
திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் - (திருக்குறள்-பிரித்தாளுதல்-நுண்ணுரை- தடை விடையுடன்) - இரா.பஞ்சவர்ணம்; பக்.408; ரூ.400; பஞ்சவர்ணம் பதிப்பகம், காமராஜ் தெரு, பண்ணுருட்டி-607 106.
திருக்குறளில் இடம்பெறும் தாவரங்களான எள், அமை, தாமரை, அனிச்சம், உள்ளி, குன்றிமணி, தினை, நெருஞ்சில், கரும்பு, நச்சுமரம் முதலிய தாவரங்கள் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், இந்தி, சம்ஸ்கிருதம் முதலிய மொழியில் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பதையும், அந்தந்த தாவரத்தின் வகைப்பாடுகளையும், அவற்றின் பண்புகளையும், அவற்றிற்குத் "தாவரத் தகவல் மையம்' தரும் பெயர்களையும் குறிப்பிட்டிருப்பது நூலின் சிறப்பு.
எடுத்துக்காட்டுக்கு ஒன்று: பொருட்பாலில் "சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி' என வரும் 1231-ஆவது குறளில், "உள்ளி' என்ற பூத் தாவரத்தை வள்ளுவர் குறிக்கிறார். இந்த உள்ளி மலர், தலைசாய்ந்து பூத்திருப்பதைப் பெண்களின் கண்கள் நாணமுற்று தலைசாய்வதற்கு ஒப்பிட்டுள்ளார். உள்ளி என்பது வெங்காயம், பூண்டு, காட்டு வெங்காயம், நரி வெங்காயம் என்று அழைக்கப்படும் தாவரங்களின் பொதுப்பெயர் என்றும்; இதில் பயன்பாட்டிலுள்ள வெங்காயமும், பூண்டின் மலரும் நிமிர்ந்த தன்மை கொண்டவை. ஆனால், காட்டு வெங்காய மலரும், நரி வெங்காய மலரும் தலைசாய்ந்து காணப்படுவதால், அந்தக் காலத்தில் பயன்பாட்டிலிருந்த காட்டு வெங்காயத்தையே வள்ளுவர் குறித்ததாகக் கருதி, "உள்ளி' என்பது "காட்டு வெங்காயம்' என்கிறார் நூலாசிரியர்.
திருவள்ளுவர், புல், கனி, தளிர், பூ, மலர், மடல், மரம், அரும்பு, வித்து, குழை, பழம், வள்ளி முதலிய 20க்கும் மேற்பட்ட தாவரவியல் தொடர்பானவற்றைக் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதால், தாவரவியலிலும் மிகுந்த புலமை பெற்றிருந்தார் திருவள்ளுவர் என்பதை இந்நூல் உறுதிப்படுத்துகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.