தஞ்சை கொண்ட சோழன்

தஞ்சை கொண்ட சோழன்- இரா.மலர்விழி; பக்.680; ரூ.650; சீதை பதிப்பகம், 6 ஏ/4, பார்த்தசாரதி சாமி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5. 
தஞ்சை கொண்ட சோழன்
Published on
Updated on
1 min read

தஞ்சை கொண்ட சோழன்- இரா.மலர்விழி; பக்.680; ரூ.650; சீதை பதிப்பகம், 6 ஏ/4, பார்த்தசாரதி சாமி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5.
 கி.பி. 9 - ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் சோழர் குலத்தில் தோன்றியவன் விஜயாலயன். சோழ மன்னர்களை சிற்றரசர்கள் என்ற நிலையிலிருந்து உயர்த்தி மாபெரும் பிற்காலச் சோழப் பேரரசு உருவாக அடிகோலினான். பழையாறை சிற்றரசனாக இருந்த விஜயாலயன், தஞ்சையைக் கைப்பற்றி அரசின் தலைநகராக ஆக்கிய வரலாற்றையும் அக்கால தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலைகளையும் இந்த வரலாற்று நாவல் விவரிக்கிறது.
 வேலூர் பாளையச் செப்பேட்டை ஆதாரமாகக் கொண்டு நந்திவர்மர் - விஜயாலயர் உறவு, நந்திவர்மர் - குமராங்குச சோழர் நட்பு, பாண்டியர் - பல்லவர் போர், திருமண உறவு போன்றவை பொருத்தமான நிகழ்ச்சிகளால் சித்திரிக்கப்பட்டுள்ளன.
 இசையும் நடனமும் பண்டைத் தமிழகத்தின் தனித்தன்மை வாய்ந்த அடையாளங்கள். இக்கலையின் உச்சத்தைத் தொடும் பாத்திரங்களாக நம்பி அர்ச்சுனன், பொற்செய்யாளை நாவலில் காண்கிறோம். சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், மாணிக்கவாசகர் ஆகிய சிவனடியார்களை இப்புதினத்தில் தரிசிக்கலாம்.
 அரச குடும்பத்து பெண்களின் திருமண முடிவுகள் நாடுகளிடையே உறவை மேம்படுத்திக் கொள்ளவும், அரசியல் செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்ளவும் எடுக்கப்பட்டதை படம் பிடித்துக் காட்டுகிறது நாவல். விஜயாலயன் தன் மனங்கவர்ந்த தஞ்சை இளவரசி வீரமாதேவி, தன் மீது அளவற்ற காதல் கொண்ட நந்திவர்மனின் சகோதரி நந்தினிதேவி என இருவரையும் மணந்து கொள்கிறான்.
 புதின நிகழ்வு நடைபெறும் காலம், இடத்தைச் சிறப்பாக அடையாளம் காட்டி நயமான வர்ணனைகள் மூலம் தொய்வில்லாமல் கொண்டு சென்றுள்ளார் நூலாசிரியர். கதைப் போக்கில் இடம் பெறும் நிகழ்வுகளை மூல வரலாற்றிலிருந்து மாறுபடாது அமைத்திருப்பது பாராட்டத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com