புத்தரின் புன்னகை
சித்தார்த்தன் என்ற சிறுவன்
புத்தனாக மாறிய அபூர்வ புருஷன்
மனிதனின் ஆசையே அல்லல்
பிணியினை தரும் என்று
கனிவான செய்தியினை
தனி மனிதனாக உலகிற்கு உணர்த்திய
பணிவான புத்தர்......
மக்களை விழிப்புணர்வு செய்த மகான்!
உதட்டில் தவழும் புன்னகை
அவர் மக்களுக்கு காட்டும்
பவரான அறிவுரை..... நான்கு
சுவற்றிக்குள் வசித்த புத்தரை
கவர வைத்த வெளி உலகம்
துயரமான மக்களை கண்டு
மனம் ஒடிந்த புத்தர்
தினம் என்ன செய்வதென
காண நேர சிந்தனையில் சொன்ன
போதனைகள் மக்களை உயரிய
சாதனை செய்யா உதவும் மரத்துடுப்பு!
உடுப்பை துறந்த ..............
புத்தரின் புன்னகை ஒரு கையேடு
- பிரகதா நவநீதன். மதுரை
**
எழுசீர்க் கழிநெடிலடி விருத்தம்
வெற்றுச் சிரிப்பே வெளியில் தெரிய
……….வீணர் காட்டிடும் புன்னகையே..!
கற்றும் தெளிந்தும் கொள்ள வேண்டும்
……….கயவர் செய்வதைப் புன்னகையால்..!
முற்றும் உணர முகத்தின் மூலம்
……….முழுதும் அறியலாம் புன்னகையால்..!
பற்று தருமே பாசம் மிகுமே
……….பெளத்த புத்தரின் புன்னகையே..!
.
அல்லல் கொண்டே அவதிப் பட்டால்
……….அவரின் முகத்தில் நகைப்பிருக்கா..?
சொல்லும் வார்த்தை சுகமாய் அமையின்
……….சற்றே மலரும் புன்னகையே..!
கல்லும் கனியும் கனிந்த மொழியால்
……….கருத்தில் பூக்கும் புன்னகையே..!
வெல்லும் சொல்லிலே வெற்றி இருப்பின்
……….வெடிக்கும் ஒலியாய்ச் சிரிப்பலையே..!
.
பள்ளி செல்லும் பாலகர் முகத்தில்
……….பயத்தில் புன்னகை கண்டேனே..!
துள்ளும் மீனில் தண்ணீர் மேலே
……….திளைக்கும் புன்னகை கண்டேனே..!
கள்ளம் இல்லாக் கன்னி முகத்தில்
……….கனிவாய்ப் புன்னகை கண்டேனே..!
உள்ளக் களிப்பில் உவகை கொள்வோர்
……….உதட்டில் புன்னகை கண்டேனே..!
- கவிஞர் பெருவை பார்த்தசாரதி
**
அல்லும் பகலும் தவமிருந்து
ஆசையே துன்பத்துக்கு காரணம்
போதி மரத்தடியில் புத்தர்
போதித்தார் புன்னகையாக!
உலகில் காணும் இன்பங்கள்
உன்னை மயக்க நினைத்தால்
அநித்தியமென மனதில் நினை
போதித்தார் புன்னகையாக!
மண்ணில் எப்பொருள் மீதும்
மக்கள் ஆசைப்படக்கூடாது
மனதிற்குள் ஆசைபட்டார் புத்தர்
மௌனப் புன்னகையாக!
அன்புதான் இன்ப ஊற்று
எதிரியிடம் இரக்கம் காட்டு
எதிரியும் இறங்கி வருவான்
போதித்தார் புன்னகையாக!
துன்பத்திலிருந்து விடுதலை
உன் கோபத்தை துறந்து விடு
அமைதி தானாக சரணடையும்
மௌனப் புன்னகையாக!
அன்பின் மூலம் வெறுப்பை
உன்னிலிருந்து விரட்டு
போதனைகளை புத்தர்
சாதனைகளாக காட்டி
போதித்தார் புன்னகையாக!
- கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்
**
போதிமரங்கள்
வெட்டப்படும் போது
புன்னகையுடன்
கடந்து செல்கிறார் புத்தர்
ஞானோதயம் அடைந்த
தருணத்தில்
ஆசையைத் துறந்தவர்
அதன்பின்
போதிமரங்களை
நடவும் இல்லை
வளர்க்கவும் இல்லை
புத்தம் சங்கம் தம்மம்
போதித்தவர்
புன்னகையுடன்
சகோதரத்துவம்,
சமதர்மம் சமாதானம்
மனித மன வயல்களில்
விதைக்கவில்லை
அறுவடை செயுயவுமில்லை
மிருக உயிர்ப் பலிகளைத்
தடுத்த புத்தர்
மனித உயிர்ப்பலிகளைத்
தடுக்காமல்
ஆயுதம் ஏந்தி
இனமழிக்கும் பலிநிகழ்வை
கண்டும் காணாமல்
புன்னகைக்கும் புத்தரின்
கடைவாயில் வழியும்
குருதியை எவரேனும்
கண்டுள்ளீர்களா.....
- கவிமாமணி "இளவல்" ஹரிஹரன், மதுரை
**
ஆசையை துறந்த அன்பு சிரிப்பு
ஓசை இல்லா பேரழகு சிரிப்பு
மனம் கவரும் மங்கல சிரிப்பு
தனம்தரும் கௌதமபுத்தரின் சிரிப்பு .
எத்தனை வகை சித்தாந்தங்கள்
எத்தனை வழி இறை மார்க்கங்கள்
அத்தனையும் காட்டுவது ஒன்றே
அன்பே முதன்மை என்ற சிரிப்பு .
போதிமர சித்தனாகி மனுக்குலம்
ஓதி உய்யும் செயலது கற்பித்து
அருள்நிதி அளித்து உள் ஒளி ஏற்றும்
பொருள் செறிந்த புத்தரின் சிரிப்பு .
பரந்த உலகில் பரவிய புத்தம்
சுரந்த பாலென தூய நிலையால்
எம்மையும் நயந்து ஆட்கொண்டு
செம்மையாக்கிய புத்தரின் சிரிப்பு .
- ராணி பாலகிருஷ்ணன்
**
காலம் பல கடந்தும்
ஞாலம் நேசிக்கும்!
புத்தரின் புன்னகை....
ஆர்ப்பரிக்க்கும் மனதுக்கு
அணை. போடும்.
அன்பை அமைதியை
அகத்தில் ஏந்தி
முகத்தில் ஒளி வீசும்
புத்தரின் புன்னகை ...
புத்துணர்ச்சி தரும்.
புது நம்பிக்கை வரும்.
கவலையை விரட்ட
கருணையில் பிறந்த
புத்தரின் புன்னகை.....
மனதை மயக்கும்.
மண்ணுலக உயிர்களைக்
கட்டிப்போடும் ..
ஆசையே துன்பத்தின்
மூலம் என
ஓசையின்றி பேசும்
ஒரே மொழி
வார்த்தைகள் அற்ற
வலிகள் நீக்கும்
புத்தரின் புன்னகை !
- ஜெயா வெங்கட்
**
துன்பம் யாவும் ஆசை அதனால்
தோன்றும் நிலையுரைத்தார் !- வாட்டும்
இன்னல் போக்கி இனிமை ஆளல்
இனிதே அன்பென்றார் !
நல்ல வழியே நாடும் படியாய்
நன்றே நனிதுரைத்தார் !- நாட்டில்
பொல்லா வழிகள் பொசுங்கிப் புதுமை
புலர வழிவகுத்தார் !
புத்தர் கொள்கை உயர்ந்த தென்றே
போற்றிப் புகல்கின்றார் !- அன்புப்
பித்தே நாளும் பெரிதாய் ஏற்றுப்
பேணி மகிழ்கின்றார் !
புத்தர் சொன்ன வழியெல் லாமும்
புழுதி மண்புதைத்தார் !- தன்
சித்தம் இல்லா மாந்தர் கண்டு
சிலையாய்ச் சிரிக்கின்றார் !
-து.ஆதிநாராயணமூர்த்தி, பரதராமி ( திமிரி).
