PhD

  **
  வேலைக்கு போகும் கணவன்-மனைவி வரும்வரை
  குழந்தைகள் காத்து நிற்கும் ஆயாள்
  வேலைக்காரி அவளுக்குள் அடங்கி
  நிற்கும் அவளின் குழந்தைகள்
  வந்ததும் அம்மாவைக்குடையும்
  குழந்தைகள் அப்போது நடக்கும் அலங்கோலம்
  வந்ததும் வாராததுமாக சண்டை பஞ்சாயத்து
  போதும் போதும் வேலையென்று பொறுமையிழக்கும்
  பெண் அவளுக்கு புருஷந்தான் கிடைப்பான்
  வாதம் புரிவதற்கும் வம்புச்சண்டைபோடுதற்கும்
  அலுவலகத்தில் பொறுப்பு வேலையை பார்ப்பது
  வீடு திரும்பியதும் வேறுபொறுப்பேற்பது ஊதியமின்றி
  இப்பொழுதெல்லாம் கணவன் ,குழந்தைகள்,அதிகாரி
  எல்லோரும் எதிரிபோல் தோன்றும் அவளுக்கு
  அத்தனையயும் சமாளிக்குமொரு அற்புதம்
  பெண்ணால்தான் முடியும்! அவள்தான் பெண்!
  பெண் என்று சொன்னால் அவள்தான் பெண்!   

  - கவிஞர் சூடாமணி.

  **

  "பெண்" உலகத்தின்
  கண் என்றழைக்கப்படும்
  விண்ணவரும் போற்றும்
  தன்னலம் கருதா உயிர்!
  ஞாலத்தில் எங்கும் வாசம் செய்ய
  காலமின்றி  தவித்த  இறைவன் செய்த
  சாலச் சிறந்த செயல்
  தாயாக  உள்ள பெண்ணை
  வாயார  இறைவனின் மறுஉருவமாக
  சேய் முதல் பெரியவர்  வரை போற்ற வைத்தது!
  இல்லத்தில் பெண்ணே அரசி என்பதால்
  இல்லத்தரசி என்ற பட்டப் பெயருடன்
  அழைக்கப்பட்டவரும்  பெண்ணே!
  பெண் இல்லா  இல்லம்
  மண் இல்லா  பூமி போல் வறண்டு விடும்!
  ஒளி மிக்க உலகில் நல்ல
  மிளிரும் கருணை உள்ளம்
  கொண்ட பெண்கள் இருப்பதால்
  அழகுக்கு  அழகு சேரும்!
  பழகும் தன்மையுடன் பண்பும் சேர
  அவை உலாவரும்
  உலகம்  அதில் உதவும்
  மனதுடன் வலம் வரும் அவளே...
  "பெண்ணென்று  சொல்வேன்...."
  குரலை உயர்த்தி சொல்வேன்!  

  - உஷாமுத்துராமன்,  திருநகர்

  **

  எந்த பதவியில் இல்லை இன்று ஒரு பெண் ?
  மண்ணில் மட்டும் அல்ல விண்ணிலும் 
  பறந்து வெற்றிக்கொடி நாட்டி அவள் பிறந்த 
  மண்ணுக்கு பெருமை தேடி தரவில்லையா பெண் ?
  எல்லை காக்கும் புனிதப் பணியிலும் சரி ,
  காவல் பணியிலும் சரி, தீ அணைப்பு பணியிலும் 
  சரி ...எதில் இல்லை நம் பெண்கள் இன்று ?
  யாருக்கும்  சளைத்தவர்கள் இல்லை நம் பெண்கள் !
  இந்த நேரத்தில் முதன்மையாய்  நிற்கும் பெண்கள் 
  பின்னால் தெரியுது அவர்கள் அம்மாவின் முகம் !
  நிலைக்கண்ணாடியில் உங்கள் முகம் பார்க்கும் 
  நேரம் உங்கள் அம்மாவின் முகத்தையும் பாருங்கள் 
  பெண்களே !  புரியும் உங்களுக்கு தன்னால் 
  உங்கள் வெற்றிக்குப் பின்னால் யார் என்று !
  பெண்ணே  நீ வெற்றிப்  பெண்  என்றால் 
  உன் அம்மா உன்னைப் பெற்ற அதிசயப் 
  பெண்ணென்று நான் சொல்வேன் !

