சாம்பலாய் முடியும் உடல் வாசகர் கவிதை பகுதி 2

உதாசீனப்படுத்திய படியே வாழ்க்கை எனும் பயணம்தனில் ஓடிக் கொண்டிருந்தால்
சாம்பலாய் முடியும் உடல் வாசகர் கவிதை பகுதி 2


சாம்பலாய் முடியும் உடல்

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

ஆசைகள் ஆயிரம் கோடி
ஆனந்த வாழ்வைத் தேடி
பூசைகள் எல்லாம் பண்ணி
பூமியை வெல்ல எண்ணி
காசுகள் மலையாய்ச் சேர்த்து
காமத்தில் தேகம் வேர்த்து
நாசமே முடிவில் மிஞ்சும்
நமனின் பாசம் விஞ்சும் (1)

கருவறை முதல்தொ டங்கி
கல்லறை முடிய வாழ்வில்
ஒருவரும் இங்கே இன்பம்
ஒன்றியே வாழ்ந்த தில்லை
திருவருள் பெற்றால் கூட
திரும்பியே போக வேண்டும்
கருமுகில் கூட்டம் ஓர்நாள்
கரைந்துநீ ராக வேண்டும் (2)

மாடங்கள் ஆயிரம் உண்டு
மாளிகை ஆயிரம் உண்டு
கோடிகள் ஆயிரம் உண்டு
கொள்ளையாய்ச் செல்வம் உண்டு
தேடியே விருந்தை உண்டு
தேகத்தின் சுகங்கள் கொண்டு
நாடிகள் தளர்வ துண்டு
நாடகம் முடிவ துண்டு (3)

விதைகளில் எழுந்த பூக்கள்
விருந்தாக்கும் காம ஈக்கள்
கதையாய்த் தாக்கும் வேட்கை
கயிறறுந் தோடும் வாழ்க்கை
கதைகள் கோடிக் கற்றோம்
கற்றதை காற்றில் விட்டோம்
சதையினைத் தின்னும் மோகம்
சாம்பலாய் முடியும் தேகம் (4)

- கவிஞர் மஹாரதி

**

பிரசவத்தில் தொடங்கி
சவமாய் அடங்குவது
சாதாரண வாழ்கை!
தீ குளித்து சாம்பலாய்
முடிவது பட்டாசு வாழ்கை!
தீக்குளித்த பின்பும் மீண்டு எழுவது
ஃபீனிக்ஸ் பறவை வாழ்கை!

வாழ்கை சாம்பலாய் முடிவதற்குள்
சோம்பலை முறித்து
சாதனை படைத்து!
மூச்சு நிற்கும் முன்
முயற்சியை நிருத்தாததே
முன்மாதிரியான வாழ்கை!

இறந்தவர் உடலை தகனம் செய்தால்
சாம்பலாய் முடியும் யாக்கை!
இறந்தவர் உடல் உறுப்பை தானம் செய்தால்
சரித்திரம் படைக்கும் வாழ்க்கை!

மரணத்திற்கு பிறகும் வாழ
உடல் உறுப்பை தனம் செய்வோம்!

- கு.முருகேசன்

**

நித்திய வாழ்க்கை யென்று
தினம்தினம் எண்ணிக் கொண்டு
சத்தியம் மீறு கின்றார்
சகலமும் நிகழ்த்து கின்றார்!
புத்தியை அடகு வைத்து
புன்மையைப் போற்றி நாளும்
மத்திபம் கொள்ளு கின்றார்
மரணமும் மறந்து போனார்...

பிறப்பென கொண்ட மாந்தர்
பூதலம் தன்னில் மாயும்
இறப்பென ஆகும் போது
எரித்திட சாம்பல் ஆமே...
இருப்பன யாவும் இங்கே
இருப்பது இல்லை தானே...
அருவறுப் பொன்றில் யாவும்
ஆனது அறிக மாதோ...

சாம்பலாய் ஆகும் முன்னே
சமத்துவ மாக வாழ்ந்து
தீம்பலா நன்மை நல்கி
திசைகளில் வாழ்ந்தா லென்ன?
சோம்பலை முறித்து யாரும்
சோதரர் ஆனால் தப்போ...
காம்பென பற்றும் மாந்த
கருணையைக் கொள்க!வாழ்வீர்...

- அமிர்தம்நிலா.நத்தமேடு

**

வெள்ளி மலை மன்னவன்
வெண்ணீற்றின் தத்துவம்
புரிவோம் மானிடமே!
அன்றிலாய் இருந்தாலும்
ஆம்பலாய் திகழ்ந்தாலும்
இனிமையில் உருண்டாலும்
ஈகையில் வென்றாலும்
உத்தமன் ஆனாலும்
ஊரழிக்கும் பேரானாலும்
எத்தனாய் திரிந்தாலும்
ஏகாந்த பிரியனாலும்
ஐந்தறிவு உற்றனாலும்
ஒழுக்கம் விற்றாலும்
ஓசையை மறந்தாலும்
ஔடதம் தின்றாலும்

தந்தையின் ஒடுக்கத்தில்
தாவியே போகும் பொம்மை நாம்
இடையில் பிரிக்கும்
தடையாய் திகழும்
உடலைத் தீ எரித்து
உயர் சாம்பராய் மாற்றி
அணைத்துக் கொள்ளும்
சிவத்தின் மரை(றை) அடியை......

- சுழிகை ப.வீரக்குமார்.

**
நிலைத்து வாழும்
உயிர் ஏதுமுண்டோ;
அதற்குள் 
எத்தனை அகோரங்கள்;
தானே பெரியவன்
தானே செல்வந்தன்
என மனதுள்
தீயை வளர்த்து
தீமைக்குள் புகுந்து
தீராப் பழியுடன்
தீமையாய் வாழ்வதா
வாழ்க்கை;
சுவரைக் கெடுத்த சித்திரமோ
அதனின் நிலை;
தத்துவம் புரிந்து 
வாழ்வு இருக்கும் வரை
தன்னலமற்று வாழ்வோம்
மானுடப் பண்பைக் கொண்டு.....

- முகில் வீர உமேஷ், திருச்சுழி.

**

அன்பு தழைக்கும் இரு உள்ளங்கள்
ஈருடல் ஓருயிராக உருவான கரு
ஒய்யாரமாய் கருவறையில் துயில் கொண்டு
ஒப்பற்ற கனவுகளுடன் இப்புவியில் காலூன்ற,
வாழ்வியல் நன்னெறிகளுடன் அன்பும் பண்பும்
வரலாற்று பதிப்புகளில் மட்டுமே காண,
ஆசைகள் பேராசைகளாக , பணம் முதலிடம் பிடிக்க,
போட்டியும் பொறாமையும் உடன் கைக்கோர்க்க, 
பொய்யும் புரட்டும் தலைவிரித்தாட,
கொலையும் கொள்ளையும் மலிந்து போக;
சாம்பலாகி முடியும் உடல்
உயிருடன் தீக்கிரையாகி போகிறதே !
சாம்பலாகி முடியும் உடலுக்காக
வாழும் காலத்தை இனிதாய் வாழாது
வாழ்க்கை தளத்தை போராட்டத்துடன் கழிப்பதா ?
நிதானமாக சிந்தித்து செயல்படு மானிடா !

- தனலட்சுமி பரமசிவம்

**
பேராசைக் கனவுகளில் நீந்தி விளையாடுகிறோம்
சேராத சொத்துகளையும் சேர்க்க நினைக்கிறோம்
போராடி ஏமாற்றியே எண்ணிக்கை கூட்டுகிறோம்
நேராக நியாயமாக நடப்பதையே மறக்கிறோமே.

அன்பென்கிற மந்திரம் நாம் அறிவதில்லையே
தன்மையாய்ப் பேசிக் களித்தே சிரிப்பதில்லையே
பொன்னான நேரங்கள் நமக்குப் புரிந்ததில்லையே
மின்னலாய் தோன்றிடும் ஒளி நிலைப்பதில்லையே

இல்லாதோர்க்கு உதவும் பண்பு கற்றதில்லையே
நல்லார் நலிந்தாரிடை இனிதாய் பேசியதில்லையே
பொல்லாத பணச்சேர்ப்பு என்றும் விட்டதில்லையே
கல்லாதவர் அறிவுகூட நம்மை அண்டியதில்லையே

சேர்ப்பதை மறுஉலகு கொண்டுபோக முடியுமா
ஆர்ப்பரிப்பு அடங்கியபின்னே வேகம் வந்திடுமா
ஈர்ப்புடனிருந்த அழகு என்றும் நிலைத்திடுமா
நீர்த்து  சாம்பலாய் முடியும் உடல் எழுந்திடுமா

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

நெஞ்சிற்குள் விதைகளாய் அமைதியை நடல் !!
கண்களுக்குள் வேண்டும் ஒரு கருணைக்கடல் !!
தீமைகளின் மொட்டன்றோ – ஆசைகளை விடல் !!
சுருக்கு மூளைக்குள் விரித்திடு ஒரு அறிவுத்திடல் !!
பொய்மை நுழையாமல் தடுக்க ஒரு இரும்புப்படல் !!
தர்மத்தை தலையெழுத்தாகி வரைந்திடு ஒரு நன் மடல் !!
இவை எல்லாம் சொன்னது எது ?
அநீதியை, அராஜகத்தை , உள்ளிழுத்து வாழ்ந்து
பின் சாம்பலாகிப்போன  ஒரு உடல் !!

- கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி -- MD DNB PhD

**
உடலும் நமதில்லை - அதில்
துடித்திருக்கும் உயிரும் நமதில்லை!
கூடு விட்டு ஆவி போன நொடி
நம் பெயரும் கூட நமதில்லை !
அடுத்த நொடியும் நிலையில்லை - இங்கு
கோபமும் வெறுப்பையும் மட்டும்
நிலையாக்கிக் கொண்டு
கிடைக்கும் சந்தர்ப்பத்திலெலாம்
நஞ்சினை உமிழ்ந்தபடி
உதாசீனப்படுத்தியபடியே வாழ்க்கை எனும்
பயணம்தனில் ஓடிக்கொண்டிருந்தால்
எதிர்க்காற்றில் நம் நஞ்சே
முகத்தில் அறைய
மூச்சடைத்து உயிரும் விடைபெற
வெற்றுச் சாம்பலாய் காற்றில்
கரைந்தோடி முடியும்
ஆடிய - ஆட்டுவித்த உடல் !

 - பி. தமிழ் முகில், ஆஸ்டின், டெக்ஸாஸ்
**

வாசனைத் திரவியங்கள்  பூச்சு

எண்ணைக் குளியல்

சோப்புக் குளியல்

முகப் பூச்சால் மினுமினுப்பு

மல் யுத்த வீராப்பு

வெடக்கோழிக் குழம்பு

விலா எலும்புக்  கறி சுவைப்பு

ஆட்டுக்கால்  சூப்பு

மஞ்சள் சாறு குடிப்பு

 கவர 

கண் கவர் உடுப்பு

வெள்ளை, கருப்பு 

நெட்டை,  குட்டை சலிப்பு

அனைத்தும் வீண்

சாம்பலாய் முடியும் உடல் !

- முத்துப்பாண்டி பரமசிவம்,  நத்தம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com