Enable Javscript for better performance
kavithaimani poems | சாம்பலாய் முடியும் உடல் வாசகர் கவிதை பகுதி 3- Dinamani

சுடச்சுட

  
  ash color

  சாம்பல் நிறப் பூனை

  உடல்தனிலே சாம்பல்தனைப் பூசுகின்ற தெல்லாம்
       ஓர்நாள்நாம் அதுஆவோம் என்பதனை உணர!
  கடவுள்தனை அனுதினமும் தொழுதெழுந் தாலும்
      கைபிடிச் சாம்பலாவோம் என்றுணர்ந் திடுக!
  மடமையறன்றோ இன்னதனை உணர்ந்திடா திருத்தல்,
        மரணத்தை வென்றவரிவ் உலகினிலே எவரோ?
  திடமதனைக் கொண்டதனை ஏற்றிடல் வேண்டும்
         திருந்தியநல் மாந்தரென வாழ்ந்திடல் வேண்டும்!

  சாம்பலென் றாகிடும் உடல்தானே -- இன்று
        சதிராட்டம் ஆடுது வாழ்நாளில்!
  தாம்யெனும் அதிகாரப் போக்கென்ன -- கொடிய
        தண்டத்தை கைக்கொள்ளும் திமிரென்ன!
  நாம்யெனும் பண்பாடு தனைமறந்தே -- வேண்டா
        நானெனும் அகங்காரம் தலைக்கேறி
  வீம்புக்கு ஆட்டத்தை இடுவதெலாம்  -- கொடிய
        வினைகளை அறுவடை செய்வதற்கே!

  நாமின்றுப் புனிதரெனும் நன்னிலையில் இருந்தாலும்
  சாம்பலென் றாகாமை சாத்தியமோ? -- ஈங்கிந்த
  மண்ணுலகில் பிறந்தயெவர் மரணமதைத் தவிர்த்திட்டார்,
  எண்ணத்திலிதை மறவாமல் இரு!

  - அழகூர். அருண். ஞானசேகரன்.

  **

  ஆஸ்தி எத்தனை சேர்த்தாலும் மனிதனின் 
  அஸ்தி அடக்கம் ஒரு சிறு மண் குடுவையிலே !
  அதற்குள்  எத்தனை எத்தனை குஸ்தி 
  உறவுக்குள் இது என் ஆஸ்தி ,உன் ஆஸ்தி
  என்று !

  ஆட்டம் முடிந்து ஆறு அடி நிலத்தில் 
  அடக்கம் ....இல்லை  அரையடி மண் குடுவையில் 
  உடலின் சாம்பல் அடக்கம் !

  இந்த வாழ்வின்  முடிவு  தெரிந்தும், முடிவும் 
  சாம்பலும் அடுத்தவருக்கே ...எனக்கு இல்லை 
  எப்போதும் என்னும்  மாயையில் வலம் வரும் 
  மனிதர் பலர் உண்டே இங்கே !

  மடிந்த பின் மண்ணோடு மண்ணாகி வெறும் 
  சாம்பலாக மாறிய பின்னர் மீண்டும் 
  உயிர்த்து எழ மனிதன் என்ன பீனிக்ஸ் பறவையா ?

  - கந்தசாமி நடராஜன் 

  **

  சொர்க்கமும் நரகமும் வேறெங்கும்
  இல்லையது இங்கே தான் என்பது
  அறியாத வாழ்க்கை தொடர்கிறது
  முடிவில் சாம்பலில் முடியும் உடல்

  காற்றில் கலந்து மறைகிறது
  ஜலத்தில் கலந்து கரைகிறது
  சாம்பலில் முடியும் உடலானது
  மனதில் இருந்து மறைகிறது

  வாழ்க்கை வாழ்ந்து முடிகிறது
  இரத்தங்கள் வீழ்ந்து துடிக்கிறது
  உறவுகள் சூழ நடிக்கிறது போய்
  சாம்பலில் முடியும் உடலுக்காய்

  - வே. சகாய மேரி, அரியலூர் திருக்கை

  **
  அரிது அரிது மானிடராய்
  பிறப்பது அரிது .
  அவ்வையின்
  அமுத மொழியிதை மறந்து
  ஆசை அசூயை
  அச்சம் குரோதம் 
  கோபம் தாபம்
  எதிர்ப்பு ஏமாற்றம் என
  பல சுமைகள் சுமந்து
  பரந்த உலகில் 
  உழன்று திரியும் .
  மனிதனைத் தேடி
  மரணம் வருவதில்லை
  மரணம் தேடியே
  மனிதன் செல்கிறான் !
  அரசனோ ஆண்டியோ
  ஆடிய ஆட் டம் 
  ஓடிய   ஓட்டம் 
  அத்தனையும் முடிந்து
  ஆன்மாவை இழந்து
  அக்னியால் 
  அணைக்கப்படும் உடல் !
  இருக்கும் போது
  ஒரு பிடி இதயம் !
  இறந்த பின்னர்
  முடிவில் மிஞ்சுவது 
  ஒரு பிடி சாம்பல் !

  - ஜெயா வெங்கட், கோவை

  **

  மானிட பிண்டமே ஆன்மாவாகிய
  என்னை இதுநாள் வரையில்
  சிறைப்பிடித்து வைத்திருந்து
  விடுதலை தந்தமைக்கு நன்றி
   
  வாழ்க்கையை சுமந்து சுமந்து
  கெச்சிப்போய் கேட்பாரற்று கிடந்த
  எனக்கும் விடுதலை தந்தமைக்கு
  உமக்கும் எமது மனமார்ந்த நன்றி
   
  வாழ்க்கை எனும் சுமைகளை சுமக்க இயலாது 
  சுமந்தது போதும் சுமை தாங்கிக்கல் 
  பிள்ளைகள் தலையில் இறக்கி வைத்து சுடுகாடு பயணம்
   
  செல்லுவோர் எல்லோரையும்
  வரவேற்கும் சுடுகாட்டில் சரணம்  
  சாம்பலில் முடியும் உடல்களின்
  அத்தியாயம் முடிவு பெறுகிறது
   
  - ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான் 

  **

  பஞ்சுமெத்தை அறுசுவையின் உணவு என்று
  ----பலவிதமாய் இன்பத்தில் திளைத்த மேனி
  கொஞ்சுகின்ற மனைவியொடும் மக்க ளோடும்
  ----கொண்டபிற சுற்றமுடன் திகழ்ந்த மேனி
  அஞ்சுதற்கும் அஞ்சாமல் ஆண வத்தில்
  ----அடுத்தவரை ஏளனமாய்ப் பார்த்த மேனி
  வஞ்சகத்தை வன்மத்தை மனத்துள் வைத்து
  ----வாஞ்சையினைக் காட்டல்போல் நடித்த மேனி !
  தலைநரைத்து வெளுத்தபோது கறுப்பு வண்ணம்
  ----தடவியதை எழிலாக ஒளிர வைத்தும்
  சிலைபோல இருந்தஅங்கம் தோல்சு ருங்கிச்
  ----சிதைந்ததினை ஒப்பனையில் ஒளிர வைத்தும்
  குலைந்துறுப்பு தளர்ந்துகூனாய் வளைந்த போதும்
  ----குனிமுதுகை ஆடைகளால் அழகு செய்தும்
  நிலைத்திருக்க முயற்சிபல செய்த போதும்
  ----நில்லாமல் உடலதுவும் சாய்ந்து போகும் !
  சாம்பலாகும் உடலதுவும் என்ற றிந்தும்
  ----சாவதுவும் உண்மையெனத் தெரிந்தி ருந்தும்
  ஆம்பலது நிலவுகண்டு மலர்தல் போல
  ----அன்புதனில் மனம்மலர்ந்தே அணைத்தி டாமல்
  வேம்பதனின் கசப்புதனை நெஞ்சில் வைத்து
  ----வேதனைகள் பிறர்க்களித்து மகிழ லாமா
  காம்புகள்தாம் கனிகளினைத் தாங்கல் போன்று
  ----காத்திடுவோம் சாம்பலாகிப் போகு முன்னே !

  - பாவலர் கருமலைத்தமிழாழன்

  **

  சாணமெல்லாம்   எருவாகும்;   புல்பூண்டு   போன்ற
        செடிகொடிகள்   இலைத்தழைகள்  பயிர்விளைய   நல்ல
  ஆனவரை   இயற்கையுர  மாகியேதான்   சத்து
        அளிக்கின்ற  மருந்தாகும்;   பாம்பினது   நஞ்சும்
  போனவுயிர்   மீட்டெடுக்கும்   மருந்தாகும்;  ஆனால்,
         பகட்டான  வாழ்வுவாழ்ந்த   மாந்தரது   மாண்ட
  ஈனவுடல்  தீயிட்டு  எரித்தாலும்  சாம்பல்
        இயற்கையுரம்  ஆவதில்லை  எனவுணர்தல்  வேண்டும்!

  சாம்பலாக  உடலெரிந்து   போனபோதும்   நல்ல
          செயல்களாலே   மண்ணுலகு   உள்ளவரை  வாழ
  சூம்பிடாத   தொண்டாற்றி   நல்வழியில்  சென்று
         தரைதோறும்   போற்றுகிற   நற்பணிக  ளாற்ற
  வேம்புகூட   இனிக்கின்ற   அமுதாகும்   பாங்கில்
         வையத்தை   உயிர்விக்கும்   உயர்பொருளாய்ச்   சாம்பல்
  கூம்பிடாத   பேர்புகழில்  உலகுளவ   ரையில்
        கைத்தொழுகும்   இறையாகும்; இஃதுணர்ந்து   வாழ்வீர்!

  - "கவிக்கடல்", கவிதைக்கோமான், பெங்களூரு.

  **

  நேற்று எரியூட்டிய சடலத்தின்
  சாம்பலைக்
  கொண்டு வந்தார்கள்.
  கைப்பிடிச் சாம்பலில்
  பூதக் கண்ணாடி வைத்துப்
  பார்த்தேன்
  கடமையைச் செய்யக்
  கையூட்டு வாங்கிய
  கைகளைத் தேடினேன்
  பார்வையாலும் பெண்களைப்
  பாலியல் துன்புறுத்தல் செய்த
  கண்களைத் தேடினேன்
  வெறி ஏறஏற மதுசுவைத்து
  நல்லோரை ஏசிய
  நாவினைத் தேடினேன்
  காசை விட்டெறிந்து
  கடவுளெனத் தன்னைப் புகழ்வதில்
  சிலிர்த்த
  செவிகளைத் தேடினேன்

  அதிகாரத் திமிரில் நடந்த
  அந்தக் கால்களைத் தேடினேன்
  அடுத்தவர் சொத்துகளை
  அபகரித்த
  அந்த
  ஆசை ஒளிந்திருந்த இடம் தேடினேன்
  நொடிப்பொழுது வீசிய காற்று
  விழுங்கிச் சென்றது
  அந்தச் சாம்பலையும்.

  -கோ. மன்றவாணன்

  **

  ஆசையில் உயிரெனப் பிறந்து தியாக
  அன்னையின் அன்பினில் ஊறி சிறந்த
  தந்தையின் அறிவினில் வளர்ந்து சக
  உறவுடன் உரிமையில் ஆடி நல்ல
  நண்பர்கள் உடன்வரப் பழகி இனிய
  கல்வியும் கேள்வியும் பயின்று பருவம்
  வந்ததும் மணமதை முடித்து இன்பத்
  துணையுடன் காதலில் திளைத்து மண்ணில்
  வாழ்ந்திடப் பொருளது தேடிப் புகழ
  மக்களை மகிழ்வுற வளர்த்து கோடி
  எண்ணங்கள் மனதினில் பிடித்து தளர்
  முதுமையில் பிணிபல பெற்று ஒரு
  வேளையில் உயிரதைத் துறந்து பிடிச்
  சாம்பலாய் உடலிது முடியும் இந்த
  வாழ்வினில் கவலைகள் ஏனோ? பல
  இன்னல்கள் கோபங்கள் விடுத்து தூய
  சிந்தனை செயல்களும் பிடித்து ஞான
  இறையெனும் இயற்கையில் இணைந்து சீர்ந்த
  அறத்துடன் தருமமும் செய்து வாழ்வை
  இனிதுடன் வாழ்ந்திடு வோமே!

   - கு. இரா, வடக்கு அயர்லாந்து

  **
  வயிறிருந்தும்   வளமான    வாழ்வி   ருந்தும்,
         வயிறார   உண்பதற்கு   வழியு   மற்று,
  உயிர்வதையாய்  நோயினிலே  துடித்த  போதும்,
          உளமுருகி   இல்லார்க்கு   வழங்கா   ஈனர்
  தயிர்கடைந்தும்   வெண்ணையில்லா   நீரைப்  போன்ற
          தகுதியிலா  வீணான   வாழ்வு   வாழ்ந்து
  பயிர்விளையா  களர்நிலமாய்க்   கிடப்போர் மாய்ந்தால்
          பிடிச்சாம்ப(ல்)   ஆகுமுடல்   எருவு(ம்)  ஆகா!
     
  செங்கதிரால்    வானுக்குப்   பெருமைக்   கூடும்;
             திங்களாலே   இரவினுக்கு   ஒளியும்  வாய்க்கும்;
  செங்கடலால்   நீரினங்கள்   மகிழ்ந்து   வாழும்;
             தோகையினால்   மயிலுக்கு   புகழைக்  கூட்டும்;
  அங்கமெல்லாம்   அன்புஅறம்   ஒழுக்கம்  மாண்பு
           அடக்கம்நற்   பண்புஈயும்   குணமும்   போன்ற
  தங்கமொளிர்   நன்னடத்தைப்   பெற்ற   வர்கள்
           சாம்பலாகி   முடியுமுடல்   புகழை   எய்தும்!

  - நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு.

  **

  படிக்காத அமைச்சர்கள் எத்தனை ஊழல் செய்தாலும்,
  "மாண்புமிகு அவர்களுக்கு" வெஞ்சாமரம் வீசும் படித்த அதிகாரிகளே!

  படிக்காத வெகுளி அமைச்சர்களிடம்
  உள்ளடி வேலைசெய்து,
  தன் காரியத்தை சாதித்துக்கொள்ளும் படித்த அதிகாரிகளே!

  பாவம் படிக்காத அமைச்சர்கள்!
  அவர்கள் என்ன செய்வார்கள்?
  வறுமையின் கோரதாண்ட வத்தால் படிக்காமல் போய்விட்டது 
  இல்லையென்றால் படித்து உங்களைப்போலவே சாதித்திருப்பார்கள்

  அதனால் தான் மகாகவி அன்றே சொன்னார்,
  இதைக்கொஞ்சம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்;
  "படித்தவன் தவறு செய்தால் 
  அவன் ஐயோஐயோவெனப்போவான்",
  இன்றைய தேதியில் சொல்ல வேண்டுமென்றால்,
  குய்யோமுய்யோவெனப்போவான்.

  - ம.சபரிநாத்,சேலம்

  **

  சதிராடும் மானிடனே உடன் உணர்ந்திடு
  சாம்பலாய் முடியும் உடல் உன் உடல் !

  தான் என்ற ஆணவம் அகற்றி விடு
  தன்னைப் போலவே பிறரை நேசித்திடு !

  எல்லாம் எனக்குத் தெரியும் என்று
  எப்போதும் நீ  எண்ணி விடாதே !

  உனக்குத் தெரியாதவை கோடி உண்டு
  உன்னை மட்டும் உயர்வாய் எண்ணாதே !

  என்னை வெல்ல யாரும் இல்லை
  என்று நீ எப்போது எண்ணாதே !

  உன்னை வெல்ல ஒருவன் உண்டு
  ஒருபோதும் கர்வம் கொள்ளாதே !

  நிலையற்ற உலகில் எதுவும் நிலையன்று
  நிரந்தரமாய் வாழ்வோம் என்று எண்ணாதே !

  எந்த நிமிடமும் நிகழலாம் உன் மரணம்
  என்பதை நினைவில் நிறுத்தி அன்பு செய் !

  - கவிஞர் இரா .இரவி

  **

  கரையில்  அமர்ந்து  நினைவுகளை  அசைபோட்டேன் ,
  காலத்தின்  போக்கு  அவள்   உன்னுள்  ஐக்கியம்  ஆனாள்!
  இன்று  நானோ  ஏங்குகிறேன் ,
  சாம்பலாய்  முடியும்  இந்த  உடலையும்,
  மீண்டும்  அவளோடு சங்கமிக்க,
  என்  மகன்  எப்போது  உன்னில்  கரைத்து  செல்வான் என்று,
  அலைகள்   ஒய்வதில்லை  என்றும் ,
  கடலில்  சங்கமம்   ஆகும்  எங்கள்  வாழ்வும்  நினைவலைகளே!!
   
  - ப்ரியா ஸ்ரீதர்

  **

   

   

  அரசன் முதல் ஆண்டிவரை ஆட்டமிட்டு ஓய்ந்த பின்பு

  காற்றடைத்த பையிலிருந்து காற்றதுவும் போன பின்னால்

  பிணமென்றே பெயர்சூட்டி பேருறவும் பின் தங்க

  காட்டிடை வைத்துக் கழுந் தணலை உடலிலிட்டு 

  ஆற்றிடைத் தலைமுழுகி அத்தனையையும் மறந்து

  வீடு போய்ச் சேர்ந்திடுவார்! வீட்டையும் கழுவிடுவார்!

  அனலிட்ட மெழுகாகி அப்படியே உடல் வெந்து

  சாம்பல் வடிவாகும் சங்கடங்கள் பறந்தோடும்!

   

  பிறந்த வினாடி முதல் பின்னால் துறத்திய சாவு

  வென்று விட்ட மகிழ்ச்சியிலே விட்டாரம் தானேற

  இருந்தவரை யாருக்கும் இயல்பாய் உதவியிருந்தால்

  மகராஜன் இன்று போனானே என்று மனம் வெதும்பி

  உள்ளக் கோயிலிலே உயர்வாய் மதித்திருப்பர்!

  தாறுமாறாய் வாழ்வைத் தடம் மாறி வாழ்ந்திருந்தால் 

  ஒழிந்தான் ஒரு மூடன் என்றே ஊருலகும்

  விடுதலை பெற்ற வீறில் மகிழ்ந்திருக்கும்!

   

  நீர்க்குமிழி வாழ்க்கை நில்லாது எனத்தெரிந்தும்

  போர்க்குண வாழ்க்கை புகழ்தராது என்றறிந்தும்

  நியாயங்கள் விடுத்து நயவஞ்சகம் ஒன்றினையே

  கட்டவிழ்த்து விட்டுக் கடினமாய் வாழ்ந்தவர்கள்

  ஒருபிடி சாம்பலாய் உரமாய் இம் மண்ணுக்கு 

  மாறுவோம் என்பதை மனமார அறிந்திருந்தும்

  ஏறுக்கு மாறாய் எதற்கும் பயனின்றி 

  வாழ்ந்திடுதல் நன்றோ?வாழ்வோரே சிந்திப்பீர்!

  -ரெ.ஆத்மநாதன்,  கூடுவாஞ்சேரி

  **

  அன்பும் அறிவும் அணுவும் இன்றி அரக்கர் போலே பலரிங்கே !
  துன்பம் செய்தும் தொல்லை தந்தும் துணிவாய்ப் பலரும் தொடர்ந்திங்கே !

  ஒருவர் கெடுத்தே ஒருவர் உயர ஓயா ஆட்டம் பலயிங்கே !
  ஒருவர் பணத்தை ஒருவர் பறிக்க ஒட்டி உறவாய் நிதமிங்கே !

  பெண்ணை ஆணும் ஆணை பெண்ணும் பேணி ஏய்க்கும் பிழையிங்கே !
  மண்ணுக் காக பொன்னுக் காக மண்டும் துயர்கள் மலிந்திங்கே !

  பணத்தைக் கொடுத்து பன்மடங் காகப் பறித்தல் பலரின் பணியிங்கே !
  பணத்தை இழந்து அவரிடம் கொஞ்சும் பாவ நிலையும் படர்ந்திங்கே !

  மணியும் அணியும் மலைக்க அணிந்தே மயங்கும் மாந்தர் மனமிங்கே !
  பணிவே இன்றி பணியை வாங்கும் பாவப் பட்ட பலதிங்கே !

  இருக்கும் வரையில் ஆடும் ஆட்டம் எண்ண முடியா நிலையிங்கே !
  பொருத்தம் இன்றி புவியில் வாழ பொருந்தி நாளும் அலைந்திங்கே !

  அழகு உடலில் உயிர்தான் போனால் ஆகும் பிணமாய்ப் பெயரிங்கே !
  தழலில் உடலும் எரிந்து முடிந்தால் சாற்ற ஏது நிலைத்திங்கே !

  - 'படைக்களப் பாவலர்' துரை. மூர்த்தி, ஆர்க்காடு.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai