பெண் எனும் பேராளுமைகள்

பெண் எனும் பேராளுமைகள் - தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: கிருஷாங்கினி; பக்.128; ரூ.120; பாரதி புத்தகாலயம், சென்னை-18; ) 044- 2433 2424.
பெண் எனும் பேராளுமைகள்
Published on
Updated on
1 min read

பெண் எனும் பேராளுமைகள் - தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: கிருஷாங்கினி; பக்.128; ரூ.120; பாரதி புத்தகாலயம், சென்னை-18; ) 044- 2433 2424.
 நூலில் உள்ள 7 கட்டுரைகளில் "அம்பேத்கரின் பெண் விடுதலை ஒரு பார்வை' என்ற கட்டுரையும், "பரதநாட்டியம் பற்றி' என்ற கட்டுரையும் தவிர, பிற கட்டுரைகள் பெண் ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளாக அமைந்துள்ளன.
 "அம்பேத்கரின் பெண் விடுதலை ஒரு பார்வை' கட்டுரை பெண் விடுதலை தொடர்பான அம்பேத்கரின் பார்வையையும், பணிகளையும் விளக்குகிறது. பெண் விடுதலைக்கு அதையும் தாண்டி செய்ய வேண்டியவற்றைச் சுட்டிக்காட்டுகிறது.
 "பரதநாட்டியம் பற்றி' கட்டுரை பரதநாட்டியம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் மிகத் துல்லியமாக விளக்குகிறது.
 வாழ்க்கையின் இயல்புகளை உள்ளது உள்ளபடியே வரையும் ஓவியரான அம்ருதா ஷெர் - கில், "இந்தியாவின் ஏழை மக்களின் வாழ்க்கையைச் சொல்லுவதுதான் எனது பாணி' என்று சொன்னவர். பிக்காஸோவுக்கு நிகரான ஓவியங்களைப் படைத்தவர்.
 பண்டிட் ரவி ஷங்கரின் மனைவியான அன்னபூர்ணா தேவி அவருக்கு நிகரான சிதார் இசைக் கலைஞர். இருவரும் இணைந்து சிதார் இசை நிகழ்ச்சியை வழங்கியபோது அன்னபூர்ணா தேவிக்கு பாராட்டுகள் அதிகம் குவிந்ததை ரவிஷங்கர் விரும்பாததால் அதன் பிறகு வாழ்நாள் முழுதும் பொது இடங்களில் அவர் சிதார் வாசிக்கவில்லை.
 மனித உறவுகள் தொடர்பான குறிப்பாக ஆண்- பெண் உறவு தொடர்பான வித்தியாசமான கருத்துகளை உடைய மிருதுலா கர்க் எழுதிய "இணைந்த மனம்' நாவலின் ஒரு பகுதி கடைசி கட்டுரையாக இந்நூலில் இடம் பெற்றுள்ளது. ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் இந்திராகோஸ்வாமி, தனது எழுத்துகளினால் பல்வேறு பாதிப்புகளுக்குட்பட்ட இஸ்மத் சுக்தாய் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகளும் உள்ளன.
 நூறாண்டுகளுக்கு முன்பு பிறந்த (1913) அம்ருதா ஷெர்-கில் ஆகட்டும், இன்றையப் பெண்களாகட்டும், அவர்கள் பெண்ணாகப் பிறந்ததாலேயே சந்திக்கிற பிரச்னைகள், எதிர் கொள்ள வேண்டிய சவால்கள் இப்போதும் இருக்கவே செய்கின்றன. அவற்றைப் பற்றி சமூகத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்பும் கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. கட்டுரைகள் என்பதையும் தாண்டி பெண் ஆளுமைகளின் வாழ்வனுபவங்கள் வாசிப்பவரின் மனதில் பதிந்து இனம்புரியாத வலியை ஏற்படுத்துகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com