  - கந்தசாமி  நடராஜன் 

  **

  அகத்தில் அன்புடன் 
      ஒளிர்பவள் மட்டுமல்ல .
  அகிலத்தையே ஒளிர
       வைப்பவள் பெண்!

  ஆணுக்கு   நிகராக இருப்பவள் மட்டுமல்ல.
  ஆணின் வெற்றிக்குப் பின்
            இருப்பவள் பெண்!

  ஒப்பனையுடன்   வலம் வருபவள் மட்டுமல்ல .
  ஒப்பில்லா அறிவு 
        பெற்றவள்  பெண் !.

  இதய   வீணையை 
     மீட்டுபவள்  மட்டுமல்ல.
  இணயத்துடன் இணைந்து
      இருப்பவள் பெண் !

  நிலவைக்காட்டி சோறு 
       ஊட்டுபவள்  மட்டுமல்ல .
  நிலவுக்கு விண்கலம் 
        அனுப்புபவள் பெண் !

   மனை  மங்களம் மாண்பு
        காப்பவள் மட்டுமல்ல
  மங்கையாய் பிறப்பதற்கே
        மாதவம் செய்தவள் பெண்!

  - ஜெயா வெங்கட்

  **

  வண்ணக் கண்ணதிலே மையதனை மேல் தடவி
  சின்னஞ்சிறு இதழில் சாயங்கொண்டு சீர் படுத்தி

  நீளக்கார் குழலில் அலர்ந்தமலர்ச் சரந் தொடுத்து
  நீலவான் பிறைநாண் நுதழதிலே பொட்டுமிட்டு

  செங்காந்தற் கையதிலே மின்னும்நல்ல வளைய லிட்டு
  சங்குக் கழுத்ததிலே பொன்னாரம் பூட்டி வைத்து

  உள்ளம் இனிமையற்ற பெண்ணும் நல்ல பெண்ணுமல்ல
  உண்மை விளக்கேற்றி உறுதியென்றும் நெஞ்சில் வைத்து

  தன்னின் நலங்காத்து தன்குலத்தின் வளங் காத்து
  தரணி  தான்புகழும் பெண்ணவளே பெரிது என்பேன்!!

  - கு. இரா, வடக்கு அயர்லாந்து.

  **

  தாய்மை தனித்துவம் மிளிரும் தங்கமே
  சேய் விரும்பும் தியாகத்தின் உருவமே
  பேய்கூட பெண்ணுக்கு மனம் இரங்குமே
  வாய் மூடி சுமப்பவள் பெண்ணென்பேன் 

  மென்மையின் பேரழகுப் பெட்டகப் பெண்
  தன்மையில் தளரா அன்பின் பேரூற்றவள்
  நன்மை செய்யும் நல்மனச் செம்மலவள்
  பன்னிரு கைகளோடு பணி செய்பவளவள்

  தேவைக்கும் அதிகமாக சேவை செய்வாள்
  கோவை இதழ்கள் சிந்தும் இன்சொற்கள்
  பாவையவள் சினம் கொண்டால் சீறிடுவாள்
  நாவையடக்காத  மனிதர்க்கு காளி அவள்

  கண்ணுக்கும் கருத்துக்கும் குளிர்ச்சி அவள்
  மண்ணுக்கும் மரபுக்கும் தலை வணங்குவாள்
  பண் பாடும் இசையின் மென்குரலாள் அவள்
  வெண்ணிலவுக்கு ஒப்புமை அவளழகு தான்

  தண்ணென்ற குளிர்ச்சி அவள் அருகிருந்தால்
  கண்ணெனத் தோன்றும் அவள் அன்புலகம்
  விண்ணென்ற பேரழகு ஆண்களை இழுக்க
  பெண்ணென்று சொல்வேன் மயங்கியே நான்.

  - கவிஞர்  ராம்க்ருஷ்
   

  TAGS
  poem
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai