
இலக்கியம் இனிது (தொன்மை- தொடர்ச்சி - தமிழ்) நா. முத்துநிலவன், பக்கங்கள் 154, விலை ரூ. 170, அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604 408, ✆ 94443 60421.
கவிஞர் நா.முத்துநிலவன் குறளில் தொடங்கி இணையம் வரையிலான மாறுபட்ட பொருள்களில் வெவ்வேறு தருணங்களில் எழுதிய 14 கட்டுரைகளின் தொகுப்பு.
குறள் அறமும் மனு (அ) தர்மமும் என்ற முதல் கட்டுரையில் பெண் தொடர்பான மனுவின் பார்வையுடன் திருவள்ளுவரின் கருத்துகளைப் பொருத்தி மேற்கோள்களுடன் வள்ளுவ மேன்மையை விளக்குவதுடன், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வரியின் வழி குறளின் பெருமையைக் குறிப்பிடுகிறார்.
ஜெயபாஸ்கரனுடைய கவிதைகளைப் போர்க்குணமிக்க அழகியல் கவிதைகள் என விரிவாக அறிமுகப்படுத்தி, நான் வெறுந்திரு, நீ தவத்திரு என்ற கவிதையைப் பெரியார் இருந்திருந்தால் கொண்டாடியிருப்பார் என்பதுடன், சில கவிதைகளின் வழி வாழ்வியல் கிண்டல்தான் ஜெயபாஸ்கரனின் பாணியெனத் தெரிகிறது என்கிறார்.
இதேபோல, மு. முருகேஷின் மலர்க ஐக்கூ என்ற மும்மொழி நூலை அறிமுகம் செய்து, தமிழ்க் கவிதை உலகின் முக்கியமான மைல் கல் என்பதுடன், சிறப்பான நிறைய கவிதைகளும் தரப்படுகின்றன.
கரிசல் குயிலின் பாட்டிசைப் பெருவெள்ளமென நவகவி ஆயிரத்தையும், அரசியல் பாடும் குடும்ப விளக்கென புதிய மாதவியின் ஹே ராம் தொகுப்பையும், சுயமாக வளரும் மூலிகைச் செடியென ஆர்.நீலாவின் வீணையல்ல நான் உனக்கையும், நேர்மையான கவிதைகளென மு. கீதாவின் தொகுப்பையும் விவரிக்கிறார் ஆசிரியர்.
அறிவியல் தமிழ்க் கவிதை எழுதும் அமெரிக்கத் தமிழச்சி எனக் குறிப்பிட்டு, வி.கிரேஸ் பிரதிபாவின் பாட்டன் காட்டைத் தேடி தொகுப்பை அறிமுகப்படுத்திச் சிறப்பிக்கிறார்.
தனது மேடைப் பேச்சு ஆசான் என நன்றியுடன் குறிப்பிட்டு, புலவர் நா. இராமச்சந்திரனைப் பற்றியும் தான் அவரால் வார்க்கப்பட்டது பற்றியும் நினைவுகூர்கிறார் முத்துநிலவன். இணைந்தாற் போல படிப்பதற்கான நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.