**
பலருக்கும் வாழ்க்கையின் இறுதியில்தான்
போதிமர விதையே முளைக்க ஆரம்பிக்கின்றது -
சித்தம் தெளியும் போது தான்
சித்தாா்த்தா என்று சரணடைய -
புத்தன் பாதம்தேடி ஓடுகின்றது....!!!
வயது தளர்ந்து - மனம் தளர்ந்து
உடல் நடுக்கம்வரும்போதுதான்
உண்மை பாத்திரமே புரிகின்றது -
உண்மையை உணரும்நிலையிலேயே
உடல்பாத்திரம் உடைந்து போகின்றது -
கண்களால் அழாமல் - அவர்
இதயத்தாலே அழுகின்றாா் -புத்தனே
உன்புன்னகைதான் வேண்டுமென்று...!!!
-கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை**
**
அன்பெனும் தத்துவத்தை
ஆள்பவனும் உணர்ந்திடவே
இனிய உலகில் வாழும் இளைஞனே!
ஈதலின் பொருளுணர்ந்து
உயர்ந்த புகழுடன்
ஊக்கம் நிறைந்த வாழ்த்துகளுடன்
எதிர்கால அறிவியல் சாதனைகள்
ஏற்றிவைத்த அறிவு தீபமாய்
ஒளிவீச புத்தரின் புன்னகை
ஓங்கி உன்னுள் வளரட்டும்!
- பொன்.இராம்
**
புத்தரின் புன்னகை வெளியே தெரிவதில்லை
போதித்த போதனை பின்பற்றாத மக்கள் !
ஆசையே அழிவிற்கு காரணம் என்றேன்
ஆசை பிடித்து அலைகின்றனர் பக்தர்கள் !
பெரிய பெரிய சிலை நான் விரும்பவில்லை
பெரிதாக சிலை வைத்து எந்த பயனுமில்லை !
என்னை வணங்குவதை விடுத்து நீங்கள்
என்னை பின்பிற்றினால் மனம் மகிழ்வேன் !
எளிமையை விரும்புபவன் நான் என்னை
ஏனோ பிரமாண்டப் படுத்துகின்றனர் !
மூடநம்பிக்கைகளை முற்றாக வெறுத்தவன் நான்
மூடநம்பிக்கை என் பெயரிலும் நடத்துகின்றனர் !
எல்லா உயிர்களிடத்தும் என்பு செய் என்றேன்
எல்லா உயிர்களிடத்தும் வம்பு செய்கின்றனர் !
சக மனிதனை அன்புடன் நேசிக்கச் சொன்னேன்
சக மனிதனை பாவிகள் கொன்று குவித்தனர் !
- கவிஞர் இரா .இரவி
**
இன்பங்கள் எய்திடும் வழியெது என்றேன்
மென்மையாய் புத்தனும் புன்னகை செய்தான்
பிணிகளும் பிணைப்பதன் காரணம் கேட்டேன்
முனிவனும் குறுநகை கொள்ளவே செய்தான்
துயர்களின் மருமமும் யாதெனத் திகைத்தேன்
கயைவளர் அரசமர் கௌதமன் சிரித்தான்
அழித்திடும் துன்பங்கள் ஏனென வினவ
விழித்தவன் அங்கே குறுநகை புரிந்தான்
மனமதின் ஓசையின் மாயத்தை கேட்டேன்
அனைத்திற்கும் அடிப்படை ஆசையே என்றான்
வையகம் தழைக்க வாழவே மாந்தர்க்கு
ஐவகை ஒழுக்க நெறிகளும் சொன்னான்
மண்ணிலே மானிடர் புனிதராய் ஆக
எண்வகை முறைகளும் கூறினான் இனிதாய்
பிறவாத பேரும் பெற்றே மகிழ்ந்திட
அறவாழிச் சிந்தனை செய்வீரே நாளும்!
- கு. இரா, வடக்கு அயர்லாந்து
**
வாய்விட்டு சிரித்தால்,
நோய்விட்டு போகும்;
பழமொழி
மனம் அமைதியாய் இருந்தால்,
வாழ்வில் யாவும் நலம்;
புதுமொழி
சித்தார்த்தன் சிரித்தார்,
நோய் தீரவில்லை
புத்தர் அமைதியை நாடினார்,
அவர் சித்தம் தெளிந்தது
மனஅமைதியால் புன்னகைத்தார்,
ஞான ஒளி பிறந்தது
இன்று ஆசிய ஜோதியாய்,
ஒளிர்கிறார்.
- ம.சபரிநாத்,சேலம்
**
பகை என்பது குற்றவாளி நட்பு
என்பது நீதிபதி
எனும் தத்துவத்தை புத்தரின் புன்னகை விளக்கிற்று
மேகத்தில் மறைந்தாலும் கடலுக்குள்
மறைந்தாலும்
மலையடிவாரத்து இடுக்குகளில் ஓடி மறைந்தாலும்
தீங்கு செய்தோர் தப்பவே முடியாது எனும் தத்துவம்
புத்தரின் புன்னகையில் புரிந்து கொள் ளாதார் கொஞ்சமே
ஒருவன் என்ன செயல் செய்கிறானோ, அதுவாகவே அவன்
ஆகிவிடுகிறான் எனும் உண்மையினை
புத்திரின் புன்னகை
உணர்த்தியது; அறிவாளிகள் புகழ்ச் சிக்கும் இகழ்ச்சிக்கும்
மனம் மயங்குவதில்லை ஒரு கலாமும்
புத்தரின் புன்னகை
விவரமாய் விவரிக்க எவரும் விவா திக்க முயல்வதில்லை
உடல் ரீதியான நோயின் வலி அற்பமே
மன ரீதியான நோயின்
வலியோ வலியது; கொடியது தாங்க
வொண்ணாதது என்பதை
புரிய வைத்தது புத்தரின் புன்னகை
மதியற்றோர்க்கு
அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும்
அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது
புன்னகை உணர்த்தியது
- வே. சகாய மேரி
**
தவமிருந்த பெற்றெடுத்த போதனையை ஏற்கவில்லை தமிழர்நாம்
தவமிருக்க அவறிந்த துறவுக்கோலம் மட்டும் ஏற்றுள்ளோம்
அதற்கு முன்னர் துறவு நிலை தமிழகத்தில் இல்லை ! அந்நாளில்
கணவனும் மனைவியும் இணைந்து ஆற்றும் இல்லறம்தான் மேல்!
ஆகமொட்டை போட காவியணிய ஊர்வலம் நடத்த துறவரம் பூண !
ஆர்வம் காட்டிய நாம் அன்புதான் இன்பூற்று அன்புதான் உலகமகாசக்தி
ஆர்வம் காட்ட முனைய வில்லை ,பெற்ற பிள்ளைகளிடத்து கனிகிறது
மொட்டை போட கற்றவர்கள்,நாம் நேத்துக்கடன் எனமாற்றிவிட்டோம்
மரங்கள் வளர்க்க சொன்னார் புத்தர் அதனால் அசோகர் வளர்த்தார்
வரலாற்றில் படிக்கின்றோமே தவிர அரசே மரங்களை அழிக்கிறது
மரநடுதல் குழந்தைகள் தான் செய்கிறார்கள்,விழாக்களில் நடக்கிறது
அமைதிக்க்காக ஊர்வலம் நடத்தச்சொன்னார் புத்தார் ,அதையே
ஆர்பாட்டத்துக்காக அரசியலுக்காக தேர்தலுக்காக நடத்துகிறோம்
மதம் சார்ந்த மடம் , பீடம், கட்டமைப்பு எல்லாம் கற்றுக்கொண்டோம்
உருப்படியான ஒரு விஷயம் கற்றுள்ளோம் அதுதான் அன்னதானம் !
அது மக்களுக்காக இல்லாவிட்டலும் நமக்காக பிழைப்புக்காக !
உருப்படியான இன்னும் ஓன்று மணிமேகலையிலிருந்து கற்றோம்
பட்டிமன்றம் நடத்த கற்றுக்கொண்டோம் ,அதில் கறை தேர்ந்துவிட்டோம்
புன்னகைத்தார் புத்தர் என்றால் ஏனென்று புரிந்திருக்கும் உங்களுக்கு
விண்னகத்திலிருந்து பார்க்கின்றார் புத்தர் புன்னகைக்கின்றார்!
- கவிஞர் அரங்க.கோவிந்தராஜன், இராஜபாளையம்